அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
திடீர் பயணமாக அலுவலகம் சம்பந்தமாக உத்திராகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூன் சென்று வந்தது குறித்து இது வரை இரண்டு பகுதிகள் - அடாது மழை பெய்தாலும் மற்றும் டேராடூன் பயணம் - பகுதி இரண்டு - எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அந்தப் பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால் படித்து விடுங்களேன்! இந்தப் பகுதியில் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து மேலும் சில விஷயங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.
இந்தப் பயணம் முழுவதுமே பணிச்சுமை அதிகம் என்பதை சென்ற பகுதியில் எழுதி இருந்தேன். தொடர்ந்து பணிச்சுமை என்பதால் எங்கேயும் நகர முடியவில்லை. அதிகாலையில் பணியைத் துவங்கினால் இரவு ஒன்பது மணி வரை கூட தொடர்ந்து பணி இருந்தது. அதனால் எங்கள் தங்குமிடத்தில் கூட அதிக நேரம் செலவிடமுடியவில்லை. தொடர்ந்து ஓட்டம் தான். பன்னிரெண்டாம் தேதி புறப்பட்டதிலிருந்து பதினைந்தாம் தேதி வரை தொடர் ஓட்டம் தான். டேராடூன் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு என்றாலும் கிடைத்த ஒரு நாள் - அதாவது ஞாயிற்றுக்கிழமை (16-ஆம் தேதி) - மட்டுமே எங்கேயாவது சென்று வரலாம் என காத்திருந்தோம். ஞாயிறு காலை பொறுமையாக எழுந்திருந்து தங்குமிடத்தின் ஏழாம் மாடியில் இருந்த சில வசதிகளைப் பயன்படுத்தினோம். அந்த வசதிகள் என்ன என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
ஏழாம் மாடியில் நீச்சல் குளம்:
நாங்கள் தங்கியிருந்தது டேராடூன் நகரிலிருந்து மசோரி செல்லும் சாலையில் அமைந்திருந்த Hyatt Regency எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில். தேசிய அளவிலான கூட்டம் என்பதால், அதுவும் பல மாநிலங்களிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சர்கள் வந்திருந்தார்கள் என்பதால் இந்த இடத்தில் தான் கூட்டம் நடத்தப்பட்டது. அங்கே ஏழாம் மாடியில் ஒரு பெரிய நீச்சல் குளம் உண்டு. அதைத் தவிர ஸ்பா போன்ற வசதிகளும் உண்டு. மூன்று நாட்களாக அதிகாலை எழுந்து ஓடிக்கொண்டே இருந்ததால் ஞாயிறு அன்று பொறுமையாகவே எழுந்திருந்தேன். ஒன்பது மணிக்கு மேல் நண்பர்கள் அழைத்து, நீச்சல் குளத்திற்குச் செல்லலாம் என்று சொல்ல, அவர்களது அறைக்குச் சென்று, பிறகு எல்லோருமாகச் சேர்ந்து ஏழாம் மாடிக்குச் சென்றோம். ஏழாம் மாடியிலிருந்து பார்த்த காட்சிகள் மனதை மயக்கும் வண்ணம் இருந்தன. வானம் பார்த்த நீச்சல் குளம் - நான்கு அடி ஆழம், இரண்டடி ஆழம் என இரண்டு விதமான நீச்சல் குளங்கள் அங்கே இருந்தன. இரண்டடி ஆழம் கொண்டது சிறுவர்களுக்கும், நான்கடி ஆழம் கொண்டது பெரியவர்களுக்கும் என சொன்னார்கள். சாதாரணமாக நீச்சல்/குளியல் வசதிகளுக்கு மட்டுமே - யாரும் Dive அடிக்கக் கூடாது என்று முன்னரே சொல்லிவிட்டார்கள்.
அது மட்டுமின்றி தகுந்த நீச்சல் உடை, ஷார்ட்ஸ் போன்றவை அணிந்து மட்டுமே நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அப்படி உங்களிடம் ஷார்ட்ஸ் இல்லை என்றால் ரூபாய் ஐநூறு கொடுத்து அங்கே வாங்கிக் கொள்ளலாம். நீச்சலுக்குப் பிறகு துடைத்துக் கொள்ள துண்டு போன்றவை அங்கேயே ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். எடுத்துக் கொள்ளலாம். சுற்றிலும் மலை, மேகம் தவழும் காட்சிகள், திறந்தவெளியில் அமைந்திருக்கும் நீச்சல் குளம் என மிகவும் சிறப்பாக இருந்தது அந்த இடம். அருகிலேயே ஒரு சிறு உணவகமும் உண்டு. நிறைய இருக்கைகளும், சாய்ந்து அமர்ந்து கொள்ள வசதிகளும் இருந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீச்சல் குளத்தில் இருந்த பிறகு அங்கே இருந்த மற்ற வசதிகளையும் - ஸ்பா போன்ற வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டோம். அங்கே தங்கியிருப்பவர்கள் அனைவருமே இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மிகக் குறைவான நபர்களே அங்கே வந்தார்கள். சில சிறுவர்கள் அவர்களது பெற்றோருடன் வந்து நீச்சல் குளத்தினை பயன்படுத்தினார்கள்.
அதன் பிறகு எங்களது அறைக்குத் திரும்பி, உடைமைகள் அனைத்தையும் சரிபார்த்து விட்டு தங்குமிடத்திலிருந்த உணவகம் சென்றோம். நாங்கள் சென்றபோது காலை 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது - காலை உணவு முழுவதும் தீர்ந்து போயிருந்தது - நேரமும் ஆனதால் எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் பழங்கள், பழச்சாறு போன்றவற்றையே உண்ண முடிந்தது. இந்தத் தங்குமிடத்தில் தங்கியிருந்த அனைத்து தினங்களிலும் விதம் விதமான உணவு உண்ணக் கிடைத்தது என்றாலும் பெரும்பாலானவை பெயர் தெரியாத, அல்லது பெயர் வித்தியாசமாக வைத்திருந்த உணவுகளாகவே இருந்தது. உணவு விஷயத்தில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை என்பதால் அங்கே இருந்ததில் சில வகைகளை மட்டுமே உண்டு எனது உணவை முடித்துக் கொள்வதே வழக்கமாக இருந்தது. புதிது புதிதான பெயரில் உணவு வகைகள் இருந்தன - ஒரு சதுர வடிவத்தில் Buffet அமைக்கப்பட்டு ஒவ்வொரு வேளையும் சுமார் ஐம்பது வகையான உணவுகள், பழச் சாறுகள், இனிப்புகள், வட இந்திய உணவுகள், தென்னிந்திய உணவுகள், உத்திராகண்ட் சிறப்பு உணவு வகைகள் என அங்கே கிடைத்தது. ஒரு சில புதிய உணவு வகைகளை - குறிப்பாக உத்திராகண்ட் உணவு வகைகளை சுவைத்தேன். சிங்கோடி(ரி) என்ற இனிப்பு மிகவும் பிடித்திருந்தது.
காலை உணவை முடித்துக் கொண்ட பிறகு என்ன செய்தோம், எங்கே சென்றோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
ஏழாவது மாடியில் தண்ணீர் நீச்சல் குளம்... கட்டிடத்தை பாதிக்காதா?! அறைக்குத் திரும்பியதும் ஏன் உடைமைகளை சரி பார்க்க வேண்டும்? உணவு வகைகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல். ஒருவழியாய் பயண நோக்கம் தெரிந்தது!
பதிலளிநீக்குமாடியில் நீச்சல் குளம் - இப்படி பல தங்குமிடங்களில் இருக்கிறது. கட்டிடத்தை பாதிக்காது என்றே தோன்றுகிறது. இல்லையெனில் பல இடங்களில் கட்டி இருக்க மாட்டார்களே ஸ்ரீராம். பயண நோக்கம் - :) தெரிந்து விட்டதா?
நீக்குஉணவு வகைகள் - முடிந்தால் இன்னும் பகிர்ந்து கொள்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அனுபவம் புதுமை...
பதிலளிநீக்குதங்களது கருத்தினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தனபாலன்.
நீக்குஷார்ட்ஸ்க்கு ஐநூறு ரூபாய் என்பது விலையா ? அல்லது வாடகையா ?
பதிலளிநீக்குவிலை தான். வாடகை அல்ல கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீச்சல் குளம் மிக அழகுஅதுவும் சுற்றிலும் மலைகள் இயற்கை என்று. இப்படிப் பல தங்கும் இடங்களிலும் திறந்தவெளி நீச்சல்குளங்களை அமைக்கிறார்கள். அதுவும் இப்படி இயற்கைக் காட்சிகள் உள்ள பகுதிகளில். யுட்யூபில் கூட பார்த்தேன் இடம் மறந்துவிட்டது. நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீர் விளிம்பிலிருந்து வழிந்து கீழே வழிவதையும் பார்த்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் அட்டகாசமாக இருக்கு. நீச்சல்குளம் ஏதோ விளிம்பே இல்லாமல் மலையை ஒட்டி அமைந்திருப்பது போல நல்ல கோணத்தில் எடுத்திருக்கீங்க வெங்கட்ஜி!! இரு படங்களையும் ரொம்ப ரசித்தேன்
சிங்கோடி(ரி) - உத்தர்காண்ட் மாநிலத்தின் சிறப்பு இனிப்பு. ரொம்ப நல்லாருக்கும். கோயா சர்க்கரை எல்லாம் சேர்த்து செய்வது. நான் ஒவ்வொரு மாநிலத்தின் உணவையும் சிறப்பையும் (சில வடக்கே பயணம் செய்தப்ப அறிந்துகொண்டவை. சில இணையத்தில் தெரிந்து கொண்டவை. அப்படி இதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் பெயர்கள் எல்லாம் மறந்துவிடும்!!!!!!!!!!!!!!!
இங்கு இப்ப பீஹார் மாநில உணவு என்று ஒன்று பார்த்தேன். ஆனால் அங்கு எதுவும் பீஹார் மாநிலத்தின் உணவாகத் தெரியவில்லை சைவம்தான் என்றாலும்...எனவே சுவைத்துப் பார்க்க விருப்பம் இல்லை.
நீங்கள் சுவைத்த வேறு உணவுவகைகள் பத்தியும் எழுதுங்க ஜி.
கீதா
வாசகம் அட்சர லட்சம்! அதுவே பெரிய சாதனைதான்..
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது.
பயணம் சம்பந்தபட்ட தொடர் விபரங்கள் அருமை. இதன் முதல், மற்றும் இரண்டாம் பகுதியை படித்து விட்டேன்.
தங்கியிருக்கும் ஏழாவது மாடியில் நீச்சல் குளம் படங்கள் நன்றாக உள்ளது. பொதுவாக ஹோட்டலின் பின்பக்கம், இருக்கும். இல்லை கீழ் தளத்தில்.. இது மாடியில் அமைத்திருப்பது புதிதாக உள்ளது. சுற்றிலும் இயற்கை சூழலோடு பார்க்கவே நன்றாக உள்ளது.
அங்குள்ள இனிப்பும் சுவையாகத்தான் இருந்திருக்கும். காஞ்சிபுரம் இட்லி மாதிரி இலையில் வடிவமைக்கப்பட்ட இனிப்பு. மேற்கொண்டு பதிவை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவாரசியமான அணுபவங்கள் சார்.
பதிலளிநீக்குஅரசாங்க உயர் அதிகாரிகளுக்கான வசதிகள் சிறப்பாக உள்ளது.
வாசகம் அருமை. தங்ககுமிடம் மிக ழகாய் இருக்கிறது. மாடியிலிருந்து இயற்கை காட்சிகள் அற்புதம்.சிங்கோடி(ரி) இனிப்பு பாலில் செய்த இனிப்பா?
பதிலளிநீக்குமேல் மாடியில் நீச்சல் குளம் சில விடுதிகளில், குடியிருப்புகளில் பார்த்ததுண்டு. சிங்கோடி(ரி) புது அறிமுகம். பகிர்வு நன்று.
பதிலளிநீக்குசிங்கோடி பார்க்க நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு