வியாழன், 12 பிப்ரவரி, 2026

யானை மேலே புண்ணு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட உஜ்ஜீவனேஸ்வரர் ஸ்வாமி திருக்கோவில், கற்குடி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இன்றைக்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு ஒன்று.  எல்லோர் சார்பிலும் பலமுறை கேட்டுக் கொண்ட பிறகு பதிவொன்றினை எழுதி அனுப்பித் தந்தார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி. ஓவர் டு பத்மநாபன் அண்ணாச்சி - வெங்கட் நாகராஜ். 


யானே மேலே புண்ணு - பத்மநாபன் 



சமீபத்தில தினத்தந்தி பேப்பர்ல ஒரு கட்டுரை. அதுல நீல ஆதார் அட்டை என்றால் என்ன? அப்படின்னு ஒரு கேள்வி. கீழ எழுதியிருந்தான், குழந்தைகளுக்காக வழங்கப்படும் பிரத்யேக ஆதார் அட்டை இதுவாகும். இதை Bபால் ஆதார் என்றும் அழைப்பதுண்டு. நீல நிறத்தில் இருப்பதாலேயே இந்தப் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. 


ஆனால் Bபால் ஆதார் என்றால் குழந்தைகள் ஆதார் என்றல்லவா பொருள். 


இப்படித்தான் சின்ன வயசில நம்ம கள்ளமில்லா வெள்ள மனச பாத்துப் புட்டு எப்படில்லாம் ஏமாத்திருக்காங்க. அப்போ எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும். ஒரு ஸ்கூல் லீவ் சமயம் நாகர்கோயிலில் உள்ள என் மாமா வீட்டுக்கு போயிருந்தேன். என் மாமா பையன் என்னை விட ஒரு ஒண்ணு ஒண்ணரை வயசு பெரியவன். எங்க ரெண்டு பேருக்கும் வீட்டுல ஒரே பேரு. ஐயப்பன். அவன் பெரிய ஐயப்பன். நான் சின்ன ஐயப்பன். ஆசுபத்திரி நர்சம்மா வச்ச பேரு. நான் கிராமத்து சுண்டெலின்னா அவன் டவுன் பெருச்சாளி. நான் என்கூருல அரை சைக்கிள் எடுத்து ஆளில்லா தெருவுல அரைகுறையாய் ஓட்டிக்கிட்டு இருந்தப்போ அவன் பெரிய சைக்கிளில் குறுக்குக் கால் போட்டு என்னையும் பின்னாடி டபிள்ஸ் வச்சி நாகர்கோயில் சந்து பொந்து எல்லாம் சர்க்கஸ் செய்வான். எல்லா சினிமா டாக்கீசுக்கும் கூட்டிகிட்டு போவான். அதனால அவனுக்கு எல்லாம் தெரியும்னு ஒரு நினைப்பு எனக்கு. எங்க போனாலும் அவன் பொறத்தாலே போறதுதான் என் வேலை. 


எப்பவாவது வடிவீஸ்வரம் பறக்கன் கால்வாயில தண்ணி வந்தா போய் குட்டிக்கரணம் போட்டு குளிக்க வேண்டியது. அது அப்பவே கூவத்த விட கேவலமான ஒரு கால்வாய். ஆனா என்ன செய்ய. புதுத் தண்ணி வந்தா காஞ்ச கக்கா புக்கா எல்லாம் அடிச்சிகிட்டு போயிரும். அதனால கொஞ்சம் தண்ணி சுத்தமானதும் கண்ண மூடிக்கிட்டு போய் குதிச்சிற வேண்டியதுதான். கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வாய்க்குள்ள போகும். அதெல்லாம் கண்டுக்கப் படாது, சரியா! 


அப்படியே குமரி அணையில தண்ணியை தொறந்தா எங்க அத்தை ஒரு பெரிய மூட்டையா அழுக்குத் துணியெல்லாம் எடுத்துக்கிட்டு பழையாத்துக்கு கூட்டிக்கிட்டு போவா. அங்க கால் முட்டி அளவு தண்ணியில கும்மாளம் போடுவோம். ஒரு தடவை இப்படித்தான் குமரி அணையில தண்ணியை தொறந்து விட்டிருந்தான். நாங்க ஒரு கூட்டமா மூட்டை முடிச்சோட போய் பழையாத்துல கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கோம். கரையோரமா எங்க அத்தை துணி துவைக்கதுல மும்முரமா இருந்தா. நாங்க கொஞ்சம் உள்ள போய் கும்மாளம் போடுகோம். அடிச்சிகிட்டுருக்க கூத்துல கால் முட்டி அளவு இருந்த தண்ணி இடுப்பளவு வந்தது கூட தெரியாம அப்படி ஒரு விளையாட்டு. 


தண்ணி அஞ்சு நிமிஷத்துல மள மளன்னு உயருது. இடுப்பளவு தண்ணி நெஞ்சளவு வந்தாச்சு. கரையில இருந்து எங்க அத்தை கத்தி கத்தி கூப்பிடுகா. எங்க காதுல விழவேயில்லை. அவ்வளவு இன்டரெஸ்டா கும்மாளம் போய்க் கிட்டு இருக்கோம். எங்க அத்தை துணி மூட்டையை தூக்கி கரையில போட்டு விட்டு தண்ணியில இறங்கி வந்து ஓங்கி அவன் முதுகுல ஒண்ணு, என் முதுகுல ஒண்ணு வச்சதும் விளையாட்டு போதையெல்லாம் இறங்கி கரைக்கு வந்து பார்த்தா திமு திமுன்னு தண்ணி உயருது. விட்டுருந்தா அப்படியே ஆத்துல சுசீந்திரம் வழியா மணக்குடி காயல் போயி அரபிக் கடலிலே மீன் புடிச்சிருப்போம். என்ன செய்ய. இப்போ நான் எழுதுகதெல்லாம் நீங்க படிக்கணும்னு எழுதியிருக்கு. 


என்கிட்ட இதுதான் ஒரு கோளாறு. சொல்ல வந்தத உட்டுப் போட்டு சொமந்த கதைய சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆமா, என்னத்த சொன்னேன். ஆங், சினிமா டாக்கீசுக்கு போன கதைக்கு வருவோம். வீட்டு பக்கத்துல பயோனீர் கிருஷ்ணா ன்னு ஒரு டாக்கீசு இருந்துச்சு. அது பொறகு பயோனீர் ராஜ்குமார் அப்படின்னு ஆச்சு. இப்போ அது கம்ப்யூட்டர் கம்பனியாக்கும். சினிமா பாத்துக்கிட்டே கை முறுக்கும் கிழங்கு வத்தலும் திங்கிற சொகம் இருக்கே, சரி அது எதுக்கு, உங்க வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு. ஆனா ஒண்ணு. தியேட்டர்ல முறுக்கு வித்த பையன் மேல கொஞ்சம் பொறாம உண்டு. ஓசில எல்லா சினிமாவும் பாக்கலாமுல்லா!


அப்பல்லாம் ஹிந்தி படமும் நல்ல ஓடும். அதுவும் ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், தர்மேந்திரா படமெல்லாம் பேமஸ். அதுவும் ஹிந்தி பாட்டு கேட்க சூப்பரா இருக்கும். நாங்க அதை திருப்பி பாடுகது இன்னும் சூப்பரா இருக்கும். மாட்டு வண்டியில சினிமா போஸ்டர் ஒட்டி தெருத் தெருவா சுத்தி வந்து பிட் நோட்டீஸ் போடுவான். 



ஒரு தடவை ஒரு ஹிந்தி சினிமா வந்தது. அதுக்கு ஒரு விளம்பர போஸ்டர். அதுல ஒரு யானை. அதுக்கும் மேல ஹீரோயின். அந்த யானையின் தும்பிக்கையை பிடிச்சிக்கிட்டு ஹீரோ நிப்பாரு. ஆ….ன்னு பாத்துகிட்டு நின்னேன். அப்போ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம், அதான் என் மாமன் மகன் பக்கத்துல வந்து, அந்த ‘ஆ’ வை ‘அ’ஆக்கி விட்டு சொன்னான், மக்கா, இதுதான் தர்மேந்திரா பாத்துக்கோ. அது வந்து ஏமா மாலினி அப்படின்னான். போஸ்டரை ஆ ன்னு பாத்துக்கிட்டுருந்த நான் இப்போ அவன ஆன்னு பாத்தேன். என் மாமா மகனுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. போஸ்டரில சினிமா பேரு ஹாத்தி மேரே சாத்தி ன்னு தமிழில் எழுதி இருந்துது. அப்படின்னா என்னன்னு தெரியில. அப்போ எனக்கு ஹிந்தி தெரியாதுல்லா. அவனுக்கும் ஹிந்தி தெரியாதுன்னு எனக்கும் தெரியும். ஆனாலும் அவனுக்கு எல்லாம் தெரியும்ன்னு நினச்சுக்கிட்டே ஹாத்தி மேரே சாத்தி அப்படின்னா என்னான்னு கேட்டேன். அவன் போஸ்டர ஒரு தடவை பாத்தான். அப்புறம் என்ன பாத்து சொன்னான், ஹாத்தி மேரே சாத்தி அப்படின்னா யானை மேல பொண்ணு ன்னு அர்த்தம்ன்னு சொல்லி நிப்பாட்டி இருக்கலாம். ஆனா வார்த்தை வார்த்தையா எக்ஸ்ப்ளைன் பண்ணினான், ஹாத்தின்னா யானை. மேரே அப்படின்னா மேலே. சாத்தி ன்னா பொண்ணு. ஆஹா! தெய்வமே அப்படின்னு அவனப் பிரமிப்பா பாத்துக் கிட்டே அவன் கூட அந்த சினிமா பாத்து வந்தேன். அப்போ அவனுக்கு தெரியாது, நான் வயசுக்கு வந்து டெல்லிக்கு வேலைக்கு போவேன் என்று.


டெல்லி வந்த பிறகுதான் அவனது வண்டவாளம் எல்லாம் தெரிந்தது. அந்த ஹீரோ ராஜேஷ் கன்னாவாம். அந்த ஹீரோயின் தனுஜாவாம். அதக் கூட மன்னிச்சிரலாம். ஹாத்தி மேரே சாத்தி அப்படின்னா ‘யானை எனது நண்பன்’ அதுதான் அர்த்தமாம். ஆனா போஸ்டரைப் பார்த்தே ‘யானை மேலே பொண்ணு’ அப்படின்னு தெளிவா சொன்ன என் மாமா மகனை நான் மறக்க முடியுமா? 


வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….


நட்புடன் 


பத்மநாபன்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 ஃபிப்ரவரி 2026


13 கருத்துகள்:

  1. பதிவை ரசித்தேன். ஆமாம், தலைப்பில் அது என்ன பொண்ணுக்கு பதிலா புண்ணு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஏரியா கூர்கா பொண்ணை புண்ணு புண்ணு ன்னு சொல்லுவாரு. அதோட பாதிப்புதான். வேற ஒன்னுமில்ல!

      நீக்கு
    2. ஐயா.. தெய்வம் போல வந்து என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்திருக்கும் நீவிர் யார் ஐயா?

      நீக்கு
    3. ஐயா! நாந்தான்யா பத்மநாபன். பெயரைப் போட்டேன். ஆனா பெயரில்லா ன்னு சொல்லிப்புட்டுது.

      நீக்கு
  2. சல் சல் சல் மேரே சாத்தி ஓ மேரே ஹாத்தி பாட்டுல்லாம் அப்போ எங்களுக்கும் ரொம்ப பேவரைட். தில்பரு ஜானியை வாய்க்கு வந்தபடி பாடுவோம்!

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான நினைவுகள். பதிவை மிகவும் ரசித்தேன். பால் ஆதார் பால்யத்துக்கே அழைத்துச் சென்று விட்டது..:)

    பதிலளிநீக்கு
  4. ஆனை மாதிரி அ ண்ணாச்சியின் come back !

    அது சரி யானை மேல பெண்ணா ? புண்ணா?

    அண்ணாச்சி, இப்ப பழையாறு எப்படி ஆகிப் போச்சு தெரியும்லா...?

    தியேட்டர்கள் எல்லாம் என் பழைய நினைவுகளைக் கிளப்பின. ஆனா ரொம்பப் படங்கள் பார்த்தது இல்லை.

    இப்ப பயோனீர் வசந்தம் பாலஸ் பிவிபி மல்டிப்ளெக்ஸாமே....

    நாரோயில் நினைவுகளை கிளப்பிவிட்டுட்டீங்க அண்ணாச்சி. ஊர் ஏக்கம் வந்திருச்சு.

    //சினிமா பாத்துக்கிட்டே கை முறுக்கும் கிழங்கு வத்தலும் திங்கிற சொகம் இருக்கே, சரி அது எதுக்கு, உங்க வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு.//

    ஹாஹாஹா மெய்யாலுமே வந்திச்சு பாத்துக்கோங்க!

    பதிவை ரசித்தேன் அண்ணாச்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.
    பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவுவிலும் யானை வாசகத்திலும் யானை.

    நினைவுகள் அருமை.

    //விட்டுருந்தா அப்படியே ஆத்துல சுசீந்திரம் வழியா மணக்குடி காயல் போயி அரபிக் கடலிலே மீன் புடிச்சிருப்போம். என்ன செய்ய. இப்போ நான் எழுதுகதெல்லாம் நீங்க படிக்கணும்னு எழுதியிருக்கு. //

    ஆமாம் . அடிக்கடி எழுதுங்க. மாமன் மகனை மறக்க முடியாது அருமையான நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. வாசகமும் அருமை.

    சகோதரர் பத்மநாப அண்ணாச்சியின் எழுத்துக்கள் சிரிப்போடு, சிந்திக்கவும் தூண்டுபவை. எங்கள் வீட்டருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் மட்டம் உயர்வது எனக்கும் வந்த அனுபவங்களில் ஒன்று. கல்லிடை தாம்பிரவருணி ஆற்றிலும், வாய்க்காலிலும் இந்த செயல் நிகழ்வதுண்டு. உங்கள் மாமன் மகனுடன் சைக்கிள் ஓட்டியது, அங்குள்ள திரையரங்கதத்தில், சினிமா பார்த்ததை, நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன். ஹிந்தி வாசகமும், அந்தப் படம் பற்றிய விபரங்களும் சிரிப்பைத் தந்தது. உங்களின் அற்புதமான அனுபவ எழுத்தை இங்கு நிறைய தர வேண்டும் நீங்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. முதலில் ஐந்து நாட்கள் திருப்புல்லாணி, இராமேஸ்வரம், திருச்சி சென்றிருந்ததால் பல பதிவுகள் பக்கம் செல்ல முடியவில்லை. பிறகு நான்கு நாட்கள் கும்பகோணம் பயணம். அதனால் இந்தப் பதிவுகளைப் பார்க்கவே இல்லை.

    பத்மனாபன் அண்ணாச்சி, அடி மேல் அடி வைத்தால் அம்மி நகரும் என்பதுபோல ஒரு பதிவு கொடுத்திருக்கிறாரே. படித்துவிட்டு எழுதறேன்.

    பதிலளிநீக்கு
  8. அரை சைக்கிள், டபுள்ஸ் போறது.... இதெல்லாம் கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டது.

    கக்கா/புக்கா மாத்திரம்தான் நாரோயில் பாசை இல்லை

    ஆத்துல தண்ணி மட்டம் ஏறுவது, அடி வாங்கறதெல்லாம், தாமிரவருணில நடுல விளையாடி, வெள்ளம் வந்துகொண்டிருப்பது தெரியாமல் பெரியப்பா எங்களை கரைக்குக் கூப்பிட்டு வெளுத்ததை நினைவுபடுத்தியது.

    ஆரம்ப கால ஹிந்தி டீச்சர் பெரிய ஐயப்பனா? சூப்பர். நல்லா எழுதியிருக்கீங்க.

    தப்பித் தவறி இப்போ நாரோயிலுக்குப் போய் பழைய இடங்களைத் தேடப் போயிடாதீங்க. ஏண்டா போனோமுனு இருந்துரும்.

    பதிலளிநீக்கு
  9. பத்மனாபன் அண்ணாச்சி, அப்போ அந்த ஹிந்தி பாடலை எப்படிப் பாடுவார்னு எழுத மறந்துட்டாரோ இல்லை வெட்கம் புடிங்கித் தின்னுச்சா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....