அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சென்ற வாரம் கும்பகோணம் குறித்த பதிவில் எழுதியது போல சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று காலையில் நீராடி, காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டேன் - பாடல் பெற்ற ஸ்தலம் ஒன்றிற்குச் சென்று இறைவனை தரிசித்து வருவதே நோக்கமாக இருந்தது. சில சமயங்களில் எதற்காகவும் காத்திருக்காமல், சட்டென்று ஒரு முடிவு எடுத்து செயல்படுத்திவிட வேண்டும் - இது போன்ற விஷயங்களில் நிறைய யோசித்தால் அந்த முடிவினை செயல்படுத்த முடியாமலேயே போய்விடுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதனால் இந்த வாரம் காலையிலேயே புறப்பட்டு விட்டேன். திருச்சியில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களின் குறிப்புகளைப் பார்த்த போது கற்குடி என்கிற பெயர் பார்த்ததும், இதுவரை அங்கே சென்றதில்லையே என்று தோன்றியது. அங்கே செல்லும் வழி குறித்து பார்த்து வைத்திருந்தேன்.
வயலூர் செல்லும் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் அமைந்திருக்கும் ஆலயம் இது. அந்தக் காலத்தில் இந்தத் தலம் கற்குடி என்கிற பெயரில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் என நால்வரில் மூவரால் பாடப்பெற்ற ஸ்தலம் இது. சோழநாடு தென்கரை பாடல்பெற்ற ஸ்தலங்களில் இந்த ஸ்தலமும் ஒன்று. திருவரங்கத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்தச் சிவாலயம். ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகவும் அழகாகவும், அமைதியாகவும் இருக்கிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் புறப்பட்டுச் சென்று அங்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தபின்னர் தான் திரும்பினேன். நான் சென்ற போது உஜ்ஜீவனேஸ்வரர் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன. சிறப்பான அபிஷேகம் கண்டு, அலங்காரம் முடிந்தபிறகு இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனோடு ஒன்ற முடிந்தது.
ஆலய வளாகத்தில் சில நிமிடங்கள் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் சில சிறுவர்-சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு நாமாவளிகளையும் பதிகங்களையும் சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு சன்னதி முன்னரும் நின்று பாட வைத்துக் கொண்டிருந்தார். அவருக்காகவே அந்த சிறுவர்-சிறுமியர் காத்திருந்து, வந்தவுடன் ஐயா வந்துட்டார் என உற்சாகக் குரல் கொடுத்து அவர்களுடன் ஆலய வளாகத்தில் பதிகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மனதுக்கு மிகவும் உகந்த விஷயமாக இது இருந்தது. சுமார் 65 படிகள் ஏறி வந்தால் சிறு குன்றில் மீது இருக்கும் ஆலயம் இது. இறைவனின் திருநாமம் உஜ்ஜீவனேஸ்வரர். இங்கே இரண்டு அம்பாள் - அஞ்சனாட்சி, பாலாம்பிகை என்கிற திருநாமங்கள் கொண்ட இரண்டு அம்பாள் சன்னதிகள் இங்கே இருக்கின்றன. அஞ்சனாட்சி அம்பாள் - பழைய திருவுருவம் - அவளது திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்து போனதால், அம்பாள் திருவுளப்படி, இரண்டாவதாக பாலாம்பிகை சன்னதியும் இங்கே அமைத்திருக்கிறார்களாம். முதலாவது அம்பிகையும் இங்கேயே தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
நுழைவாயிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் இருக்கிறது. அதன் வெளியே வாகனத்தினை நிறுத்தி உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய மண்டபம். இடப்புறம் ஞானவாவி எனும் தீர்த்தம் (குளம்). விட்டத்தில் அழகிய வேலைப்பாடுகளைக் கவனித்தபடியே சென்றால் நேர் எதிரே மண்டபத்தில் திருப்புகழ் பாடல் பெற்ற முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் காட்சி தருகிறார். அதற்கு முன்னர் வலப்புறம் இருக்கும் படிகள் வழி மேலே ஏறிச் சென்றால் ஒரு மூன்று நிலை கோபுரத்தினைத் தாண்டினால் கொடிமரம், நந்திதேவரை தரிசித்தபடியே இன்னும் மேலே சென்றால் அன்னையையும் சுயம்பு மூர்த்தியாக குடியிருக்கும் அப்பனையும் தரிசிக்கலாம். இந்தத் தலம் எமபயம் நீக்கும் தலம் என்கிற புராணக் கதையும் உண்டு. மிருகண்டு முனிவர் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து, இறைவனை நோக்கி தவமிருந்து மார்க்கண்டேயரை மகனாகப் பெற்றது நாம் அறிவோம். இறைவனின் திருவுளப்படி 16 வயதில் மார்க்கண்டேயனை எமன் துரத்த அவனும் பல தலங்களில் இறைவனைத் துதித்து கடைசியாக கற்குடிக்கு வந்து துதிக்க, இறைவன் அவரைப் பாதுகாத்தார் என்கிறது தலவரலாறு. மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் இறைவன் இத்தலத்தில் உஜ்ஜீவநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
தலத்தில் நிறைய தனிச்சன்னதிகளும் உண்டு. அழகிய விநாயகர், இடர்காத்தார் (கரன் பூசித்த சிவலிங்கம்), பைரவர், ஜேஷ்டா தேவி, என சின்னச் சின்னதாய் சன்னதிகளும் உண்டு. இதைத் தவிர குன்றின் அடிவாரத்தில் ஐய்யனார், வாராஹி போன்றவர்களுக்கான தனி சன்னதிகளும் இருக்கின்றன. அமைதியாக இருக்கும் இந்தத் தலத்தில் நீங்களும் அமர்ந்து இறைவனைக் குறித்த தியானத்தில் ஈடுபடலாம். நான் சென்ற போது மொத்தமாகவே 20 பேர் தான் இருந்திருப்பார்கள். இத்தனைக்கும் அங்கே அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன. பிரசாதமாக அனைவருக்கும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது. சிறிய உருவில் இருந்தாலும், முதலில் விபூதி அபிஷேகம் செய்யப்பட்ட ரூபத்திலும், பிறகு அலங்காரங்கள் முடிந்த நிலையிலும் சிறப்பான தரிசனம் கிடைத்தது.
அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இந்தத் தலம் குறித்து அப்பர் பெருமான் பத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பதிகமும் கண்ணாரக் கண்டேனே என்று முடியும் விதத்தில் அமைந்திருக்கிறது. அந்தப் பாடல்களிலிருந்து ஒன்று (எட்டாவது பதிகம்) மட்டும் இங்கே….
வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
திருச்சி வரும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் கண்ணாரக் கண்டு வாருங்கள். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்/மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் செல்லும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்லும். அல்லது சொந்த வாகனத்தில் செல்வதானாலும் சென்று வரலாம். சாலை ஓரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் (50 அடி உயரம்) அமைந்திருக்கும் இந்தத் தலத்திற்குச் சென்று இறைவனையும், இறைவியையும் தரிசித்து பூரண அருள் பெற எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். நலமே உண்டாகட்டும். மீண்டும் வேறொரு பதிவில் வேறொரு பாடல் பெற்ற ஸ்தலம் குறித்து பார்க்கும் வரை….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
11 ஃபிப்ரவரி 2026











































ஒரு அழகிய கோவிலை தரிசித்து எங்களுக்கும் காட்டி இருக்கிறீர்கள். இந்தக் கோவில் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. படங்கள் அழகு. அவ்வளவு பழமை வாய்ந்த கோவில் என்று படங்கள் பார்த்தால் தெரியாத அளவுக்கு வண்ணமேற்றி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை
இன்றைய வாசகமும் அருமை.அருமையான கோவில் உலா.
கற்குடி பாலம்பிகை உடனுறை உஜ்ஜீவனேஸ்வரரை தரிசித்து கொண்டேன். கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மேல் விதான படங்கள் மிக அழகாக இருக்கிறது இந்தக் கோவிலுக்கு செல்லும் வழி, தூரம் ஆகியனவற்றை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி
தூண்களில் சிற்பங்கள், கடவுளார்களை,தீர்த்தக்குளம், உள்ளே சென்றவுடன் மூன்று நிலை கோபுரம், கொடிமரம் என அத்தனை இடங்களையும் பார்த்து தரிசித்துக் கொண்டேன் .
நீங்கள் கோவிலின் அழகான படங்களையும் இணைத்து, கோவிலின் தலவரலாற்றையும், சன்னதி மற்றும் இடங்களையும் விமர்சித்து எழுதிய விதத்தில், உங்களுடன் நானும் கோவிலை சுற்றிப் பார்த்து இறைவனை தரிசித்த உணர்வை அடைந்தேன். சிவராத்திரி நெருங்கும் நாளில் சிவ தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. அருமையான பகிர்வு. தொடரட்டும் உங்களது கோவில் உலாக்கள். நாங்களும் தொடர்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி வெங்கட் சார் ..
பதிலளிநீக்குபல முறை இந்த கோவிலை கடந்து தான் செல்லுகிறோம். ஒவ்வொருமுறையும் இங்கு செல்ல வேண்டும் என எண்ணுவேன் ஆனால் இன்னும் சென்றது இல்லை என்பதில் எனக்கு மிக வருத்தம், கணவர் பலமுறை சென்று வந்து இந்த சேவைகளை பற்றி கூறியுள்ளார்.
இன்று படங்களுடன் கற்குடி பாலம்பிகை உடனுறை உஜ்ஜீவனேஸ்வரரை தரிசித்ததில் மிக மகிழ்ச்சி சார் ..
அருமை உங்களுடன் சேர்ந்து நாங்களும் தரிசித்தோம் படங்களும் அழகு இந்த கோவில் பற்றி படித்து இருக்கிறேன் வரும் போது தரிசிக்க வேண்டும் தொடரட்டும் உங்கள் பயணம்
பதிலளிநீக்குபடங்கள் பிரமாதம் வெங்கட்ஜி. மேல்விதான டிசைன்கள் சூப்பர்.
பதிலளிநீக்குஅருமையான கோவில் பத்தி சொல்லியிருக்கீங்க. பழமையான கோவில் என்று சொல்ல முடியலையே அந்த அளவு கலர் அடிச்சிருக்காங்களே.
சிற்பங்கள் செமையா இருக்கு.
இக்கோவில் பத்தி இதுவரை தெரிந்ததில்லை.
கீதா
அருமையான கோயில் படங்கள் எல்லாம் அருமை. தூண் சிற்பங்கள் கதை சொல்கிறது.
பதிலளிநீக்குபதிகம் பாடிய குழந்தைகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் ஞாயிறு மாலை புனுகீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வோம் மாயவரத்தில். இப்படி ஒவ்வொரு சன்னதி முன்னாலும் பதிகங்களை பாடி வலம் வருவோம்.
கோயிலை நேரில் பார்த்த உணர்வு, நன்றி.