அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சில வாரங்களாகவே எங்கள் பெரியம்மா அவர்களது குலதேவம் கோவிலுக்குச் சென்று வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது உடல்நிலை மற்றும் வயது காரணமாக எங்கேயும் செல்வதற்கு நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று வருவதைத் தவிர வேறே எங்கும் அழைத்துச் செல்ல முடிவதில்லை. இரண்டு மூன்று முறை குலதெய்வம் கோவில் செல்ல வேண்டும் என்று சொல்லியதால், அந்த ஆலயத்தில் பூஜை செய்த நபரைத் தொடர்பு கொண்டால் அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். பிறகு தான் தெரிந்தது - அவர் தற்போது இந்த ஆலயத்தில் பூஜை செய்வதில்லை என்றும், அவர் வேறு ஊருக்குச் சென்று விட்டார் என்றும். தற்போது பூஜை செய்பவரின் தொடர்பு எண் கிடைத்ததும் அவரிடம் பேசி இந்த ஞாயிற்றுக் கிழமை வருகிறோம் என்று சொல்லி விட்டேன். எதிர்பாரா விதமாக சிவராத்திரியும் அதே தினத்தில்! காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லணை வழி திருநேமம் ஆலயத்தினைச் சென்றடைந்தோம்.
முன்பெல்லாம் சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கேயிருந்து பேருந்தில் கல்லணை வரை சென்று, கல்லணை பகுதியில், காவிரியாற்றின் அழகினை ரசித்தபடி நடந்து சென்று அணைக்கட்டின் வேறொரு பகுதிக்குச் சென்று அருகே இருக்கும் சாலையில் (கண்டியூர்/திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை) காத்திருந்து, தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு நேமம் ஆலயம் சென்று வருவோம். காலை நேரத்தில் செல்லும்போதே வீட்டிலிருந்து உணவு எடுத்துச் சென்று ஆலயத்தில் வழிபாடுகள் முடிந்தபிறகு அங்கே கிடைக்கும் பிரசாதத்தினை உண்டு, நாங்கள் கொண்டு சென்ற உணவை, அங்கேயிருந்து திரும்பி வரும் சமயத்தில் கல்லணை பகுதியில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு வருவோம். இது ஒவ்வொரு முறை பெரியப்பா/பெரியம்மா அவர்கள் தங்கியிருந்த விஜயவாடாவிலிருந்து வரும்போதும் நடக்கும். பணிஓய்விற்குப் பிறகு திருப்பராய்த்துறை வந்து தங்கிவிட்ட சமயத்திலும் இப்படி நிறைய முறை சென்று வந்திருக்கிறோம். இனிமையான நினைவுகள் பலவற்றைத் தந்த பயணங்கள் அவை.
அந்த நினைவுகளை மனதில் அசைபோட்டபடியே இந்த முறை ஆலயத்திற்குச் சென்று சேர்ந்தோம். தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன - விரைவில் கும்பாபிஷேகம் நடக்க (வைகாசி மாதம்) இருக்கிறதாம். அதனால் வண்ணப்பூச்சு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பழமையான ஆலயம் என்பதால் நிறையவே பணிகள் செய்ய வேண்டியிருக்கலாம் - அற(?)நிலையத் துறை சார்பாக கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது என்பதால் திருப்பணிகள் எந்த அளவில் இருக்கும் என்பதைச் சொல்ல இயலாது. ஆனால் ஆலயத்தின் பராமரிப்பு தற்போது சரியாக இல்லை என்பதை அங்கே படிந்திருந்த ஒட்டடையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லா இடங்களிலும் ஒட்டடை! கை பரபரவென்று இருந்தது - ஒரு ஒட்டடைக் குச்சி எடுத்து சுத்தம் செய்யலாம் என! கையில் கிடைத்ததைக் கொண்டு, கொஞ்சம் ஒட்டடைகளை அகற்றினேன். ஒரு முறை இங்கே சென்று உழவாரப் பணி செய்து வரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது - அவர்கள் செய்ய விட்டால்!
நேமம் - திருநேமம் - நெஹமம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கிராமத்தில் ஐராவதேஸ்வரர் குடிகொண்டிருக்கும் சிறு ஆலயம் - இங்கே இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறார்கள் - ஆதி அலங்காரி மற்றும் அலங்காரவல்லி அம்மன் என்ற இரண்டு அம்மன்கள். ஏதோ ஒரு சமயத்தில் ஆதி அலங்காரி அம்மனின் சிலை காணாமல் போக, புதியதாக அலங்காரவல்லி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தார்களாம். பிறகு ஆதி அலங்காரி ஆற்றங்கரையில் தான் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தினை கனவில் வந்து சொல்ல, அந்தச் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆதி அலங்காரியின் முகத்தில் ஒரு புன்னகை தெரியும் விதத்தில் சிற்பி சிலைவடித்திருப்பார். பார்க்கவே கொள்ள அழகாக இருக்கும். முன்பு ஒரு முறை எடுத்த நிழற்படத்தினை இங்கே பகிர்ந்து இருக்கிறேன் - நீங்களும் பார்த்து ரசிக்க.
இங்கே நுழைவாயிலில் இருக்கும் நந்தி ஒரு பள்ளம் (தொட்டி) உள்ளே இருக்கும். மழை வராத நாட்களில் இந்த நந்தியம்பெருமானுக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்வார்கள் என்றும் அப்படி அபிஷேகம் செய்த போதெல்லாம் மழை வரும் என்றும் பெரியம்மா சொல்வார்கள். அருகிலேயே காவிரி நதி இருப்பதால் அங்கிருந்து தான் முன்பெல்லாம் தண்ணீர் குடம் குடமாகக் கொண்டு வருவார்கள். தற்போது அந்தக் கஷ்டமெல்லாம் இல்லை. ஆலயத்தின் உள்ளேயே மோட்டார் போட்டு மேலே இருக்கும் சிண்டெக்ஸ் டேங்க் நிரப்பி வைத்துக் கொண்டு, அதிலிருந்து தண்ணீர் வரும்விதமாக எல்லா இடங்களிலும் பைப் வைத்து விட்டார்கள். அவற்றிலிருந்து தண்ணீர் அண்டாக்களில் பிடித்து வைத்துக் கொண்டு சுலபமாக அபிஷேகம் செய்து விடலாம். இப்படியான வசதிகள் இல்லாத நாட்களை நினைத்துக் கொண்டேன். காவிரி ஆற்றங்கரையிலிருந்து தண்ணீரைக் குடம் குடமாகக் கொண்டு வந்த நாட்களில் கூட ஆலயம் சுத்தமாக இருந்தது என்பதும் நினைவுக்கு வந்தது.
நந்திபெருமான் இருக்கும் பள்ளம் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததைப் பார்த்தபோதும், ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் இருக்கும் இடத்தினைச் சுற்றி இருக்கும் பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பார்த்ததும் மனதில் ஒரு வித வலி. எத்தனை ஆலயங்கள் இப்படி சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன என்பதை நினைத்தபடியே சுற்றி வந்தேன். ஆலயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்த வண்ணமே இருந்தது. அபிஷேக ஆராதனைகள் முடிந்தபிறகு பூஜை செய்பவரிடம் என்னென்ன தேவையாக இருக்கும் என்று கேட்டபோது சில விஷயங்களைச் சொன்னார். ஆலயத்தின் வங்கி எண்ணைத் தாருங்கள், பணம் அனுப்புகிறேன் என்று சொல்ல, “இல்லை எனக்கு ஜி-பே செய்து விடுங்கள் - திருப்பணியில் சேர்த்து விடுகிறேன்” என்றார். இரண்டு மூன்று முறை கேட்டபிறகு இவை இவை தேவை என்று சில பொருட்களைச் சொல்லி இருக்கிறார். விரைவில் அவற்றை வாங்கி இங்கே கொண்டு தர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் - அவன் அருளாலே அவன் தாள் பணிந்து!
சிவராத்திரி நாளில் பெரியம்மாவின் ஆசையை நிறைவேற்றியதுடன் சிவபெருமானையும் ஆராதிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆலயத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு கிராமத்தில் கரும்புச் சாறு குடித்து, அங்கே விற்ற நேந்திரங்காய் வாங்கிக் கொண்டு வந்தேன். நாங்கள் வரப்போகிறோம் என்று சொன்னவுடன், பெரியம்மா ஒரு தார், இரண்டு தார் என நேந்திரங்காய் வாங்கி அவரது கையாலேயே சிப்ஸ் தயாரிப்பார். பெரிய பெரிய சம்படங்களில் இப்படி சிப்ஸ் செய்து வைத்து, நாங்கள் வந்ததும் சாப்பிடத் தருவார். ஊர் திரும்பும்போது அவற்றில் ஓரிரு சம்படம் நிறைய சிப்ஸ் எடுத்துச் செல்லவும் தருவார். அதுவும் கிராமத்தில் கலப்படமில்லாமல் தேங்காய் எண்ணை எடுத்து வீட்டிலேயே தயாரித்த அந்த சிப்ஸ் சுவை இப்போதும் நாவில் இருப்பது போல இருக்கிறது. அப்படியெல்லாம் செய்து கொடுத்த பெரியம்மா தற்போது ஒன்றுமே செய்யமுடியாமல் Parkinson Disease உடன் கைநடுக்கத்துடன் இருக்கிறார் என்பது வேதனையான நிதர்சனம்.
மாலையிலும் வீட்டருகே இருக்கும் இரண்டு சிவாலயங்களுக்குச் சென்று வந்தேன். அதைத் தவிர வேறு ஒரு இடத்திற்கும் மாலை நேரத்தில் குடும்பத்துடன் சென்று வந்தேன் - அது குறித்த தகவல்கள் வேறொரு பகிர்வில்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 ஃபிப்ரவரி 2026















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....