வியாழன், 5 பிப்ரவரி, 2026

பேச்சு மொழி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நாளைய பாரதம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


*******

ஒரு மொழியை எழுதவும் படிக்கவும் மட்டும் கற்றுக் கொண்டால் போதுமா என்றால் கிடையவே கிடையாது! அதில் சரளமாக பேசவும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! அன்றாட வாழ்விலோ, வெளியூர் அல்லது வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அல்லது பணி நிமித்தமாக செல்லும் போதோ பேச்சு மொழி தான் முதலில் பயன்படும்! அது வட்டார வழக்கில் மாறுபடலாம்! ஆனால் பொதுவான பேச்சு மொழி என்பது மிகவும் அத்தியாவசியமானது!


என்னவர் முதன்முதலில் பணியில் சேர்வதற்காக டெல்லிக்கு சென்ற போது அவருக்கு ஒரு எழுத்து கூட இந்தி தெரியாது என்பார்! மிகவும் சிரமப்பட்டு ஆறே மாதங்களில் முதலில் பேசக் கற்றுக் கொண்டதாகவும் பின்பு அலுவலகப் பயன்பாட்டுக்காக எழுதவும் கற்றுக் கொண்டதாகச் சொல்வார்! கால ஓட்டத்தில் பின்பு பஞ்சாபி, பெங்காலி என்று பேச்சு மொழிகளில் தெரிந்து கொண்டதாகவும் சொல்வார்!


நான் பள்ளிநாட்களிலேயே இந்தித் தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்ததால் எனக்கு எழுதவும் படிக்கவும் நன்றாகத் தெரியும் என்றாலும் பேச்சு மொழி என்பது என்னிடம் சரளமாக இருக்காது! காரணம் நாங்கள் இருந்த கிழக்கு தில்லிப் பகுதியில் எங்களைச் சுற்றி நிறைய தமிழ்க் குடும்பங்கள் இருந்ததால் இந்தியில் பேசியே ஆக வேண்டும் என்ற சந்தர்ப்பங்கள் குறைவு! 


கடைத்தெரு, காய்கறி, மளிகைக்கடைகள், மருத்துவர், வங்கி, ஆட்டோ, ரிக்‌ஷா என்ற அளவில் மட்டுமே பேச வேண்டிய தேவைகள் ஏற்பட்டது! ஒருவேளை என்னைச் சுற்றி இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் இருந்திருந்தால் பேச்சு வழக்கிலும் நான் சரளமாக இருந்திருப்பேனாக இருக்கலாம்!


சரி! எதற்கு இந்த கதைகள்???



கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சமஸ்கிருதத்தை எழுதவும், படிக்கவும் இலக்கண இலக்கிய நியதிகளுடன் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது தெரியும் அல்லவா! அதனோடு பேச்சு மொழியாகவும் அதைத் தெரிந்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! அதற்கான வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது! சட்டென அதற்கான வகுப்பிலும் இணைந்து விட்டேன்!


ஆன்லைன் வகுப்பு தான்! அன்றாடம் இரண்டு மணிநேரம்! வெளியூர், வெளிநாடு என்று இங்கும் என்னோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் பல பகுதியிலிருந்தும் ஆர்வமுடன் பேசக் கற்றுக் கொள்கிறார்கள்! என்னுடைய ஆசிரியரின் பெயர் வந்தனா அகர்வால்! மும்பையிலிருந்து எங்களுக்காக  கற்றுக் கொடுக்கிறார்! 


அன்றாடம் இரண்டு மணிநேரம் என்பதை தொய்வில்லாமல், மிகவும் இனிமையாகவும், அதேசமயம் ஆக்கமுடனும் திறம்படவும் வகுப்பை கொண்டு செல்கிறார்! அந்த இரண்டு மணிநேரங்களிலும் சமஸ்கிருதத்தைத் தவிர வேறு எந்த மொழியையும் அவர் பயன்படுத்துவதே இல்லை! நாமாக அவரிடம் ஏதேனும் சொல்லவேண்டும் என்றாலும் அதே தான்..🙂 ஒரு கட்டத்தில் நிச்சயமாக எல்லோரும் சமஸ்கிருதத்தில் பேசியே ஆக வேண்டும்!


நூற்றுக்கணக்கானோர் வகுப்பில் இருந்தாலும், ஆசிரியரிடம் பேச விரும்பி hand raise பண்ணி வைப்பவர்களுக்கே வாய்ப்புகள் தரப்படுகின்றன! அவர் தரும் சொற்களை பயன்படுத்தி வாக்கியங்கள் அமைக்க வேண்டும்! எனக்கான வகுப்புகள் துவங்கி மூன்று நாட்கள் தான் ஆகின்றன! இன்னும் பத்து நாட்களில் முதல் லெவலை முடித்து விடலாம் என்று சொல்லப்படுகிறது! பார்க்கலாம் எவ்வளவு தூரம் செல்ல முடிகிறது என!


இதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கும் கிடைக்குமானால் நிச்சயம் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! பேச்சு மொழியை அழகுடனும், தெளிவுடனும் பேசலாமே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

5 ஃபிப்ரவரி 2026


7 கருத்துகள்:

  1. பேஸ்புக்கிலும் படித்தேன்.  பேச்சுப் பயிற்சிக்கு நல்ல வழி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
    தாங்கள் சொல்வது போல் நாம் வாழும் இருப்பிடத்திற்கு தகுந்தாற் போல் பேச்சு மொழி கற்பது அவசியம். தங்களுடைய ஆர்வத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விரைவில் தாங்கள் சமஸ்கிருத பேச்சு வழக்கில் சிறந்து விளங்க என் வாழ்த்துகள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஆதி நானும் ஹிந்தி படித்திருக்கிறேன் வாசிக்கவும் எழுதவும் தெரியும். பேச்சுமொழிதான் கொஞ்சம் பட்லர் டைப்தான் இங்கு பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் நிறைய. கட்டிடம் கட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் கடைகள் பெரும்பாலும் ஹிந்திகாரர்கள்...கூடவே கன்னட மக்களும் ஹிந்தி பேசுவதால் இங்கு நான் பட்லர் ஹிந்தியில் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பேச்சு மொழி சரளமாக வரவேண்டும் என்று நினப்பதுண்டு. வந்தால் நன்றாக இருக்கும். படங்கள் பார்த்தால் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் படங்கள் பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இங்கும் நிறைய தமிழ் மக்களும் இருப்பதால் கன்னடமும் கற்க முடியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் கற்றுக் கொண்டுவிடுவீர்கள் ஆதி. ஆர்வம் இருந்தால் எதுவும் எளிதில் கைவசப்படும்.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வாசகம் அருமை.

    சமஸ்கிருதத்தை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டு இப்போது சரளமாக பேசவும் கற்று வருவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
  7. விஜயலஷ்மி சென்னை6 பிப்ரவரி, 2026 அன்று 2:42 PM

    அருமை எல்லாவற்றையும் ஆர்வமுடன் கற்று கொள்கிறிர்கள் எனக்கு இந்தி பேச கற்று கொள்ளவேண்டும் ஆனால் பக்கத்தில் exam எழுதும்படிதான் கற்றுத்தருகிறார்கள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....