சனி, 21 பிப்ரவரி, 2026

காஃபி வித் கிட்டு - 227 - மறதி - பேயும் நாயும் - விக்டோரியா நினைவிடம் - கிடங்கு - மீசப்புலிமலை - துள்ளல் - Smoothie


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அலுவலகம் இனி இல்லை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரசித்த படம்  : மறதி



மறதி நம்மில் பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பல விஷயங்களை மறந்து போகிறோம்.  மறக்க வேண்டிய சில விஷயங்கள் மறக்காமல் இருப்பதும், மறக்கக்கூடாத விஷயங்கள் - குறிப்பாக நம் இணையரின் பிறந்த நாள் மறந்து போவதும் பல ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனை - என்னையும் சேர்த்து!  அப்படி அனுபவப்பட்ட ஒருவர் இந்தப் படத்தினை தந்து அதன் கீழே இப்படி எழுதி இருக்கிறார்!  


கடவுளே எப்படியாவது என்னை, என்னவளின் பிறந்தநாளை மறக்காதிருக்கும் வரத்தை அளிப்பாயாக.. இல்லையென்றால் உன்னை விட #அர்ச்சனை அதிகம் வாங்கும் ஆளாக நான் மாறிடக் கூடும் என்பதை பயபக்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..😜😜😜🙏🙏🙏🙏🙏

 

 

******



இந்த வாரத்தின் ஆட்டோ வாசகம் :  பேயும் நாயும்



சென்ற வாரத்தில் அலுவலகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  திருவரங்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பின்னால் எழுதி இருந்த வாசகம் கண்களைக் கவர்ந்தது.  பார்த்த உடன் படம் எடுக்க முடியுமா என முயற்சிக்க நினைத்தேன் - ஆனாலும் வண்டி ஓட்டியபடியே படம் எடுப்பது அத்தனை சுலபமில்லை - ஆபத்தும் உண்டாகும் என்பதால் எடுக்கவில்லை.  மனதில் அந்த வாசகங்களை உள் வாங்கிக் கொண்டேன். வீடு வரும் வரை அந்த வாசகம் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது…  வாகனத்தின் ஓட்டுனர்/உரிமையாளருக்கு என்ன சிக்கலோ?  ஏதோ ஒரு சொந்தத்தால் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலும்!  ஏன் என்று தானே கேட்கிறீர்கள் - எழுதியிருந்த வாசகம் அப்படி.  நீங்களும் படித்துப் பாருங்களேன்!


எமனே துணை!


சுடுகாட்டுப் பேய நம்பு!

சொந்தக்கார நாய நம்பாதே!


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : விக்டோரியா நினைவிடம்


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - விக்டோரியா நினைவிடம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. ஏழு சகோதரிகள் மாநிலங்கள் பயணம் குறித்த பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள்…. 



கொல்கத்தா நகர் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணி விக்டோரியாவின் நினைவிடம்.  நம்மை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த ஒருவரின் நினைவிடமாக இருந்தாலும், இந்த கட்டிடத்தினுள் பல அரிய பொருட்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள்.  கொல்கத்தா சென்றால் பார்க்க வேண்டிய இடங்களும் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பது இந்த விக்டோரியா மெமோரியல். 


கட்டிடம் முழுவதுமே மார்பிள் கற்களால் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்த விக்டோரியா மேமோரியல் ஹால், 1901-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து போன ராணி விக்டோரியாவின் நினைவாக அமைக்க முடிவு செய்தவர் அப்போதைய வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன். 6 ஃபிப்ரவரி 1901 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டுமல்லாது இந்தியாவின் பழம்பெருமையையும் பறைசாற்றும் அருங்காட்சியகமாகவும் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம்…. இதில் ஒரு சூட்சுமமும், திட்டமும் உண்டு! அது….


இந்த நினைவிடத்தினைக் கட்ட தேவையான பணத்தினைத் திரட்ட Indian Memorial Fund என்ற ஒன்றை ஏற்படுத்தி மக்களிடமிருந்தே வசூல் வேட்டை நடந்தது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய்!  அதாவது 1901-ல் – இன்றைக்கு கிட்டத்தட்ட 116 வருடங்களுக்கு முன்னர்! அதன் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!  இங்கிலாந்து ராணிக்கு நினைவிடம் அமைக்க இந்திய மக்களிடமிருந்தே பண வசூல்! அப்போதைய வேல்ஸ் இளவரசரான ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் 4 ஜனவரி 1906 அன்று அடிக்கல் நாட்ட, விக்டோரியா மெமோரியல் ஹால் கட்டி முடிக்க கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆனது!  1921-ஆம் ஆண்டில் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது….


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை  : கிடங்கு


இணையத்தில் உலவும் சமயங்களில் சொல்வனம் தளத்தில் படிப்பது போலவே சிறுகதைகள் தளத்திலும் எட்டிப்பார்த்து சில கதைகளை படிப்பதுண்டு.  அப்படி படித்த ஒரு கதை தான் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்று - 1995-ஆம் ஆண்டு எழுதியதாகத் தெரிகிறது.  ஒரு குடிகாரனின் புலம்பல்களை வைத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார்.  குடிகாரனின் பார்வையில் அவன் கதையைச் சொல்லிச் சென்று இருக்கிறார். கதையிலிருந்து சில வரிகள் மட்டும் இங்கே… முழுக் கதையையும் சிறுகதைகள் தளத்தில் படிக்கலாம்…


என்னடா சின்னப்பசங்களா, சுத்தி சுத்தி என்னை வேடிக்கை பாக்கீக. கூடிகூடி நின்னு பாக்கீக. எதுக்குடா? ஏண்டா? குடிச்சிட்டு ரோட்லே ஆடுறேன்னு பாக்கிகளா?


ஆமா, குடிச்சிருக்கேண்டா. மூக்குமுட்ட குடிச்சிருக்கேண்டா.


நா பிராந்தி குடிக்கேன். குடிக்கக் கிடைக்குது. தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் இருக்கு. கலர் கலராய் லைட்டை போட்டுக்கிட்டு, கவர்ச்சியா கூப்புடுறாங்க.


உக்காந்து குடிக்க இடம் குடுக்காங்க. மனுசனை மதிச்சு மரியாதை பண்றாங்க. மனசுகிடந்து குளிர்ந்து போகுது. எப்படி குடிக்காம இருக்க முடியும்?


******


பயணம் செய்ய ஆசை :  மீசப்புலிமலை



கடந்த ஜனவரி/ஃபிப்ரவரி மாதங்களில் உத்திராகண்ட் மாநிலத்தில் ட்ரெக்கிங் சென்று வந்ததற்குப் பிறகு பயணங்கள் ஏதும் செய்யவே இல்லை.  மனதின் ஒரு ஓரத்தில் பயண நினைவுகள் வந்தவண்ணமே இருக்கின்றன.  நண்பர் ப்ரேம் bபிஷ்ட் அதற்குப் பிறகு இரண்டு/மூன்று பயணங்கள் (மலையேற்றப் பயணங்கள் தான்) செய்து வந்திருக்கிறார்.  எனக்கும் இங்கே பயணிக்க ஆசை தான். ஆனால் சூழல்கள் இன்னும் சரியாக இல்லை.  முகநூல் வழி இங்கே தமிழகத்தில் இருக்கும் மலையேற்றக் குழுவினர் அனுப்பும் காணொளிகள் பார்க்கும் போது சென்று வரலாமே என்று தோன்றிய பயணம் மீசப்புலிமலை பயணம்.  கேரளாவில் இருக்கும் இந்த மீசப்புலிமல சென்று வரும் பயணம் குறித்து பார்க்கும் காணொளிகள் அனைத்துமே கவரும் வண்ணம் இருக்கின்றது.  மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனுஷ் மாயன் எனும் நபரின் வாட்ஸப் குழுவில் இணைத்துக் கொண்டேன் என்றாலும் இதுவரை பயணிக்கவில்லை.  சென்று வர ஆசை உண்டு.  பார்க்கலாம் எப்போது நேரமும் வாய்ப்பும் அமைகிறது என! மீசப்புலிமல என்று யூட்யூபில் தேடினால் நிறைய காணொளிகள் இருக்கின்றன. பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் இசை - துள்ளல் :


சமீபத்தில் கேட்டு ரசித்த இசை ஒன்று - எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாது? அவர் பேசும் மொழி என்ன என்பது தெரியாது? அவர் இசைக்கும் கருவி என்ன, அவர் இசைக்கும் பாடல் என்ன என்று எதுவுமே தெரியாது! ஆனாலும் என்னால் அந்தத் துள்ளல் இசையைக் கேட்டு ரசிக்க முடிந்தது.  இது வரை நான்கு ஐந்து முறையேனும் கேட்டுவிட்டேன் - அப்படி ஒரு துள்ளல் அவரது இந்தச் சிறு காணொளி இசையில். சுட்டி கீழே...  சுமார் மூன்றரை நிமிடங்கள் மட்டுமே ஒலிக்கும் இசை - நம்மை மகிழச் செய்யும் விதமாக இருக்கிறது - எத்தனை வேறுபாடுகளைக் காண்பிக்கிறார் தனது இசைக்கருவி மூலம்.  கேட்டு ரசிக்கலாமே! 


துள்ளல்


******


இந்த வாரத்தின் Food Trail - Tropical Wave:



தலைநகர் தில்லியிலிருந்த வரை சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் புதிய ஒரு கடைக்குச் சென்று உணவு வகைகளை ருசிப்பதுண்டு.  ஆனால் திருச்சி வந்த பிறகு அப்படிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  வீட்டு உணவு கிடைக்கும்போது எதற்காக வெளியே சென்று உணவை தேடித்தேடி புதிதாக சுவைக்க வேண்டும்.  ஆனாலும் அவ்வப்போது திருச்சியில் இருக்கும் கடைகள் பற்றி தெரியும்போது, அங்கே சென்று சுவைக்கலாம் என்றால் அந்தக் கடைகள் பெரும்பாலும் அசைவ உணவு இருப்பதாகவே இருக்கிறது.  அதனால் சைவம் மட்டும் கிடைக்கும் இடம் பற்றி எப்போதாவது தெரியும்போதும் கூட பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை.  சமீபத்தில் Fruit House என்கிற கடை பற்றி தெரியவந்ததும் போகலாமே என்று தோன்றியது.  எங்கள் அலுவலகத்தின் அருகே இருக்கிறது என்பதும் கொஞ்சம் வசதியாகப் போனது.  



சென்ற வாரம் மகளுடன் அந்தக் கடைக்குச் சென்று Tropical Wave என்கிற பெயர் கொண்ட Smoothie சுவைத்தோம்.  ஒரு கிளாஸ் விலை 160 ரூபாய்… நாங்கள் கடையில் சுவைத்ததோடு, இல்லத்தரசிக்கு Pack செய்து வாங்கி வந்தோம்.  நன்றாகவே இருந்தது.  Pine Apple, Banana, Coconut Cream, Blue Spirulina Milk and Honey ஆகிய ஐந்தும் சேர்த்து செய்யப்படும் Smoothie இது என்று போட்டிருந்தார்கள் மெனுவில்! தில்லை நகர் பகுதியில் இப்படியான கடைகள் நிறையவே இருக்கிறது.  எப்போதாவது அந்தப் பக்கம் சென்றால் சுவைத்து வரலாம்!  இன்னும் வேறு சில கடைகளும் உண்டு - அந்தப் பக்கம் சென்று சுவைத்தால் அவை குறித்து இங்கே எழுதுகிறேன்.  இப்போதைக்கு, இந்த வாரத்திற்கு இந்த Tropical Wave Smoothie மட்டும் உங்களுக்கும்!

 

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்


24 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    விக்டோரியா நினைவில்லம் சென்றிருக்கிறேன். இந்திய பணக்கார்ர்கள் பயந்துகொண்டு கொடுத்த பணத்தில் மஞ்சள் குளித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இந்திய பணக்காரர்கள் மட்டுமல்ல ஏழைகளிடமும் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. திருவரங்கத்தில் அமுது தவிர வேறு நல்ல ஹோட்டல், திருச்சினாலும் ஓகே, இருந்தால் எழுதுங்கள். நல்ல உணவகத்துக்கு அங்கு பஞ்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைவத்திற்கு பெரிதாக உணவகங்கள் இங்கே இல்லை நெல்லைத் தமிழன். எங்காவது சென்றால் நிச்சயம் எழுதுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வாசகம் நன்று.  முதல் படம் அழகு.  வாசகம் சிரிக்க வைத்தது!  ஆட்டோ வாசகத்துக்கான படம் அமானுஷ்யம்.  இது மாதிரி வாசகங்கள் நானும் பார்த்திருக்கிறேன்!  நம் இரத்தத்தை உறிஞ்சி கட்டப்பட்ட விட்ட்டோரியா ஹாலை சென்று மறுபடி பார்த்து வந்தேன்.  சிறுகதை அப்புறம் படிக்கணும்.  மீசப்புலிமலை - பெயரே வித்யாசமாக இருக்கிறது.  துள்ளலுக்கான காணொளியைக் காணோம்.  சுட்டி மட்டும் இருக்கிறது.  வெயிலும் வெக்கையும் இப்பவே கொளுத்தினாலும் நல்ல வெய்யில் காலம் வந்து கொண்டிருக்கிறது.  அப்போது இது மாதிரி பழச்சாறுகள் அதிகம் தேவைப்படும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை. மறதி படத்தையும் வரிகளியயும் ரசித்தேன்.
    ஆட்டோ வாசகம் அவர் உறவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் போலும்.
    கிடங்கு கதை படிக்க வேண்டும்.

    கொல்கத்தாவில் விக்டோரியா நினைவிடம் போய் இருக்கிறோம்.
    துள்ளல் இசை கேட்டேன் நம் குன்னக்குடி அவர்கள் இப்படி துள்ளலாக வாசிப்பார் பிடில்.

    மீசப்புலிமலை மிக அழகாய் இருக்கிறது இயற்கை அழகு கொள்ளை கொள்கிறது.

    Tropical Wave Smoothie நன்றாக இருக்கிறது பார்க்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பதிவில் மறதி வாசகமும், ஆட்டோவில் எழுதிய வாசகமும் வாய் விட்டு சிரிக்க வைத்தன.

    மலையேற்ற பயணத்திற்கு உங்களின் விருப்பப்படி செல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். அதனால், எங்களுக்கும் ஒரு இயற்கை சூழ்ந்த ஒரு பயண கட்டுரை படிக்கக் கிடைக்கும்.

    குளிர் பானம் பார்க்கவே நன்றாக உள்ளது.
    துள்ளல் இசையையும் ரசித்தேன்.கதையை அதன் சுட்டியில் சென்று படிக்கிறேன். பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் மிக மிக அருமையான வாசகம். நானும் முன்பெல்லாம் என் self worth க்கு மதிப்பு கொடுக்காமல் இருந்தேன். இப்போது இதை பின்பற்றத் தொடங்கியிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. Self Worth - நிச்சயம் மதிப்பு தர வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. மறதி - படம் மிகவும் கவர்ந்தது. அதற்குக் கீழான வரிகளை வாசித்துச் சிரித்துவிட்டேன். எனக்குப் பெரும்பாலும் யாருடைய நாட்களும் ஏன் என் நாட்கள் உட்பட நினைவில் இருப்பதில்லை. அதாவது தேதி எல்லாம் நினைவிருக்கும். ஆனால் அது வரும் தினம் நினைவிருக்காது!!!!

    மறதி குறித்து சொல்ல இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி - நம்மில் பலருக்கும் இப்படித்தான்.

      மறதி குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. ஆட்டோக்காரருக்கு ரொம்பவே நொந்து போகும் அனுபவம் போல! அந்த அமானுஷ்ய படம் நல்லாருக்கு. பேயைக் கூட நம்பிடலாம்....ஆனா, உறவுகளை நம்பமுடியாதுன்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    விக்டோரியா மஹால் படத்தைப் பார்த்ததும் நினைவு வந்துவிட்டது. நீங்கள் வடகிழக்கு மாநிலங்கள் பயணம் செய்த போது எழுதியதோ என்று நினைத்துக் கொண்டே சுட்டிக்குச் சென்றேன். அதன் தொடர்சி!

    நம்மிடமே வசூலித்து....எப்படி எல்லாம் ஆண்டிருக்கிறார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் - ஆட்டோ ஓட்டுனர் ரொம்பவே நொந்து போயிருக்க வேண்டும் - அதனால் தான் இப்படி எழுதியிருக்க வேண்டும்.

      விக்டோரியா மஹல் - ஆம் வடகிழக்கு மாநிலங்கள் பயணத்தொடரில் எழுதியது தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. மீசைப்புலிமலை மூணாறு அருகே இருக்கிறது. மூணாறு போயிருந்த போது அங்கிருந்து எட்டிப் பார்த்ததோடு சரி. மலைப்பகுதிக்குச் செல்லவில்லை. அப்போது மழை நேரமாக இருந்ததால் யோசித்துக் கைவிட்ட இடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீசப்புலிமல - ஆம்... மூணாறு அருகே தான் இருக்கிறது கீதா ஜி. செல்ல ஆசையுண்டு. பார்க்கலாம் - வாய்ப்பு அமைய வேண்டுமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. துள்ளல் இசை!! வித்தியாசமாக இருக்கிறது. யாழ்/வயலின் போன்று இசை எழுப்பும் கருவி போல! எனக்கு நம் மறைந்த குன்னக்குடி அவர்கள் நினைவுக்கு வந்தார். அதுவும் அடிப்பகுதியில் அவர் இழைக்கும் போது வயலின் இசை .... குன்னக்குடி போலவே! அந்த உணர்வு bபாவங்கள் கூட!!!!!! மோஹன கல்யாணிய அங்கிங்கு இழுத்து வாசிக்கிறாரோ என்று தோன்றியது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான இசை தான். ஆனால் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்பிக்கை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. Tropical Wave Smoothie//

    சூப்பராக இருக்கிறதே. தேன் தவிர்த்து மற்றவை சேர்த்து செய்ய முடியுமான்னு பார்க்கிறேன். //Blue Spirulina Milk - blue green algae மிகவும் நல்லது என்று 25 வருடங்களுக்கு முன் அறிந்ததுண்டு. blue green algae டீ என்று அமெரிக்காவில் பெரிய 5 லிட்டர் can கள் விற்கப்படும். ready made தயாரிப்புகள். அப்படியே குடிக்கும்படியாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... சுவை நன்றாகவே இருந்தது ஜி. முயற்சித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. மேலாண்மை பொன்னுசாமி பரிச்சயமான பெயர்.

    //நா அறிஞ்சும் அறியாம செய்யறச் சின்னச் சின்ன தப்புகளுக்கெல்லாம் மன்னிப்பு வாங்கிக் குடுக்குறது இந்தப் போதைதான்…

    ‘அட, விட்டுத்தள்ளு! ஏதோ போதையிலே செஞ்சுட்டான்’ன்னு தண்டனையிலேயிருந்து காப்பாத்தி விட்டுரும்.//

    புலம்பும் மனிதனின் சிறுவயது வாழ்க்கை அதன் பின்னான வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறது என்று தெரிகிறாது

    //வெட்டுப்பட்ட புண்ணுலே திராவகத்தை ஊத்துன மாதிரி… உசுரைப் பிடுங்குற ரணவேதனை. ரணவேதனையே என்னோட வாழ்க்கையாகிப் போச்சு.// என்பதில் தெரிகிறது .

    ஆனால், இப்படிக் குடிக்கிற ஒருவன் இத்தனை கோர்வையாகப் பேசுவானா என்ற கேள்வி கூடவே எழுகிறது. இடையிடையே தத்துவங்கள் வரும் பார்த்திருக்கிறேன். குடிச்சவங்க பேசுவதை. ஆனால் இப்படிக் கோர்வையாக....

    இடையிடையே ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் இப்படிப் பேசினான் என்று கதையாக அந்த நிகழ்வுகளைச் சொல்லியிருந்தால் கதை இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிச்சயமான பெயர் தான். நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். சில சிறுகதைகள் இவருடையது முன்னரும் வாசித்திருக்கிறேன் - வார இதழ்களில்.

      கதை இன்னமும் சிறப்பாக வந்திருக்கலாம் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....