அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கும்பகோணம் - சில நாட்கள் தங்கிவிடலாமா? பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் ரசித்த ஆட்டோ வாசகம் : இமயத்தில்…
இந்த வாரம் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது என் இரு சக்கரட் வாகனத்திற்கு முன்னர் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்னால் எழுதி இருந்த வாசகம் மனதைக் கவர்ந்ததோடு, சில எண்ணங்களையும் உருவாக்கியது. எழுதியிருந்த வாசகம் இது தான்….
இமயத்தில் இருந்தாலும்
சமயத்தில் வருவேன்….
இப்படி எழுதியிருந்தாலும், அவர் அழைத்து வராத ஒரு நபர் இப்படிச் சொல்லலாம், ‘பக்கத்துத் தெருவுல இருந்தப்பவே சமயத்துக்கு வரல, இதுல இமயத்துல இருந்தாலும் சமயத்துக்கு வருவாராம்!’! வர வேண்டிய நேரத்துல சரியா வருவேன் என்று சொன்ன ஆளே வரலையே! 🙂
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : ஃபிரோசா
ஹார்ப்பர் காலின்ஸ் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஏழு வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட விளம்பரம் ஒன்று. இதற்கு முன்னரும் இந்த விளம்பரத்தினைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதனை ரசிக்க முடியும் என்பதே இந்த விளம்பரத்தின் வெற்றி. தலைப்பு சொல்ல வரும் விஷயம் உங்களுக்கும் விளம்பரத்தினை பார்த்தால் புரியும். பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : நாளை முதல் குடிக்க மாட்டேன்....
2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நாளை முதல் குடிக்க மாட்டேன்.... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
பெரும்பாலும் ஒரே கடையில் தான் இந்த வேலைக்கு வருவது வழக்கம். போலவே அங்கே இருக்கும் பெரியவரிடம் தான் தலையைக் கொடுப்பேன்.... ஆளுயர நாற்காலியில் அமர்ந்து கொண்ட பின் அவர் கேட்கும் ஒரே கேள்வி - சோட்டா கர்தூன்... நான் சொல்லும் ஒரே பதில் ம்ம்ம்ம்ம். வேறு பேச்சே கிடையாது. அவர் தொழிலில் மும்மரமாக இருக்க நான் யோசனையில் மூழ்கிவிடுவேன். கற்பனைக் குதிரையத் தட்டி விட்டால் தறிகெட்டு ஓடும் சில நிமிடங்கள் அவை...
இம்முறை சென்றபோது பெரியவர் வேறு தலையின் மீது தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார். எனவே அவராகவே 'அப்துல்..' என விளித்து அவரிடம் என் தலையை ஒப்படைத்தார். பெரியவர் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார் என்றால் அப்துல் நேரெதிர்.... ஈராயிரம் வார்த்தைகளுக்குக் குறைவாகப் பேச மாட்டேன் என்று சபதம் போட்டவராக இருந்தார். இருக்கையில் உட்கார்ந்த என்னிடம், ”கொஞ்சமா எடுக்கணுமா, லைட்டா ட்ரிம் பண்ணணுமா, இல்லை காதோரம் இருக்கும் நீட்டு முடி மட்டும் எடுக்கணுமா, மெஷின் போடவா இல்லை கத்திரிக்கோலா” என எண்ணிடலங்கா கேள்விகள்….
வேறு வழியில்லை – சில வார்த்தைகளை பேசியே ஆகவேண்டும் – ம்ம்ம்ம் என்று சொல்லி தப்பிக்க முடியாது! பதில் சொன்ன பிறகு மேலும் கேள்விகள் தொடர்ந்தது – வெறும் கட்டிங் மட்டுமா, இல்லை ஷேவிங் பண்ணனுமா, தலை முடி வெளுத்துருக்கே டை அடிக்கணுமா, மசாஜ் பண்ணவா எனக் கேட்டுக் கொண்டே இருக்க, வெறும் தலைமுடி மட்டும் வெட்டுப்பா எனச் சொல்லி அமைதியானேன். ஆனால் அவரோ பேசிக்கொண்டே இருப்பவர் போலும், தானாகவே பேசிக் கொண்டிருந்தார்.
“வேண்டாண்டா அப்துல், இப்படியே இருந்தா, செத்துடுவ, நாளையிலிருந்து குடிக்காதடா அப்துல்” என தனக்குத் தானே சொல்லிக் கொள்ள, நான் கொஞ்சம் ஸ்வாரஸ்யமாகக் கதை கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு வயிற்று வலி என மருத்துவரிடம் சென்றபோது, “குடிக்காதே எனச் சொன்ன மருத்துவரை “போய்யா வெண்ணை” என்று சொல்லிவிட்டு வந்தாராம். தொடர்ந்து குடித்துக் கொண்டே வர, வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். தனக்கே தனது பிரச்சனைக்குக் காரணம் தான் குடிப்பது தான் என்பது இப்போது புரிந்து விட்டதாம்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் பகிர்வு : இரயிலுக்குள் ஆலயம்
சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி வாசிக்கக் கிடைத்தது. 15 நாட்கள் இரயில் வழி சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட ஒரு குழுவினர், அந்த இரயிலின் ஒரு இடத்தினை ஆலயம் போலவே உருவாக்கி, அங்கே வழிபாடுகள் நடத்திக் கொண்டு வந்ததைப் பற்றி படிக்க நேர்ந்தது. ஒரு சில விஷயங்கள் இப்படித்தான். பக்தி என்று வந்துவிட்டால் எதையும் செய்து விட முடியும் என்று இது போன்றவர்கள் அவ்வப்போது நமக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். செய்தி படிக்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் போதும். ஆங்கில செய்தி என்பதை நினைவில் கொள்க….
This Train From Bihar Has A Temple Inside, Even Lord Ganesh Has His Own Berth
******
இந்த வாரத்தின் நகைச்சுவை : எதிர்பார்க்கவில்லை
ஆங்கிலத்தில் Deadpan Comeback என்று சொல்வார்கள். அப்படியான ஒரு நகைச்சுவை காட்சி இது. பார்த்து ரசிக்கலாமே!
******
இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - ஜலதோஷம் :
அதானே…. நீங்க என்ன சொல்றீங்க இது பத்தி? சொல்லுங்களேன்…
******
இந்த வாரத்தின் சிந்திப்போம் - கடைசி நிமிடங்கள் :
சமீபத்தில் ஒரு நபர் பற்றிய தகவல் கேள்விப்பட்டேன். அவரது நெடுநாள் நண்பரே அவர் குறித்த தகவலை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். விஷயம் இது தான். ஒரு மனிதர். நண்பரின் நண்பர். சிறு வயதிலிருந்தே பழக்கமாம். ஆனால் சில வருடங்களாக இருவருக்குள்ளும் மனஸ்தாபம். காரணம் - அவர் செய்த விஷயம். ஏற்கனவே மூன்று திருமணங்கள் புரிந்து மூவரையும் அடித்துத் துரத்தி, நான்காவதாக ஒரு வாய் பேச முடியாதவரையும் கல்யாணம் செய்து கொண்டாராம். அந்தப் பெண்ணையும் அடித்தார் என்பதால் நண்பர் தனது நட்பினை துண்டித்துக் கொண்டாராம். சில வருடங்களாகவே பேச்சு வார்த்தை இல்லை. சமீபத்தில் நண்பரின் தாயார் இறந்த போது கூட தகவலைச் சொல்லவில்லையாம்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஒரு இடத்தில் நண்பர் அவரைப் பார்த்துவிட, என்னதான் இருந்தாலும், ”எனக்கு ஒண்ணு என்றால் நீ தாண்டா பார்த்துக்கணும். நான் செத்தா நீ தான் தூக்கிப் போடணும், எனக்கு செய்ய யாருமில்லை” என்றாராம். இரண்டு நாட்கள் முன்னர் அந்த நபர் இரவு நேரத்தில், யாருமில்லாமல் இறந்து விட்டார். கடையில் வேலை செய்யும் பையன் அடுத்த நாள் வீட்டிற்கு வந்தபோது தான் தெரிந்திருக்கிறது விஷயம். நண்பருக்கு விஷயம் தெரிந்தபோது சென்று கடைசி வரை இருந்திருக்கிறார். அந்த நபரின் தம்பிக்கு விஷயம் சொல்லி, அவர் வந்து கடைசி காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனாலும் எனது நண்பர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் - ‘சொன்னபடியே ஆயிடுச்சே…. யாருமே அவன் செத்ததுக்கு வரலைங்க! நாலு பொண்டாட்டி கட்டினான்… நாலுமே வரல! அவங்க செய்தது சரிதான், இவன் செய்த விஷயங்கள் அப்படித்தான்! இருந்தாலும் யாருமே இல்லாம செத்துட்டாங்க!’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் சிலருக்கு விதி விதித்திருக்கிறது. இருக்கும்போது செய்யும் விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கடைசி நிமிடங்கள் வரை கூட யாருமே துணைக்கு இல்லாமல் போக நேரிடும் என்று தோன்றியது. இது தான் வாழ்க்கை - நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கைக்கான பாடங்களைத் தருகிறது. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா?
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
7 ஃபிப்ரவரி 2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....