அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினாறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
ஊரெங்கும் கொண்டாட்டம் - 12 அக்டோபர் 2024:
ஊரெங்கும் திருவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நவராத்திரியின் கடைசி நாளான நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என கோலாகல கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த காலை வேளையில் நேற்றைய நடை…
எங்கே பார்த்தாலும் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்கும் தற்காலிக கடைகள் மற்றும் நிரந்தர கடைகள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சாலை ஓரத்தில் கொஞ்சம் இடம் கிடைத்தால், அங்கே ஒரு சாக்கை விரித்து ஒருவர் அமர்ந்து கொண்டு வாழைக்கன்றுகள், வாழைப்பழம், தேங்காய், மாவிலை, தாழம்பூ தோரணம் என சிலவற்றை வைத்து கடை விரித்துவிடுகிறார். தள்ளுவண்டிகளில் பழங்கள் வைத்து வியாபாரம் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் பூசணி, எலுமிச்சை வைத்து வியாபாரம் மற்றொரு புறம். நிறைய இடங்களில் பொரி வியாபாரம் காற்றாய் பறந்தது. சிறு சிறு வியாபாரிகள், அவர்களிடம் பேரம் பேசும் சக மனிதர்கள் என பார்க்கவே பரபரப்பாக இருந்தது, காலை நேரத்து திருவரங்கத்து சாலைகள்.
மாலை நேரம் நடந்து செல்லும் போது பார்த்தால் வண்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, விதம் விதமான அலங்காரங்கள் உடன் அமர்க்களமாக ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. எல்லா சாலைகளிலும் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் நசுங்கிக் கிடந்தன. சாலை சந்திப்புகளிலும், வீடுகளின் வாசல்களிலும் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள் யாரை வழுக்கி விழவைக்கலாம் என்பது போலவே கிடந்தன. இவை அனைத்துமே அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அடுத்த நாள் காலையில் தூய்மை பணியாளர்கள் வந்து சாலைகளை சுத்தம் செய்யும் வரை யாருக்கும் எந்த வித விபத்தும் நேராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வது மட்டுமே நம்மால் முடிந்தது. அந்த வேண்டுதல்களோடு நானும் நடந்தேன். சில வீடுகளிலும் கடைகளிலும் அப்போது தான் பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.
எங்கே பார்த்தாலும் விழாக்கோலம். தனது வீட்டினருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமல்லாது சாலையில் போகும் மனிதர்களுக்கும் பொரி கடலை கொடுத்த சில மனிதர்கள், பக்தியுடன் இறைவனை வணங்கும் மனிதர்கள், ஒரே ஒரு பக்தி பாடல் ஒலிக்க வைத்து அதன் பிறகு டண்டணக்கா பாடல்களை சத்தமாக வைத்துக்கொண்டு பவனி வந்த பேருந்துகள் என எங்கே பார்த்தாலும் திருவிழா கோலம் தான். பல்வேறு கஷ்டங்(கவலை)களுக்கு நடுவே வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது அந்த கவலைகளை மறக்கும் விதமாக இது போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் நிச்சயம் தேவையாக இருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க மனதோடு வேண்டிக்கொண்டபடி எனது நடையும் தொடர்ந்தது. நேற்றைய நினைவுகளோடு இன்றைய நாளையும் துவங்கியாயிற்று. இன்றைக்கும் பண்டிகை - விஜயதசமி… நண்பர்கள், சக மனிதர்கள் தொடங்கும், நடத்தும் அனைத்து நல்ல விஷயங்களும் வெற்றி பெற அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.
******
வாழை வியாபாரி - 13 அக்டோபர் 2024:
திருச்சியைப் பொறுத்தவரை வாழைக்கு பஞ்சமே இல்லை. நகரைச் சுற்றி இருக்கும் பல கிராமங்களில் வாழை நிறைய வயல்களில் பயிரிடுகிறார்கள். எல்லாவற்றையும் வெளியூர்களுக்கு அனுபவதில்லையே. வாழை சாகுபடி நடந்து உள்ளூருக்கும் விதம் விதமாக வாழையின் வகைகள் விற்பனைக்கு வந்தவண்ணம் இருக்கிறது. இலைக்காகவே சிலர் வாழைக்கன்றுகளை தங்களது நிலத்தில் வைக்கிறார்கள் என்றால், ஒரு சிலர் வாழைக்காய், வாழைப்பழம் என விற்பனைக்காக தங்களது நிலத்தில் வளர்க்கிறார்கள். எத்தனை எத்தனை பலன்கள் வாழையில் தான். ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு பயன்பட்டுவிடுகிறது. பூ, காய், பழம், தண்டு, இலைகள், நார் என அனைத்துமே நமக்கு பயன்பாட்டுக்கு கிடைத்துவிடுகிறது. வாழை பராமரிப்பதில் நிறையவே சிரமமும் இருக்கிறது - சரியான படி பாதுகாக்காவிடில், சிறு காற்றில் கூட மரங்கள் சரிந்து விழுந்து விடக்கூடும். தொடர்ந்து கவனிக்கவும் வேண்டும். கன்று தான் நட்டுவிட்டோமே, பலன் தரும் என்று கவனக்குறைவாக இருந்துவிட முடியாது.
இப்படி ஒரு வாழைத் தோட்டத்திலிருந்து தினம் தினம், வாழைப்பழம், வாழைக்காய் போன்றவற்றை தார், தாராக தனது இரு சக்கர வாகனத்தில் (TVS 50), இரண்டு புறங்களிலும் நிறைய கட்டி எடுத்துக்கொண்டு அவரது ஊரிலிருந்து (சிறுகாம்பூர்) காலை நேரத்திலேயே திருவரங்கத்தின் கொள்ளிடக்கரையிலிருந்து வடக்கு கோபுரம் செல்லும் வழியில் வந்து விடுவார் ஒரு வாழை வியாபாரி. நல்ல உழைப்பாளி. அவர் வரும் சமயம் குறைந்தது பத்து பன்னிரண்டு வாழைத்தாராவது அவரது வண்டியில் இருக்கும். இத்தனையும் கட்டி வைத்துக்கொண்டு அந்த வண்டியை ஓட்டிவருவது சிரமமான விஷயம் தான். அப்படி இப்படி கொஞ்சம் தடுமாறினாலும், மொத்தமாக போட்டுக்கொண்டு கீழே விழுந்து நஷ்டம் ஏற்படுவதோடு காயங்களும் பட்டுவிடும். கைலி, சட்டை அணிந்து அப்படியே வண்டியின் முன்னர் ஒரு கத்தியும் வைத்துக்கொண்டு காலை வேளையில் வந்து விடுகிறார் இந்த மனிதர். பக்கத்திலேயே பால் Bபூத் (சொசைட்டி) ஒன்று இருக்கிறது. திருவரங்கவாசிகள், இங்கே பால் வாங்கிக் கொண்டு அப்படியே வாழைப்பழங்கள், வாழைக்காய் வாங்கிக்கொண்டு வீடு செல்ல வசதியாக இருக்கிறது இவரது தினசரி வருகை.
அமாவாசைக்கு முதல் நாள் கொஞ்சம் அதிக அளவில் வாழைக்காய் விற்பனை ஆகும் என்பதால் அதிக தார்கள் வாழைக்காய் கொண்டு வருவார். மற்ற நாட்களில் வாழைப்பழம் - ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி என விதம் விதமான பழங்கள். பழமாக, காய் வாடாக என இரண்டும் கிடைக்கும். நாம் கேட்க, கேட்க, சீப், சீப்பாக கத்தியை லாவகமாகக் கையாண்டு நறுக்கித் தந்துவிடுவார். விலையும் இவரிடம் அதிகமில்லை. வாழையின் வகையைப்பொறுத்து சீப் (குறைந்தது 15 பழங்களாவது இருக்கும்) 20 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. ரஸ்தாளி என்றால் விலை அதிகம். கற்பூரவல்லி 20 ரூபாய், பூவன் பழம் என்றால் 25 ரூபாய், ரஸ்தாளி 40-50 ரூபாய் என அவரிடம் வாங்கிக்கொள்ள முடியும். 20 ரூபாய்க்கு ஐந்து அல்லது ஆறு வாழைக்காய் தருகிறார். மற்ற கடைகளை விட இவரிடம் குறைவான விலை. In Fact, வடக்கு வாசலில் கடை போடும் சிலர் இவரிடம் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கிறார்கள். இதிலிருந்தே இவரிடம் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
நான் அவ்வப்போது இவரிடம் வாழைப்பழம் மற்றும் வாழைக்காய் வாங்குவதுண்டு. அந்த சமயங்களில் நான் எப்போதுமே இவரிடம் பேரம் பேசுவதில்லை. ஆனால் பலரும் இந்த உழைப்பாளி குறைவான விலையில் விற்பனை செய்யும்போதும், அவரிடம் அடித்துப்பேசி, 60/65 ரூபாய் என அவர் விலை சொல்ல அவரிடம் “குடு, குடு, எல்லாம் 50 ரூபாய்க்கு கொடுக்கலாம்” என 50 ரூபாய் கொடுத்துவிட்டு நகர்கிறார்கள். இப்படிச் செய்பவர்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் BP அதிகரிக்கும். அவரது கடின உழைப்பிற்குப் பிறகு தான் விற்பனைக்கு வருகிறது வாழை வகைகள். அதன் பிறகும் தொடர்ந்து உழைத்து, பொருட்களை கட்டி எடுத்துவந்து விற்பனை செய்கிறார். அவரிடம் அதிக அளவில் பேரம் பேசாமல் வாங்கலாம். அவர் அதிக விலை சொன்னால் கூட பரவாயில்லை. அவரே குறைவான விலைக்கு தான் தருகிறார். இதே பழங்களை பெரிய கடையில் சென்று வாங்கினால் நிச்சயம் இந்த விலைக்கு கிடைக்காது. திருவரங்கத்திலேயே கூட சில கடைகளில் மேலே சொன்ன பழங்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
என்னதான் நான் இப்படிச் சொன்னாலும், மனித மனதின் ஆசைக்கு அளவேது? இவ்வளவு குறைவாகக் கொடுப்பதை விட இலவசமாக கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் இது போன்ற மனிதர்களுக்கு! இதே மனிதர்கள் பெரிய பெரிய கடைகளுக்குச் சென்றால் பேரம் பேச முடியுமா என்ன? அவர்களது பேரம் பேசும் வித்தை எல்லாம் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் தான் பலிக்கும் இல்லையா? இத்தனை தடைகள் இருந்தும் தொடர்ந்து உழைக்கும் உழைப்பாளிக்கு உங்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்.
தலைநகரில் இப்படி விதம் விதமான வாழைப்பழம் கிடைக்காது. ஒரே வகை பழம் மட்டுமே கிடைக்கிறது. சில இடங்களில் கிலோ கணக்கில் என்றால் ஒரு சில இடங்களில் எண்ணிக்கையில். பழம் ஒன்று குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் அளவுக்கு கிடைக்கிறது. அது சரி உங்கள் ஊரில் கற்பூரவல்லி/பூவன்/ரஸ்தாளி பழங்கள் ஒரு சீப் என்ன விலைக்கு கிடைக்கிறது? சொல்லுங்களேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
18 நவம்பர் 2024
வாசகம் நல்லாருக்கு கூடவே இதையும் சேர்த்துக்கலாம் இன்றைய பதிவுக்குப் பொருந்தும், நம் இருப்பிடம் சுற்றுப் புறத்தையும், நமக்கு இலவசமாக இயற்கை தந்திருக்கும் இயற்கையயையும், தண்ணீர் காற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்! காட்டை அழிக்காம....சரி இங்கு நிறுத்திக்கறேன்
பதிலளிநீக்குஅப்படி வைச்சுக்காம போவதால்தான் இயற்கை நம்மிடம் அப்பப்ப மாஸா வசூல் பண்ணிடுது!!!!
கீதா
இவை அனைத்துமே அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அடுத்த நாள் காலையில் தூய்மை பணியாளர்கள் வந்து சாலைகளை சுத்தம் செய்யும் வரை யாருக்கும் எந்த வித விபத்தும் நேராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வது மட்டுமே நம்மால் முடிந்தது. அந்த வேண்டுதல்களோடு நானும் நடந்தேன். //
பதிலளிநீக்குஹைஃபைவ்! அவரவர் நம்பிக்கைகள் அது ஓகே ஆனால் பொது இடங்களிலும் நாம் காட்டிக்கணும்னு இல்லையே. அதுவும் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில்.
கீதா
பதிலளிநீக்குஇந்த பேரம் பேசுதல் என்பது ஒரு தற்பெருமைக்காக செய்வதே. பொதுவாக எல்லோருக்கும் ஜெயிப்பது என்பதில் ஒரு ஆர்வம், சந்தோசம். தன்னை விட தாழ்ந்தவரை ஜெயித்துவிட்டோம் என்று ஒரு களிப்பு. இதை மாற்றமுடியாது. இவர்களுடைய வீர தீரம் இவர்களை விட மதிப்பில் தாழ்ந்தவர்கள் மேல் மட்டுமே.
இங்கு திருவனந்தபுரத்தில் கிடைக்கும் வாழை பழங்கள் நேந்திரன், பூவன் (ரஸ்தாளி), செவ்வாழை, ரோபஸ்டா அல்லது மோரிஸ் என்கிற பச்சை வாழை பழம், பாளையன்கோடன் (பூவன்), கதலி, ரசகதலி. சில சமயம் அன்னான் என்கிற பழமும் கிடைக்கும்.
வாழைப்பழம் என்றவுடன், மார்க்கெட்டை விட்டு மறைந்து போன படத்திப்பழம், பெரிய மலைப்பழம், சிறுமலைப்பழம், பேயன் பழம் என்பவையும் நினைவுக்கு வருகின்றன
Jayakumar
சீப் (குறைந்தது 15 பழங்களாவது இருக்கும்) 20 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. ரஸ்தாளி என்றால் விலை அதிகம். கற்பூரவல்லி 20 ரூபாய், பூவன் பழம் என்றால் 25 ரூபாய், ரஸ்தாளி 40-50 ரூபாய் //
பதிலளிநீக்குஆஹா விலை நல்ல கம்மி அது போல வாழைக்காயும் விலை குறைவு. ஸ்ரீரெங்கத்தில் காய்கள் விலை குறைவு என்று தோன்றும் சுத்துப்பட்டு கிராமத்திலிருந்து விளைச்சலில் பலர் கடை விரிப்பதை பார்த்திருக்கிறேன்.
ஆமாம் இப்படியானவர்களிம் பேரம் பேசாமல் வாங்கலாம், எனக்குத் தோன்றும், பெரிய பெரிய கடைகளில் நாம் பேரம் பேச முடியுமா? மனித மனம் பொல்லாது எங்கு நம் பாச்சா பலிக்குமோ அதைக் கணக்கிட்டு அங்கு கோலோச்ச பார்க்கும்! (இதைச் சொல்லிட்டு அடுத்து வாசித்து வரப்ப நீங்களும் அதே கருத்தை சொல்லியிருக்கீங்க!!!)
இங்க விலை 80, 70, - 60 எப்போதாவது. நேந்திரன் 90
கீதா
சிலகாலம் முன்பு சாலையில் பூசணிக்காய் உடைத்தால் தண்டனை என்று மாநகராட்சி அறிவித்திருந்ததாய் நினைவு. ஆனால் மக்களுக்கு அவர்களுக்காய் உணராவிட்டால் சிரமம்தான்.
பதிலளிநீக்குபெங்களூர் மார்கெட் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான பூசனி (ஏகப்பட்ட கடைகள் இதற்கென்றே), சிறு வாரை மரங்கள் விற்பனையாகும். எனக்கு மனத்தில், உணவுப் பொருளை வீணாக்குகிறார்களே என்று தோன்றும். படங்கள் பகிர்கிறேன்.
நீக்குஐந்தாறு வாழைக்காய் 20 ரூபாயா.... இங்கே ஒரு வாழைக்காய் பதினைந்து ரூபாய், இருபது ரூபாய் சாமி...
பதிலளிநீக்குவாழைக்காய்/பழ வியாபாரி மனதைக் கவர்கிறார். இங்கெல்லாம் பழம் கிலோ 30-50 ரூ. காய் 10-12 ரூபாய்.
பதிலளிநீக்குபேரம் பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆனால் தடாலடியாக்க் குறைவாக காசு கொடுப்பது, அந்த வியாபாரத்தையே அழித்துவிடும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.
திருஷ்டிப் பூசணி நடு ரோடில் உடைக்கப்படுவதை மக்கள் தவிர்க்கலாம். இங்கும் அப்படி உடைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு கடை வாசலிலும் இரு பக்கமும் பாதியாக உடைத்து வைக்கிறீர்கள். இதனால் ரோடுகளின் நடப்போருக்கு ஏற்படும் சிரமங்கள் விலகும்.
வாழைக்காய் உபயோகங்கள் பற்றியும், வளர்ப்பு பற்றியும் பதிவில் உள்ளதை படித்து ரசித்தேன். அந்த வியாபாரியின் உழைப்பு போற்றத்தக்கது. இங்கு விதவிதமான வாழைப்பழங்களின் சற்று வரத்து கம்மிதான். எலங்கி விலை அதிகம். நாட்டுப்பழம் கொஞ்சம் கம்மி. செவ்வாழை விலையும் அதிகம்.
வாழைக்காய்கள் ஒன்று ரூபாய் பத்து, சமயத்தில் பனிரெண்டு, பதினைந்தாக கூட விற்கப்படுகிறது. தமிழ் நாடு போல 5, 6 காய்கள்20 ரூபாய்க்கு கிடைக்காது. அங்கு வாழை , வெற்றிலை உற்பத்திகள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இங்கு ஒரு வெற்றிலை ஒரு ரூபாய் என விற்கப்படுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஇந்த திருஷ்டி சமாச்சாரங்களை சாலையில் தெறிக்க விடும் விஷயம் பக்தி நம்பிக்கை இவற்றையும் தாண்டி ஒரு வித எரிச்சலை ஏற்படுத்துகிறது.
குறு விவசாயிகள் அனைவரின் நிலமையும் இப்படித்தான்.
Department store ல் ஒருவாரம் பழைய பொருளை ஒரு நெகிழி பையில் அடைத்து வைத்திருப்பார்கள். அதை அதில் அச்சிட்டிருக்கும் விலைக்கு வாங்கி வருவார்கள். விவசாயி உடனுக்குடன் அறுவடை செய்து கொண்டு வரும் பொருட்களை பேரம் பேசுவார்கள்.
நடை பயணம் தொடரட்டும் சார்👍🙏
வாழைப்பழ வியாபாரி மலிந்த விலைக்கு குடுக்கும்போது பேரம் பேசும் மக்கள் ...மனித மனத்தை என்ன என்று சொல்வது .
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் படம் கவர்கிறது.