அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு. முகநூலில் என்னைத் தொடராதவர்களின் வசதிக்காகவும், எனக்கான சேமிப்பாகவும் இந்த வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நாளைய பாரதம் - 31 ஜனவரி 2026:
நேற்று (30.01.2026) கும்பகோணம் வரை சென்று வரவேண்டியிருந்தது. நீண்ட கால தில்லி நண்பர் ஒருவருக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா. தில்லி நண்பர்களில் பலரும் அங்கே வருவார்கள் என்பதால் அங்கே சென்று நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதோடு நண்பர்கள் அனைவரும் மீண்டும் பார்த்து அளவளாவ ஒரு வாய்ப்பு என்பதால், உடல் நிலை சற்றே சரியில்லை (காய்ச்சல், இருமல் தொல்லை தான்) காலை நேரத்தில் புறப்பட்டுச் சென்று வந்தேன். விழா மிகவும் சிறப்பாக நடந்தது. நண்பர்களுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. அப்படியே கும்பேஸ்வரர் ஆலயத்திற்கும் நண்பர்களுடன் சென்று வந்தேன். மதியத்திற்குப் பிறகு நண்பர்கள் அவரவர் வழியில் திரும்பினோம். நான் செல்லும்போது இரயிலில் சென்றேன் என்றாலும் திரும்பி வரும்போது பேருந்தில் பயணித்தேன்.
பேருந்துப் பயணத்தில் வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து 10 இளைஞர்கள் அவர்களது கல்லூரி பெயர் சொல்லும் பனியன் அணிந்து ஏறினார்கள். 19-20 வயது இளைஞர்கள். அனைவரும் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்தும், நின்றபடியும் கைகளில் மொபைலில் சத்தமாக ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பேருந்தில் இருந்த பலரும் ரீல்ஸ் மோகத்தில் ஆழ்ந்திருக்க, இவர்களும் சேர்ந்து கொண்ட பிறகு பேருந்தில் விதம் விதமான ஒலிகள், குரல்கள். என் பக்கத்தில் இருந்த இளைஞர் வல்லத்திலிருந்து திருச்சி வரும் வரை ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவும் சத்தமாக வைத்து கேட்டார். மொழி கூட அவர்களுக்குப் பிரச்சனையே இல்லை. எந்த மொழி ரீல்ஸ் ஆக இருந்தாலும் பாகுபாடின்றி தள்ளித் தள்ளி பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். இதற்கிடையே அவர்களுக்கிடையேயான சம்பாஷணைகளும் உண்டு.
“அவன் இப்ப ஒண்ணும் பேசமாட்டான் டா… காதல்ல மயங்கியிருக்கான்!”....
“டேய் உன் ஆளு இன்னிக்கு வரலையா… அதான் சோகமா இருக்கியா”
“நான் பத்தாவது கொரொனா பாஸ். பன்னண்டாவது தட்டுத்தடுமாறி பாஸ் பண்ணிட்டேன்…. இவங்க வீட்டுல பாப்பா 400 மார்க்காம்!”
சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் தொடர்ந்து பல குரல்கள் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். எனது அருகாமையில் உட்கார்ந்திருந்த இளைஞரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
“ஒரு நாளைக்கு இப்படி எத்தனை மணி நேரம் ரீல்ஸ் பார்ப்பீங்க? எங்கே போயிட்டு வரீங்க? என்ன படிக்கறீங்க?” என்பது போன்ற பொது கேள்விகள் தான்.
காலேஜ்ல பார்க்க முடியாது - பிடுங்கி வச்சுப்பாங்க… மீதி நேரத்துல கொஞ்சம் பார்ப்போம். **** கல்லூரியில படிக்கிறோம். BA Economics… வாலிபால் விளையாடிட்டு வரோம். கல்லூரிகளுக்கான போட்டி.
மேலும் தொடர்ந்து பேசினேன். “சரி, வாழ்க்கைல உங்க குறிக்கோள் தான் என்ன? தொடர்ந்து மாவட்ட, மாநில, தேசிய அளவில் வாலிபால் போட்டிகள்ல கலந்துக்கறதுக்கு ஏதாவது செய்யறீங்களா? இல்லை படிப்பில ஏதாவது சாதிக்கணும் அப்படின்னு எண்ணம் இருக்கா? வாழ்க்கையில் முன்னேற ஏதாவது செய்யணும்னு எண்ணங்கள் ஏதாவது இருக்கா? ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை கண்ணா! போட்டிகள் நிறைந்த உலகம் இது அப்படின்னு நீங்கள் உணர்ந்திருக்கீங்களா?” என்று வரிசையாகக் கேள்விகள் கேட்டேன். அந்த இளைஞர் கொஞ்சம் யோசித்தார் - ஒருவிதத் திட்டமும் இல்லை. வாலிபால் - சும்மா பொழுதுபோக்கு தான். அதுல காம்பெடிஷன் அதிகம். சும்மா அப்படியே ஜாலியா வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம் என்கிறார். அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றார்கள். நான் அவர்களைப் பார்த்தபடியே சிந்தனைகளை ஓட்டினேன்.
இன்றைய இளைஞர்கள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் பலரும் வெற்றிப் பாதையில் பயணித்தாலும், பெரும்பாலான இளைஞர்களைப் பார்க்கும்போது அவர்களது எதிர்காலம் குறித்த ஒரு பயம் நெஞ்சில் தோன்றுகிறது. நாளைக்கு அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதோடு, இவர்கள் தான் நாளைய பாரதம்… நாளைய நம் தமிழகத்தினை, நமது பாரத தேசத்தினை உலகளவில் பெருமை கொள்ள வைக்கப்போகும் கடமை கொண்டவர்கள் என்கிற எண்ணமும் மனதில் தோன்றியது. பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பிரபலமாக ஆகிவிடமுடியாது என்றாலும், தான் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும் இல்லாமல் குறிக்கோளும் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது. எந்தவித குறிக்கோளும் இல்லாமல் வெட்டியாகச் சுற்றி, கிண்டலும் கேலியுமாக இருந்தால் மட்டுமே போதும் என்று நினைக்கிறார்களே… எல்லோரும் பெரிய ஆளாகிவிட முடியாது என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்க்கும் பல இளைஞர்கள் எந்தவித இலக்கும் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்களுக்கும் திருமணம் நடக்கும்…. குடும்பம் உண்டாகும்…. அவர்களுக்காகவும் சேர்த்து இவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனைகள் என்னைத் தொடர்ந்தபடியே இருந்தன. அந்த இளைஞரும் சிந்தித்து இருக்கலாம் - இப்படி நண்பர்களுடன் சிரித்தபடி சொல்லியிருக்கலாம் - “சரியான பூமர் அங்கிள் டா… பேசி மூட அவுட் பண்ணிட்டார்!” 🙂
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
4 ஃபிப்ரவரி 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....