அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஜீதே ரஹோ pபுத்தர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தில்லியில் இருந்த வரை எந்தவித வாகனமும் என்னிடம் இல்லை - In fact ஓட்டுனர் உரிமம் கூட இல்லை. அரசுப் பேருந்துகள் வசதியும், மெட்ரோ வசதியும் இருந்ததால் பெரும்பாலும் அதனையே பயன்படுத்துவது வழக்கம். இல்லை எனில் ஆட்டோ அல்லது வாடகைக் கார். 24 X 7 எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்ல வாகன வசதிகள் அதீதமாக இருந்ததால் எனக்கென்று சொந்தமாக வாகனம் வாங்கவே இல்லை. தமிழகம் வரும்போதும் அப்படியே. ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே நண்பர்கள்/உறவினர்களின்/அப்பாவின் இரு சக்கர வண்டிகளை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். கடந்த ஏப்ரல் மாதம் தான் ஒரு இரு சக்கர வாகனம் எங்களுக்காக வாங்கினோம். ஆனாலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே தான் அதனையும் ஓட்டி வந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் ஓட்டுனர் உரிமம் பெற்றேன்.
பல வருடங்களுக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது இப்போது தான். நான் செய்தது தவறு என்று தெரிந்தே இருந்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு உரிமம் பெறாமலேயே இருந்திருக்கிறேன். இப்படி பலரும் இருக்கிறார்கள் - அடுத்தவர்கள் செய்தால் நானும் செய்ய வேண்டும் என்பதில்லையே. தற்போது தினமும் வாகனத்தில் தான் சென்று வருகிறேன். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் ஓட்டம் தினமும். அத்தனை அதிகம் இல்லை என்றாலும், சக வாகன ஓட்டிகள் செய்யும் செயல்கள் கோபமூட்டுகின்றன. என்ன அவசரம் அவர்களுக்கெல்லாம் என்பது புரியவில்லை. வாகனங்களை அத்தனை வேகமாக ஓட்டுகிறார்கள். Signal அருகே வரும்போதே ஹாரன் மீது ஏறி உட்கார்ந்தது போல தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
நேற்று மாலை சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னர் ஏழு எட்டு வண்டிகள். பச்சை சிக்னல் விழக்கூட இல்லை - ஆனாலும் பின்னாலிருந்து தொடர்ந்து ஹாரன் ஒலி. சற்றே கோபத்துடன் திரும்பினேன் - ஒரு இளம்பெண் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். முன்னால் இருக்கும் வாகனங்கள் நகர்ந்தால் தானே நான் நகர முடியும். ஒன்றும் பேசாமல் வலது கையால் பறந்து போகலாம் என்று சைகையால் சொல்லி விட்டேன். வேறு என்ன சொல்ல? வண்டிகள் நகர்ந்ததும் பார்த்தால் என்னைத் தாண்டி வேகமாகச் சென்றார். சில மீட்டர்கள் பயணித்ததும் “டமால்” என்று ஒரு சத்தம்! சற்று முன்னே வேகம் காட்டிய பெண் முன்னே சென்ற வேறொரு வண்டியில் மோதிக்கொண்டு தனது வண்டியிலிருந்து கீழே விழுந்து கிடந்தார் - திருப்பிப் போட்ட கரப்பு போல. அவரது வாகனம் கீழே விழுந்த நிலையில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல வேளை பெரிதாக சிக்கலில்லை அவருக்கு.
பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். என்ன அவசரம் என்றே புரியவில்லை. ஏதோ இவருக்காகவே டான் - அதான் டொனால்ட் ட்ரம்ப் காத்திருக்கிறார் - போகவில்லை என்றால் இன்னும் இந்தியாவிற்கான Tariff அதிகரித்து விடுவார் என்பது போல வேகம். வேகம் காண்பித்தாலும் காட்டாவிட்டாலும் டான் என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது - அது வேறு விஷயம்! இது போன்றவர்களால் சக வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை என்பது ஏனோ இவர்களுக்குப் புரிவதில்லை. தொடர்ந்து Silencer எடுத்த வாகனங்களின் அதீத ஒலி, பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு நம்மை கடப்பது என எத்தனையோ சிக்கல்கள் சாலைகளில் உண்டு. இவற்றை எல்லாம் கடந்து தான் வாகனத்தினை செலுத்த வேண்டியிருக்கிறது. யார் யாருக்கு வேகமாகப் போக வேண்டுமோ போய்க்கொள்ளுங்கள் - நான் சீரான வேகத்தில் ஒரு ஓரமாகப் போய்விடுகிறேன் என்று தான் வாகனத்தினைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
அதிலும் தற்போது வரும் வாகனங்களில் Head light மிகமிகப் பிரகாசமாக இருக்கிறது. எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சம் நம் கண்களை மூடச் செய்யும் அளவிற்கு இருப்பதுவும் கூட தொல்லை தான் - அதிலும் குறிப்பாக கண்ணாடி அணிந்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு! Dim - Dip போன்ற சமாச்சாரங்கள் தற்போது இல்லையோ? அத்தனை பிரகாச ஒளியுடன் எதிரே வாகனங்கள் வந்தால் கண்கள் கூச, ஒரு ஓரமாக வாகனத்தினை நிறுத்தும் சில பெரியவர்களை தினமும் பார்க்கிறேன். இது போன்ற சமயங்களில் வாகனத்தினை மிக மெதுவாக செலுத்த வேண்டியிருக்கிறது - ஜாக்கிரதை காரணமாக. ஒரு பைக்கில் மூன்று, நான்கு இளைஞர்கள் செல்வது, இரு சக்கர வாகனத்தில், பெட்ரோல் டாங்க் மீது ஒரு குழந்தை, பின்னால் ஒரு குழந்தை அதன் பிறகு குழந்தைகளின் தாய் - ஒரு கால் முழுவதும் வெளியே தொங்கிக் கொண்டு இருக்கும்படி அமர்ந்திருக்கிறார் - இப்படி இருக்க ஆண் வாகனம் செலுத்துகிறார். பக்கவாட்டில் பெரிய பெரிய பைகள் வேறு - ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கரிலும் வண்டி ஏறி இறங்கும்போதும் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்மணி விழுந்து விடுவாரோ என்று மற்றவர்கள் கவலைப்பட, அந்த வாகன ஓட்டியோ அந்தக் கவலை ஏதுமின்றி வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார் வேகமாக!
எதற்காக இந்த அவசரம்? அப்படி என்ன தான் அவசரமான வேலை இருக்கும்? யாராவது இது போன்றவர்களிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா ப்ளீஸ்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
27 ஃபிப்ரவரி 2026


நான்காவது பாராவில் வரும் டான் வரிகளை ரசித்தேன்! இன்றைய வாசகம் நன்று, எனக்கானதாகத் தோன்றியது!
பதிலளிநீக்குஹெட்லைட் பிரகாசம் - ஹெல்மெட் பிரச்னைகளுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் போ. கா இதைப் பிடித்து அபராதம் விதித்து மாற்றி சேவை செய்யலாம். . விபத்துகளாவது குறையும்.
இந்த photo வில் இருப்பவர்கள் எல்லோரும் நன்கு வளர்ந்த குழந்தைகளாகத்தானே இருக்கிறார்கள்! பாவம் அந்த scooter.நான் மும்பையில் scooty வாங்கி ஒரு 5 வருடங்கள் ஓட்டிவிட்டு (வருடத்தில் 6 மாதங்கள் மழை பருவம் காரணமாக உரை மூடியபடிதான் இருக்கும்) விற்றுவிட்டேன் பாதி விலைக்கு.அன்றுதான் நான் மிக சந்தோஷமாக இருந்த நாள்!😁.நான் ஓட்டிப் போவது highway இல்.அங்கு யுவாக்கள் எந்த traffic rule ஐயும் follow செய்ய மாட்டார்கள்.zig zag செய்துகொண்டு பறப்பார்கள்.நம் லப் டப் எகிறும்.அங்கு 2 wheeler ஓட்டுவது என்பது முள் மேல் சேலை போல.நாம் சரியாக ஓட்டாவிட்டாலும், மற்றவர்கள் சரியாக ஓட்டாவிட்டாலும் நஷ்டம் கஷ்டம் நமக்கே..நான் ஓட்டும் வேகம் நாயையும் முந்தச் செய்யும்! ஆக ஆக எல்லோர் நலனையும் மனதில் கொண்டு சரியான முடிவு எடுத்தேன்.auto வில் போகும்போது பாரத்தை மேலே இருப்பவர் & முன்னால் இருப்பவர் (டிரைவர்) மேல் போட்டுவிட்டு நிம்மதியாக கண் மூடி ஜபித்துக்கொண்டே போவதுதான் நிம்மதி..
பதிலளிநீக்குவிஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குவேகம் விவேகம் இல்லை என்றாலும் மற்றவர்கள் வேகமாக போவது பயத்தை ஏற்படுத்துகிறது.
கொஞ்சம் சீக்கீரம் எழுந்து வேலைகளை முடித்து கொண்டு நிதானமாக போகலாம்.
பள்ளிக்கு சென்று குழந்தையை விட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும், மனைவியை அலுவலகத்தில் விட வேண்டும் என்று போகும் குடும்பத்தலைவன் பொறுப்புடன் செயல் பட்டால் நல்லது.
இப்போ எல்லாம் எல்லாருக்குமே அவசரம் போல சாலைகளில் வாகனத்தில் செல்கிறார்கள். அதிலும் யாரையும் நடக்க விடாமல், இண்டு இடுக்கு இருந்தாலும் அதிலும் வாகனத்தைச் செலுத்தி முன்னேறப் பார்க்கும் இந்த இரண்டு சக்கர ஓட்டிகளைக் கண்டால் எரிச்சலாக இருக்கும்.
பதிலளிநீக்குஎழவு பிடிச்சவன்/வள், இருபது நிமிடம் முன்பே எழுந்திருந்தால் என்ன என்று தோன்றும். சில நேரங்களில் மனைவியிடம் சொல்லுவேன், இரு சக்கர வாகனத்திற்கு மாத்திரம் லிட்டர் பெட்ரோல் அல்லது எந்த எரிபொருளும் ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் தேவலை என்று.
அவங்களும் ஆட்டோவும், எப்போ எந்த திசைல திரும்புவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது பக்கத்தில் செல்லுபவர்களுக்கும் தெரியாது
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. எனக்கும் இப்படி வாகனங்களில் வேகமாக செல்பவர்களை கண்டால், வெறுப்பாக வரும். அதுவும் பைக்கில் செல்பவர்கள் வேகமாக செல்லும் போது எழும்பும் ஒலி அதிர்வு இதயத்தையே நடுங்க வைக்கும்.
தாங்கள் குறிப்பிட்டபடி ஒரு பெரிய குடும்பமே வண்டியில் செல்வது எத்தனை ஆபத்தானது என்பதை அவர்கள் உணர மாட்டார்களா? இப்போது இந்த மாதிரியான அவசர வாகன ஓட்டிகளின் நடுவே வெளியில் அதுவும் சாலைகளில் நமக்கும் நடந்து சென்று வரவே பயமாகத்தான் உள்ளது. நல்லபடியாக வீடு திரும்பி வரவே நமக்கும் இறைவனது அருள் வேண்டுமென மனது பிரார்த்தனைகள் செய்து கொள்கிறது. அவசர யுகத்தைப்பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Signal அருகே வரும்போதே ஹாரன் மீது ஏறி உட்கார்ந்தது போல தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கிறார்கள். //
பதிலளிநீக்குசென்னைல குறிப்பாக டைடல் பார்க் சிக்னலில் ப்ளாட்ஃபார்ம்ல கூட ஏறிப் ப்போவா
கருத்து முழுமையாக அடிக்கும் முன்னரே டகார்னு வெளியிட்டு விட்டது! கர்சர் துள்ளி...
பதிலளிநீக்குநடைபாதைகள் கூட வண்டிகளுக்காகிவிட்டன. இங்கு நடைபாதையில் ஏறுவதில்லை ஆனால் நடைபாதைகளில் வண்டிகளை நிறுத்தி வைக்கிறாங்க. நடக்க இடமே இல்லை.
இதுல வேற சுப்ரீம் கோர்ட் இடையில் ஆணை பிறப்பித்தது. நடைபாதைகளைப் பாதசாரிகளுக்கு உதவும்படி சீரமைக்க வேண்டும் என்று. எங்க?!!!!
கீதா
உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன். நாலும் இரண்டும் நிறைய ஓட்டியிருக்கிறேன். இப்ப இங்கு வந்த பிறகு சமீபத்தில்தான் உரிமம் காலாவதியாகிவிட்டது ஆனால் புதுசு எடுக்கவில்லை. இங்கு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதால். வண்டிகளும் வைத்துக் கொள்ளவில்லை இப்ப.
பதிலளிநீக்குசிக்னல் விழும் முன்னரே ஹாரன் அடிப்பது. இடப்புறம்முந்திச் செல்வது....இண்டிகேட்டர் போடாமல் திரும்புவது....
பாருங்க அடிச்சுப் பிடிச்சு முந்திப் போனா இப்படிதான் சில சமயம் நடக்கும். அப்பெண்ணிற்கு போல்....நான் நிறைய அடி வாங்கியதுண்டு. பின்னால் வருபவரால், குறுக்கே டபால்னு புகுந்து செல்பவரால் இடி பட்டு விழுந்து என்று உண்டு.
எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சம் நம் கண்களை மூடச் செய்யும் அளவிற்கு இருப்பதுவும் கூட தொல்லை தான்//
டிட்டோ. கார்களில் கூட ஹை பீம், நகரச் சாலைகளில் பயன்படுத்தக் கூடாது என்று சட்டமுண்டு. ஆனால் போட்டுத்தான் செல்வார்கள்.
வேகம் விவேகமல்ல என்று எத்தனை எச்சரிக்கை வைத்தாலும் பயனில்லை. காவலர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் மைக்கில் சொல்லிக் கொண்டே இருந்தாலும் பயனில்லை.
கீதா
வாசகம் ரொம்பவே யதார்த்தம். அதிகம் பேசினாலும் நம் எனர்ஜியும் வீணாகும்தான்.
பதிலளிநீக்குடான் -!!!! சிரித்துவிட்டேன்...
கீதா
சென்னையில் படு மோசம் சிக்னலில் ஹார்ன் அடிப்பது நான் நிறைய நாட்கள் அவர்களை முறைத்து விட்டு உங்களால் முடிந்தால் முன்னெ செல்லுங்கள் என்று சொல்லிவிடுவேன் பணம் பறிப்பதில் மட்டும்தான் traffic police வேலை
பதிலளிநீக்கு