தொகுப்புகள்

வியாழன், 24 ஜூன், 2021

மீண்டும் தலைநகரில்...


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும்  இன்று காலை வெளியிட்ட நிழற்பட உலா பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


HEALTH DOES NOT ALWAYS COME FROM MEDICINE. MOST OF THE TIME IT COMES FROM PEACE OF MIND, PEACE IN THE HEART, PEACE OF SOUL. IT COMES FROM LAUGHTER AND LOVE. 


******




தீநுண்மி சூழலில் தில்லியில் பிரச்சனைகள் அதிகமாக, ஏப்ரல் மாத கடைசியில் தில்லியிலிருந்து புறப்பட்டு தமிழகம் வந்த நான் ஜூன் மாதம் தில்லி திரும்பி இருக்கிறேன்.  என்ன தான் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்துவந்தாலும், தில்லி திரும்பிய பிறகு கடந்த திங்கள் முதல் அலுவலகம் செல்லத் தொடங்கிய பிறகு இருந்த வேலைகள் மலைக்க வைத்தன.  மூன்று நாட்கள் தொடர்ந்து பணி புரிந்த பிறகு சூழலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது.  ஆனாலும் இன்னமும் வேலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அலுவலகத்தில் இன்னமும் சிலருக்கு தீநுண்மி தொற்று இருக்கிறது. சிலர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். சிலர் வீட்டிலிருந்து பணி புரிகிறார்கள். இந்த வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.  அடுத்த வாரம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரலாம் என கேட்டுக் கொண்டு இருக்கிறேன் பார்க்கலாம்! 


திருச்சியிலிருந்து தில்லி வரை விமானப் பயணம் - திருச்சி - சென்னை - தில்லி என காலை 11.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு தில்லியில் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி இரவு 08.45 மணி!  நல்ல வேளையாக அன்று காலையே நண்பர் வீட்டில் பணிபுரியும் பெண்மணி, எனது இல்லத்தினை சுத்தம் செய்து வைத்திருந்தார்.  தலைநகரில் இந்தச் சமயத்தில் “ஆந்தி” எனும் புழுதிக் காற்று அதிகமாக இருக்கும் என்பதால் நிறைய குப்பை!  வீட்டிற்கு உள்ளே இருப்பதை விட வீட்டின் வாசலில் நிறைய குப்பை!  எல்லாவற்றையும் பெருக்கி, துடைத்து வைத்திருந்தார் அந்தப் பணிப்பெண்.  அவருக்கும், அதற்காக மெனக்கெட்ட நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இல்லையென்றால் பயணித்து வந்தவுடன் இந்த வேலையைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.  பயணக் களைப்பைப் போக்க, குளியல் முடித்து மேல் வீட்டில் இருக்கும் நண்பர் ரங்கராஜன் வீட்டில் இரவு உணவு - சுடச்சுட சப்பாத்தி, சப்ஜி, சலாத், ராய்த்தா!  சுவையான உணவு கொடுத்த நண்பரின் இல்லத்தரசிக்கு நன்றி! 


பயணம் சுகமாகவே இருந்தது.  திருச்சி விமானநிலையத்தில் இருந்த இண்டிகோ பணியாளர் முடிந்தவரை உங்களுக்கு அடுத்த இருக்கை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன் - கூட்டம் அதிகமென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்! சொன்னபடியே சென்னை வரை அடுத்த இருக்கை காலி! அதனால் கொஞ்சம் பயம் இல்லாமல் பயணித்தேன்!  மேகாலயாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் - khasi மொழி தெரிந்தவர் என்று கேட்டதும் அவரிடம் அவரது மாநிலம் பிடித்த மாநிலம் என்றும் சொல்லி அவரை மகிழ்விக்க, நன்றி சொன்னார்.  விமானி நிறைய பேசினார்.  சில விமானிகள் பேசவே மாட்டார்கள் - இவர் ஒலிபெருக்கி வழி நிறைய பேசினார்!  சென்னையில் அதிக நேரம் கிடையாது என்பதால் உடனடியாக பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு பதினான்காவது வாயில் அருகே சென்று விட்டேன்.  சில நிமிடங்கள் காத்திருந்த பின் அழைப்பு வர விமானத்திற்குச் சென்று அமர்ந்தேன். 


ஜன்னலோர இருக்கை! அடுத்த இருக்கை காலி! அதற்கு அடுத்த இருக்கையில் ஒருவர்!  அதனால் சென்னை-தில்லி பயணமும் சுகமானதாகவே இருந்தது! சில தொந்தரவுகளைத் தவிர.  விமானத்தில் 95 சதவிகித இருக்கைகள் நிரம்பி இருந்தது!  முன் இருக்கைகள் - Leg Room அதிகம் இருக்கும் இருக்கைகள் காலியாக இருக்கிறது - அதிகப் பணம் கொடுத்தால் அந்த இருக்கைக்கு மாற்றிக் கொள்ளலாம் என பணிப்பெண் சொல்ல, ஒருவரும் தயாராக இல்லை! இன்னும் சில ஆயிரங்களைத் தரவேண்டியிருக்கும் என்பதால்!  விமானத்தில் நிறைய குழந்தைகள் - விமானம் பறக்க ஆரம்பித்ததிலிருந்தே அழுகை.  சில குழந்தைகள் இருக்கையில் அமராமல் குதிப்பதும், எழுவதும் என ரொம்பவே சேட்டை. சக பயணிகளுக்குத் தொல்லை என்பதை பணிப்பெண்கள் அவ்வப்போது சொன்னார்கள்.  பெற்றொர்கள் அதைப் பற்றிய எந்த வித கவலையும் கொள்ளவில்லை! ஒரு சிறுமி குதித்துக் கொண்டே இருக்க, திடீரென கதறி அழ ஆரம்பித்தார். 


குதித்ததில் ஜன்னலோர இருக்கைக்கும், விமானத்தின் பக்கவாட்டுப் பகுதிக்கும் இருந்த இடைவெளியில் கால் மாட்டிக் கொண்டது! ஒரே அழுகை.  பணிப்பெண்ணை அழைக்க அவர் மட்டும் என்ன செய்வார்.  சில நிமிடங்கள் போராட்டத்திற்குப் பின்னர் பொறுமையாக கையாண்டு, குழந்தையின் அம்மாவே மாட்டியிருந்த காலை விடுவித்தார்.  அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து ”இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்” என ஐடியா மன்னர்களாகவும், மன்னிகளாகவும் மாறினார்கள்!  ஒரு வழியாக அழுகை நின்றது.  அதன் பின்னர் அக்குழந்தையின் அப்பா அக்குழந்தையையும், மனைவியையும் திட்டிக் கொண்டே வந்தார்.  சொன்னாக் கேட்டாதானே! நீ கொடுத்த செல்லம்! என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க, அதற்கும் சிலரது Expert Opinion வந்தது!  மொத்தத்தில் தூக்கம் எனக்கில்லை! 


கிண்டில் வழி, தரவிறக்கம் செய்து வைத்த சில நூல்களை படித்து முடித்தேன். அதுவும் நல்லதற்கே!  இனி அடுத்த பயணம் எப்போது என்று தெரியாது!  எப்படியும் சுற்றுலா பயணமாக இருக்காது! தமிழகம் நோக்கிய பயணமாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது!  பார்க்கலாம்! தமிழகத்தில் இருந்த நாட்கள் இனிமையாகவே கழிந்தது! மீண்டும் தலைநகரில் - தனியே தன்னந்தனியே என தனி ஆவர்த்தனம் மீண்டும் தொடக்கம்!  முடிந்த வரை பதிவுகள் வெளியிட வேண்டும் - பார்க்கலாம்!  பணிச் சுமைகள் ஓரளவுக்கு குறைந்த பிறகு தான் பதிவுகளை எழுதி வைக்க வேண்டும்! இந்த மாதம் முழுவதற்குமான பதிவுகள் ஏற்கனவே எழுதி வைத்திருப்பதால் தொடர்ந்து மாதக் கடைசி வரை பதிவுகள் வரும்! 


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. இந்த முறை அம்பா பெரியம்மாவையும் சேர்த்து மிஸ் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். பாதுகாப்பாகப் போய்ச்சேர்ந்தாச்சு. அங்கும் பாதுகாப்புடன் இருங்கள் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணமும் கீதாஜி.

      மிஸ் - பழகி விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தலைநகர் திரும்பியாச்சா?  சில நாட்களுக்கு மனதில் வெறுமை இருக்கும்.  அலுவலகப்பணி அதை மறக்க வைக்கும்.

    தமிழகத்தில் பழைய மாதிரி 100 சதவிகிதம் பணிசெய்ய கட்டளை இட்டு விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு இரவு திரும்பி விட்டேன் ஸ்ரீராம்.

      இங்கே இன்னும் 100 சதவிகிதம் இல்லை! நான் தினமும் சென்றாக வேண்டிய கட்டாயம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தில்லி வந்து விட்டீர்களா.
    நல்ல மாற்றமாக இருக்கட்டும் வெங்கட்.

    பத்திரமாக இருண்கள்.
    வாசகம் எப்போதும் போல அருமை.
    நேரம் கிடைக்கும் போது
    பதிவுகளை ஷெட்யூல் செய்வதே நல்லது. அருமையான திட்டம்.
    உங்கள் வீட்டைச் சுத்தம் செய்தவருக்கும், நேரம் அறிந்து
    உணவு கொடுத்தனுப்பிய நண்பரின் மனைவிக்கும்
    மனம் நிறை வாழ்த்துகள்.

    குழந்தைகளைக்கட்டுப்பாடோடு வளர்க்கத் தெரியாத
    பெற்றோர்களை என்ன சொல்வது.
    நீண்ட பயணங்களிலாவது அவை கொஞ்சம் தூங்கலாம்.
    சென்ற இந்திய பயணத்தில் சென்னை மதுரை பயணம் சந்தைக் கடை
    போலவே இருந்தது.ஒருமணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை.

    தங்கள் தில்லி வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி ஞாயிறு அன்று வந்து சேர்ந்தேன் வல்லிம்மா. கவனமாகவே இருக்கிறேன்.

      தமிழகத்திற்குள் இயங்கும் விமானங்களில் அதிக தொல்லையாகவே இருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன். நீண்ட பயணங்களில் தூங்க முடிவது நல்ல விஷயம். இல்லை என்றால் கடினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்லது. ஆரம்ப சில நாட்கள், நிம்மதியா இருக்கும் (as per my experience). அதற்கு அப்புறம்தான் எல்லோரையும் மிஸ் செய்வதால் வெறுமையாக இருக்க ஆரம்பிக்கும். அப்புறம் ஆபீஸ் வேலையில் மனதை முழுகடிக்கவேண்டியதுதான். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஆரம்ப சில நாட்கள் நிம்மதியாக இருக்கும்!/ ஹாஹா... எனக்கு அப்படி இல்லை - இதுவும் Part of Life! அவ்வளவு தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மீண்டும் தலைநகர் பாதுகாப்பாக வந்தது குறித்து வாழ்துக்கள் வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு
  6. டெல்லி வெய்யிலுக்கு ஸ்ரீரங்கம் எல்லாம் ஊட்டி . வெய்யிலோ மழையோ தலைநகரம் இல்லையோ ? Enjoy.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வெய்யிலுக்கு ஸ்ரீரங்கம் எல்லாம் ஊட்டி - சரி தான்! கொளுத்தி எடுக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

      நீக்கு
  7. //கிண்டில் வழி, தரவிறக்கம் செய்து வைத்த சில நூல்களை படித்து முடித்தேன்.// ஆஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு நல்லதொரு விஷயம் தானே! அதனால் மகிழ்ச்சி ஜனா சார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தலைநகருக்கு அலுவலக பணி காரணமாக பத்திரமாக திரும்பியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். அங்கும் அலுவலகம், மற்ற வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள். எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியாதென்பது கொஞ்சம் சிரமந்தான்.. இன்னும் இந்த கொரோனா அசுரன் மறைந்து வாழ்கிறான் எனும் போது நாம் பத்திரமாகத்தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். என்ன செய்வது? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பத்திரமாக/கவனமாகவே இருக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. டெல்லி வந்து விட்டீர்களா? மனம் முழுவதும் ஊர் நினைவுகள் இருக்கும். வேலை பளு அதிகமாக இருப்பதும் தீநுண்மி பயம் இன்னும் குறையவில்லை என்பதும் கவலை அளிக்கிறது. வெயில் வேறு கடுமையாக இருக்க்மே!
    பாதுகாப்பாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கோமதிம்மா. ஞாயிறன்று தில்லி திரும்பினேன். வெயில் அதிகம் தான். பகலில் வெளியே செல்வதே இல்லை. காலையில் அலுவலகம் வந்து விட்டால், மாலை ஆறு மணிக்கு மேல் தான் வீடு! அதனால் கொஞ்சம் கவலையில்லை. மதிய நேரம் வெளியே செல்ல வேண்டியிருந்தால் மிகவும் கடினமாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன். தங்களது அன்பிற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. முன்பு போல் தீநுண்மி இல்லாத காலம் விரைவில் வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் அனைவருடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....