அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
திங்கள் அன்று மாலை சந்தைக்குச் சென்ற போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு வாங்கி வந்தேன். பொதுவாக வேக வைத்து சாப்பிடுவதுண்டு. இல்லை எனில், வேகவைத்து தேங்காய் சேர்த்த பொரியல் செய்வார் இல்லத்தரசி. சமீபமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சேர்க்க வேண்டிய மசாலாக்களைக் கலந்து ஸ்டஃப் செய்த பராட்டாவாக செய்கிறார். நேற்றைய இரவு உணவு இப்படியான ஸ்டஃப் செய்த பராட்டா தான். மகள் வேக வைத்த சர்க்கரைக் கிழங்கை தோலுரித்து, துருவி வைக்க, பிசைந்து வைத்த கோதுமை மாவில் உருண்டை பிடித்து, சொப்பு செய்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்டஃப்ஃபிங் சேர்த்து இல்லத்தரசி தர, நான் மெல்லிய பராட்டாக்களாக இட்டுத் தர இல்லத்தரசி சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தார். மொத்தமாக மூவரும் சேர்ந்து தயாரித்தோம்!
பொதுவாக எந்த வித ஸ்டஃப் செய்த பராட்டா என்றாலும், வடக்கில் அதற்குத் தொட்டுக்கொள்ள தருவது தயிரும் ஊறுகாயும் தான். தவிர பராட்டாவின் மேல் தடவிக்கொள்ள தாராளமாக வெண்ணையும் தருவார்கள். ஒரு பராட்டா சாப்பிட்டால் கூட போதுமானது என்று தோன்றும். ஆனால் இன்றைக்கு நாங்கள் தொட்டுக்கொண்டு சாப்பிட்டது ஒரு சட்னி! பீர்க்காங்காயின் தோல், வெங்காயம், தக்காளி, இஞ்சி எல்லாம் சேர்த்து அரைத்து, அடுப்பில் ஏற்றி, எண்ணை விட்டு நன்கு பிரட்டி, தாளித்துக் கொட்டிய சட்னி. ஒரு முறை தயாரித்து பழேத்துப் பொட்டியில் (Fridge!) வைத்துக் கொண்டால் இரண்டு மூன்று வேளைகளுக்கு, இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் என எதன் கூட வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம். பீர்க்கங்காய் வாங்கும் போதெல்லாம் இப்படிச் செய்வது வழக்கம் இங்கே!
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்பாடு இப்போது இப்படி இருக்க, அம்மா எப்படிச் செய்வார் என்பது நினைவுக்கு வந்தது. சீசனில் சர்க்கரைக் கிழங்கு செவ்வாய் சந்தையில் வாங்கினால் தேங்காய் சேர்த்த பொரியல் செய்வார். இல்லையெனில் வேகவைத்து, வெல்லப்பாகு வைத்து அதில் சேர்த்து வைத்து சாப்பிடத் தருவார். தலைநகருக்குச் செல்வது வரை இப்படி வெல்லம் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறேன். அதன் பிறகு இப்படிச் சுவைக்க வாய்த்தது குறைவு தான். சமீபத்தில் இப்படி எப்போதாவது சாப்பிட்டு இருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. ஆனாலும் அம்மா வெல்லம் சேர்த்து செய்து தந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சுவை இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. இன்றைக்கு பராட்டா செய்தபடியே இல்லாளிடம் சொன்னேன் - அம்மா வெல்லப்பாகு சேர்த்து செய்து தருவார் என! அவரது அம்மாவும் இப்படிச் செய்து தருவார் என்று சொன்னார்! வள்ளிக்கிழங்கு இந்த முறை ஸ்டஃப் செய்த பராட்டாவானது! அடுத்த முறை வெல்லம் சேர்த்து முயற்சிக்கலாம் என்று இல்லாளிடம் சொல்ல வேண்டும்! ஏதோ ஒரு வகையில் அம்மாவின் நினைவுகள் வந்து விடுகின்றன. அதற்குள் அவர் மறைந்து மூன்று மாதங்கள் ஆகப் போகிறது! காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது.
*******
ஃப்ளெக்ஸ் பேனர் கலாச்சாரம் :
அப்பப்பா, திருச்சி நகரின் பல பகுதிகளிலும் வைக்கப்படும் பேனர்கள் - அதுவும் பிரம்மாண்ட பேனர்கள் மலைக்க வைக்கின்றன. பிரதான சாலைகளில் 80க்கு 30/40 அடி அளவில் மிகப் பெரிய பேனர்கள் வைக்கிறார்கள். எப்போது விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் தான் அவற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் “ஏன் இப்படி ஜால்ரா அடிக்கிறார்கள்!” என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கின்றன. ஒரு அரசியல் தலைவருக்கு பிறந்த நாளாம் - நகர் முழுக்க அவருக்கு பேனர்கள் வைத்திருக்கிறார்கள். சிம்மமே, தலைவரே, அமைச்சரே, இரத்தமே என ஏதேதோ பட்டங்கள்! இவற்றையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்! அந்தத் தலைவரை ஆண்டவன் அளவுக்கு உயர்த்தி, “உற்சவரே”, “அரங்கநாதரே” என்றெல்லாம் கூட பெரிய அளவில் எழுதி பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.
அரசியல்வாதி, நடிகர் என யார் மீது வேண்டுமானாலும் ஈர்ப்பு இருக்கலாம்! அதற்கென ஒரு அளவு இருக்கிறது அல்லவா? இப்படியெல்லாம் பேனர்கள் அடித்து செலவு செய்ய எங்கிருந்து பணம் வருகிறது? Hero worship செய்வது தவறில்லை என்றாலும் அதற்கு ஒரு அளவு இருக்கிறது. இவை எல்லாம் Height of Hero worship எனச் சொல்லும் அளவிற்கு உச்சக்கட்டம். யாராக இருந்தாலும் சரி, ஜால்ரா அடிக்கலாம்! அதற்கென ஒரு அளவு வேண்டாமா? நான் இங்கே இந்தக் கட்சி நல்லது, இந்தக் கட்சி கெட்டது என்ற வாதத்திற்கே வரவில்லை. யாராக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நகர் முழுவதும் இப்படி பேனர் வைக்க ஆகும் செலவினை ஏதேனும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தினால் செலவு செய்தவரையும், யாருக்காக செலவு செய்கிறார்களோ அவர்களையும் உதவி பெற்ற நல்லுள்ளங்கள் வாழ்த்தவாவது செய்யும். இப்படி பேனர்கள் அடித்து அந்த நிகழ்வு முடிந்த பின்னர் அவை என்னவாகும்? ஏதோ சில குடிசைகளுக்கு மேல் போடப்படலாம்… மற்றவை அனைத்தும் குப்பைக்குத் தான் போகும்!
பேனர் வைக்கும் ஒவ்வொருவரின் நோக்கமும் வேறாக, அவர்களது முன்னேற்றத்திற்கான பாதையை ஏற்படுத்துவதாக இருக்கலாம். “தலைவரே, உங்களுக்காக இவ்வளவு செய்யறேன்! சரியான சந்தர்ப்பத்தில என்னையும் கவனிச்சுக்கோங்க தலைவரே!” என்று சொல்லாமல் சொல்லும் வழியாக இருக்கலாம்! ஆனாலும், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா! அந்த எல்லையை இங்கே அனைவரும் மீறியபடியே இருக்கிறார்கள் என்பது தான் வேதனை! என்னவோ போடா மாதவா! யார் என்ன சொன்னாலும், இது போன்றவர்கள் கேட்கப் போவதில்லை. அவ்வப்போது இப்படி புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
4 டிசம்பர் 2025


சர்க்கரை வள்ளிக்கிழங்கு எப்போதாவது ஒருமுறை சாப்பிட்டதுண்டு. அதுவும் வேகவைத்து சும்மா சாப்பிடுவதுதான். இப்போது இனிப்பான மனிதனாக மாறி இருப்பதால் சாப்பிட முடியாது!!
பதிலளிநீக்குபேனர் வைபபதற்கு கோர்ட் நிறைய தடைகள் விதித்திருந்த நினைவு. யாரும் மதிப்பதில்லை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. சர்க்கரை வள்ளி கிழங்கை ஸ்டஃப் வைத்து செய்யப்பட்ட பரோட்டோ நன்றாக இருந்திருக்குமென நினைக்கிறேன். முன்பெல்லாம் இந்தக் கிழங்கை வேக வைத்தும், கரி அடுப்பு நெருப்பில் சுட்டும் சாப்பிட்டிருக்கிறோம். பொரியலும் நன்றாக இருக்கும்.
பீர்க்கங்காய் தோல் துவையல் நானும் வீட்டில் அடிக்கடிச் செய்வதுண்டு. நீங்கள் மூவரும் சேர்ந்து வேலை செய்து அந்த உணவை சுவைக்கும் போது மகிழ்வாக இருந்திருக்கும். கூடவே அம்மாவின் நினைவுகளும்... வீட்டின் ஒரு அன்பான உறவுப்பிரிவு மனதை கனக்க வைக்கும் நிகழ்வுதான். படிக்கும் போதே உங்கள் உணர்வுகளில் எனக்கும் வருத்தம் வந்தது.அவர் (அம்மா) எங்கும் போகவில்லை நம்முடன் தான் வாழ்கிறார் என்ற மனதைரியம் கொள்ளுங்கள்.அதைத்தான் நம்மால் செய்ய இயலும்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சர்க்கரை வள்ளி கிழங்கை கயாவில் விட்டாச்சு
பதிலளிநீக்குசெல்வப்பெருந்தகையை வாழும் காமராசரே என அடிக்கப்பட்ட போஸ்டரை கும்பகோணத்தில் பார்த்தேன். ஜால்ராவுக்கு அளவில்லையா
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரொம்பப் பிடிக்கும், ஜி
பதிலளிநீக்குபராட்டா சூப்பராக வந்திருக்கு. கவர்கிறது.
நம் வீட்டிலும் செய்வதுண்டு. நான் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பராட்டா செய்யலாம் என்பதை 30 வருடங்களுக்கு முன்னர் அப்போது பெங்களூரில் இருந்த என் சித்தியிடம் தெரிந்துகொண்டேன்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை நோயுள்ள எங்களுக்கு நல்லதும் கூட!!! இதை உகி க்குப் பதிலாக அதை வைத்துச் செய்யும் பல வகைகளில் இதை வைத்துச் செய்யலாம். காரக்கறி, பொடிமாஸ், நீங்கள் சொல்லியிருப்பது போல் சர்க்கரைப் பாகு சேர்த்து - இது செமையா இருக்கும் ஆனால் மீக்குக் கூடாதே!!
ஏன் மாமியார் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் கத்தரிக்காயும் சேர்த்து - அசடு - என்று கூட்டு செய்வார். ரொம்ப நன்றாக இருக்கும். எபியில் திங்க பதிவில் வந்த நினைவு,
கீதா
பேனர்கள் வைக்கக் கூடாது இல்லையோ? சென்னையில் ஒரு பெண்ணின் மீது பேனர் விழுந்து அவர் அந்த இடத்திலேயே இறந்தது கேஸாகி கோர் தடை விதித்திருந்த நினைவு.
பதிலளிநீக்குஅரசியல்வாதி, நடிகர் என யார் மீது வேண்டுமானாலும் ஈர்ப்பு இருக்கலாம்! அதற்கென ஒரு அளவு இருக்கிறது அல்லவா? //
நிச்சயமாக. வாழ்க்கையில் உருப்படியாகச் செய்து முன்னேறுவதை விட்டுவிட்டுத்தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் எனக்குத் தோன்றும்.
கீதா
வாசகம் அருமை.
பதிலளிநீக்குமூவரும் சேர்ந்து தயாரித்த பாரட்டா அருமை. அம்மவின் நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கும்.