தொகுப்புகள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சாப்பிட வாங்க: பனீர் பராட்டா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


துன்பங்கள் அனுபவித்த காலங்களை மறந்து விடு.  ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. 


******






பொதுவாக குளிர் நாட்களில் பனீர் பயன்பாடு வட இந்தியாவில் அதிகம்.  புரதச்சத்து மிகுந்த இந்த பனீர் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.  பனீர் பயன்படுத்தி விதம் விதமான சப்ஜி செய்வதுண்டு.  அது தவிர பனீர் டிக்கா, பனீர் Bபுர்ஜி எனவும் செய்வதுண்டு.  தவிர பனீர் பராட்டாவும் செய்வதுண்டு.  ஒரு ஞாயிறு காலை பனீர் பராட்டா செய்தபோது படம் எடுத்து வைத்தேன் - இதோ இன்றைக்கு ஒரு பதிவாகவும்!  விதம் விதமான பராட்டாக்கள் செய்தாலும் பனீர் பராட்டாவிற்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்!  அதுவும் பனீர், நெய், வெண்ணெய், கூடவே பச்சை சட்னியுடன் சாப்பிட ஆஹா…. ஆனந்தம் என்று சந்தோஷம் கொள்ளலாம்! காலை உணவாகவோ, இரவு உணவாகவோ இந்த பனீர் பராட்டா எடுத்துக் கொள்ளலாம்.  சரி இந்த பனீர் பராட்டா எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்!


தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 300 கிராம்

பனீர் - 300 கிராம்

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு 

மிளகாய்த் தூள் - ¼ ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

ஆம்சூர் தூள் - ¼ ஸ்பூன்

Gகரம் மசாலா - ¼ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது 

தனியா - பொடியாக நறுக்கியது சிறிதளவு. 


எப்படிச் செய்யணும் மாமு?


முதலில் கோதுமை மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் ½ ஸ்பூன் உப்பு சேர்ப்பதோடு, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து ஒரு மூடி போட்டு எடுத்து வைத்து விடுங்கள்.  சுமார் 20 நிமிடம் ஊறினால் நல்லது.  மாவு பிசைந்த பிறகு ஸ்டஃப் செய்யத் தேவையான பனீர் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்!





பனீரை பொதுவாக அப்படியே வைக்கக் கூடாது.  கொஞ்சம் தண்ணீரில் இருக்கும் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.  தண்ணீரிலிருந்து எடுத்து, நன்காக ட்ரை ஆன பிறகு அதனை துருவிக் கொள்ள வேண்டும் (ஹிந்தியில் Khadhu Khas செய்வது என்று சொல்வார்கள்!).  அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டு, அதில் அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ¼ ஸ்பூன் ஆம் சூர் தூள், ¼ ஸ்பூன் Gகரம் மசாலா, ¼ ஸ்பூன் மிளகாய் தூள் (காரம் அதிகம் தேவையெனில் ½ ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்), நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.    


இருபது நிமிடங்களில் மாவும் நன்கு ஊறி மிருதுவாக இருக்கும்.  இரண்டு ஸ்பூன் அளவு நம் கைகளில் நெய் எடுத்துக் கொண்டு மாவில் கலந்து மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.  


கொஞ்சம் பெரிய அளவு கோதுமை மாவு உருண்டையை எடுத்து, நான்கு  அல்லது ஐந்து இஞ்ச் அளவு இட்டுக் கொள்ள வேண்டும். அப்படியே  அடுப்பில் சப்பாத்திக்கான தவா வைத்து சூடாக்கலாம்!  இட்டு வைத்திருக்கும் சப்பாத்தியில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு பனீர் கலவையைச் சேர்த்து மூடி, உருட்டி, கைகளால் தட்டி, மீண்டும் குழவி கொண்டு ஆறு-ஏழு இஞ்ச் அளவு இட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.  கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கும் - இல்லை எனில் ஸ்டஃப் செய்த பனீர் வெளியே வந்து, ”என்னையா அடைத்து வைக்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டு கொஞ்சம் பல்லை இளிக்கும்! 


இதற்குள் அடுப்பில் வைத்திருந்த தவா சூடாகி இருக்கும். அதில் கொஞ்சம் நெய் தடவி, அதில் இட்டு வைத்திருந்த பராட்டாவினை போட்டு, கொஞ்சம் சூடானதும், திருப்பி விட்டு, கொஞ்சம் நெய் தடவி விடலாம்.  சிறிது நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை திருப்பி மற்ற பக்கத்திலும் நெய் தடவி விடுங்கள்.  நன்கு வெந்த பிறகு ஒரு தட்டில் ஒரு கட்டோரி/கப் வைத்து அதன் மேல் வைத்து விடுங்கள் - தட்டில் நேரடியாக வைத்தால் - சூடு காரணமாக வியர்த்து விட்டு விடும் - அது பராட்டாவினை கொஞ்சம் ஈரமாக்கி விடும்.  


அவ்வளவு தாங்க! பனீர் பராட்டா ரெடி!  ஸ்டஃப் செய்து இப்படிச் செய்தால் பனீர் வெளியே வந்து விடுகிறது என்று சொல்பவர்களுக்கு இன்னுமொரு வழி இருக்கிறது!  மாவு எடுக்கும்போது, கொஞ்சம் பெரிய உருண்டை செய்து, அதனை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஆறு-ஏழு இஞ்ச் அளவு இரண்டு சப்பாத்திகள் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு சப்பாத்தியை வைத்து அதன் மீது பனீர் கலவையை பரப்பி, அதன் ஓரங்களில் தண்ணீர் தொட்டு தடவிய பிறகு மேலே இரண்டாவது சப்பாத்தியை வைத்து, குழவியால் சிறிது உருட்டி தவாவில் போட்டு எடுக்க வேண்டியது தான்! இந்த இரண்டாவது முறையில் பனீர் கலவை வெளியே வராமல் இருக்கும்.


இந்த சூடான பனீர் பராட்டாவுடன் தயிர், ஊறுகாய், ஹரி சட்னி எனப்படும் புதினா-கொத்தமல்லி சட்னி சேர்த்து சாப்பிட, ஆஹா ஆனந்தம்!


என்ன நண்பர்களே, உங்கள் வீட்டில் நீங்களும் இந்த பனீர் பராட்டாவினை செய்து, சுவைத்துப் பார்க்கலாம் தானே!  பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. இரண்டாவது முறையில் வேறு வேறு கால்வாய்கள் வைத்து நாங்கள் செய்திருந்தோம்.  எபியில் போட்டிருந்தோம்.  நேற்று முதல் நாள் ஞாயிறு கூட வந்திருந்த இரு விருந்தினர்களுக்கு இதைதான் செய்து கொடுத்தோம்.  ஒருமுறை பனீரை வைத்தும் முயற்சித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டாவது முறையில் வேறு வேறு கால்வாய்கள்// - காய்கள் என்றே படித்தேன் :)))

      முயற்சித்துப் பாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஹி.. ஹி.. ஹி.. அசடு வழிவதைத் தவிர வேறு வழி?!!

      நீக்கு
    3. ஹாஹா... தட்டச்சுப் பிழைகளும் ஆட்டோ கரெக்‌ஷன் தொல்லைகளும் இருக்கத் தானே செய்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவையோ சுவை! குளிரில் நீங்கள் பகிர்ந்திருக்கும் படத்தைப் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. பனீரும் இருக்கிறது..செய்துடவேண்டியதுதான் :)
    "ஒரு கட்டோரி/கப் வைத்து அதன் மேல் வைத்து விடுங்கள்" அருமை! இது எனக்குத் தெரியாது..மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பனீரும் இருக்கிறது// செய்து பார்த்துச் சொல்லுங்கள் கிரேஸ். புதிய தகவலை உங்களுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சாப்பிட்டிருக்கோம். இப்போல்லாம் அதிகம் பண்ணுவதில்லை. இன்னொரு முறை பண்ணிட்டுக் கொத்துமல்லி, பச்சை மிளகாய்ச் சட்னியோடு சாப்பிடணும். பார்ப்போம். இங்கே 2 இடங்களில் அமுல் பனீரே கிடைக்குது. வாங்கிட்டு வரச் சொல்லணும். ஒரு பால் பண்ணையிலிருந்து இங்கே வந்து கண்காட்சி மாதிரிப் போட்டுப் பால் பொருட்கள் விற்பனை செய்தார்கள். அதிலே பனீர் சுமார் ரகம் தான். ஒரு முறை வீணாகவே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் இப்போதெல்லாம் நம் ஊரிலும் கிடைக்கிறது. முன்பெல்லாம் கிடைக்காதே!

      நீங்கள் சாப்பிட்டிருக்கலாம் - வடக்கில் இருந்ததால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. மிக அருமையான செய்முறை.
    இது பனீர் வாரமா:)


    நல்ல முறையில் செய்விளக்கமும் படங்களும் கொடுத்து

    சிறப்பித்திருக்கிறீர்கள்.மிகச் சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
    முதல் முறையே சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.
    மிக நன்றி மா. அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் வாரம்! ஹாஹா... தானாகவே அமைந்துவிட்டதும்மா - இந்தப் பதிவும் முன்னரே Schedule செய்து வைத்தது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  5. நாவு ஊரச்செய்யும் வகையில் செய்து காட்டியுள்ளீர்கள் சார்.
    செய்து பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாவு ஊறச் செய்யும் வகையில்!// நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. செய்முறை விளக்கம் அருமை... இன்னுமொரு வழி எளிதாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது வழி எளிது தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  8. விளக்கம் அருமை ஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. அருமையான குறிப்பு! இரண்டு முறைகளுமே செய்வது தான் என்றாலும் முதல் முறையில் செய்வது மிகவும் மிருதுவாக இருக்கும். பனீரைப்பற்றிய சில டிப்ஸ் எல்லோருக்கும் மிகவும் பயனளிக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      நீக்கு
  10. ரொம்ப அருமையா இருக்கு இந்த பனீர் பராட்டா...

    இது போல செஞ்சது இல்ல ..விரைவில் செய்து பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பார்த்து, உங்கள் அனுபவத்தினைச் சொல்லுங்கள் அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....