திங்கள், 9 பிப்ரவரி, 2026

சித்தர் பூமி சதுரகிரி - கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



வாசித்த நூல்...

வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு பயண நூல் - கே. ஸ்ரீநிவாச ராகவன் என்பவர் எழுதிய சித்தர் பூமி சதுரகிரி என்கிற பயண நூல்.   அட்டையிலேயே ‘ஆன்மிக (மீக?) சாகசப் பயணம் ஒன்றைச் செய்ய நீங்கள் தயாரா?’ என்று கேட்கும்போதே நாம் சென்று வந்திருக்கிறோமே, மீண்டும் இந்த நூல் வழி அங்கே சென்று வருவோமோ என்கிற எண்ணத்துடன் நூலை வாசிக்க ஆரம்பித்தேன். கிழக்கு பதிப்பக வெளியீடு.  அமேசான் தளத்தில் அச்சுப் புத்தகமாகவும் (ரூபாய் 159/-) மின்புத்தகமாகவும் கிடைக்கிறது (Kindle Unlimited Subscription இருந்தால் அதன் வழியாகவும் படிக்கலாம்!). 



எனது வெளியீடு...


சதுரகிரி குறித்த சில பதிவுகள் எனது பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருப்பது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பதிவுகள் சதுரகிரிக்கு ஒரு பயணம் என்கிற தலைப்பில் ஒரு மின்னூலாகவும் வெளியிட்டு இருக்கிறேன். சரி இந்த நூல் வாசிப்பனுபவத்திற்கு வருவோம். 


பயணம் குறித்து ஒரு சத்குரு சொன்னதாக வரும் வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது - ‘பிரயாணம், யாத்திரைன்னு சொன்னா நிறைய பேர் பயப்படறாங்க. ஆனா மனசை விசாலப்படுத்தவும், புத்தியைத் தெளிவா மாத்தவும் பிரயாணம் தான் உதவும்னு தெரிஞ்சோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்யறான்.  ஜனனம்னு ஆரம்பிச்சு மரணம் வரைக்கும் பயணம். அதோட முடியறதா? இல்லை. பாவபுண்ணியத்துக்கு ஏத்தமாதிரி அடுத்த சுற்றும் வருது ஆத்மாவுக்கு. ஏன்?’ 


‘உல்லாசப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மீக யாத்திரையாக ஆனாலும் சரி. அவை வழங்கும் அனுபவங்கள் ஸ்வாரஸ்யமானவை’  போன்ற வரிகள் என்னைப் பொறுத்தவரை அனுபவித்து உணர்ந்தவை என்பதால் இன்னும் அதிகம் நூலை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தினை வலுப்படுத்தியது.  நூலை வாசித்துப் போகும் போது ஆங்காங்கே படித்த வரிகளையும் இங்கே சொல்லிப் போகிறேன் - அது உங்களுக்கும் அந்த நூலை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கினால் அது இந்தப் பதிவின் வெற்றி என்று கருதலாம் - நூல் மீது உங்களுக்கும் ஆர்வம் உண்டாகியிருக்கிறது என்றும் கருதலாம். 


‘அதென்ன பேரு, சதுரகிரின்னு?’


‘இந்திரகிரி, ஏமகிரி, வருணகிரி, குபேரகிரின்னு நாலு மலைகள். அதுக்கு நடுவுல, சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரின்னு நாலு மலைகள். ‘சதுர்’ என்கிற வார்த்தைக்கு ‘நான்கு’ன்னு பொருள்.  அதுனால, இந்த இடத்துக்கு சதுரகிரின்னு பேர்.’ 


‘இப்படி மலை ஏறி இறங்கினா, உடம்புல இருக்கிற துர்நீர் எல்லாம் வியர்வையாகி வடியும், உப்பாவது, சர்க்கரையாவது? எதுவும் கிட்டத்துல வராது. கால் வலிக்க மலை ஏறினா, டாக்டர்கிட்ட காசு கொடுக்க வேணாம்.’ 


‘அருவியின் சலசலப்பு ஒரு புறம்; பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் இன்னொருபுறம்; காற்றில் அசையும் மரங்களின் ஒலி வேறொரு புறம் என்று அற்புதமாக இருந்தது நடைப்பயணம்’. 


‘இரண்டாவது ஸ்டாப்புக்கு பஸ் ஏறிப் பயணித்தவர்கள், காரிலும், பைக்கிலும் சுற்றி நடந்து பழக்கமில்லாதவர்கள், இந்த மலைப்பயணத்தில் துவண்டுபோவார்கள். ஒரு வேளை ரசித்துவிட்டால், அதன்பிறகு நடப்பதன் சுகத்தை இழக்கவே மாட்டார்கள்.’ 


‘ஒவ்வொரு அபிஷேகம் நடந்ததும் திலகமிட்டு, பூ சாத்தி, தீபாராதனை செய்தபின், ஜலத்தால் அபிஷேகம். அபிஷேகப் பாங்கும், ஆரத்தி காட்டும் விதமும், சுந்தரமகாலிங்கர் எதிரே உயிர்ப்போடு அமர்ந்திருக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. கண்கள், தன்னை மீறிக் கலங்குகின்றன.’


‘நான் பட்டுக்கோட்டையில இருந்து வரேன். மனசுல எந்தச் சுமையும் இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அதனை சுந்தரமகாலிங்கம் நடத்திக்கிட்டு வரார். என் அனுபவத்துல சொல்றேன். பணம் இல்லாதது கஷ்டம் தான். ஆனா, பணம் இருக்கறதால வர கஷ்டத்தை விட ரொம்பக் கம்மி!’


‘சுந்தரலிங்கம், மகரிஷி அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டவர். லிங்கத்தின் வகைகளில் சுயம்பு, கைவிகம், ஆர்ஷம், மானுஷம் என்றெல்லாம் பல வகைகள் உண்டு. முதலில் தரிசித்த சுந்தர மகாலிங்கர் சுயம்புமூர்த்தி. இந்தச் சுந்தரலிங்கர் ஆர்ஷம். ரிஷிகள் ஸ்தாபித்து பூஜித்தவை ஆர்ஷம்’.


‘ஒரே கவலையா இருக்கு, ஒரே கவலையா இருக்குன்னு சொல்றாங்க. அதென்ன ஒரே கவலை? பசியே இல்லைன்னு ஒரு கவலை; சாப்பாட்டுக்கு வழியில்லைன்னு இன்னொரு கவலை. ரெண்டுமே வெவ்வேறு. கவலைக்குக் காரணம் மனுஷன்; நிம்மதிக்குக் காரணம் கடவுள்’.


‘பளிங்குபோல் பாய்கிறது ஓடை. வெட்டவெளிதான்! ஆனாலும் தூசியோ, அழுக்கோ இல்லாமல் தெளிந்திருக்கிறது நீர். மனித புத்தியும் இப்படித்தான். ஓய்வில்லாமல் இயங்கும்போது பளிச்சென்று இருக்கும்!” என்று சொல்வது போல இருந்தது. 


‘கரணம் தப்பினால் மரணம் அல்ல; கால் இடறினால் மரணம்! பாறை சரிந்தால் மரணம்! பயம் எழுந்தால் மரணம்! புத்தி அடக்கியது. அஞ்சுபவன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; வாழவேண்டும் என்பவன் வீட்டில் முடங்கக்கூடாது என்றது மனம். சரிவுகள் அச்சமூட்டவில்லை. ஆனால், நடந்த பாதை அச்சமூட்டுவதாகவே இருந்தது. கிட்டத்தட்ட மலையின் விளிம்பில் தான் பயணித்தோம்’.


‘மனிதர்கள் பிரவேசிக்காதவரை காடு அமைதியாகத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் மனிதன் நுழைகிறானோ, அங்கெல்லாம் பிரச்னை உண்டாகிறது!’


‘செருப்பில்லாமல் சரளைக் கற்களும் பாறைகளுமாக இருந்த மலைப்பாதையில் இறங்குவது கடினமாக இருந்தது.  தவிர காட்டுப் பயணத்தின் போது முட்களின் முத்தத்தால், கால்கள் சோர்ந்து போயிருந்தன. அதனால், ஆங்காங்கே அமர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.’


‘ஆன்மிக வழியில், பக்தி நெறியில் மிகத் தேவையான விஷயம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை; பரம விசுவாசம்! அதுதான், இறையருளை ஈர்க்கும் வலிமை பெற்றது.’  


வாசித்த நூலிலிருந்து சில வரிகளை இங்கே தந்ததின் மூலம் நீங்களும் இந்தப் பயணத்தில் ஈடுபட்ட உணர்வு உங்களுக்கும் வரலாம்.  இந்த நூலை வாசிக்கும்போது எனது சதுரகிரி பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் நினைவில் வந்து போயின. மீண்டும் அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணமும் உண்டானது. மீண்டும் எப்போது இங்கே பயணம் வாய்க்கும் என்பதை அவனே அறிவான்.   சதுரகிரி மகாலிங்கத்திற்கு அரோகரா…  மீண்டும் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 ஃபிப்ரவரி 2026


2 கருத்துகள்:

  1. இரண்டு வருடங்கள் சதுரகிரி வழியாக அதைத்தாண்டி அலுவலகம் சென்று வந்திருக்கிறேன். ஆனால் இங்கு நான் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான புத்தக விமர்சனம். சதுரகிரி செல்லும் எண்ணம் உண்டு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....