செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

கதம்பம் - மகளின் கைவண்ணம் - காற்றின் அலையில் என் குரல் - ரோஷ்ணி கார்னர் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அவள் முகம் காண பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மகளின் கைவண்ணம் - 29 ஜனவரி 2026 : 


மகள் ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் இப்படியான நேர்மறை எண்ணங்களும், உற்சாகமூட்டும் வார்த்தைகளும் கொண்ட போஸ்ட்டர்களை வரைந்து அலமாரியின் கதவுகளில் மேக்னெட் கொண்டு ஒட்டி வைப்பதை செய்து வருகிறாள்! தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ள இது ஒரு வழி என நினைக்கிறாள்! உங்கள் பார்வைக்கு அவற்றின் நிழற்படம்….






******


காற்றின் அலையில் என் குரல் - 30 ஜனவரி 2026:



இன்றைய இணைய உலகில் எதுவும் சாத்தியமே! ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை! பத்திரிக்கைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நம் பெயர் வருவது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட காலம்! இன்றைய இனிய நாளில் வானொலியில் என் பெயருடன் என் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது!


கையில் துடைப்பத்துடன் வீட்டை பெருக்கிக் கொண்டே ஹலோ FM 106.4 ல் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இன்று Retro friday என்பதால் இன்னும் ஸ்பெஷல்! சிறுவயதிலிருந்தே பாடல்களை கேட்டுக் கொண்டே அல்லது முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்யத் தான் எனக்கு பிடிக்கும்..🙂 படிப்பதும் கூட அப்படித்தான்..🙂


திருச்சியில் சுற்றுலாத்தலங்கள் என்று இரண்டு மூன்று இடங்களைத் தான் சொல்லலாம்! அதனால் மக்கள் உபயோகத்திற்காக காவிரிக் கரையோரமாக இரு பூங்காக்களை அமைக்கப் போவதாக மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்துக்களை…. இந்த நம்பர்ல கூப்பிட்டு சொல்லுங்க என்று RJ சொல்லிக் கொண்டிருந்தார்!


அதைக் கேட்டதும் சட்டென மனதில்  ஒரு எண்ணம்! துடைப்பத்தை கீழே வைத்து விட்டு அலைபேசியை எடுத்து ஆர்.ஜே சொன்ன எண்ணை டயல் செய்தேன்! இரண்டு மூன்று முறை அழைத்தும் விளம்பரங்கள், பாடல்கள் என்று வந்து கொண்டிருந்ததால் இணைப்பு கிடைக்கவில்லை! சரி! இதில் நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு நம்ம வேலையை பார்ப்போம்! இன்று மகளின் கல்லூரிக்கு வேறு சென்று வர வேண்டுமே!! 


சற்று நேரத்தில் என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது! எடுத்தால் வணக்கம்! இது ஹலோ fm! நான் ஆர்.ஜே ஹரி! வணக்கம் சார்! நான் ஸ்ரீரங்கத்திலிருந்து ஆதிலக்ஷ்மி பேசறேன்! உங்க first day showல இருந்து கேட்கறேன்! ‘வணக்கம் தமிழா’ங்கிற இந்த மார்னிங் ஷோ ரொம்ப நல்லா இருக்கு! அதுவும் இன்னிக்கு retro friday வேற! என்றேன்!


மேடம் நீங்க என்னவா இருக்கீங்க?? என்றார்! நான் ஒரு பிளாகர் சார்! 16 வருஷமா சோஷியல் மீடியால தமிழ்ல என் அனுபவங்களை தொடர்ந்து எழுதிட்டு வரேன்! என் கணவரும் பயணக்கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கார்! என்று என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டதும், மார்னிங் ஷோவில் இணைப்புக் கொடுத்தார்!


ஹலோ fm 106.4ல் இன்னிக்கு நம்ம கூட இணைப்பில் பேச வந்திருக்காங்க ஸ்ரீரங்கத்திலிருந்து இளம் எழுத்தாளர் ஆதிலக்ஷ்மி! சொல்லுங்க மேடம்! வணக்கம் சார்! திருச்சியில் பூங்காக்கள் அமைக்கப் போவதாக கேட்க சந்தோஷமா இருக்கு! நான் நார்த்ல 10 வருஷம் இருந்திருக்கேன்! அங்கெல்லாம் நிறைய பார்க் இருக்கும்! எல்லாரும் சாயங்கால நேரத்துல பார்க்கில நேரத்தை செலவிடுவாங்க! குளிர்காலத்துல வெயில் அடிக்கும் நேரத்துல பிக்னிக் மாதிரி அங்கே குழந்தைகளை விளையாட விட்டு, சாப்பிட்டு நேரத்தை இனிமையா செலவழிப்போம்! அந்த மாதிரி இங்கே இருந்தா நல்லாருக்கும்! என்றேன்!


உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் மேடம்! என்றார் ஆர்.ஜே ஹரி! நான் அலைபேசியை கட் செய்யும் போது எனக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த வரிகள் அடுக்களையில் ஒலித்துக் கொண்டிருந்த வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தது…:) உடனேயே என்னவருக்கும் மகளுக்கும் வாட்ஸப்பில் மெசேஜ் செய்து சொன்னேன்! ரெகார்ட் பண்ணினியா என்று என்னவர் கேட்ட போது தான் அந்த எண்ணமே வந்தது…:) அதுவரை தோன்றவே இல்லை..🙂 சரி! பரவாயில்லை! நான் பேசினேன்னு எனக்குத் தெரியுமே…:)


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 31 ஜனவரி 2026:


பெங்காலி ஸ்டைலில் சிவன் பார்வதியை ஓவியமாக தீட்டியிருக்கிறாள்!



******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

3 ஃபிப்ரவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....