அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்ட வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி 1 மற்றும் பகுதி 2 பதிவுகளை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
Never complain about the difficulties in Life, Because a director (God) always gives the hardest roles to his best Actors
******
தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கத்தில் தீநுண்மி குறித்த அவரது அனுபவம் - கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இத்தொடரின் கடைசி/மூன்றாம் பகுதியைப் பார்க்கலாம் வாருங்கள்.
*****
வரிசையில நின்னாச்சு.
என்முன்னாடி ரெண்டு பிளேட்காரரு கையில ஒரு பெரிய அரை லிட்டர் கப்போட நிக்கிறாரு. அதப் பாத்ததும் எனக்கு ஒரு சின்ன டவுட். தேனீர் வாங்க நம்ம கப்பை கொண்டு வரணுமோன்னு. ஆனா பேப்பர் கப்புல டீ கொடுக்கறாங்க. எங்க முறையும் வந்தது. ரெண்டு பொண்டாட்டிகாரரு, சே, ரெண்டு ப்ளேட்டுக்காரரு ரெண்டு ப்ளேட்டு கேட்டு வாங்கிக்கிட்டாரு. அப்புறமா பேப்பர் கப்புல டீயை வைக்க வைக்க ஒவ்வொண்ணா எடுத்து அவரோட கொடவுன்ல ஊத்துனாரு. ஆனா ஒண்ணு. சப்ளையரு ஒண்ணும் சொல்லல்லை. சாப்பாட்டு விஷயத்துல குறை வைக்க கூடாதுங்கறதுல கவனமா இருந்தாங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் இறங்கல்லை.
MTNL அப்படியே Empty NLஆவே இருக்கு. நெடும் தொலைவில் இருக்கும் தலைவியிடம் பேச முடியாமல் பசலை படர்ந்து பசியின்றி இருக்கும் இலக்கியத் தலைவன் போல் கலங்கி நின்று, இதே போல் அவ்வப்போது அவரது இலக்கிய தலைவியைக் காணாமல் பசலை படர இருக்கும் வெங்கட்டுக்கு என் நிலை விளக்கி கட்செவி அஞ்சல் செய்தேன். அது என்ன கட்செவியோ! சில மணிநேரம் கழித்து அஞ்சேல்! அஞ்சேல் என்று உதவும்கரங்கள் வெங்கட் மற்றொரு நண்பரின் ஏர்டெல் சிம்கார்டும் பழைய சிறு போனும் கொண்டு வந்து குவாரண்டைன் வெளியே ITBPயிடம் ஒப்படைக்க ஒருவழியாக பெரிய நிம்மதி. ஆனால் அவர் கோல்மார்க்கெட்டிலருந்து சத்தர்பூர் வந்த கதையை கேட்டா அவருக்கு ஒரு பதிவு தேறிடும்லா.
போன் வந்தது பெரிய நிம்மதியாச்சு. அப்புறம் என்ன திண்ணுக்கிடடு திண்ணுக்கிட்டு தூங்க வேண்டியதுதான். இடை இடையே அந்த இருமல் மட்டும் இல்லேன்னா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.
அங்க என்ன பிரச்சனைன்னா பகல்ல என்னதான் ஏசி ஓடுனாலும் ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெக்கை பின்னிரும். ராத்திரியானா ஏசி குளிர். ஒரு நாளைக்கு ராத்திரி அதிக ஏசி காரணமாக ராத்திரி ஒரு மணிபோல மூச்சா போலாம்னு ஆய்லெட் போறேன். போற வழியின் இடப்புறம் கண்ணாடி இழை தடுப்புக்கு அந்தப் பக்கம் களப்பணியாளர்கள் அரைத்தூக்கத்தில். வலப்புறம் ஒரு பெண்கள் பகுதி. அங்கிருந்து மெலிதாக ஒரு அழுகைச் சத்தம். பாதையை ஒட்டியிருந்த ஒரு படுக்கையில் இருந்த ஒரு வயதான பாட்டிதான் அழுது கொண்டிருந்தார். அருகிலிருந்த மற்றோர்கள் நல்ல உறக்கத்தில். எனக்கோ ஒரே குழப்பம். பெண்கள் பகுதியில் போய் கேட்டால் நம்ம நேரம் சரியில்லையின்னா பெரிய சிக்கலாயிடும். எனவே நான் கண்ணாடி இழைக்கு அந்தப்பக்கம் இருந்த பணியாளரை அழைத்து பாட்டி அழுவதை சொன்னேன். அவர் என்னையே போய் என்னன்னு கேட்க சொன்னாரு. நான் பாட்டியிடம் போய் கேட்க பாட்டி டாய்லெட் போகணும். கட்டுப்படுத்த முடியாம டரெஸ்ல போயிட்டேன். டாய்லெட் போகணும்னு அழுதாள் அந்த பாட்டி. அதை மறுபக்கமுள்ள களப்பணியாளரிடம் சொல்ல அவரும் கண்ணாடி இழைத்தடுப்பின் இந்தப் பக்கமுள்ள அஸ்ட்ரானெட்டைத் தேடினார். அவர் எங்கோ தூரத்தில் இருந்தார். ஆனால் நல்லவேளையாக பக்கத்தில் இரண்டு மூணு பெட் தள்ளி படுத்திருந்த ஒரு இளம்பெண் எழுந்து ஓடி வந்தார். அவர் பாட்டியை சமாதானப்படுத்தி வாஷ்ரூம் அழைத்துச் சென்றார்.
இந்த இளம்பெண்ணைப் பற்றி சொல்லியாக வேண்டும். பெண்கள் பகுதியில் கலகலவென சுற்றி வந்தவர் இவர். வயதான முதியவர்களுக்கு வரிசையில் நின்று சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுப்பார். பொழுது போகாத நேரங்களில் மேக்கப்பும் கையுமாக இருப்பார். கொஞ்சம் பருமனானவராக இருந்தாலும் ஒரு இடத்தில் ஓய்ந்து இருக்காமல் எல்லோரிடமும் வலிய சென்று பேசி கலகலப்பாக இருந்தவர்.
இரண்டு நாள் கழித்து ஒருநாள் இரவு பத்து மணியளவில் இந்த பெண்ணின் படுக்கையை சுற்றி ஒரு மருத்துவரும், நான்கைந்து மருத்துவ ஊழியர்களும். கூட்டம் கூடாமல் இருக்க ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்து மயங்கி விட்டார். உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சரியானார். அடுத்தநாளே எதுவும் நடக்காதது போல வழக்கமான கலகலப்புக்கு மாறிவிட்டார்.
இப்படி பல அனுபவங்களுடன் ஓரங்கட்டப்பட்ட காலம் முடிந்தது. முந்தைய நாள் இரவே வந்து நாளைக்கு டிஸ்சார்ஜ்ன்னு டாக்டர் சொல்லிட்டார். சரி, நாளைக்கு ஆம்புலன்ஸ்ல ஒய்ங் ஒய்ங்க்குன்னு நம்மள வீட்டில கொண்டு விட்டுருவாங்கன்னு நிம்மதியா இருந்தது. அடுத்தநாள் ஒரு பதினோரு மணி போல அன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய அம்பது அறுபது பேர கூப்பிட்டு வெளியில ஆம்புலன்ஸ் நிக்குது. அவங்க அவங்க ஊர்ப்பக்கம் போகக் கூடிய ஆம்புலன்ஸ்ல ஏறிக்கங்கன்னு சொன்னாங்க. மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு வெளிய வந்தா ஒரு பத்து ஆம்புலன்ஸுங்க நின்னுது. ஆம்புலன்ஸ் டிரைவருங்க ஏதோ திருநெல்வேலி பஸ் ஸ்டான்டுல பிரைவேட் பஸ்காரங்க, ஹைகிரவுண்டு, பேட்டை, சுத்தமல்லின்னு கூவுக மாதிரி அவங்க ஆம்புலன்ஸுக்கு ஆள் புடிச்சுக்கிட்டிருந்தாங்க.
நானும் எங்க ஏரியாவுக்கு ஏதாவது ஆம்புலன்ஸ் வருதான்னு பாத்தா ஒண்ணையும் காணோம். இரண்டு மூணு டிரைவர்கள் கிட்ட போய் கேட்டா அவங்களுக்கு வர மனசில்லை. எங்க ஏரியா ரூட் வந்தா அவங்களுக்கு அதிக பலன் இல்ல போல. கடைசியில எங்க ஏரியா வழியா போகிற ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் புடிச்சாரு. ஒரு வழியா நாங்க ஒரு ஆறு பேர் சேர்ந்தோம். டிரைவர் சொல்லிட்டாரு, உங்க வீட்டுலேல்லாம் கொண்டு விட முடியாது. வழியில உங்க வீட்டு பக்கமா இறங்கிக்குங்கன்னுட்டாரு. எப்படியோ வெளியில போனா போதும்ன்னு ஆகிப்போச்சு. எப்படியோ ஆம்புலன்ஸ்ல கூட்டமா ஆறுபேரும் ஏறி உட்கார்ந்து, ஒய்ங்க் ஒய்ங்க்குன்னு புறப்பட்டாச்சு. இது கொஞ்சம் சுத்தமான ஆம்புலன்ஸு. எப்படியோ ஒரு வழியா வீட்டுக்கு வந்து இறங்கியாச்சு. ஹூம்! என்ன உலகமடா! கொரோனான்னதும் தனி ஆம்புலன்ஸ் என்ன, வேளா வேளைக்கு சாப்பாடு என்ன. இனிமே நம்ம பொழப்ப நாமதான் பாத்துக்கிடணும். கொரானா மனுஷனுக்கு கிடச்ச மரியாதை, சரியான மனுஷனுக்கு கிடைக்க மாட்டேங்குதுப்பா.
கொரோனாவுக்கு இவ்வளவு மரியாதையான்னு கவனக்குறைவா இருந்துராதைங்கப்போ! நான் உள்ள இருந்தப்போ ஒரு மூணு நாலு நாளு இருமலால பட்ட அவஸ்தையைச் சொல்லல்ல. கவனமா கையெல்லாம் கழுவி முகமூடிய தாடைக்கு போடாம வாய்க்கும் மூக்குக்கும் போட்டு பாதுகாப்பா இரியுங்கோ. என்னா சரியா!
ரா.இ. பத்மநாபன்
புது தில்லி.
*****
என்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
படக்குனு அனுபவத்தை முடிச்சிட்டாரே... சுவைபட எழுதியிருக்கார். அங்க கஷ்டப்பட்டதோ சிலபலர் மறைந்ததைப் பார்த்த அதிர்ச்சியோ அவருக்கு மட்டும்தானே தெரியும்.
பதிலளிநீக்குபத்மநாபன் அண்ணாச்சிக்கு பாராட்டுகள்.
கஷ்டங்களைச் சொல்ல வேண்டாம் என்று தான் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் நண்பர்.
நீக்குபத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தை, கடந்த மூன்று பதிவுகளாக படித்து ரசித்த உங்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.
என்னதான் நகைச்சுவையாகச் சொன்னாலும் வருத்தமாகத்
பதிலளிநீக்குதான் இருக்கு.
இப்போது அவர் நலம் என்று நினைக்கிறேன்.நம்புகிறேன்.
உங்களை இப்படி கால் வாரி விட்டிருக்கிறாரே:)
தற்போது அவர் நலம் தான் வல்லிம்மா. அந்த நாட்களில் கடினமாகவே இருந்தது அவருக்கும்.
நீக்கு//உங்களை இப்படி கால் வாரி விட்டிருக்கிறாரே :)// ஹாஹா... இப்படி ஒருவருக்கொருவர் நாங்கள் செய்து கொள்வது வழக்கம் தான் மா. முப்பது வருட நட்பாயிற்றே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுருக்கமாகச் சொல்லி விட்டார். அவரது சிரமங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவவில்லை என்று தெரிகிறது. உங்கள் உதவியும் அவருக்கு பேருதவியாய் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.. ரசனையாய் எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்குசிரமங்களை விளம்பரம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமில்லை ஸ்ரீராம். பல முறை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டதால் இங்கே எழுதி இருக்கிறார். அவரது பணிச்சுமைக்கு இடையில் எழுதுவது பெரிய விஷயம். மாதத்திற்கு ஒரு முறையாவது எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நெடும் தொலைவில் இருக்கும் தலைவியிடம் பேச முடியாமல் பசலை படர்ந்து பசியின்றி இருக்கும் இலக்கியத் தலைவன் போல் கலங்கி நின்று, இதே போல் அவ்வப்போது அவரது இலக்கிய தலைவியைக் காணாமல் பசலை படர இருக்கும் வெங்கட்டுக்கு என் நிலை விளக்கி கட்செவி அஞ்சல் செய்தேன். அது என்ன கட்செவியோ
பதிலளிநீக்குகட்செவி = voice mail?
கொரானா மனுஷனுக்கு கிடச்ச மரியாதை, சரியான மனுஷனுக்கு கிடைக்க மாட்டேங்குதுப்பா.
உண்மை.
பகிரி, கட்செவி அஞ்சல் என்றெல்லாம் தமிழில் அறியப்படுவது - WhatsApp தான்! :) சிலர் இந்தப் பெயரை பயன்படுத்துகிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
என்றும் நலமுடன் இருக்கட்டும்...
பதிலளிநீக்குநலமாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்புகிறோம். அப்படியே நடக்கட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அப்பாடா நல்லபடியா வந்து சேர்ந்தார் போல. நகைச்சுவையா சொன்னாலும்,அந்த நேரத்தில் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எவ்ளோ டென்ஷன் இருந்து இருக்கும் என புரிந்து கொள்ள முடிந்தது. நல்ல பகிர்வு
பதிலளிநீக்குஅவருக்கும் குடும்பத்திற்கும் டென்ஷன் அதிகமாகவே இருந்தது. பதிவின் வழி அவர் சொன்ன விஷயங்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.
கஷ்டப்பட்டதை இஷ்டப்பட்டு ரசித்து இருக்கிறார் நண்பர்.
பதிலளிநீக்குஇனியெனும் அவருக்கு இப்படியொரு நிலை வரவேண்டாம் வாழ்க வளமுடன்.
இனியேனும் அவருக்கு இப்படியொரு நிலை வரவேண்டாம் - அது தான் அனைவருடைய எண்ணமும் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சவாலான அணுபவங்களை சுவையாக பகிர்ந்ததோடு நல்ல செய்திகளையும் மனதில் பதியச் செய்துள்ளார்.
பதிலளிநீக்குஅண்ணாச்சிக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.
நீக்குஅனைவரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்கு