தொகுப்புகள்

ஞாயிறு, 31 மே, 2026

காஃபி வித் கிட்டு - 241 - சம்சா எனும் சமோசா - Pakshi Jal Setu - யார் உண்மையான வாரிசு - Bholenath - ஐந்து வயது - Crispy Potato Rings - பயணங்களில் அலுப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் :  சம்சா எனும் சமோசா



சமோசாவும் சம்சாவும்...

சம்சா, சமோசா என இரண்டு விதமாக அழைக்கப்படும் இந்த சிற்றுண்டி, பெயரில் மட்டுமல்ல, உள்ளே வைக்கப்படும் விஷயத்திலும் வித்தியாசம் தான்.  வட நாட்டில் சமோசா, இங்கே சம்சா! விழுப்புரம் இரயில் நிலையத்தில் முன்பு தட்டில் சம்சாக்களைக் கொட்டி விற்றுக் கொண்டிருப்பார்கள் - தூசியும் படர்ந்து இருந்தால் கூட அந்த சம்சாவின் மீது மோகம் கண்ட பலர் வாங்கிச் சாப்பிடுவது பார்த்திருக்கிறேன். 



சம்சா விற்பனை தற்போது...

இந்த வாரம் சென்னைக்கு ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய போது விழுப்புரம் இரயில் நிலையத்தில் விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதில் கவனம் சென்றது. யாரோ ஒரு புண்ணியவான் செய்த வேலையால் இப்போது சம்சாக்கள் அழகிய பாக்கெட்டில் வருகின்றன - இப்போதே சொல்லி விடுகிறேன் - அவற்றின் சுவை குறித்தோ, அது எப்போது செய்யப்பட்டது என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால் அழகாய் Pack செய்யப்பட்டு, தூசிகள் இல்லாமல் வருகிறது. பாக்கெட் 25 ரூபாயாம். விற்பது சம்சாவாக இருந்தாலும், பாக்கெட்டில் சமோசா என்றே எழுதி இருக்கிறது.  இரயில் விழுப்புரம் நிலையத்தில் நின்றபோது சம்சா விற்றுக்கொண்டிருந்த பெரியவரின் அருகே அமர்ந்து எடுத்த படம் - அவருக்குத் தெரியாமல்! முதியவர், உழைப்பாளி!  பணம் கொடுத்து வாங்கலாம் என்பதோடு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, QR Code Scan செய்தும் சம்சா வாங்கிக் கொள்ளலாம் - சில்லறைப் பிரச்சனை இல்லை! 


******

 

இந்த வாரத்தின் எண்ணம் : Pakshi Jal Setu



கோடையின் கொடுமை அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் மனிதர்களே திண்டாடும் போது பறவைகள் என்ன செய்யும்? தண்ணீர் இன்றி தவிக்கும் பறவைகளுக்கு உதவும் வகையாக குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் நகரில் தற்போது ஏற்பாடு செய்திருக்கும் Pakshi Jal Setu மிகவும் சிறப்பான விஷயமாகத் தெரிகிறது.  அப்படி என்ன விஷயம் இது?  தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி சென்று ஆங்கிலத்தில் இருக்கும் தகவலைப் படித்துப் பாருங்களேன்.


Solar-powered ‘Pakshi Jal Setu’ offers lifeline to birds amid scorching heat | Surat News - The Times of India


******


பழைய நினைப்புடா பேராண்டி : யார் உண்மையான வாரிசு


2018-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - யார் உண்மையான வாரிசு - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


”நிறுத்துங்க!”


”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறார்கள்.


ஒரு வீட்டில் துக்க நிகழ்வு. இறந்தவரின் உடலை இடுகாடு வரை கொண்டு சென்று அங்கே ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் இப்படி ஒரு மனிதர் வந்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று சொல்கிறார். இறந்தவரின் உடலை வைத்திருக்கும் கட்டிலைப் பிடித்துக் கொண்டு முடிவு தெரியும் வரை விட மாட்டேன் என்கிறார். இறந்து போனவர் எனக்கு 45 லட்சம் தர வேண்டும். அதைக் கொடுக்கும் வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார். இறந்து போனவருக்கு மூன்று மகன்கள். அவர்கள் அனைவரும் அந்த மனிதரைப் பார்க்கிறார்கள். அவர் இறந்து போன தங்கள் அப்பாவின் நண்பர் தான். இருவருக்கும் இப்படி கொடுக்கல் வாங்கல் உண்டு என்றாலும் 45 லட்சம்….


மூன்று மகன்களும் அவரிடம் பேசுகிறார்கள். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம், இப்போதைக்கு அவரது உடலை அடக்கம் செய்ய விடுங்கள். இறந்தவரின் உடலை இப்படி நீண்ட நேரம் வைத்திருப்பது நல்லதல்ல. நீங்கள் சொல்வது போல, உங்களுக்கு 45 லட்சம் கடன் தர வேண்டும் என எங்கள் அப்பா எங்களிடம் சொல்லவே இல்லை. ஏதோ ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்றால் பரவாயில்லை. இப்படி 45 லட்சம் கடன் நிச்சயம் வாங்கி இருக்க மாட்டார். என்னதான் வீடு வாசல், பணம் என இருந்தாலும் அதை எங்களால் உங்களுக்கு விட்டுத் தர முடியாது. நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன சாட்சி என்றெல்லாம் தகராறு செய்கிறார்கள். ஊரில் உள்ள பெரியவர்களும் சொல்லிப் பார்த்தாலும், கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை.


இப்படி இடுகாட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயம் இறந்தவரின் வீட்டில் இருக்கும் அவரது மகளுக்கும் தெரிகிறது. மகன்கள் இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்க, தனது அப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இப்படி ஒரு நிலையா என வருந்தி, தன்னிடம் உள்ள அனைத்து நகைகளையும், பணத்தையும் கொடுத்து, அங்கே வந்திருக்கும் அப்பாவின் நண்பரிடம் சொல்லுங்கள், “இந்த நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் – கிட்டத்தட்ட பத்து லட்சம் பெறும். மீதிப் பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன் என்று உறுதியாகச் சொல்லுங்கள் – இப்போது இறந்த என் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கச் சொல்லுங்கள்” என தகவல் அனுப்புகிறார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் வாசகங்கள் : Bholenath


சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற போது அங்கே சில வாகனங்களில் மற்றும் கடைகளில் எழுதி இருந்த வாசகங்கள், தலைப்புகள் கண்களைக் கவர்ந்தன.  ஹிமாச்சலப் பிரதேசம் தேவ்/தேவி பூமி என்றே அழைக்கப்படுகிறது.  இங்கே எப்படி சிவன் இஷ்ட தெய்வமோ அப்படியே ஹிமாச்சலிலும் கூட சிவன், தேவி, ஹனுமன் ஆகியோருக்கு நிறையவே பக்தர்கள் உண்டு. சிவபெருமானை Bholenath என்றே வடக்கில் அழைப்பதுண்டு. Bholenath உடன் இருந்தால் போதும், எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார்.  அப்படி ஒரு பக்தர் தனது வாகனத்தின் பின்புறத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார் - Government of Bholenath!  சரியாகத் தானே சொல்லி இருக்கிறது! இங்கே நடப்பது அனைத்தும் அவன் அரசாட்சி அல்லவா!  


சரி, இந்த வாரத்தின் ஒரு புதிராக ஒரு வாசகம் - இது ஒரு உணவகத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் - THAKUR 22DA DHABA - இந்த வாசகம் சொல்ல வரும் விஷயம் என்ன - தெரிந்தால் சொல்லுங்களேன். யாரும் பதில் சொல்லவில்லை எனில் பின்னூட்டத்தில் சொல்கிறேன். 


******


இந்த வாரத்தின் விளம்பரம் - ஐந்து வயது :


இந்தியாவின் பல பகுதிகளில் Infant Mortality மிக மிக அதிகம். காரணம் பல உண்டு.  அதனைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு சோப் விளம்பரம் - லைஃப் பாய் சோப் விளம்பரம் - கிட்டத்தட்ட 15 வருடங்கள் முன்னர் எடுக்கப்பட்ட விளம்பரமாக இருக்கலாம் - ஆனால் ஒரு சிறு காணொளி மூலம் சிறப்பான ஒரு விஷயத்தினைச் சொல்லி இருக்கிறார்கள். பாருங்களேன்.


******


இந்த வாரத்தின் உணவு :  Crispy Potato Rings



உருளைக் கிழங்கு - வடக்கே பிரதானமான காய்கறிகளில் ஒன்று.  தினம் தினம் ஏதோ ஒரு விதத்தில் உருளையைச் சேர்த்து விடுகிறார்கள் உணவில். சமீபத்து ஹிமாச்சலப் பிரதேசப் பயணத்தில் பத்து நாட்களும் ஏதோ ஒரு வகையில் உருளை சாப்பிட வேண்டியிருந்தது.  உருளையப் பார்த்தாலே கொஞ்சம் வெறுப்பு கூட என்னுடன் பயணித்த ஒரு நண்பருக்கு வந்ததாகச் சொன்னார்.  ஆனால் வடக்கத்தி நபர்களையும் உருளையையும் நிச்சயம் பிரித்துவிட முடியாது! அப்படி அவர்களோடு ஒன்றிவிட்ட ஒரு விஷயம் இந்த உருளை.  உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான குறிப்பு தந்திருக்கிறார் கீழ்க்கண்ட காணொளியில்! சில நாட்கள் முன்னதாகவே இல்லத்தரசிக்கு இந்தக் காணொளியை அனுப்பி இருந்தேன் வாட்ஸப் வழி! இன்னும் சுவைக்கக் கிடைக்கவில்லை! 🙂 அதனால் காணொளி வழி பார்த்து ரசித்ததுடன் சரி! வேறு யாரேனும் முயற்சித்து சுவைத்துப் பாருங்களேன்!

******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பயணங்களில் அலுப்பு :


வியாழன் அன்று புறப்பட்டுச் சென்று, வெள்ளி அன்று இரவு திரும்பும் விதமாக ஒரு சென்னைப் பயணம் இந்த வாரத்தில்! என்னதான் பயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்றாலும் தற்போது இந்த மாதிரி தமிழகத்தில் இரயில்களில் பயணம் செய்ய கொஞ்சம் அலுப்பு வருகிறது! மக்கள் ரீல்ஸ், அலைபேசி மோகத்தில் வீழ்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.  ஐந்து, ஐந்தரை மணி நேர பயணம் முழுவதுமே ரீல்ஸ் பார்ப்பதில் செலவிடும் பலரை இந்தப் பயணங்களில் பார்க்க முடிகிறது - சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் சத்தமாக ரீல்ஸ் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். முன்பெல்லாம் இரயில் பயணங்களில், முன்பின் தெரியாத சக பயணிகளுடன் சில வார்த்தைகளேனும் பேசுவார்கள். கொஞ்சம் பழகிவிட்டால், முகவரி, தொடர்பு எண் என எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டவர்கள் கூட உண்டு.  அந்த அளவிற்கு இருக்கத் தேவையில்லை என்றாலும், கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள்.  நேற்று ஒரு பயணி, சக பயணியைத் தொட்டு கூப்பிட்டு, பரிசோதகர் அழைக்கிறார் என்று சொன்னபோது தொட்டுக் கூப்பிட்டவரை முறைத்துப் பார்த்தார் - அவர் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தபோது தொல்லை தந்து விட்டாராம்!  எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும்போது பயணங்களில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது எனக்கு! உங்கள் அனுபவங்கள் என்ன, சொல்லுங்களேன்!


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

31 மே 2026


36 கருத்துகள்:

  1. யாரோ எழுதியதுதான்.  எனினும் தப்பு தப்புதானே!  இன்றைய வாசகம் படத்தில் அலைபேசியில் 'ப்' வராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசியில் 'ப்' வராது! :) பொதுவாக வாசகம் தேர்ந்தெடுக்கும்போது பிழை இருக்கிறதா என பார்ப்பது உண்டு. இந்தப் பதிவிற்கான படத்தினை ஒழுங்காக கவனிக்கவில்லை !

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. குட்டி குட்டியாய் இருந்தால் சம்சா, பெரிதாய் இருந்தால் சமோசாவா?!!  சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் நிலையங்களில் கூடை நிறைய வைத்து விற்பார்கள்.  குறிப்பாக ரேஸ் கோரஸ் இருப்பதால் கிண்டியில்.  பத்து ரூபாய்க்கு மூன்று! குட்டிக் குட்டியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெற்கில் பெரும்பாலான கடைகளில் சம்சா என்றே கூறப்படுகிறது. வித்தியாசம் stuff செய்யப்படும் பொருளில் மட்டும் அல்லாது வெளிப்புறத்தில் கூட உண்டு. சாம்சாவின் மேல் இருப்பது மெலிதாக மொறுமொறுவென இருக்க, சமூசாவில் தடிமனாக இருக்கும். சில இடங்களில் சம்சா பத்து ரூபாய்க்கு இரண்டு என விற்பனை செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  3. பறவைகளுக்கும் நாய் போன்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் வைப்பது சிறந்த செயல்.  நிறையபேர் வைக்கிறார்கள்.  இரக்கம் இருக்கும் அளவு என்னிடம் சுறுசுறுப்பு இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்த கடும் கோடையில் பறவைகள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. அவற்றுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  4. பழைய பதிவு -  ஆனால் அந்தப் பெண்ணின் நல்ல மனதிற்கு அந்தப் பணத்தை அவள் தனியாக எடுத்துக்கொள்ள மாட்டாள். சகோதரர்களுடன் பிரித்துக் கொள்வாள். (கதையோடு ஒன்றி விட்டேனாம்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையோடு ஒன்றி விட்டேனாம்// ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. இல்லை...... வேறு யாரும் பதில் தருகிறார்களா என்று பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  6. ஐந்து வயது விளம்பரம் பார்த்தேன். உருளைக்கிழங்கு எப்படிச் செய்தாலும் சுவைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளை சுவைதான். விளம்பரம் பார்த்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  7. பயணங்கள் மாறுவதில்லை. பயணிக்கும் மனிதர்கள்தான் மாறுகிறார்கள். நான் அதிகம் பயணம் செய்பவன் அல்ல. எனவே எனக்கு இந்த அனுபவம் இல்லை என்றாலும் யூகிக்க முடிகிறது, புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் மாறுவதில்லை - பயணிக்கும் மனிதர்கள்தான் மாறுகிறார்கள்... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. முதல் படமும் அந்த வரிகளும் உண்மை!

    வட இந்திய சமோசா உள்ளே உருளைக்கிழங்கு படத்தில் இடப்பக்கம் வலப்பக்கம் இருப்பது வெங்காய சம்சா!!! அப்படித்தான் தெரிகிறது படத்தைப் பார்த்தால். ஆமாம் இப்பலாம் பாக்கெட்ல வருகின்றன.

    இந்த வெங்காய onion சமோசா/சம்சா முன்பு வீட்டில் செய்தது உண்டு. ரொம்பப் பிடிக்கும் இந்த வெங்காய சமோசா/சம்சா...பல வருடங்களுக்கு முன் நாகர்கோவிலில் இவை குட்டி குட்டியாகவும் செய்து விற்பாங்க. சென்னையில் அடையார் பகுதியில் கங்கா எனும் கடையில் இவை ரொம்ப பிரபலம் குட்டி குட்டியாக செய்து பாக்கெட் செய்து விற்பாங்க.

    இங்கு onion samosa என்றே சொல்கிறார்கள். ஆனால் இப்பலாம் வெளியிலும் சாப்பிடுவதில்லை வீட்டிலும் செய்வதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகமும் அதற்கான படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      படத்திலேயே கீழே எழுதி இருக்கிறேன் - சமோசா, சம்சா என!

      வீட்டில் இது வரை சம்சா, சமோசா செய்ததில்லை. தில்லியில் இருந்தவரை பக்கத்தில் கடைகளில் சமோசா நன்றாகவே கிடைக்கும் என்பதால், அவ்வப்போது மாலை நேரங்களில் வாங்கி தேநீருடன் சுவைத்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. வட இந்திய கதை அப்போதும் கருத்து கொடுத்திருந்திருக்கிறேன் ஆனால் டக்கென்று நினைவுக்கு வரவில்லை "பழையநினைப்புடா பேராண்டி" இங்கு வாசித்த பிறகும் ஒரு வேளை வெங்கட்ஜி உண்மை நிகழ்வை கதை போல எழுதுவாரே அப்படியானதோ வாசிக்காமல் விட்டமோ என்று நினைத்து அங்கு போய் பார்த்தால் நம்ம கருத்தும் இருக்கு!!!

    உண்மையில் நடந்த சம்பவம்தான் அப்படிக் கதையாகியிருக்குமோ?ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய கதை - உண்மை நிகழ்வாக இருக்கலாம். அதுவே கதையாக மாறியிருக்கலாம். முன்பு இப்படி எழுதியதுண்டு. இப்போதும் எழுத நிறைய விஷயங்கள் இது போல உண்டு. எழுததான் கை வருவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. ஹிமாச்சலப் பிரதேசம் தேவ்/தேவி பூமி//

    உண்மைதான் ஜி! அப்படி அம்மக்கள் சொல்லிக் கொள்வது சரியேதான். ஆனால் அப்படிச் சொல்லிக் கொண்டு அப்பகுதியின் புனிதத்தை இயற்கையின் கொடையைப் பாழ்படுத்துகிறார்களே என்ற வருத்தமும் ஆதங்கமும் நிறையவே.

    கேரளத்தையும் அப்படிச் சொல்லிக் கொள்வதுண்டு "God's Own Country," ஏன் நாடு என்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவையே அப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு. இமயமலை தனிப்பகுதி unique!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் கொடையை பாழ்படுத்தும் மக்கள் - வேதனையான உண்மை. பல இடங்களில் இப்படித்தான் மலைகளை வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கைச் சீற்றம் ஏற்படும்போது புலம்புகிறார்கள். எங்கே போய் முடியுமோ என்ற எண்ணம் ஒவ்வொரு முறை அங்கே பயணிக்கும்போதும் வருகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. விளம்பரம் செம...மிக அற்புதமாகப் படமாக்கியிருக்காங்க. காட்சிகளும், இசையும், முக்கியமாக அந்த மையக் கருவும் தங்கள் பொருளுக்கு ஏற்ற வகையில் ரொம்ப அழகாகச் சிந்தித்திருக்காங்க. ரொம்ப ரசித்துப் பார்த்தேன் ஜி. அசாத்தியமான விளம்பரம்.

    விளம்பரங்கள் திரைப்படங்களை விட மிக அழகான கருத்துடன் ஒரு சில நிமிடங்களில் மிக நல்ல கருத்தைச் சொல்லும் விதமாக இருப்பதாக எனக்குப் படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - கிடைக்கும் ஒன்றிரண்டு நிமிடங்களில் அற்புதமான ஒரு விஷயத்தினை சொல்லி விடும் கலை - கொஞ்சம் கடினமான விஷயம் என்றாலும் அதில் பல விற்பன்னர்கள் இருக்கிறார்கள். இந்த விளம்பரம் எனக்கும் பிடித்தது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. ஜி, அந்த உருளைக்கிழங்கு வளையங்கள் !!!! தில்லி/குருகிராமம் என் தங்கை வீட்டிலும், நெருங்கிய உறவினர் வீட்டிலும் அவங்க உதவியாளர் செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். நெருங்கிய உறவினர் வீட்டின் உதவியாளர் பெண்ணின் கணவர் சாப்பாடு / பலகாரங்கள் செய்து விற்கிறார்.

    நல்லா இருந்தது. ஆனால் அவங்க மைதா பயன்படுத்தியதால் நான் வீட்டில் கோதுமை மாவிலும், அப்புறம் சிறுதானிய மாவிலும் செய்து பார்த்துவிட்டேன். இப்பலாம் செய்து பார்ப்பதோடு சரி. அப்புறம் அடிக்கடி செய்வதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளை வளையங்கள் - :) சாப்பிடலாம். இதில் நிறைய விதங்களில் வடக்கில் இருக்கும்போது சுவைத்திருக்கிறேன். அங்கே இது தானே பிரதானம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. பயண அலுப்பு புரிகிறது ஜி.

    எனக்கு வீட்டிலிருந்து சும்மா, மெஜஸ்டிக் அல்லது வேறு இடங்களுக்குப் போய் வருவது என்றாலே ரொம்பக் குதூகலமாக இறங்கிவிடுவேன். ஆனால் சமீப மாதங்களில், ஒரு வேளை வெயிலினாலோ என்று தெரியலை, நேற்று கூட ஹெப்பல் வரை போய் வந்தது அலுப்பாகிவிட்டது. மக்களின் சில செயல்களும் குறிப்பாகத் துப்புவது. பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும் விதம் என்று...

    ரயில் பயணம் சமீபகாலமாக இல்லை. இனி ஒன்று வரப் போகிறது ஒரு நாள் பயணம். ஆனால் இது அலுப்பாக இருக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் போக்கு பிடிப்பதில்லை - அதீத சூடு, அதில் இப்படி தொடர்ந்து சத்தமாக ஒலிக்கும் ரீல்கள், சக மனிதர்களை மதிக்காத தன்மை என ஏதோ ஒரு விஷயம் பிடிக்காமல் போய்விடுகிறது. அலுப்பு தட்டிவிட்டால் அந்தப் பயணம் இனிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  14. சம்சாவா? அழகான சமோசா என்ற பெயரே பழகியிருக்க இது என்ன புதுப் பெயர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் பல இடங்களில் சம்சா என்றே அழைக்கிறார்கள். சம்சா, சம்சா என கூவி விற்பதைக் கேட்டதில்லையா நெல்லை?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. பயணத்தில்தான் இந்த ஆல் இந்திய ரேடியோக்கள் என்றால் நடைப்பயிற்சிப் பாதையிலும் இவர்கள். இதுபோக நடந்துக்கிட்டேமெசேஜ் பார்த்துக்கொண்டு குடிகாரன் போல நடப்பது. வீட்டுவேலை செய்பவர்கள் அனைவரும் யூடியூபில் கேட்டுக்குட்டே இருக்காங்க. நாடு விளங்கினார்போலத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே சென்றாலும் இந்த மாதிரி மனிதர்களை காண முடிகிறது. நிறையவே அலுப்பாக இருக்கிறது இவர்களைப் பார்த்தால். பேசாமல் இருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை இங்கே. எல்லோருமே அப்படி இருக்க, யாரிடம் சொல்லித் திருத்த?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. நெல்லையில் வெகு காலம் முன்பு உருளை மிக மிக்க் குறைவு, வெங்காயம் அதிகம் போட்ட சமோசாக்கள் விற்பாங்க ருசியாக இருக்கும். பிறகு பட்டாணி போட்ட சமோசாக்கள் பிடிக்கலை. எப்படி யார் நயாரிக்கறாங்கன்னு யூடியூப் காணொளிகள் பார்த்த பிறகு அத்தகைய சமோசாக்களை நினைத்தாலே ஒரு மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயாரிக்கும் இடத்தினை/விதத்தினை பார்த்தால் சாப்பிடத் தோன்றாது. உண்மை தான். நமக்கு நேரே செய்து தரும் பண்டங்களில் பயன்படும் பொருட்களின் தரம் குறித்த சந்தேகமும் நிறையவே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. விளம்பர படம் நல்ல கருத்தை எடுத்துச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  18. சமோசா - சம்சா வித்தியாசம் புரிந்து கொண்டேன். கல்லூரி கேண்டீனில் ஐந்து ரூபாய்க்கு கிடைத்த சம்சாவின் ருசி, பின்னாளில் எங்கும் கிட்டவில்லை:). மொறுமொறு உருளை வளையங்கள் வேலை வாங்கினாலும் சுவைக்க நன்றாக இருக்கும் போல. செய்முறை காணொளி சுவாரஸ்யம். உண்மையான வாரிசு.. நெகிழ்வு. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....