வியாழன், 19 பிப்ரவரி, 2026

திருச்சி புத்தகத் திருவிழா - 2026 - இரு வேறு பார்வைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட CG Verdant சத்சங்கம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


திருச்சியில் புத்தகத் திருவிழா - ஆதி வெங்கட் 




புத்தகங்களை நம்முடைய நல்ல நண்பர்கள் என்று சொல்லலாம்! புத்தகம் வாசித்தல் என்பது நம் மனதுக்கும் மூளைக்கும் உற்சாகத்தையும், மகிழ்வையும் தரக்கூடியது! அன்றாடம் சில பக்கங்களேனும் வாசித்தல் என்பதை எல்லோருமே பின்பற்ற வேண்டிய செயலாகும்! ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைக் காணும் இணைய உலகில் அச்சு நூல்களை வாசிப்பது என்பது குறைந்து வருகிறது என்று சொல்கிறார்கள்!


என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! அமைதியான ஒரு இடத்தில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வாசிப்பில் ஆழ்ந்து போவது என்பது அலாதியான விஷயம்! அதை உணர்ந்தவர்களுக்கே தெரியும்! நானும் அதில் ஒருவள் என்று சொல்லவும் வேண்டுமா..🙂 எங்கள் வீட்டில் நாங்கள் மூவருமே அந்த ரகம் தான்! அதுவும் திருச்சியில் புத்தக திருவிழா என்றால் கேட்கணுமா…:)


2024ஆம் ஆண்டு நாங்கள் புத்தக திருவிழாவுக்கு சென்று வந்த அனுபவத்தினை இங்கு கூட விஸ்தாரமாக எழுதியிருந்தேன்! அதுபோல் இந்த வருடமும் புத்தக திருவிழா துவங்கிய செய்தியறிந்ததும் அந்த வார இறுதிக்காக ஆவலுடன் காத்திருந்து சென்று வந்தோம்! திருச்சியின் cantonment பகுதியில் இருக்கும் John vestry பள்ளியின் விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட கண்காட்சிக்கு போகலாமா??


விஸ்தாரமான இடம் என்பதால் கண்காட்சிக்காக அதை சிறப்பாக அமைத்திருந்தார்கள்! நிறைய பதிப்பகங்களிலிருந்தும் இங்கு  வந்திருந்தார்கள்! எங்கெங்கு காணினும் பலப்பல தலைப்புகளில் புத்தகங்கள்! சின்னஞ்சிறு பிஞ்சுகள் முதல் வயதானோர் வரை அனைவருக்குமான புத்தகங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன! ஒரு சில பதிப்பகங்களில் 10% தள்ளுபடியுடன் வாங்கலாம்! 


கதைப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சிக்கான நூல்கள், சமய நூல்கள், உணவு மற்றும் உடல்நலம் சார்ந்த நூல்கள், காமிக்ஸ், சித்திரக் கதைகள், தன்னம்பிக்கை மற்றும்  நற்சிந்தனைகள் சார்பான நூல்கள் என்று இங்கு ஏராளமான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது! உங்களின் நேரத்தை இனிமையாகவும் பயனுள்ளதாகவும் செலவிட ஏற்ற இடம் இந்த கண்காட்சி!


காலச்சுவடு, உயிர்மை, மீனாட்சி, நியூ செஞ்சுரி, விகடன் என்று பிரபலமான பதிப்பகங்களுடன் இன்னும் நிறைய பதிப்பகங்களும் அங்கு இருந்தது! பாதையின் இருபுறமும் ஸ்டால்கள்! நாம ஒவ்வொண்ணா பொறுமையா பார்த்துண்டு போலாம்! என்று நாங்கள் மூவரும் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்த்துக் கொண்டிருந்தோம்! அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுவினரின் மூங்கிலால் ஆன பொருட்களின் ஸ்டால்கள், பாரம்பரிய அரிசி வகைகள் என்று ஒரு சில ஸ்டால்களும் இடையில் இருந்தன!




‘இதுவா! நான் படிச்சிருக்கேன்! பதிவா கூட எழுதியிருக்கேனே! ஓ! இந்த புக் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்! பிரெண்ட்ஸ் யாராவது வந்தா பார்க்கும் போது குடுக்கலாமே! ஓ! இவர் புக் நம்ம கிட்ட இல்லையே! என்று எங்கள் சம்பாஷனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…:) எனக்காக நான் இது எல்லாம் வாங்கிக்கறேன்! கண்ணா உனக்குடா! என்று அம்மாவும் மகளும் மாற்றி மாற்றி வேண்டியதை வாங்கிக் கொள்ள, நான் எனக்காக எதுவுமே வாங்கிக்கவே இல்ல தெரியுமா! என்றார் என்னவர்…:)


காலச்சக்கரம் சாரின் ‘நவகண்ட நாயகி’யை வானதியில் வாங்கி விடலாம் என்று சென்ற எங்களுக்கு அன்று ஏமாற்றமே கிடைத்தது! இம்முறை வானதி பதிப்பகம் இங்கு வரவில்லையாம்! ஆனால் காலச்சக்கரம் சாரின் ஏனைய புத்தகங்கள் இங்கு சில ஸ்டால்களில் இருந்தன! அவை அனைத்தும் தான் நம்மிடம் இருக்கே! இந்திரா சாரின் ‘ரங்க ராஜ்யம்’ கண்களைக் கவர்ந்தது! இரண்டு பாகங்களாக வழவழப்பான காகிதத்தில்! ராஜேஷ்குமார் சார், சிவசங்கரி மேம், சுஜாதா சார் என்று எங்கள் தேடல் நீண்டு கொண்டிருந்தது!


மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் வாசிக்க நாம் புத்தகங்களைத் தரலாம் என்று ஒரு ஸ்டால்! ‘நாம இப்போத் தானே கொஞ்சம் புக்ஸை லைப்ரரிக்கு குடுத்தோம்! என்றதும் ‘இங்க வாங்கித் தந்துட்டா போச்சு! என்றார் என்னவர்! எங்களுக்காக எடுத்தது போல் கைதிகளுக்கு கொடுப்பதற்காகவும் சிலவற்றை வாங்கி அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு வந்தோம்!


சார்! உங்க ஃபோனைக் குடுங்க! நான் உங்க மூணு பேரையும் ஃபோட்டோ எடுக்கறேன் என்று சொல்லி எடுத்தார் அங்கிருந்த நபர்! அம்மா! நான் அந்த புக்ஸை பெட்டியில் போடும் போது அந்தப் பெட்டி காலியா தான் இருந்ததும்மா! என்றாள் மகள்! கண்ணா! குடுக்கலாம்னு நினைச்சா நம்ம கிட்ட பழைய புக்ஸ் இப்போ எதுவும் இல்லையேன்னு நான் சொன்னேன்! புதுசாவே வாங்கி குடுத்துடலாமேன்னு அப்பா சொன்னா இல்லையா! அந்த மாதிரி மனசு சட்டுனு எல்லாருக்கும் வராது கண்ணா! என்றேன்!



எங்கள் கால்கள் ஓயும் வரை சுற்றி வந்து அன்றைய மாலைப் பொழுதை இனிமையாக செலவிட்ட திருப்தியுடன் வெளியே வந்தோம்! உணவுக்கடைகளும் கூட அந்தத் திடலில் போடப்பட்டிருந்தன! அதில் mojito என்பதைப் பார்த்ததும் எப்படியிருக்குன்னு பார்க்கலாமா என்று மகள் ஸ்ட்ராபெர்ரி flavourஐ ஆர்டர் செய்ய நாங்கள் இருவரும் கூட அதையே தேர்ந்தெடுத்தோம்..🙂 மனதும் வயிறும் சில்லென மாறியது..🙂


******


திருச்சி புத்தகத் திருவிழா 2026 - வெங்கட் நாகராஜ் 





திருச்சியில் காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை இந்த வருடத்தின் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. வருடா வருடம் இங்கே புத்தகத் திருவிழா நடைபெறுவதில்லை. கடைசியாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததாக நினைவு. சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தான் செல்ல இயலவில்லை.  அதைப் போலவே நெய்வேலியில் வருடா வருடம் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கும் இதுவரை செல்ல வாய்ப்பு அமையவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு.  அதனால் திருச்சியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.  வழமை போலவே, இந்த புத்தகத் திருவிழாவிற்கும் ஞாயிறன்று மாலை சென்று வந்தோம்.  திடீர் முடிவெடுத்து புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிகிறது.  மொத்தமே 160 ஸ்டால்கள் தான் இந்த வருடம் - வானதி பதிப்பகம் வரவில்லை 🙁


எப்போதும் போல தமிழக அரசின் சில துறைகள், சில பதிப்பகங்கள், புஸ்தகா உட்பட வந்திருந்தார்கள்.  உயிர்மை, விகடன், கிழக்கு, நக்கீரன், காலச்சுவடு, நியூ சென்சுரி, மீனாட்சி புத்தக நிலையம் போன்றவர்களின் ஸ்டால்கள் இருந்தன.  புத்தகங்களைத் தவிர வழக்கம் போல உணவுக்கான கடைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நாங்கள் சென்ற அன்று வந்திருந்த பிரபலங்கள் - உயிர்மை மனுஷ்ய புத்திரன் மற்றும் மணி பேச்சு ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோர்!  ஆனாலும் இவர்கள் எழுத்து/பேச்சு மீது எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லாமையால் கண்டுகொள்ளாமல் நகர்ந்தேன்.  வேறு பிரபலங்கள் வந்திருந்தார்களா என்று தெரியவில்லை - நான் பார்த்தது இவர்கள் இருவர் மட்டுமே. 


ஒவ்வொரு ஸ்டாலாகச் சென்று பார்க்கும்போது பல புதிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இருந்தாலும் கண்கள் என்னவோ தேவன், சாண்டில்யன், கல்கி, சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், காலச்சக்கரம் நரசிம்மா, சிவசிங்கரி, ராஜேஷ்குமார், என தெரிந்த எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுதிய நூல்களை மட்டுமே தேடின.  இப்போதெல்லாம் எனக்கு அச்சுப் புத்தகங்கள் வாங்குவதில் அத்தனை விருப்பம் இருப்பதில்லை - காரணம் அதனை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்.  அதிலும் இப்போது எனக்குப் பிடித்த பல எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்துமே கிண்டில் தளத்தில் கிடைத்து விடுகிறது என்பதால் அதிலேயே படித்து விடவே விருப்பம் இருக்கிறது.  பராமரிப்பதில் இருக்கும் சிரமங்கள் போலவே இன்னுமொரு விஷயம் புத்தகங்களின் விலை - பதிப்பாளர்கள்/எழுத்தாளர்கள் அச்சுப்புத்தகத்தினை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்துச் சொன்னாலும் விலை அதிகம் என்றே மனதில் எண்ணம் தோன்றுகிறது. 



இதையெல்லாம் சிந்தித்தபடியே அமைத்திருந்த வரிசையில் சென்று புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  மகளும், இல்லத்தரசியும் அவர்களுக்குத் தேவை என்று தோன்றிய நூல்களை ஒரு சில இடங்களில் வாங்கி என்னிடம் தர, அவற்றுக்கான பணத்தைச் செலுத்தி, புத்தகங்களை பெற்றுக் கொண்டிருந்தேன்.  பார்த்துக் கொண்டு வந்ததில் ஒரு ஸ்டால் பார்த்ததும் அங்கே சென்று பேசத் தோன்றியது.  திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு நீங்கள் விரும்பினால் புத்தகங்களை அளிக்கலாம் என்ற பதாகையுடன் இருந்த ஸ்டால் தான் அது.  அங்கே இருந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  திரு வேல்முருகன் அவர்கள் சிறையில் பணிபுரிகிறார் - உங்களிடம் இருக்கும் பழைய புத்தகங்கள் சிறைவாசிகள் படிக்க, கொடுக்க விரும்பினால் என்னை அழையுங்கள் - உங்கள் இருப்பிடத்திற்கே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றார்.  எப்போதும் என்னிடம் இருக்கும் சில நூல்களை - நாங்கள் படித்து முடித்த பின்னர் நண்பர்களுக்கோ அல்லது திருவரங்கத்தில் இருக்கும் நூலகத்திற்கோ வழங்குவது வழக்கம்.  


அவரிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு, வீட்டில் சென்று பார்த்துவிட்டு உங்களை அழைக்கிறேன் என்று சொன்னேன்.  ஆனால் அடுத்த கடைக்குச் சென்றதும் “இப்போதே புத்தகம் வாங்கி உடனேயே கொடுத்துவிடலாம்” என்று மனதுக்குள் மணி அடிக்க உடனடியாக செயல்படுத்திவிட்டேன்.  இரண்டு புத்தகங்களை வாங்கி மகள் கையால் புத்தகங்களை அவற்றுக்கான பெட்டியில் போட்டுவிடச் சொன்னேன். ஒரு நல்ல செயலை செய்ய வேண்டும் என நினைக்கும்போதே அதே செய்துவிடவேண்டும் என்பதில் எனக்கு ஒரு வித நம்பிக்கை உண்டு.  பிறகு செய்யலாம் என விட்டுவிட்டால் அந்த செயலை செய்ய முடியாமல் போக வாய்ப்பு அதிகம்.  மேலும் நூல்கள் இருந்தால் உங்களை அழைக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து அடுத்த கடைகளுக்குச் சென்றோம்.  




160 கடைகள் என்றாலும் எல்லாவற்றிலும் உள்ளே நுழைவது அவசியமற்றதாக முதல் பார்வையிலேயே தோன்றிவிடுகிறது.  அப்படி உள்ளே நுழைந்த சில கடைகளில் ஒன்றுமே வாங்காமல் வந்தோம்.  கிழக்கு பதிப்பதிக ஸ்டாலில் நண்பர் ஆர்.வி.எஸ் (மன்னை மைனர் என்று நான் அழைக்கும் நண்பர்) அவர்களின் வ்யாஸ பாரதம் நூலுக்கான விளம்பரம் மட்டும் இருந்தது.  அதனை படம் எடுத்து அவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலும் உங்களுக்குக் கிடைக்கும், அனுப்பி விட்டார்கள் என்று நேற்று தகவல் அனுப்பினார்.  மீண்டும் ஒரு முறை வாய்ப்பு இருந்தால் சென்று வர வேண்டும் - சில நூல்களை வாங்கவும் வாங்கலாம்! அப்போது நண்பரின் நூலையும் வாங்கி வரலாம். நூல்களை பார்த்தபிறகு உணவுக் கடைகள் பக்கம் சென்றோம்.  காலி இருக்கைகள் நிறைய இருக்க, மனுஷ்ய புத்திரன் பேசிக் கொண்டிருந்தார்.  


சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வீடு திரும்பினோம். திரும்பினோம்.  இந்த முறை எனக்கென்று எந்த நூலுமே வாங்கவில்லை - மீண்டும் ஒரு முறை அங்கே சென்றால் வாங்குவேனா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

19 ஃபிப்ரவரி 2026


5 கருத்துகள்:

  1. சென்னையில் மூங்கில் பொருள்கள் கடை, அரிசி கடை போன்றவை அரங்கின் வெளியே தனியாக இருந்தன.  அந்த மூங்கிலால் பொருள்கள் கடையில்தான் நான் கணேஷ்பாலா தொப்பி வாங்கினேன்.  பெரிய ஆச்சர்யம், வாங்கி கொண்டு திரும்பினாள் பின்னால் அவரே நிற்கிறார்!

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் வைத்திருந்த அத்தனை ஸ்டால்களும் அங்கும் வைத்திருந்தார்களா தெரியாது.  வாங்குகிறோமோ இல்லையோ..  காண கண்கோடி வேண்டும்!  ஏற்கனவே வாங்கிய புத்தகங்களே படிக்கக் காத்திருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  3. மத்திய சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு புத்தக தானம் ஒழுங்காய் போய்ச்சேருமா?  யாரையுமே நம்ப முடிவதில்லை இந்நாட்களில்!

    பதிலளிநீக்கு
  4. நவகண்ட நாயகி வாங்கினேன், படித்தேன்.  வானதி அவசரக்கோலத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.  ஏகப்பட்ட பிழைகள் புத்தகத்தில்...  அதில் ஒரு அத்தியாயத்தையே வேறு விட்டு விட்டு அச்சேற்றி இருக்கிறார்கள்..  என்ன சொல்ல..  இவ்வளவு காசு போட்டு வாங்கும் வாசகனை கொஞ்சமாவது மதிக்க வேண்டாமா? வானதியா இப்படி...

    பதிலளிநீக்கு
  5. ஆர் வி எஸ் புத்தக செட் ஐயாயிரம் ரூபாய் என்று நினைவு.

    அங்கும் டெல்லி அப்பளம் நூறு ரூபாய்..  மிளகாய் பஜ்ஜி வகையறா ஐம்பது, அறுபதுதானா?  நான் சாப்பிடவில்லை.  விலை மட்டும் தெரிந்து கொண்டேன்.  டெல்லி அப்பளம் கைநழுவி கீழே விழுந்தாலும் உடையாது!!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....