தொகுப்புகள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

அம்மாவின் மறைவு




அதிவேகமாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது! இதோ இப்போது தான் அப்பா(மாமனார்) மறைந்து விட்டதைப் போல இருக்கிறது! அதற்குள் அம்மா(மாமியார்)வின் மறைவும் நடந்தே விட்டது! அப்பா டிசம்பர் 7ல் மறைந்தார் என்றால் மார்ச் 7 அம்மா படுக்கையில் விழுந்தார்! அதனைத் தொடர்ந்து வரிசையாக மருத்துவமனை வாசம், மருந்து மாத்திரைகள் என்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன! அப்பாவின் வருஷாப்தீகத்திற்குள் தானும் அப்பாவிடம் சென்று விடுவதாக சொன்ன சபதத்தை சாதித்து விட்டார் அம்மா!


இப்போ நீயும் நானும் ஒரே நிலைமைல தான் இருக்கோம் இல்ல! என்று மனவருத்தத்துடன் சொன்ன என்னவரிடம் என்ன சொல்வது!! நான் 20+ ல் இந்த நிலைமைக்கு வந்தேன்! எனக்கு எல்லாமே அவசர கதியில் முடிஞ்சு போச்சு! நீங்க 50+ல் இந்த நிலைக்கு வந்திருக்கீங்க! அந்த பாக்யம் கிடைச்சிருக்கு இல்லையா! ஏத்துப்போம்! என்றேன்!


இத்தனை வருடங்கள் அம்மாவுடனான பிணைப்பு என்பது என்னவருக்கு மட்டுமல்ல எனக்கும் கூட நெருக்கமானது தான்! எத்தனையோ கதைகளை அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்! ஒரு உதாரண மனுஷியாக தான் வாழ்ந்திருக்கிறார்! உழைப்பும், சுறுசுறுப்பும், பாட்டும், வேலைகளுமாகத் தான் தன் வாழ்நாட்களை கடந்து வந்திருக்கிறார்! 


சிறுவயதிலேயே வாழ்வின் பல கடினமான தருணங்களை கடந்து வந்துவிட்ட எனக்கும் கூட அம்மாவின் மறைவு என்பது இந்த கற்பாறையாகிப் போன மனம் கொண்டவளிடம் கூட கண்ணீரை வரவழைத்து விட்டது! அம்மா! அம்மா! என்று தான் அரற்றிக் கொண்டிருந்தேன்! செய்யும் ஒவ்வொரு செயலிலும், பேசும் வார்த்தைகளிலும் அம்மாவின் நினைவே வருகிறது! 


நிச்சயமாக வயோதிக காலத்தில் படுக்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொள்வது என்பது பெரும்பேறு தான்! ஆனால் அதை உடனிருக்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்வது தான் வலி மிகுந்தது! அம்மாவின் சத்கதிக்கு பிரார்த்தித்துக் கொள்வது ஒன்றே இனி எங்கள் பணி!


காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லணும்! 


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

18/9/25

7 கருத்துகள்:

  1. கணவரின் வ்ருஷாப்தீகத்துக்குள் தானும் அவரை சென்று அடைந்து விடுவேன் என்று அம்மா சொல்லி இருந்தது வியப்பு, நெகிழ்ச்சி.  மனமொத்த தம்பதிகள்.  எந்த வயதானாலும் அம்மாவின், அப்பாவின் இழப்பு நம் வாழ்வில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன.

    அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில்இளைப்பாறவும், அவரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கு இந்த இழப்பை தாங்கும் மனவலிமையை அருளவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அம்மாவின் சபதமும் அது நிறைவேறியதும் வியப்புதான் என்றாலும் நாம் மனதிற்குள் ரொம்ப ஆழமாக அதே சிந்தனையுடன் யுனிவேர்ஸுடன் தொடர்பு கொண்டே இருந்தால் அந்த சக்தி நடத்திவிடும் என்று சொல்வதுண்டு.

    நிச்சயமாக அவர் பட்ட கஷ்டங்களுக்கு இது விடுதலைதான். நீங்கள் சொல்வது போல் அதை ஏற்கும் பக்குவம் நெருங்கிய பந்தங்களுக்கு வரவேண்டும்.

    உங்கள் எல்லோருக்கும் இந்த இழப்பை ஏற்கும் மனவலிமையையும், அவர் இனி இறைவனிடம் இளைப்பாறட்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எப்படியாப்பட்ட பிணைப்பு இருந்தால் தன் கணவர் இறந்த பிறகு தான் இருக்கக் கூடாது என்று ஒருவருக்குத் தோணும்! ஆதர்ச தம்பதிகள்.நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.அன்னாரின் ஆன்மா sathgadhi அடைய பிரார்த்தனைகள்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  4. விஜயலஷ்மி சென்னை19 செப்டம்பர், 2025 அன்று 2:14 PM

    மனமொத்த தம்பதிகள் என் அம்மாவும் ஆறு மாதங்களாக படுக்கையில் கஷ்டபட்டுதான் போன வருடம் இறந்தார் இவர்களுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிகொள்வோம்

    பதிலளிநீக்கு
  5. அம்மா அப்பாவை தேடி போய் விட்டார்கள் எல்லோருக்கும் கிடைக்காது இந்த பேறு.
    அவர்கள் நினைத்தது போல அவர்களை அப்பாவின் வருஷாப்தீகத்திற்குள் அழைத்து கொண்டார் இறைவன்.

    அவர்களுக்கு மன வேதனையிலிருந்து, உடல் துன்பத்திலிருந்து விடுதலை.
    நீங்கள் சொல்வது போல நமக்கு எத்தனை வயதானாலும் அப்பாவும், அம்மாவும் உடன் இருந்தால் மகிழ்ச்சிதான் அவர்களின் பிரிவு மன வலியை தரும் தான்.

    அவர்கள் தெய்வமாக உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்து கொண்டு இருப்பார்கள்.



    பதிலளிநீக்கு
  6. உங்கள் உணர்வு புரிகிறது. பதிவும் சரியாகத்தான் இருக்கு. தலைப்புதான் கொஞ்சம் நெருடுகிறது. வயதாகி ரொம்பவே கஷ்டப்படுபவர்கள் இவ்வுலகிலிருந்து மறைவது அவர்கள் கஷ்டத்திலிருந்து அவர்களுக்கு விடுதலைதான். இருந்தாலும் அப்படிச் சொல்லும்போது நமக்கே நெருடும்.

    பதிலளிநீக்கு
  7. மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
    சுஜாதா சாம்பமூர்த்தி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....