தொகுப்புகள்

சனி, 26 அக்டோபர், 2024

காஃபி வித் கிட்டு - 207 - விருப்பம் - மம்மி வாங்கு டாடி வாங்கு - யார் குற்றவாளி? - மரியாதை - இனிமை - கேள்வியும் பதிலும் - National Hug A Sheep Day


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினொன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : விருப்பம் 



தமிழகப் பயணத்தின்போது நவராத்திரி பொம்மைக் கடைகள் பார்த்து வந்தேன்.  (இது குறித்த ஒரு பதிவு நடை நல்லது பகுதியாக வரலாம்!) அப்படி ஒரு கடைக்குச் சென்றபோது, அங்கே தற்காலிக பொம்மை கடை வைத்திருந்த மண்டபத்தின் ஜன்னல்களில் வரிசையாக சில பாட்டில்கள் - அதன் தலையில் பாட்டில் திறப்பான்களுடன் இருந்தது (பார்க்க படம்).  கடை விரித்தவரிடம் “என்னங்க இது, நவராத்திரி பொம்மைக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம், இது எதுக்கு இங்கே இருக்கு?” என்று ஒரு வித அதிர்ச்சியுடன் கேட்டதற்கு, இல்லைங்க எல்லா பொம்மைகளுடன் இதையும் வைத்திருக்கிறேன்.  இதற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. இது Bottle Opener மட்டுமல்ல, இதன் பின்னே Magnet இருப்பதால் Fridge மீது ஒட்டி வைத்துக் கொள்ள முடியும்.  இன்றைக்கு பல IT உழைப்பாளர்களின் (பெண்கள் உட்பட) தேவையாக இந்த மாதிரி திறப்பான்கள் இருக்கின்றன.  நிறைய வரவேற்பு இவற்றுக்கு இருக்கிறது என்றார்.  Fridge-ல் வைத்த பீர் பாட்டில்களை திறந்து குடிக்க இது வசதியாக இருக்கும் என்று சொன்னபோது, எங்கே போய்கொண்டிருக்கிறது நம் நாடு என்று தோன்றியது. குடிபோதை மீதான மோகம் நம் இளைஞர்களை எங்கே அழைத்துச் செல்கிறது என்று தெரியவில்லை என்ற எண்ணங்களுடன் கடையை விட்டு அகன்றேன்.  அப்போதும், கடைக்காரர், “உங்களுக்கு வேண்டாமா?” என்கிறார் ஒரு வித எதிர்பார்ப்புடன்! 

******

 

ராஜா காது கழுதை காது : மம்மி வாங்கு டாடி வாங்கு 


NSB சாலையில் நடந்து கொண்டிருந்தபோது கைகளில் பொம்மைகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார் ஒருவர். விரல்களால் ஒரு பட்டனை அழுத்தினால் மேலே உள்ள பகுதி இராட்டினம் போல சுற்றி வருகிறது.  விஷயம் அது அல்ல! அந்த பொம்மை விற்பனை செய்யும் நபர் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களாகப் பார்த்து அவர்கள் அருகே சென்று குழந்தைக்கு தனது கையில் இருக்கும் பொம்மையைச் சுற்றிக்காண்பிப்பதோடு, “மம்மி வாங்கு டாடி வாங்கு, மம்மி வாங்கு டாடி வாங்கு“ என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.  யாரேனும் ஒரு சிலரேனும் அவரது குரலில் ஈர்க்கப்பட்டு பொம்மைகளை வாங்கிவிடமாட்டார்களா என்கிற வியாபாரத் தந்திரம்….  இன்னும் சிலரும் இப்படியான பொம்மைகளை விற்றாலும் நான் பார்த்தபோது இவரிடம் தான் ஒரு சிலர் வாங்கினார்கள்! ஒரு வேளை மம்மி டாடியையே வாங்கச் சொல்கிறாரோ என்று கூட சிலருக்குத் தோன்றினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல! 


******


பழைய நினைப்புடா பேராண்டி : யார் குற்றவாளி?


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - யார் குற்றவாளி? - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


வெளி வராத ஒரு செய்தியும் இருக்கிறது – அதே நாளில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவி – பள்ளியில் படிப்பது தவிர மேற்படிப்புக்காக பயிற்சி வகுப்பிலும் படித்து வருகிறார். அங்கே பன்னிரண்டாவது படிக்கும் ஒரு மாணவனுடன் சற்றே நெருங்கி நட்புடன் பழகியிருக்கிறார் போல.  


இரவு எட்டு மணிக்கு இந்தப் பெண்ணை அலைபேசியில் அழைத்து பாடத்தில் ஏதோ சந்தேகம் இருக்கிறது – சேர்ந்து படிக்கலாம் என அழைத்ததாக தெரிகிறது. தெரிந்த பையன் தானே என அந்த நேரத்தில் இந்தப் பெண்ணும் செல்ல, ஒரு காரில் அழைத்துக் கொண்டு போய், ஏதோ மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை சீரழித்திருக்கிறார்கள். பாடத்தில் சந்தேகம் என அழைத்து உடலியலில் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வெறியர்கள்.


வெளியே தெரிந்தால் அவமானம் என இதை மூடி மறைத்து விட்டார்கள் பெற்றவர்கள். கூடவே அந்த இளைஞன் படங்கள் எடுத்திருப்பதாகவும் போலீஸுக்குச் சென்றால் அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் போலீஸுக்கு போகவில்லை பெற்றோர்கள். பெற்றோர்களிடம் சொல்வதற்கு முன்னரே தோழி ஒருத்தியிடம் சொல்ல அதன் மூலம் விஷயம் வெளிவந்திருக்கிறது. எதையோ செய்து விஷயத்தினை அடக்கி வைத்திருக்கிறார்கள்.


பதிவை மீண்டும் வாசிக்கும்போது, இது போன்ற நிகழ்வுகளுக்கு முடிவே இல்லாமல் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போதே வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.  என்ன சொல்ல?  மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் விளம்பரம் : மரியாதை


இந்த வாரத்தின் மனதைத் தொட்ட விளம்பரமாக Mankind Pharma சார்பில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (13 ஆகஸ்ட்) கொண்டாடப்பட்ட Organ Donation Day சமயத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று.  உங்கள் மனதையும் தொடலாம். பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Honouring Life and Organ Donors | World Organ Donation Day | 13th August | #WorldOrganDonationDay (youtube.com)


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது :  இனிமை…



ஒரு பேருந்தில் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தார். ஒரு இடத்தில் ஒரு வயதான பெண்மணி நிறைய பைகளுடன் சத்தம் போட்டு கொண்டு ஏறி அந்த இளம் பெண் பக்கத்தில் அமர்ந்தார்.


அமரும்போது அந்த இளம் பெண்ணை தள்ளிக்கொண்டு மேலும் தான் கொண்டு வந்த பைகளை அவர்களுக்கு நடுவே வைத்து அந்த இளம் பெண்ணுக்கு அசௌகரியம் ஏற்படுத்தினார். ஆனால் அந்த இளம் பெண் அமைதியாக புன்னகைத்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது பின்னாடி அமர்ந்து இருந்த மற்றொரு இளம் பெண் அவரிடம் உங்களுக்கு கோபம் வர வில்லையா? என்று மெதுவாகக் கேட்க, அதற்கு அந்த இளம் பெண் சிரித்து கொண்டே, தேவை இல்லாத ஒரு விடயத்துக்கு சண்டை போடவோ அல்லது விவாதம் செய்யவோ தேவை இல்லை. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவேன் எதற்கு தேவை இல்லாத சண்டை என்றார்.


இந்த பதில் சாதரணமாக ஓர் வார்த்தையாக கடந்து போக முடியாது. நம் வாழ்க்கை பயணம் மிகவும் சிறியது. இந்த பயணத்தில் தேவை இல்லாத விடயத்துக்கு விவாதம் அல்லது சண்டை செய்யத் தேவை இல்லை. அது மாதிரியான சண்டைகள் அந்த தருணதிற்கு ஒரு மருந்தாக இருந்தாலும் உண்மையில் நம் கோபம் சண்டை அடுத்தவரின் மனசை காயப்படுத்த கூடும். உலகை திருத்துவது நம் வேலை இல்லை. ஒன்று ஒதுங்கி செல்ல வேண்டும் இல்லை அவர்களின் செயல்களை மன்னித்து கடந்து செல்ல பார்க்க வேண்டும். உங்களை யாரேனும் காயப்படுத்தி விட்டார்கள் என்றால் அமைதியாக கடந்து செல்லுங்கள். காலம் மிகவும் சிறந்தது அது எல்லா காயங்களுக்கும் எல்லா வலிகளுக்கும் ஒரு சிறந்த அரு மருந்து. இந்த மன்னிக்கும் குணம் உங்களை காயப்படுத்தும் போதும் சரி, உங்களை ஏமாற்றும் போதும் சரி எல்லா நேரங்களிலும் அமைதி காத்து கடந்து செல்வது சிறந்தது.


நம் வாழ்க்கை நேரம் மிகவும் குறைவு, அதை இனிய நினைவுகளால் நிறப்புவோம்.


******


இந்த வாரத்தின் கேள்வி :  பயணம்


உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? சொல்லுங்களேன். 


நீங்கள் பெற்ற மறக்கமுடியாத பயண அனுபவம் எது, அதை மிகவும் சிறப்பானதாக ஆக்கியது எது?


இந்தக் கேள்விக்கு எனது பதில் - எனது எல்லா பயணங்களும் சிறப்பானதே. மறக்க முடியாத பயணம் எனக் கேட்டால் எனது அருணாச்சல பிரதேசம் பயணத்தில் Zimithong என்கிற இடத்திற்கு செய்த பயணத்தினை ஒன்றாக குறிப்பிடுவேன்.  அங்கே பார்த்த ஒரு தமிழ் குடும்பம் மறக்க முடியாத அனுபவங்களைத் தந்தது. சுற்றிலும் உள்ளூர் மக்கள் இருக்க ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ் - அதிலும் கணவர் வேலைக்குச் சென்றுவிட, தனியாக தனது ஒரு வயதுக்கும் குறைவான மகனை வைத்துக் கொண்டு மொழி தெரியாமல், சமாளித்துக் கொண்டு இருந்த அந்த இளம்பெண்! அவர்களை அங்கே ஒரு நிகழ்வில் சந்தித்ததும், பேசியதும் மறக்க முடியாத அனுபவம்.

  

******


இந்த வாரத்தின் தகவல் :  National Hug A Sheep Day





ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி சனிக் கிழமையை National Hug A Sheep Day என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் என்பது இந்த வாரத்தின் தகவல்.  மேலதிக தகவல்களை படிக்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!


National Hug A Sheep Day (October 26th, 2024) | Days Of The Year 

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 அக்டோபர் 2024


11 கருத்துகள்:

  1. பாட்டில் திறப்பான் நானும் பிரிட்ஜ்ஜில் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆனால் பீர் பாட்டில் திறக்க அல்ல. யாரோ கொடுத்தது. எப்போதாவது சோடா திறக்க உதவும் என்று வைத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. ராகாககா - புத்திசாலி வியாபாரி. 

    குழந்தை மனதில்
    வார்த்தைகளை விதைத்து
    ஆசையை
    அறுவடை செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. யார் குற்றவாளி" -  ஆரம்பமும் முடிவும் தெரியாத / இல்லாத  அவலங்கள்.

    படித்ததில் பிடித்ததை பின்பற்றத்தான் ஆசை.

    பயண அனுபவக் கேள்விக்கு நான் பொருத்தமானவன் அல்ல!

    பதிலளிநீக்கு
  4. “உங்களுக்கு வேண்டாமா?” //

    யாரைப் பார்த்துஇந்தக் கேள்வியைக் கேட்டாய் என்று சிவாஜி ஸ்டைல் வசனம்!!!

    பாட்டில் திறப்பான் நல்லாதான் இருக்கு ஆனா கீழ இருக்கற சமாச்சாரம் தான் கடுப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பொம்மை வியாபாரி - அவரது வியாபாரத் தந்திரம். அது வியாபாரம். வியாபாரத்திற்கு தர்மம் அது. பாவம் அவருக்கு வயிற்றுப் பிழைப்பு அதுதானே இல்லையா.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. யார் குற்றவாளி - நிகழ்வு இரண்டில் என்னைப் பொருத்தவரை அந்தப் பெண், அவளது பெற்றோர் இரண்டாவதாக. என்னதான் நெருங்கிய நட்பாக இருந்தாலும் இரவு நேரத்தில் அப்படிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. டவுட் என்ன அடுத்த நாள் கேட்டுக்க முடியாதா இல்லை கற்பிக்கும் ஆசிரியரிடம் கேட்டுக்கலாமே. அதுவும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதெல்லாம்.... அந்தப் பெண்ணை அந்த இரவு நேரத்தில் வெளியில் விட்டது பெற்றோரின் தவறு, அதுவும் இப்போதைய குற்றங்கள் நமக்குத் தெரிந்த வேளையில் இந்த அளவு சுதந்திரம் தேவை இல்லை அந்த வயதில். சுதந்திரம் கொடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு ஆனால் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரம். என்னதான் நம் குழந்தைகள் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும்....இரவு நேரத்தில் பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்புவது உசிதமில்லை.

    //ஆனாலும் படிப்பதில் இருந்த புத்திசாலித்தனம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இல்லையே என்பது தான் வருத்தப்பட வேண்டிய செய்தி.//

    அதே அதே...

    //தொடர்ந்து இது போன்ற பல குற்றங்கள் நிகழ்ந்து விட்டாலும், இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாத காவல் துறை, அரசாங்கத்தின் குற்றமா? வரும் முன் காப்போம் என்பதை மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறையும் செய்ய வேண்டுமென உணரவில்லையே.//

    இது முதல் நிகழ்வுக்கு மிகவும் பொருந்தும். நிர்ப்யா கேஸ், சமீபத்தில் நடந்த கல்கத்தா கேஸ்....

    மூன்றாவது நிகழ்வு பற்றி சொல்ல அந்தப் பெண் அந்தப் பையனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் செய்தது தவறு. என்னதான் காதல் வந்தாலும் அந்த் ஆண் எப்படிப்பட்டவன் என்பதை அறியாமல்? இந்தப் புத்திசாலித்தனம் பெண்களுக்கு அவசியம். காதல் புத்தியை மழுங்கடித்துவிடுகிறது. பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பாங்க...ஆனால் இதில் பாருங்க...

    என்னவோ நீங்கள் இது பற்றி 2013 ல் எழுதியிருக்கீங்க இப்ப 2024 இப்பவும் நிறையவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. கண்டிப்பாக அரசும் காவல்துறையும் சில சட்டதிட்டங்களைக் கொண்டு வரத்தான் வேண்டும். பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிமை - மிகவும் நல்ல விஷயம். ஒரு சில விஷயங்களில் கடைப்பிடிக்கக் கடினம்.

    எனக்கும் எல்லாப் பயணங்களுமே மிகவும் பிடித்தவை. மறக்க முடியாத என்றால் நான் paragliding, river crossing, செய்தவை மறக்க முடியாத அனுபவங்கள். இன்னும் பயணங்கள் செய்ய ரொம்ப ரொம்ப ஆசை....

    National Hug A Sheep Day// இதுவரை அறியாதது.

    காணொளி பார்க்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    கொலு பொம்மைகள் விற்கும் கடையில் இந்த மாதிரி பாட்டில்களின் விற்பனையும் தேவையா? பாட்டில் திறப்பான்களின் மகிமையை தெரிந்து கொண்டேன்.

    குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களிடையே சென்று தங்கள் பொருள்கள் விற்பதும் ஒரு வியாபார தந்திரந்தான் நல்ல வியாபார தந்திரம் கற்றவர்.

    யார் குற்றவாளி தலைப்புடன் பகிர்ந்த விஷயங்கள் மனதை மிகவும் வருத்தமுறச் செய்கிறது. பெண் குழந்தைகளை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய காலமிது. வேறென்ன சொல்வது?

    பயணங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அனுபவங்கள் கிடைக்கும். நீங்கள் நினைவாக வைத்திருக்கும் பயண அனுபவம் அருமை.

    இந்த வாரத்தின் தகவல் பகிர்வும் நன்றாக உள்ளது. இந்த மாதிரி ஒரு நாளை நினைவு கூர்வதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய கதம்பம் நன்று.

    தமிழகத்தில் டாஸ்மாக்கில் இருக்கும் கூட்டத்திற்கு பாட்டில் திறப்பான் அவசியம்தான். ஸ்விக்கில டாஸ்மாக் வந்தாச்சா?

    இரவில் பாடத்தில் சந்தேகம்..எந்தப் புத்தில் எந்தப் பாம்பு என்று தெரியாத காலத்தில் பெண்ணைத்தான் குறை சொல்லணும். பல பெண்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்பதும் இல்லை

    வியாபார தந்திரம்.. இப்போல்லாம் கத்திக் கூப்பிட காலர் மெஷின் தான்.

    பதிலளிநீக்கு
  10. வாசகம் அருமை.

    //இன்றைக்கு பல IT உழைப்பாளர்களின் (பெண்கள் உட்பட) தேவையாக இந்த மாதிரி திறப்பான்கள் இருக்கின்றன. //
    அவர் சொன்ன விஷ்யம் கவலை அளிக்கிறது. மது தப்பு, பீர் நல்லது என்பது போல படங்களில் கதைகளில் சொல்லப்படுகிறது.

    கெச்சப் பாட்டில்களை திறக்கவும் இந்த திறப்பான் உபயோகப்படும்.

    கயிலை, முக்தி நாத், சார்தம் போய் வந்தது மறக்க முடியாத பயணம். இப்போது நினைத்தால் நாமா போய் வந்து இருக்கிறோம் என்ர மலைப்பும் இறைவன் அழைத்து சென்றார் என்ற நம்பிக்கையும் வரும்.

    காணொளி நெகிழ்வு. அமைதி காத்து கடப்பது இனிமை.

    பதிலளிநீக்கு
  11. 'உங்களுக்கு வேண்டாமா"....ஹா...ஹா...
    திறப்பான் நல்லதுக்கு பயன்படும் என்றால் சரி.

    மறக்க முடியாத பயணம் எங்கள்நாட்டு சிவனொளி பாதமலை ஏறியது இனிமேல் எனக்கு ஏற இடம்குடுக்காது அதன் உயரம்.

    மலேசிய பத்திரி ,திருக்கழுக்குன்றம் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி தந்தது இனிமேல் கிடைக்குமா ?தெரியவில்லை.

    காணொளி நெகிழ்வான இருந்தது.

    வியாபார தந்திரம் பெற்றோரின் பர்ஸ் காலிதான்.:)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....