வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கும்பகோணம் - சில நாட்கள் தங்கிவிடலாமா? - வெங்கட் நாகராஜ்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு. முகநூலில் என்னைத் தொடராதவர்களின் வசதிக்காகவும், எனக்கான சேமிப்பாகவும் இந்த வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட பேச்சு மொழி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சமீபத்தில் கும்பகோணம் சென்று வர வேண்டியிருந்தது. அங்கே சென்று திரும்பும்போது பேருந்தில் இளைஞர்களுடன் கிடைத்த அனுபவம் குறித்தும் எழுதியிருந்தேனே. சில வருடங்கள் முன்னரும் நண்பர் மற்றும் அவரது இல்லத்தரசியுடன் கும்பகோணத்திலுள்ள சில ஆலயங்களுக்குச் சென்று வந்தேன்.  இந்த முறையும் இருந்த நேரத்தில் கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் நண்பர்களுடன் சென்று வர முடிந்தது.  ஒவ்வொரு முறை இங்கே, அதாவது கும்பகோணத்திற்குச் செல்லும் போதும் சரி, சில நாட்கள் இங்கே தங்கிவிடலாமா என்று தோன்றுவது வழக்கம்.  கும்பகோணத்தில் சில நாட்கள் தங்கி அருகிலே இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, ஆற அமர, நின்று நிதானித்து தெய்வ தரிசனம் காண்பதுடன், அங்கே இருக்கும் சிற்பங்களையும் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.  இந்த முறையும் அந்த எண்ணம் எனக்குள் வந்தது.  சரி சில நாட்கள் இல்லை என்றால் கூட, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.  

















இந்த முறை அங்கே சென்ற போது கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து நான் நண்பர் இல்ல நிகழ்வு நடக்கும் இடத்திற்குச் சென்று வந்தேன்.  வழியில் மகாமகக் குளம், சாரங்கபாணி ஆலயம் என வரிசையாக ஆலயங்கள், அவற்றைச் சுற்றி இருக்கும் வீதிகள் என பார்த்தபடியே தான் நடந்தேன்.  சில இடங்களில் படங்களும் எடுத்துக் கொண்டே சென்றேன்.  சில வீதிகளில் இருந்த வீடுகள் - பாழடைந்த நிலையில், கேட்பாரற்று இருக்கும் வீடுகளைப் பார்க்கும்போது மனதில் இனம் புரியாத வேதனை.  இந்த வீடு எத்தனை நிகழ்வுகளை - சந்தோஷ நிகழ்வுகள், சோக நிகழ்வுகள் என பலவற்றையும் பார்த்திருக்கும்.  எத்தனை திருமணங்கள், எத்தனை குழந்தைப் பேறு, சந்தோஷங்கள், துக்கங்கள் என அனைத்திற்கும் சாட்சியாக இந்த வீடு இருந்திருக்கும்.  தற்போது யாருமே அங்கே இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளுக்கும், அவற்றின் சுவர்களுக்கும் பேசும் சக்தி இருந்தால் என்ன பேசும் என்கிற கேள்வி என் மனதில் வந்தது. 


இந்த மாதிரி வீடுகளில் இருந்த மனிதர்கள் என்னவாகியிருப்பார்கள்?  அவர்களது சந்ததியினர் எங்கே? வீட்டை இப்படி விட்டுவிட்டார்களே?  என்னதான் பிழைப்பு கருதி வெளி மாநிலங்களுக்கோ, அல்லது வெளிநாட்டிற்கோ சென்றுவிட்டாலும், வாழ்ந்த ஒரு வீட்டை பாழடைய விட்டுவிட்டார்களே? என்ற எண்ணங்கள் மனதுக்குள் வந்தது.  தில்லி நண்பர் ஒருவர் அவரது வீட்டை தற்போது புனரமைத்து புதுமனை புகுவிழா நடத்தினார் என்று தெரிந்தது.  அங்கே எடுத்த காணொளி ஒன்றை பார்த்தபோது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.  எனக்கு சில வருடங்களாகவே ஒரு ஆசை இருந்தது.  பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் ஒரு கிராமத்தில் இப்படியான வீட்டில் தங்க வேண்டும் என்கிற ஆசை தான் அது.  இல்லத்தரசியிடம் கூட இந்த ஆசையை நான் பகிர்ந்தது உண்டு.


சந்தர்ப்ப சூழல்கள் சரியாக அமையுமா? இல்லை அந்த நேரத்தில் கிராமத்துவாழ்க்கை சரிவராது என்று முடிவு எடுப்பேனா என்பதெல்லாம் தெரியவில்லை.  ஆனாலும் கும்பகோணத்தின் அருகிலோ அல்லது திருச்சியின் அருகிலோ ஏதேனும் ஒரு கிராமத்தில் இப்படியான வீடை வாங்கி, அங்கேயே தங்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் இன்னமும் இருக்கிறது.  பணி ஓய்வுக்கு இன்னும் சில வருடங்கள் இருக்கும்போது இப்படியெல்லாம் சிந்திப்பது சுலபம் என்றாலும் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.  இப்படியான இடங்களில், குறிப்பாக சிறு கிராமங்களில் இருப்பதில் Practical difficulties இருக்கலாம் என்று ஒரு புறம் மனது சொன்னாலும், ஆசைப்படுவதில் தவறில்லை என்று இன்னொரு புறம் எண்ணம் வருகிறது.  


சரி அங்கே வீடு வாங்கி தங்குகிறோமோ இல்லையோ, at least தற்போது வார விடுமுறை நாட்கள், மற்ற விடுமுறை நாட்களில் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.  பல வருடங்களாக தமிழகத்தில் இல்லாமல் தலைநகர் தில்லியிலேயே இருந்து விட்டதில் இழந்த விஷயங்கள் என்று சொன்னால் இது போன்ற ஆலய உலாக்களைச் சொல்லலாம்.  என்ன தான் அங்கே இருக்கும் ஊர்கள் பலவற்றிற்குச் செல்ல முடிந்தது என்றாலும் நம் ஊரில் இருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் கூட இல்லத்தரசி சொல்லிக் கொண்டிருந்தார்.  விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும், இதுவரை நாம் செல்லாத ஆலயங்களுக்குச் சென்று வர வேண்டும் என்று.  வரும் வாரங்களில் இந்த விஷயத்தினை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்திருக்கிறேன்.  


இப்போதைக்கு திருச்சி மற்றும் அருகில் இருக்கும் ஆலயங்கள் சென்று வருவோம்.  கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர் என ஏதோ ஒரு ஊருக்கு அருகே இருக்கும் கிராமத்தில் தங்கலாம் என்கிற முடிவை இப்போதைக்கு தள்ளிவைக்கத்தான் வேண்டும் - வேறு வழியில்லை.  ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தங்கிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைவேற எல்லாம் வல்லவன் வழிவகுக்கட்டும்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 ஃபிப்ரவரி 2026


11 கருத்துகள்:

  1. கும்பகோணம் சம்பந்தி ஊர் என்பதால் சமீப காலங்களில் சில  முறை சென்று வரும் சந்தர்ப்பம் வாய்த்தது.  அங்கிருக்கும் கோவில்களை ஒவொன்றாக அவசர கதியில் பார்த்து வந்தேன். 

    படங்கள் அழகு.  குளத்தின்  படம், கோபுரம் படம், பூக்கள், கலகலப்பான கடைவீதி எல்லா படங்களையும் ரசித்தேன். 

    ஓய்வுக்குப் பிறகு என்று போடும் திட்டங்கள் என்னளவில் பலிக்கவில்லை.  வெவ்வேறு காரணங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ​வழக்கம் போல் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளன.
    இல்லை ஒரு தொல்லை என்று கிராமத்து வாழ்வை சிலாகிக்கிறீர்கள். ஆனால் கொஞ்ச நாளில் வாழ்க்கை நகரத்து வசதிகளுக்கு ஏங்குகிறது என்பது உண்மை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் சூப்பர்.

    கோபுரம், கடைசிப்படங்கள் மனதைக் கவர்கின்றன

    பழைய வீடுகளும் கிராமத்து வீதிகளும் பார்க்க அழகுதான். எனக்கும் கிராமங்கள் ரொம்பப் பிடிக்கும். ஆனால் ஒரு சில விஷயங்களுக்கு நகர்ப்புறம் தேவையாக இருக்கிறதே.

    உங்கள் ஆசைகள் எண்ணங்கள் யாவும் பூர்த்தியடையட்டும். ஒவ்வொரு வாரமும் அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்லும் திட்டம் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நாங்களும் அருகில் இருக்கும் இயற்கை சூழ் இடங்களுக்குச் செல்ல நினைத்தாலும் தற்போது முடியாத நிலையில்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. விஜயலஷ்மி சென்னை6 பிப்ரவரி, 2026 அன்று 3:01 PM

    என் எண்ணம் போல் உள்ளது உங்களுடைய எண்ணமும் நானும் என் மகளின் திருமணத்திற்கு பிறகு கிராமப்புறத்தில் இதே தஞ்சை கும்பகோணம் பக்கத்தில் இருக்க ஆசை தினமும் ஒரு கோவில்களுக்கு செல்லலாமே அமைதியாக வாரம் பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு செல்லும் திட்டம் நிறைவேறட்டும்

    பதிலளிநீக்கு
  6. கும்பகோணம் என்ற தலைப்பைப் பார்த்து உடனே வந்தேன். நான் பலப் பல முறைகள் கும்பகோணம் சென்று தங்கி சில நாட்கள் இருந்து வந்திருக்கிறேன். இதோ இன்னும் இரு நாட்களில் நாலு நாட்கள் கும்பகோணத்தில் தங்கப் போகிறேன். கும்பேசுவரர் கோயில் மற்றும் சார்ங்கபாணி கோயிலை ஒட்டிய ஒரு சிவன் கோயிலையும் இதுவரை உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இந்த முறை செல்ல நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எந்த ஊருக்குச் சென்றாலும் (யாத்திரையில் வட நாட்டின் கிராம நகரங்கள்), தமிழ்நாட்டின் பகுதிகள்) எனக்கு அங்கேயே தங்கிவிட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றும். நேற்றைக்கு முந்தைய நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். அங்கே இருந்த அழகிய புடலை, வாழைப்பூ (விற்றுக்கொண்டிருந்தவர் 10 ரூபாய் என்றார். ஒரு மணி நேரம் கழித்து வந்தால், அதில் உள்ள கள்ளனை எடுத்துவிட்டுத் தருகிறேன் 20 ரூபாய் என்றார்) போன்றவைகளைப் பார்த்து, இங்கேயே தங்கிவிட்டால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது (மிக அதிசயமாக 4 1/2 மணிக்கு கோயிலை அடைந்து பெரிய பெருமாளையும் எல்லாச் சன்னிதிகளையும் 5 1/2க்குள் தரிசித்துவிட்டோம்).

    எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை.

    என் மனைவி என்னிடம் எப்போதும் சொல்வார். மூன்று மாதங்கள் ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்து பார்ப்போம். அதன் பிறகுதான் முடிவு செய்யவே முடியும். சும்மா, இந்த ஊர் நன்றாக இருக்கு என்று வீட்டை வாங்கி, மூட்டை முடிச்சைக் கட்டக்கூடாது என்பார்.

    பதிலளிநீக்கு
  8. பாழடைந்த, கேட்பாரில்லாத பழைய வீடுகளைக் காணும்போது, ஒரு காலத்தில் கோலாகலமாக இந்த இடம் இருந்திருக்கும் என்று என் மனதில் தோன்றும். வாழ்க்கையில் நல்ல பக்கங்களைப் பார்த்த ஆனால் வயதான பின் கேட்பாரற்றுக் கிடப்பவரைப் போல

    பதிலளிநீக்கு
  9. தினம் ஒரு கோயிலுக்குச் செல்லலாமே.... இது மாத்திரம் கடினம் என்று தோன்றுகிறது. திருவரங்கத்தில் இருப்பவர்களே வருடத்தில் எத்தனை நாட்கள் கோயிலுக்குச் செல்ல முடிகிறது (பிரம்மாண்டமான கோயில் என்ற அர்த்தத்தில் சொன்னேன்). கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் மற்றும் சில கோயில்களில் பக்தர்கள் வருகை குறைவு என்பது கசப்பான உண்மை.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.

    கும்பகோணத்தில் நிறைய கோவில்கள் உள்ளன. நாங்கள் ஒரு தடவை நவகிரஹ கோவில் களையும், நீங்கள் கூறிய பிற கோவில்களையும் சென்று தரிசித்து வந்தோம். நீங்கள் சொல்வது போல் நிறைய நாட்கள் அங்கு இருந்தால்தான். நிதானமாக சென்று பல கோவில்களை ரசித்து காண முடியும். அவசர கதியில் சென்று பார்த்தால் பல கோவில்கள் நினைவில் தங்க வாய்ப்பில்லை.

    நீங்கள் அங்கு எடுத்த பகிர்ந்த படங்கள் யாவும் நன்றாக உள்ளது. கோபுர தரிசனங்கள் பெற்றுக் கொண்டேன் இயற்கை சூழ்ந்த கிராமங்களில், தங்கி வர ஆசைதான். அங்கேயே தங்கி விடவும் சில சமயம் ஆசை வருவதுண்டு. உங்கள் விருப்பமும் நல்லபடியாக நிறைவேறட்டும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வாசகம் அருமை.
    கும்பகோண நினைவுகள் எனக்கும் வந்து போகிறது. அடிக்கடி போகும் ஊர்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.
    முடிந்த போது வார விடுமுறைகளில் கோயிலுகளுக்கு சென்று வாருங்கள்.
    பழமையான வீடுகள் ஆள் அரவம் அற்று இருக்கும் அந்த ஊரில்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....