அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சித்தர் பூமி சதுரகிரி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சொத்துத் திருவிழா:
சமீபத்தில் ஒரு நடைப்பயணம் மேற்கொண்ட போது எதிரே ஒரு மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்திருந்த ஒரு சிறு பதாகை கண்களை ஈர்த்தது - காரணம் அதில் எழுதியிருந்த இரு வார்த்தைகள் - இந்தப் பதிவின் தலைப்பில் இருக்கும் இரு வார்த்தைகள் - “சொத்துத் திருவிழா” - எனும் இரு வார்த்தைகள். இது வரை இப்படியான திருவிழாக்கள் குறித்து நான் அறிந்திலேன். வீட்டில் பேசியபோது தெரிந்தது - இப்படியான திருவிழாக்கள் இப்போது அதிகம் நடக்கிறதாம். திருவிழா என்றால் ஆலயங்கள், வீடுகள் அல்லது ஊர்களில் நடக்கும் கலாச்சாரத் திருவிழாக்கள் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் நபர் நான். ஆனால் சொத்து சேர்ப்பதற்குக் கூட திருவிழாக்கள் நடத்துகிறார்கள் என்று இப்போது தான் தெரிகிறது. ஏற்கனவே வீடுகள் இருப்பவர்கள் கூட ஒரு சொத்தாக, ஒரு முதலீடாக இப்படி வீட்டு மனைகள், தனி வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என வாங்கி சொத்து சேகரிக்கிறார்கள்.
திருவரங்கத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து விட்டன. இன்னும் பலப் பல இடங்களில் வீடுகள் வந்த வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வீடுகள் விற்பனைக்கு என திட்டமிட்ட சில மாதங்களிலேயே அந்த வீடுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிடுகின்றன. இங்கே பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கிப் போட்டுவிடுகிறார்களே தவிர அவற்றை வாடகைக்கு விடுவதில்லை. பூட்டியே வைத்திருக்கிறார்கள். கேட்டால் - பெருமாள் சேவிக்க வரும்போது அங்கே தங்குவதற்காக வாங்கி வைத்திருக்கிறோம் என்கிறார்கள். இது முதலீடா? இல்லை என்ன வகையான செலவு என்பது புரியவில்லை. எங்கள் வீட்டின் எதிரே இருக்கும் ஒரு வீடு இப்படி 10 வருடங்களாக பூட்டிக் கிடக்கிறது. எனக்குத் தெரிந்து மொத்தமாகவே பத்து நாட்கள் கூட இந்த வீட்டில் வந்து வீட்டின் உரிமையாளர்கள் தங்கியதில்லை.
இப்படி ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. வாடகைக்கு தரும் நபர்களும் நிறையவே இருக்கிறார்கள். வாடகைக்கு வரும் நபர்களும் அதிகமே. ஆனாலும் இப்படியான சொத்துத் திருவிழாக்கள் பற்றி முதன் முறையாகக் கேள்விப்பட்டது இந்த முறை தான். பிறகு இணையத்தில் தேடினால் பல ஊர்களில் இப்படியான திருவிழாக்கள் நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொத்து சேர்ப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. நிச்சயம் ஏதேனும் கொஞ்சமேனும் எதிர்காலத்திற்காக சொத்து சேர்க்க வேண்டியது தான். ஆனால் பலர் சொத்து சேகரிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் சென்று விடுகிறார்கள் என்பதையும் இங்கே பார்க்க முடிகிறது. அரசியல்வா(வியா)திகள் சொத்து சேர்த்துக் கொண்டே போவது குறித்து நாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது அவர்களுக்குக் கைவந்தகலை. பல தலைமுறைகள் வரை அந்தச் சொத்துக்கள் நின்று பேசும்! ஆனால் சாதாரணர்களுக்கு? தகராறு தான் வரும்.
ஒரு பதாகை எத்தனை எத்தனை விஷயங்கள் குறித்து யோசிக்க வைத்து விடுகிறது என்றெல்லாம் சிந்தனைகள் என்னுள் ஓடியது. சொத்துத் திருவிழா - இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டதுண்டா? கேட்டிருந்தால் அது குறித்த உங்கள் சிந்தனைகள் என்ன? சொல்லுங்களேன்.
*******
பூ மார்க்கெட்டில் அழுகல் நெடி:
சமீபத்தில் கும்பகோணம் சென்று வந்தது குறித்து இங்கே எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம். அந்தப் பயணத்தில் கும்பகோணத்தின் ஆலயங்கள் இருக்கும் வீதிகளில் நடந்தபோது காலை நேரத்தில் பூ மார்க்கெட் வழியாகவும் நடக்க நேர்ந்தது. பொதுவாகவே பூ மார்க்கெட் மட்டுமல்ல, காய்கறி/பழங்கள் மார்க்கெட்டில் கூட வீணாய்ப் போனவற்றை அப்படியே ஓரத்தில் கொட்டிச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. வியாபாரிகள் அப்படிக் கொட்டுவதை துப்புரவு பணியாளர்கள் எடுத்துச் செல்லும் வரை அங்கேயே கிடந்தால் ஒரு வித துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க இயலாது. ஒவ்வொரு மார்க்கெட்டிலும் இது தான் நிலை. பூ மார்க்கெட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அழுகல் நெடி, பூக்களின் வாசத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நாசிகளில் வந்து சேரும். தவிர்க்க முடிவதேயில்லை.
ஆனால் நான் இன்றைக்குச் சொல்லப்போகும் விஷயம் பூக்களின் அழுகல் நெடி குறித்ததல்ல… மனித மனங்களின் அழுகல் நெடி குறித்து. மார்க்கெட்டில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பூ விற்பனையாளர் - பூவை அளந்து போட்டபடியே தம் திருவாயைத் திறந்து பேசிய வார்த்தைகளில் அத்தனை அழுகல் நெடி. பலவித அடைமொழிகள் சேர்த்து கெட்ட கெட்ட வார்த்தைகளால் யாரையோ அர்ச்சித்துக் கொண்டிருந்தார். நான் அந்த இடத்தினைக் கடந்த சில நிமிடங்களில் அத்தனை விதமான அடைமொழிகள் - கேட்கவே, இல்லை இல்லை யோசிக்கவே வேதனை தரும் விதமான கெட்ட வார்த்தைகள். அந்தப் பூவை வாங்கிக் கொண்டு போகும் நபர் அதனை எங்கே பயன்படுத்துவார்? ஆலயங்களில் இறைவனுக்கு அர்ச்சிக்க அந்தப் பூக்கள் பயன்படுமா? பூக்கள் எத்தனை புனிதமான விஷயங்களுக்குப் பயன்படுகிறது என்கிற கவலையெல்லாம் இல்லாமல் விதம் விதமான வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, விற்பனை நேரத்தில் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது. தொழில் செய்யும் இடத்தில் சுத்தம் எவ்வளவு முக்கியமோ, அது போலவே வாக்கும் மிகவும் முக்கியம். அமைதியாக இருக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் எல்லாம் இல்லாமல் கண்டமேனிக்குப் பேசுவதில் கேட்பவர் அனைவருக்கும் கஷ்டம். இதையெல்லாம் யோசிக்காமல் இப்படி பேசுகிறாரே என்கிற வேதனை எனது மனதில். அதுவும் காலை வேளையில் இப்படியான வார்த்தைகளைக் கேட்டுச் செல்லும் நபருக்கு அன்றைய நாள் முழுவதும் எப்படி இருக்கும் என்ற சிந்தனைகள் என் மனதில். ஒரு வேளை இப்படிச் சிலர் நினைக்கலாம் - “அந்த மனிதர் அப்போதைக்கு திட்டித் தீர்த்து மறந்து விட்டார் - நீ மட்டுமே அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருக்கிறாய்!” என்று. அவர்களுக்கு என் பதில் - நான் நினைத்துக் கொண்டிருப்பது அந்த மனிதர் சொன்ன வார்த்தைகளை அல்ல! அந்த மனிதரின் செயலை மட்டுமே!
விற்பனை செய்வது வாசனை மிகுந்த பூக்கள் என்றாலும் அவரது மனதிலிருந்து எதற்கு இந்த அழுகல் நெடி? என்ற சிந்தனைகள் என்னுள் தொடர்ந்தன. இப்படித்தான் சிலர் - கடந்து போவோம் என்று கடந்து கொண்டிருக்கிறேன். வேறு வழி?
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
10 ஃபிப்ரவரி 2026

.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....