தொகுப்புகள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கதம்பம் - Stress - Good Girl


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


Stress - 21 ஜூலை 2024:



பட உதவி: Google...


யோசிக்க வைத்த காணொளி!


நேற்றைய பொழுதினில் அலைபேசியில் செய்திகளை சற்றே பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு காணொளி என்னை மிகவும்  பாதித்தது! யோசிக்கவும் வைத்தது! இப்போதைய வாழ்க்கை முறையும், சக மனிதர்களின் மனப்பாங்கும் எப்படி மாறிவிட்டது என நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்!


கோவையில் ஒரு அம்மாவும் மகளும் பத்து வருடங்களாக தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அக்கம்பக்கத்தவர்களைக் கூட பார்த்துக் கொள்ளாமல் இருந்திருந்திருக்கிறார்கள்! அவர்களின் வீடு முழுவதும் இப்போது குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது! எங்கும் குப்பை எதிலும் குப்பை! 


வெளியே துர்நாற்றம் வீசவே அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் புகாரளிக்க மாநகராட்சியிலிருந்து ஊழியர்கள் வந்து அவர்க்ள் வீட்டிலிருந்து டன் டன்னாக குப்பைகளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அந்தக் காணொளியில் பார்த்த போது அந்த வீட்டில் கால் வைக்கவே முடியாது போல இருக்கிறது!


அந்த அம்மாவின் கணவர் இறந்து விடவே யாரையும் பார்க்க பிடிக்காமல் இப்படி இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது! எல்லாவற்றையும் ஹோம் டெலிவரி மூலம் வீட்டுக்கு வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள்! ஆனால் உணவுக் கழிவுகளையோ, குப்பைகளையோ எதையுமே வெளியே போடாமல் இருவரும் எப்படி இப்படி இருந்தார்கள்??


சில வருடங்களுக்கு முன்பு கூட சகோதரிகள் இருவர் இப்படி பல வருடங்களாக வெளியுலகை பார்க்காமல் இருந்தார்கள் என்றும் நடிகை ஒருவர் கூட இப்படி இருந்தாரென்றும் கேள்விப்பட்டதுண்டு! இதற்கெல்லாம் காரணம் மன அழுத்தம் என்றும் சொல்கிறார்கள்!


உறவுகளோடும் நட்புவட்டத்தோடும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவதும், பண்டிகை  நாள்கிழமைகளில் ஒருவரையொருவர் விருந்துண்ண அழைப்பதும் செல்வதும் நமது கலாச்சாரம் தானே! நமக்கென்று சில ஆத்மார்த்தமான மனிதர்களை திரட்டி வைத்துக் கொள்வதும் முக்கியம்!


சிறுவயதில் அத்தை மாமா என அண்டை வீட்டினரோடு அன்பாக பழகியதும், உரிமையோடு நம் விட்டு குழந்தைகளை அவர்கள்  கண்டித்ததும் அவர்களின் பொறுப்பில் நம் வீட்டு குழந்தைகளை விட்டுச் செல்வதும் நடந்தது இக்காலத்தில் தானே?? 


இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளையும் வம்புகளையும்  தவிர்க்க தனிமை என்பது சில நேரங்களில் நல்லது தான் என்றாலும் அது நம்மை பாதிக்காத வரை தான்! இன்றைய மாறிப் போன வாழ்க்கை முறையும் நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களின் சுயநலமான போக்கின் காரணமாக கூட இப்படி ஆகியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்!


*******


Good Girl - 26 ஜூலை 2024:



குட் கேர்ள்!!


நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான பாடங்களை சிறுவயது முதலே தெரிந்து வைத்துக் கொள்வது அல்லது கற்றுக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானது! இவ/இவன் தான் எங்க வீட்டுல எல்லாருக்கும் செல்லம் என்று சொல்லிக் கொண்டு அவர்களை எந்த வேலையுமே செய்யவிடாமல் வளர்ப்பது சரியல்ல! எதிர்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் போது அவர்களுக்கு எதுவுமே தெரியாது!


சமீபத்தில் தோழி ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்! அப்போது அவர்கள் வீட்டு அடுக்களையிலிருந்து பாத்திரங்களை அடுக்கும் சத்தம் வந்து கொண்டிருக்கவே என்னவென்று விசாரித்த போது தோழியின் 10 வயது மகள் அடுக்களையிலிருந்து படுக்கையறைக்கு ஓடினாள்! 


தோழி என்னிடம், அவ தான் அப்பப்போ கிச்சன்ல பாத்திரம் ஏதாவது இருந்தா தேய்ச்சு க்ளீன் பண்ணிட்டு வருவா! கிச்சன் மேடையெல்லாம் கூட க்ளீனா வெச்சுப்பா! ரெசிபிஸ் எல்லாம் கூட அவ அக்காவோட சேர்ந்து பண்ணிப் பார்ப்பா! உங்கள பார்த்ததும் வெட்கப்பட்டுண்டு ஓடறா! என்றார்! 


அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! இக்காலத்தில் இப்படியொரு பிள்ளையா! உள்ளே ஓடிய அவர்கள் மகளை அழைத்து கைகொடுத்து பாராட்டினேன்! புன்னகையுடன் தேங்க்யூ ஆன்ட்டி என்றாள்! சூப்பர்!  எப்பவுமே இப்படி இருக்கணும்டா கண்ணா! என்றேன்.


எனக்கு இதெல்லாம் செய்ய ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி! துணியெல்லாம் கூட மடிப்பேன்! என்று பெருமை பொங்கச் சொன்னாள் அந்த சுட்டிப்பெண்! உண்மையில் துணிகளை மடித்து வைக்கும் வேலை நிறைய பேருக்கு பிடிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..🙂 ஆனால் எனக்கு இதெல்லாம் பிடித்த வேலை..🙂 என்னை நானே பார்த்தது போலிருந்தது!!!


தோழி தன் அருகில் அமர்ந்திருந்த மகளிடம், “ஆன்ட்டி குட் கேர்ள்டா! இவங்க வீட்டுல maid எல்லாம் இல்ல! எப்போ போனாலும் வீடு க்ளீனா தான் இருக்கும்! Outside food எதுவுமே கிடையாது! ஆன்ட்டியே தான் ஸ்வீட்ஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணுவாங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணா! நான் உன்ன மாதிரி குட்டிப் பொண்ணா இருந்த போதே இப்படித்தான்! எனக்கு நானே பண்ணினா தான் திருப்தியா இருக்கும்! யாரையும் depend பண்ணி இருக்கக்கூடாது இல்லையா! நீயும் அப்படித்தான் இருக்கணும்! நல்லா படிக்கவும் படிக்கணும்! வேலையெல்லாமும் கத்துக்கணும்! கேர்ள்ஸால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்! என்றேன்.


பூமர் ஆன்ட்டி! என்று சொல்லாமல் புன்னகையுடன் ஓகே சொன்னாள்! தோழியிடமும் மகளை சரியாக வளர்த்திருப்பதாகவும் பாராட்டி விட்டு கிளம்பினேன்! இன்றைய துரித வாழ்விலும் நேரத்தை திட்டமிட்டால் நிச்சயம் எல்லாவற்றையும் செய்யலாம்! ஆரோக்கியமாகவும் இருக்கலாம்!


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


10 கருத்துகள்:

  1. குப்பை வீடு செய்தி நானும் படித்தேன்.  அத்தனை வருடங்களாக அவர்கள் உறவுகள் அவர்களைத் தேடாமல், தேடி வராமல் இருந்திருக்குமா?  அந்த நாற்றத்தில் அவர்கள் எப்படி காலம் தள்ளினார்கள்?!  புதிர்க்கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  2. Good Girl பாராட்டப்பட வேண்டியவர்தான்.  உங்களையும் பாராட்ட வேண்டும்.  நீங்கள் சீனியர் குட் கர்ல்!

    பதிலளிநீக்கு
  3. யாரையும் பார்க்காமல் இருந்தவர்களை அக்கம் பக்கத்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தம்.மனிதம் எங்கே இருக்கிறது?
    விஜி

    பதிலளிநீக்கு
  4. முதல் செய்தி ரொம்பவும் மனதை வருத்தியது.

    காரணம் இருவருமே மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்கள் அதை விட அக்கம்பக்கமும் கூட அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல வேதனையும் கூட. துர்நாற்றம் வந்தப்ப புகாரளிக்கத் தெரிந்தவங்களுக்கு அவங்க ஏன் வீட்டிற்குள்ளேயே இருக்காங்க என்று கருணையோடு இப்படி பொது நல மருத்துவத்துறையை அணுகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குட் கேர்ள் சின்னவளுக்கும் குட் கேர்ள் பெரியவங்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பெண் குழந்தை என்றில்லை ஆண் குழந்தைக்குமே பழக்குவது நல்லதே. ஆனால் சின்ன வயதில் செய்யாதவங்க கூட பெரியவங்களாகி வேறு ஊருக்குச் சென்று படிக்கத் துவங்கும் போது அலல்து வேலைக்குப் போகும் போது சிலர் கற்றுக் கொண்டுவிடுவாங்க. necessity is the mother of invention, என்பதோடு creation and habits என்றும் சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கோவை நிகழ்வு மனதை கனக்க வைத்தது.

    உறவுகளிடம் தொடர்பு இல்லாததே முதற்காரணம்.

    மேலும் இன்று உறவுகளின் துரோகங்கள் பெருகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறிவரும் உலகில் நண்பர்கள், அக்கம்பக்கம் இருப்பவர்கள்தாம் உறவினர்கள். தனியாக இந்த உலகில் வாழ்ந்து இறப்பதால் என்ன பயன்?

      நீக்கு
  7. வாசகம் அருமை.
    முதல் செய்தி மனதை வருந்த செய்கிறது. ஏன் இப்படி இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்தது.
    ஒருவரை கூடவா பிடிக்காமல் இருப்பார்கள் மனிதர்கள்.

    //நமக்கென்று சில ஆத்மார்த்தமான மனிதர்களை திரட்டி வைத்துக் கொள்வதும் முக்கியம்!//

    நீங்கள் சொல்வது உண்மை.

    குட் கேர்ள்!! படமும் செய்தியும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....