திங்கள், 2 பிப்ரவரி, 2026

அவள் முகம் காண - வித்யா சுப்ரமணியம் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது சக பதிவர் மற்றும் பிரபல எழுத்தாளரான வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய அவள் முகம் காண என்கிற நூல் குறித்து தான்.  சில வாரங்கள் முன்னர் ஒரு திங்களன்று வித்யா சுப்ரமணியம் அவர்களின் ஆசை முகம் மறந்தாயோ என்கிற நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்த நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை இங்கே நினைவூட்ட, கடைசி இரண்டு பத்திகளை மட்டும் இங்கே தருகிறேன்.  


ஒரு வாரம் மட்டுமே திருமண வாழ்க்கை என்றாலும், அந்தத் திருமணத்தினால், அதுவும் கணவன் பிரணவ் இல்லாதபோது, அவனது குடும்பத்தினருக்கு அவள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த சிந்தனை மட்டுமே நிரூபமாவிற்கு இருக்கிறது.  அதனால் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார் நிரூபமா.  நேரடியாக பிரணவின் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக இல்லத்தினருடன் பழகி தான் யார் என்பதை புரிய வைக்கிறார்.  எத்தனை தேடினாலும் பிரணவ் குறித்த தகவல் ஒன்றுமே கிடைக்காமல் போக நிரூபமா என்ன செய்கிறார், அவரது முடிவுகள் எப்படி இருந்தன என்பதை நாமும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். எத்தனை சிறப்பான முடிவாக அது அமைகிறது? பிரணவின் குடும்பத்தினருக்காகவே, பிரணவ் இருந்திருந்தால் என்னென்ன செய்திருப்பாரோ அது அத்தனையும் தான் செய்ய வேண்டும் என நினைக்கும் நிரூபமாவின் சீரிய சிந்தனை என படிக்கும்போதே நமக்கு அவரது சிறப்பு புரிகிறது.  


தொடர்ந்து என்ன நடக்கிறது.  பிரணவ் கிடைத்தாரா? உயிருடன் தான் இருக்கிறாரா?  அப்படி அவர் உயிருடன் இருந்தால், அவர் எங்கே, என்ன நிலையில் இருக்கிறார்? 


இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் நூலான அவள் முகம் காண நூலை இந்த முதல் நூலின் தொடர்ச்சி அல்லது இரண்டாம் பாகம் என்று சொல்லலாம்.  இந்த நூலின் முதலாம் அத்தியாயத்திலிருந்து சில வரிகள்….


“இது எந்த இடம்? எப்படி இங்கே வந்தோம்? ஒன்றும் புரியவில்லை. ‘அதோ பார்!’ திடீரென ஒரு குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினாள்.  யாரையும் காணவில்லை. ‘நிமிர்ந்து பார்!’. மறுபடியும் அதேகுரல். அவள் நிமிர்ந்து நோக்கினாள். சிலையாய் நின்றாள். மிக அழகான ஒரு பனிச்சிகரம். வெண்பனி படர்ந்திருந்த அந்தச் சிகரத்தில் ஒரு முகம் அவளையே உற்றுப் பார்த்தது.  அந்தப் பார்வையின் தீட்சண்யம் தாங்கமுடியாமல் அவள் உடல் துவண்டது. கீழே விழுந்துவிடுவோம் போலத் தோன்ற… பிடிமானம் தேடிக் கைகள் காற்றில் ஆடின. உடல் மண்ணில் மெல்லச் சரிய…


சஞ்சனா திடுக்கிட்டுக் கண் விழித்தாள். உடல் வியர்த்திருக்க, படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள்.  என்ன கனவு இது!” 


மும்பையில் பிறந்து வளர்ந்த சஞ்சனா மேல் படிப்பு படிப்பதற்காக ஹைதராபாத் நகருக்கு வருகிறார்.  அம்மா, அப்பா இருவருக்குமே அவளைப் பிரிந்து இருப்பது கடினம் - அதிலும் குறிப்பாக சஞ்சனாவின் அப்பா ரிஷிக்கு மிகவும் கடினமான விஷயம் அது.  படிக்க வந்த இடத்தில் சக மாணவன் வினீத், பெற்றோர்கள் அமெரிக்காவில் இருக்க பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்த இளைஞன்.  படிப்பு ஒரு பக்கம் தொடர்ந்தபடி இருக்க, அவர்களுக்குள்ளான நட்பு காதலாக மாறுகிறது.  இந்த இடத்தில் மீண்டும் நூலிலிருந்து சில வரிகள்.... சஞ்சனாவின் வகுப்புத் தோழியான வாணி சொல்வதாக வரும் வரிகள்....


காதல்.... காதல் மலர எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணம். காதலிக்கப் போற ஆணையும் பெண்ணையும் கடவுள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல சந்திக்கவைப்பான். அதுவரை அவங்க முன்னே பின்னே பார்த்துண்டுக்கக்கூட மாட்டாங்க. பெரியவங்க பார்த்தாலும் சரி, நாமளே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, கடவுள் போடற முடிச்சுதான் ஜெயிக்கும். எங்க ரெண்டுபேருக்கும் கடவுள் முடிச்சுப் போட்டிருந்தான். ரெண்டு பேரோட லட்சியமும் இங்க வந்து உயர் படிப்பை முடிக்கணுமங்கறது தான். ரெண்டுபேர் வீடும் சம்மதிக்க எங்க கல்யாணம் முடிஞ்சு இன்னியோட சரியா நாலு மாசமாகுது. எங்க கடுமையான உழைப்பும் வீன் போகல. ரெண்டு பேருக்குமே இங்க படிக்க அனுமதி கிடைச்சது. உன் அறிமுகமும் தோழமையும் கூடவே கிடைச்சது.


காதல் குறித்து எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


கொஞ்சம் கொஞ்சமாக திருமணம் நோக்கிய பாதையில் இவர்கள் இருக்க, குடும்பத்தினரிடமும் பேசி முடிவெடுக்கலம் என இருக்கிறார்கள். இருவரின் குடும்பங்களும் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் வினீத் உடைய தாயார் திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.  சிறிது நாட்களுக்கு உன் திருமண திட்டங்களைத் தள்ளிப் போடலாம் என்கிறார்.  


இங்கே சஞ்சனாவும் வினீத் குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவினை பார்த்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்.  கனவில் கண்ட முகத்தில் இருப்பவர் யார்? அவர் நிஜமாகவே இருக்கிறாரா? அப்படி இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்.  அவரை சஞ்சனாவால் பார்க்க முடிந்ததா? சஞ்சனா - வினீத் திருமணம் நடந்ததா? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு படிக்கும் நம்மை ஒட்டிக் கொள்கிறது.  மொத்தம் 22 அத்தியாயங்கள் இந்த நூலில். நிச்சயம் படிக்கப் படிக்க ஆச்சர்யம் நமக்கு மிஞ்சுகிறது என்பதில் சந்தேகமில்லை.  சஞ்சனாவின் தந்தை ரிஷி யார்?  கனவில் வந்த பெண்மணி யார் என்பதற்கெல்லாம் விடை சஞ்சனாவிற்கு மட்டுமல்ல நமக்கும் தெரிய வேண்டும் என்றால் நிச்சயம் முதல் பாகமான ஆசை முகம் மறந்தாயோ மற்றும் அவள் முகம் காண எனும் இந்த இரண்டாம் பாகத்தினையும் படித்துப் பாருங்களேன்.  இரண்டு நூல்களுமே அமேசான் பக்கத்தில் கிடைக்கிறது.  Kindle Unlimited Subscription இருந்தால் கட்டணமின்றி படிக்கலாம்.  ஆசிரியர் வித்யா சுப்ரமணியம் அவர்களின் பல நூல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. ஒவ்வொன்றாக வாசித்துப் பாருங்களேன்.   


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 ஃபிப்ரவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....