அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
புகை மண்டலம் - 22 அக்டோபர் 2024:
ஒரு மாதத்திற்கும் மேலாக திருச்சியில் நடை தொடர்ந்தது என்றால் நேற்றிலிருந்து தலைநகரில் நடை தொடர்கிறது. திருச்சியில் சுற்றுச்சூழலில் மாசு தொல்லை இல்லாமல் இருந்தது என்றால் தலைநகரில் வந்த உடன் மாசுத் தொல்லை. புகைமண்டலமாக இருக்கிறது. Air Quality Index என அழைக்கப்படும் AIQ மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதோடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வருடா வருடம் இந்தத் தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும், ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் எல்லோரும் இதைப்பற்றி பேசுகிறோமே தவிர, அதனை தடுப்பதற்கு உண்டான வேலைகளைச் செய்வதில்லை என்பதே நிதர்சனம்.
இதில் நிறைய அரசியல் விளையாட்டுகளும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர மக்களின் உடல் நிலையில் எவரும் அக்கறை காண்பிப்பது இல்லை. மாசு காரணமாக பலருக்கும் மூச்சுப் பிரச்சனைகள், ஆஸ்துமா போன்றவை சமீப நாட்களில் அதிகரித்து இருக்கிறது. காலை, மாலை என எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்து இருக்கிறது. மூச்சு விடும்போதே ஏதோ நச்சு புகுவது போல எரிச்சலும் இருக்கிறது. பொதுவாகவே திருச்சியில் இருக்கும்போது சரியாக இருக்கும் - ஆனால் தில்லி வந்ததும் ஒரு வித மாற்றம் வந்துவிடுகிறது. எல்லா வருடங்கள் போலவே இந்த வருடமும் ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளிக்கிறார்கள். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கோதுமை அறுவடைக்குப் பிறகு மீந்து இருக்கும் வைக்கோலை கொளுத்தி விடுவது தொடர்கிறது.
இங்கே பேருந்துகள், பல சிற்றுந்துகள், ஆட்டோக்கள் என அனைத்தும் CNG மூலம் இயங்குகிறது என்றாலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகள் டீசல் மூலம் இயங்குவதால் தான் இங்கே மாசு அதிகரிக்கிறது என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக வேறு கட்சியின் ஆட்சி நடக்கும் மாநிலங்களை மட்டுமே குறிப்பாகச் சொல்கிறது தில்லி அரசாங்கம். எது எப்படியோ, அரசியல் விளையாட்டுகளை நடத்த இவர்கள் அனைவருமே தயங்குவதில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் தனக்கு எதிலே ஆதாயம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களேயே தவிர பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டுவதில்லை என்பதே நிதர்சனம். மாசு பிரச்சனை என்று இல்லை எல்லா பிரச்சனைகளிலும் இதே நிலை தான் என்பதையும் சொல்லத் தேவையில்லை.
காலை விடிந்ததும் வெளியே பார்க்கும்போது மாசு சூழ்ந்து இருக்கிறது என்பதால் அதிகாலை நேர நடை சிறிது நாட்களுக்கு இருக்காது. மதியத்தில் உணவு இடைவெளியில், அலுவலகத்தின் Corridor-களில் நடப்பது தொடர்கிறது. மாலை நேரத்தில் சூழலைப் பொறுத்து நடை தொடரும்.
*******
தீபாவளி அலங்காரங்கள் - 24 அக்டோபர் 2024:
தீபாவளி, தீவாளி என எப்படி அழைத்தாலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று இந்த தீபாவளி. தலைநகர் தில்லியில் தீபாவளி வருகிறது என்றாலே பலருக்கும் உற்சாகமும் புத்துணர்வும் வந்து விடும். நம் ஊரில் எப்படி பொங்கல் சமயத்தில் வீடுகளை சுத்தம் செய்து, வெள்ளையடித்து பொங்கல் திருவிழாவினை கொண்டாட தயாராவோமோ, அதே போல, வடக்கில் தீபாவளி வருவதற்கு முன்னரே வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். வேண்டாத பொருட்களை வெளியேற்றுவது, வீடு முழுவதும் வண்ணம் பூசுவது, அலங்கார வேலைகளை செய்வது என பரபரப்பாக இருப்பார்கள். இதோ இன்னும் சரியாக ஒரு வாரம் தான் இருக்கிறது தீபாவளிக்கு! தலைநகர் தில்லியில் பரப்பரப்பு தொற்றிக்கொண்டு இருக்கிறது.
தீப ஒளி மட்டுமே பிரதானமாக இருந்த காலம் முன்பு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் அகல் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் லக்ஷ்மி தேவியின் கால்கள் பதித்து (வீட்டுக்குள் வருவது போல! நம் ஊரில் கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் அரிசி மாவால் கால்கள் போடுவது போல, இங்கே மாவால் போடுவது இல்லை - தற்போது இதற்கெனவே நிறைய ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன! எல்லாம் பிலாஸ்டிக் மயம்!), ரங்கோலி கோலங்கள் போடுவது என அலங்காரங்கள் இருக்கும். அகல் விளக்குகள் தவிர மெழுகுவர்த்திகள், மெழுகால் செய்யப்பட சிறு சிறு விளக்குகள் என இருந்ததெல்லாம் போய், பத்து பதினைந்து வருடங்களாக மின்சார விளக்குகள் சரம்சரமாக வீட்டின் முன்னும் பின்னும் தொங்க விடுகிறார்கள். அகல் விளக்குகள் மற்றும் மெழுகு விளக்குகளும் உண்டு என்றாலும் மின்சார விளக்குகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கடைகள், வீடுகள், கடைவீதிகள் என அனைத்தும் மாலை/இரவு நேரங்களில் வண்ணமயமாக இருக்கின்றன. இந்த வாரத்தில் மாலை நேரத்தில் எங்கள் வீடு இருக்கும் Gole Market பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது எடுத்த சில படங்களை கீழே இணைத்திருக்கிறேன். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதை விட இன்னும் சிறப்பான கொண்டாட்டங்கள் இங்கே உண்டு. தீபாவளி என்றால் இங்கே ஐந்து நாட்கள் தொடர் கொண்டாட்டம். இந்த கொண்டாட்டங்கள் என்னென்ன என்று பார்த்தால் முதல் நாள் தன் தேரஸ். அன்றைக்கு எல்லோரும் ஏதாவது ஒரு பாத்திரமாவது வாங்குவார்கள் – பணம் படைத்தவர்கள் தங்கம் வாங்குவார்கள். அடுத்த நாள் Cசோட்டி தீவாளி [இது தான் நம் ஊர் தீபாவளி]. அடுத்த நாள் தான் இங்கே தீவாளி – அதாவது Bபடி தீவாளி! அதற்கும் அடுத்த நாள் கோவர்த்தன் பூஜா. ஐந்தாம் நாள் Bபாய் dhதூஜ்! ஐந்து நாட்கள் கொண்டாட்டம் என்றால் பாருங்கள் – பெரும்பாலான வீடுகளில் விழாக்கோலம் தான்! விரிவாக எனது வலைப்பூவில் சில வருடங்கள் முன்னர் எழுதி இருக்கிறேன். சுட்டி கீழே!
இந்த முறையும் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. மேலும் விவரங்களை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன் - நடை நல்லது பதிவுகளில்!
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
25 நவம்பர் 2024
வயலை எரிக்காமல் இருக்க முடியாதா? தென்னகத்தில் அந்த வழக்கம் இல்லையே. வாக்கு அரசியலில் இதுதான் பிரச்சனை.
பதிலளிநீக்குகாற்று மாசு மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவருடா வருடம் தொடரும் பிரச்னைக்கு தீர்வே இல்லையா? அரசியல்?
பதிலளிநீக்கு