வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கும்பகோணம் - சில நாட்கள் தங்கிவிடலாமா? - வெங்கட் நாகராஜ்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு. முகநூலில் என்னைத் தொடராதவர்களின் வசதிக்காகவும், எனக்கான சேமிப்பாகவும் இந்த வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட பேச்சு மொழி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சமீபத்தில் கும்பகோணம் சென்று வர வேண்டியிருந்தது. அங்கே சென்று திரும்பும்போது பேருந்தில் இளைஞர்களுடன் கிடைத்த அனுபவம் குறித்தும் எழுதியிருந்தேனே. சில வருடங்கள் முன்னரும் நண்பர் மற்றும் அவரது இல்லத்தரசியுடன் கும்பகோணத்திலுள்ள சில ஆலயங்களுக்குச் சென்று வந்தேன்.  இந்த முறையும் இருந்த நேரத்தில் கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் நண்பர்களுடன் சென்று வர முடிந்தது.  ஒவ்வொரு முறை இங்கே, அதாவது கும்பகோணத்திற்குச் செல்லும் போதும் சரி, சில நாட்கள் இங்கே தங்கிவிடலாமா என்று தோன்றுவது வழக்கம்.  கும்பகோணத்தில் சில நாட்கள் தங்கி அருகிலே இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, ஆற அமர, நின்று நிதானித்து தெய்வ தரிசனம் காண்பதுடன், அங்கே இருக்கும் சிற்பங்களையும் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.  இந்த முறையும் அந்த எண்ணம் எனக்குள் வந்தது.  சரி சில நாட்கள் இல்லை என்றால் கூட, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.  

















இந்த முறை அங்கே சென்ற போது கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து நான் நண்பர் இல்ல நிகழ்வு நடக்கும் இடத்திற்குச் சென்று வந்தேன்.  வழியில் மகாமகக் குளம், சாரங்கபாணி ஆலயம் என வரிசையாக ஆலயங்கள், அவற்றைச் சுற்றி இருக்கும் வீதிகள் என பார்த்தபடியே தான் நடந்தேன்.  சில இடங்களில் படங்களும் எடுத்துக் கொண்டே சென்றேன்.  சில வீதிகளில் இருந்த வீடுகள் - பாழடைந்த நிலையில், கேட்பாரற்று இருக்கும் வீடுகளைப் பார்க்கும்போது மனதில் இனம் புரியாத வேதனை.  இந்த வீடு எத்தனை நிகழ்வுகளை - சந்தோஷ நிகழ்வுகள், சோக நிகழ்வுகள் என பலவற்றையும் பார்த்திருக்கும்.  எத்தனை திருமணங்கள், எத்தனை குழந்தைப் பேறு, சந்தோஷங்கள், துக்கங்கள் என அனைத்திற்கும் சாட்சியாக இந்த வீடு இருந்திருக்கும்.  தற்போது யாருமே அங்கே இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளுக்கும், அவற்றின் சுவர்களுக்கும் பேசும் சக்தி இருந்தால் என்ன பேசும் என்கிற கேள்வி என் மனதில் வந்தது. 


இந்த மாதிரி வீடுகளில் இருந்த மனிதர்கள் என்னவாகியிருப்பார்கள்?  அவர்களது சந்ததியினர் எங்கே? வீட்டை இப்படி விட்டுவிட்டார்களே?  என்னதான் பிழைப்பு கருதி வெளி மாநிலங்களுக்கோ, அல்லது வெளிநாட்டிற்கோ சென்றுவிட்டாலும், வாழ்ந்த ஒரு வீட்டை பாழடைய விட்டுவிட்டார்களே? என்ற எண்ணங்கள் மனதுக்குள் வந்தது.  தில்லி நண்பர் ஒருவர் அவரது வீட்டை தற்போது புனரமைத்து புதுமனை புகுவிழா நடத்தினார் என்று தெரிந்தது.  அங்கே எடுத்த காணொளி ஒன்றை பார்த்தபோது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.  எனக்கு சில வருடங்களாகவே ஒரு ஆசை இருந்தது.  பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் ஒரு கிராமத்தில் இப்படியான வீட்டில் தங்க வேண்டும் என்கிற ஆசை தான் அது.  இல்லத்தரசியிடம் கூட இந்த ஆசையை நான் பகிர்ந்தது உண்டு.


சந்தர்ப்ப சூழல்கள் சரியாக அமையுமா? இல்லை அந்த நேரத்தில் கிராமத்துவாழ்க்கை சரிவராது என்று முடிவு எடுப்பேனா என்பதெல்லாம் தெரியவில்லை.  ஆனாலும் கும்பகோணத்தின் அருகிலோ அல்லது திருச்சியின் அருகிலோ ஏதேனும் ஒரு கிராமத்தில் இப்படியான வீடை வாங்கி, அங்கேயே தங்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் இன்னமும் இருக்கிறது.  பணி ஓய்வுக்கு இன்னும் சில வருடங்கள் இருக்கும்போது இப்படியெல்லாம் சிந்திப்பது சுலபம் என்றாலும் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.  இப்படியான இடங்களில், குறிப்பாக சிறு கிராமங்களில் இருப்பதில் Practical difficulties இருக்கலாம் என்று ஒரு புறம் மனது சொன்னாலும், ஆசைப்படுவதில் தவறில்லை என்று இன்னொரு புறம் எண்ணம் வருகிறது.  


சரி அங்கே வீடு வாங்கி தங்குகிறோமோ இல்லையோ, at least தற்போது வார விடுமுறை நாட்கள், மற்ற விடுமுறை நாட்களில் பக்கத்து ஊரிகளில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.  பல வருடங்களாக தமிழகத்தில் இல்லாமல் தலைநகர் தில்லியிலேயே இருந்து விட்டதில் இழந்த விஷயங்கள் என்று சொன்னால் இது போன்ற ஆலய உலாக்களைச் சொல்லலாம்.  என்ன தான் அங்கே இருக்கும் ஊர்கள் பலவற்றிற்குச் செல்ல முடிந்தது என்றாலும் நம் ஊரில் இருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் கூட இல்லத்தரசி சொல்லிக் கொண்டிருந்தார்.  விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும், இதுவரை நாம் செல்லாத ஆலயங்களுக்குச் சென்று வர வேண்டும் என்று.  வரும் வாரங்களில் இந்த விஷயத்தினை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்திருக்கிறேன்.  


இப்போதைக்கு திருச்சி மற்றும் அருகில் இருக்கும் ஆலயங்கள் சென்று வருவோம்.  கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர் என ஏதோ ஒரு ஊருக்கு அருகே இருக்கும் கிராமத்தில் தங்கலாம் என்கிற முடிவை இப்போதைக்கு தள்ளிவைக்கத்தான் வேண்டும் - வேறு வழியில்லை.  ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தங்கிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைவேற எல்லாம் வல்லவன் வழிவகுக்கட்டும்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 ஃபிப்ரவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....