தொகுப்புகள்

வெள்ளி, 1 மே, 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - மண்டல் கிராமத்திலிருந்து சோப்தா வரை - பகுதி பதினாறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தூக்கம் கண்களை தழுவட்டுமே - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



தொடரின் சென்ற பகுதியில் எழுதியிருந்த திக் திக் அனுபவங்களை படித்து கருத்துரைத்த நண்பர்களுக்கு நன்றி.  இனி தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பார்க்கலாம் வாருங்கள்.  மண்டல் கிராமம் வரை நடந்த நாங்கள், நடைப் பயணத்திற்காகக் கொண்டு சென்ற பைகளை வண்டியின் பின்பக்கம் வைத்து, அவரவர் இடத்தில் அமர்ந்து கொள்ள நண்பர் பிஷ்ட் வாகனத்தினைச் செலுத்த ஆரம்பித்தார்.  காலை நேரத்தில் சோப்தாவிலிருந்து மண்டல் கிராமம் வரை வரும்போது பாதைகளில் பனிப்பொழிவும் அதன் மிச்சமும் நினைவுக்கு வந்தது.  நண்பரும் அதே எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.  மதிய நேரத்தின் சூட்டில் நேற்றைய பனிப்பொழிவு சில இடங்களில் கரைந்திருக்கும் என்பதால் பாதை சேறும் சகதியாக இருக்கலாம்.  இல்லை பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தால் வாகனத்தினைச் சீரான வேகத்தில் செலுத்துவது கடினம் என்று பேசிக்கொண்டே வாகனத்தினை கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தார்.  



என்னதான் பனிப்பொழிவு என்பது மற்றவர்களுக்கு ஒரு சுகானுபவமாக இருந்தாலும், உள்ளூரில் இருக்கும் நபர்களுக்கும், அந்த ஊரில் வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கும் சவாலான ஒரு விஷயமாகவே இருக்கும்.  எப்போதும் செலுத்தும் கவனத்தினை விட இன்னும் அதிகமான கவனத்துடன் வாகனத்தினைச் செலுத்த வேண்டியது கட்டாயம்.  இல்லை எனில், ஒரு சிறு தவறு கூட விபத்தில் முடியக் கூடும் என்பதால் அதீத கவனத்துடன் வாகனத்தினைச் செலுத்திக் கொண்டு வந்தார் நண்பர் பிஷ்ட்.  அவருடன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இந்தர்ஜித்-உம் பாதையைக் கவனித்து ஏதேனும் விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தால் சொல்லிக் கொண்டு வந்தார்.  ஒரு சில இடங்களில் புதியதாக பனிப்பொழிவு பக்கவாட்டுச் சிகரங்களில் அதிகரித்தது போல இருந்தது.  உயரமான இடங்களில் பனிப்பொழிவு ஆரம்பித்ததன் அறிகுறியாக நாங்கள் சென்ற சாலைப்பகுதியில் குளிர் அதிகரித்திருந்தது.  



சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் நிறைய வாகனங்கள் இருந்ததைப் பார்த்தபோது அன்றைக்கு அந்தப் பகுதியில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பதை உணர முடிந்தது.  நிறைய இடங்களில் வாகனங்களை நிறுத்தி, தங்குமிடம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களையும் பார்க்க முடிந்தது.  முன்னரே பதிவு செய்தாலே ஒழிய நல்ல தங்குமிடம் கிடைப்பது கடினம் என்பதை அந்த நேரத்தில் எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  நல்ல வேளையாக நண்பர் பிஷ்ட் காலை நேரத்திலேயே எங்களுக்கான தங்குமிடத்தினை தேர்வு செய்து முன்பதிவு செய்து விட்டதால் எங்களுக்கு அந்தத் தொல்லைகள் இல்லை.  பெரும்பாலான, மீதம் இருந்த தங்குமிடங்களின் வசதி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை அங்கே இருந்த போது தெரிந்து கொள்ள முடிந்தது.  நாங்கள் பயணித்து வரும்போது அதிக அளவில் சாலையோரத்தில், வாகனங்களின் அருகே நின்றிருந்த பயணிகள், பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது - தங்குமிடங்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றதாக இல்லை என்பதே பலருடைய ஆதங்கமாகவும் இருந்தது.  



இந்தப் பகுதியில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.  இங்கே இருக்கும் பெண்கள் பலரும் அதீத தைரியசாலிகள் தான்.  தனியாகவே நிறைய இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள் - அதிலும் குறிப்பாக இளம் பெண்கள்.  ஒரு இளம் பெண் தனியாக ஸ்கூட்டி (Activa) ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்தப் பனிப்பொழிவு இருந்த சாலையில் தனியாக வந்து கொண்டிருந்தார்.  அவரது வண்டியின் பின்னர் அவரது Backpack கட்டியிருந்தது.  எங்கள் வாகனத்தின் அருகே வந்த அவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்.  அவர், சோப்தா பகுதியில் இது வரை நான்கு ஐந்து தங்குமிடங்கள் பார்த்து விட்டதாகவும், ஒன்றுமே அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் பக்கத்து ஊர் இங்கேயிருந்து எத்தனை தொலைவு, அங்கே தங்குமிடங்கள் கிடைக்குமா என்றெல்லாம் நண்பர் பிஷ்டிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.  இணையத்தில் தேடலாம் என்றால் நெட்வொர்க் இல்லை என்றும் அதனால் தான் கேட்பதாகவும் சொன்னார்.  அதற்கு நண்பர் பிஷ்ட், பதினைந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் சில ஊர்கள் இருக்கின்றன என்றாலும் அங்கே இருக்கும் தங்குமிடங்கள் அத்தனை தரமாக இருக்காது என்றும், அங்கே தங்குவது சரியாக இருக்காது எனவும் சொல்லி, இங்கேயே கிடைக்கும் இடத்தில் தங்குவதே சரி என்று அறிவுரை வழங்கினார்.  



20-25 வயதிற்குள் மதிப்பிடக்கூடிய இளைஞரும், அதே வயதான யுவதியும் இப்படி ஒரு ஸ்கூட்டரில் எங்கள் அருகே வந்து அவர்களுக்கும் தங்குமிடம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.  அவர்களுக்கும் நண்பர் பிஷ்ட் சொன்ன அறிவுரை, இங்கேயே தங்குங்கள் - இந்த இரவு நேரத்தில் வனாந்திரமாக இருக்கும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லதல்ல என்று சொல்லி இங்கேயே தங்குமிடம் தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார்.  நாங்கள் இப்படியாக பயணித்து நாங்கள் முன்பதிவு செய்திருந்த இடம் அருகே வந்து விட்டோம்.  இந்தப் பகுதியில் இன்னும் ஒரு விஷயம் சொல்லலாம். சோப்தா என்பது ஒரு மிகச் சிறிய ஊர் என்பதோடு, உள்ளூர் வாசிகள் இருப்பதை தங்குமிடங்கள் அதிகம் என்பதால் வாகனங்கள் அதிகம்.  ஆனால் அவற்றை நிறுத்துவதற்கு போதான வசதிகள் இல்லை - சாலை ஓரங்களிலேயே தான் நிறுத்த வேண்டியிருக்கும். அதற்கு நிறைய போராட வேண்டியிருக்கும்.  அதனால் தங்குமிட உரிமையாளரை அழைத்து அவர் உதவியுடன் எங்கள் வாகனத்தினை சாலை ஓரத்தில் நிறுத்தி, உடமைகளோடு எங்கள் அறையை நோக்கி நடந்தோம்.  



வாகனத்திலிருந்து இறங்கியபோது அங்கே இருந்த குளிரின் கடுமை எங்களுக்குப் புரிந்தது.  என்னதான் குளிருக்குத் தேவையான உடையை அணிந்து இருந்தாலும், குளிர் எங்கள் உடைகளைத் தாண்டி உடலுக்குள் புகுந்து தாக்கியதை எங்களால் உணர முடிந்தது.  பற்கள் கிடுகிடுக்க எத்தனை டிகிரி என்று பார்க்க -2 என்று எங்கள் அலைபேசி தகவல் சொன்னது.  அதைவிட குறைவாகவும் இருந்திருக்கலாம்.  சுற்றிலும் உள்ள மலைச்சிகரங்களைப் பார்த்தால் அனைத்திலும் வெள்ளைப் போர்வையாக பனி மூடியிருக்கிறது.  உடமைகளை எடுத்துக் கொண்டு முதல் மாடியிலிருந்த அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனோம்.  கீழே இறங்கிச் சென்று சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. மாலை தான் சாப்பிட்டோம் என்பதால் பசியும் இல்லை.  ஆனால் இரவு பசித்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் மனதிற்குள் இருந்தது.  ஆனால் ஊரிலிருந்தே நாங்கள் கொஞ்சம் Dry Fruits and Nuts எடுத்துச் சென்றிருந்தோம் என்பதால் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டோம்.  இந்த மாதிரி குளிர் நாட்களில் இப்படி Dry Fruits and Nuts சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சூட்டினைத் தரும்.  


அனைவரும் இரண்டிரண்டு ரஜாய் எனும் மெல்லிய மெத்தைகளைப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டோம்.  நெட்வொர்க் மிகவும் மோசமாகவே இருக்க, அது கிடைத்த சந்தர்ப்பத்தில் வீட்டினருடன் பேசி விட்டு உறக்கத்தினைத் தழுவினோம்.  எங்கள் பயணத்தின் அடுத்த நாளில் மேலும் ஒரு மலையேற்றம் இருக்கிறதே, அதற்கும் எங்களை தயார்படுத்திக் கொள்ள நிச்சயம் ஓய்வு தேவை என்பதால் இந்த தூக்கம் எங்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது.  தூங்கி எழுந்து காலை நேரம் எங்கே சென்றோம், அங்கே எங்களுக்கு என்ன விதமான அனுபவங்கள் கிடைத்தன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

1 மே 2026


பின் குறிப்பு: இந்தப் பதிவு, இந்த வலைப்பூவில் எங்களது 3800-ஆவது பதிவு.  தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. படங்கள் உதவி Gemini AI.


20 கருத்துகள்:

  1. நண்பர் Bபிஷ்ட்டின் அனுபவம் மற்றவர்களுக்கும் உதவ வைத்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அவரின் பல வருட அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவி தான். இப்போது கூட ஒரு பயணத்திற்கு அழைத்தார் - என்னால் போக முடியாத சூழல்! நவம்பர் மாதம் மற்றுமொரு பயணம் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார் - அப்போதைய சூழல் பொறுத்தே முடிவு எடுக்க வேண்டும் - பார்க்கலாம் காலம் எனக்கு என்ன வழி வைத்திருக்கிறது என்பதை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. நவம்பர்... பனிப்பாதை.. ஆவலைத் தூண்டுகிறது.... ஆனால் இந்த ஹிந்திதான்...

      நீக்கு
    3. பனிப்பாதை - ஆவலாகவே இருக்கும். ஹிந்தி கற்றுக் கொள்வதும், பேசுவதும் சுலபம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. சாலை பனிப்பொழிவுடனான சாலை பார்க்க அழகு. படம் செமையா இருக்கு. ஓ!! இது நிஜப்படம் இல்லையா ஏ ஐ யா....டக்குனு முதலில் ஏமாந்து போனேன் ஜி!!!!!

    ஓட்டுவதன் சிரமம் தெரியும். அதிலும் பனியை விட black ice ரொம்பவே கவனமாக ஓட்ட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. AI படம் தான் ஜி. Black Ice - நடப்பது, வாகனம் செலுத்துவது என இரண்டுமே கடினம். அதிக கவனம் தேவையாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. இரண்டாவது படம் செமையா இருக்கு

    ஒரு இளம் பெண் தனியாக ஸ்கூட்டி (Activa) ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்தப் பனிப்பொழிவு இருந்த சாலையில் தனியாக வந்து கொண்டிருந்தார். அவரது வண்டியின் பின்னர் அவரது Backpack கட்டியிருந்தது. //

    ஆஹா!!! அப்படமும் பார்க்கவே மனதை அள்ளுகிறது.

    பனியில் ஓட்டும் தைரியம் நல்ல பயிற்சி போல!!

    -2!!! ஆ! ஒரே ஒரு முறை -2 அனுபவம் உண்டு பல வருடங்களுக்கு முன்னர்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அந்தப் பனியில் இரு சக்கர வாகனம் செலுத்துவது கடினம் - அதிலும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களில் செல்வது அதிக ஆபத்தானது.

      -8 வரை நான் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. ந ண்பரின் அனுபவங்கள் நல்ல விஷயம் என்பதோடு இப்படிச் சொல்லி வழிகாட்ட முடிகிறதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரது அனுபவம் எல்லோருக்கும் உதவி தான். இதோ மூன்று நாள் விடுமுறை என்பதால் தற்போது கூட அவர் உத்திராகண்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறார் - நேற்று தொடங்கி! தில்லியில் இருந்திருந்தால் இப்போது உத்திராகண்டில் இருந்திருப்பேன்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. என்ன ஒரு அருமையான அனுபவம். உங்களுக்கு கொடுத்துவைத்திருந்திருக்கிறது.

    பனிப் பாதையைப் பார்க்கும்போதே சிலீர் என்கிறது. எந்த தைரியத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்களோ.

    நாங்கள் காங்க்டக் சென்றிருந்தபோது ஜீப் ஓட்டுநர் ஏன் வேகவேகமாகத் திரும்பினார், ஏன் இடையில் தேவையில்லாத இடங்களில் நிறுத்தவில்லை என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான அனுபவம் தான். இரு சக்கர வாகனத்தில் - அதுவும் குறிப்பாக புல்லட் வாகனங்களில் இங்கே பயணிப்பவர்கள் - குழுவுடன் பயணிப்பதை அதிக பேர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அங்கே வாடகைக்கும் கிடைக்கிறது!

      இது போன்ற இடங்களில் ஓட்டுனர்கள் சொல்வதைக் கேட்கத் தான் வேண்டும் - அடிக்கடி பயணிப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இது போன்ற பாதைகளில் பயணிக்கும்போது இருக்கும் ஆபத்துகள் தெரிந்திருக்குமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. ஏஐ படங்கள் நன்று என்றாலும் இந்த மாதிரி பயணங்களில் ஆக்சுவல் படங்கள் கொடுக்கும் மகிழ்ச்சியை அவை கொடுப்பதில்லை.

    பனிப்பாதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நாமே எடுக்கும் படங்கள் தரும் மகிழ்வை, இந்த AI படங்கள் தராது. ஆனாலும் சில சமயங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் நன்றாக இருக்கிறது. பனிமொழிவின் போது வாகனங்கள் ஓட்டுவது கடினம் தான்.இமைய மலைபகுதிகளில் வாழும் பெண்கள் தைரிய சாலிகள் தான்.
    தையாக பயணம் செய்வதுமட்டுமல்ல கனமான பொருட்களை அசல்ட்டாய் தூக்கி செல்வார்கள்.
    ஓய்வு எடுத்துக் கொண்டு பயணம் தொடர்வது நல்லது. நாங்களும் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப் பிரதேசங்களில் பெண்கள் அதிக உழைப்பாளிகளாக இருப்பதோடு தைரியசாலிகளாகவும் இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. பத்மநாபன்2 மே, 2026 அன்று 8:13 AM

    ஸ்கூட்டியிலேயே குளிர்மலை பயணமா? அசாத்திய தைரியம்தான். பொதுவாக அதிக குளிரில் ஸ்கூட்டி போன்ற இலகு ரக வாகனங்கள் செயல் திறன் குறைய வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஆனாலும் இது போன்ற வாகனங்களில் நிறைய பேர் அங்கே பயணிக்கிறார்கள். வாடகைக்கும் இது போன்ற வாகனங்கள் கிடைக்கின்றனவே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
    2. இந்த மாதிரி சாகச (ஹா ஹா ஹா) பயணங்களில் அண்ணாச்சி கலந்துகொண்டிருக்கிறாரா (இல்லை வீட்டில் அனுமதி கிடைத்ததில்லையா?)

      நீக்கு
    3. சாகசப் பயணங்களில் என்னுடன் அண்ணாச்சி வந்ததில்லை. அழைத்துக் கொண்டிருக்கிறேன் - பார்க்கலாம் வருகிறாரா என்று....

      தங்களின் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....