தொகுப்புகள்

சனி, 27 ஜூன், 2026

காஃபி வித் கிட்டு - 245 - Father’s Day - வறுமையும் வசதியும் - காட்டுக்குள் ஹரி-ஹரன் - மாலதி மைத்ரி - வேகம் - மனிதர்கள் - Charekh Danda


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சராஹன் - அரண்மனை - காலை உணவு - பயணத்தில் தடங்கல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் விளம்பரம் :  Father’s Day


சென்ற வாரத்தின் ஞாயிறு - அதாவது 21-ஆம் தேதி Father’s Day! அதனைக் கொண்டாடும் விதமாக பல விளம்பரங்கள் பார்க்க முடிந்தது.  அவற்றில் ஒன்று தான் இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக உங்களுக்காக! ஒரு வருடம் முன்னர் Zomato வெளியிட்ட விளம்பரம் இது! எத்தனை அழகாக விளம்பரம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் பாருங்களேன்!


******

 

இந்த வாரத்தின் வாசகம் : வறுமையும் வசதியும்


இந்த வாரம் என் முன்னே சென்ற ஒரு இருசக்கர வாகனத்தின் பின்னர் எழுதி இருந்த வாசகம் கவர்ந்தது. ஒரு பெரிய தத்துவத்தை இரண்டே வரிகளில் சொல்லி விடுகின்ற வாசகம் அது. 


வறுமை வந்தால் வாடாதே!

வசதி வந்தால் ஆடாதே!


காலை அலுவலகம் செல்லும்போது பார்த்தது… பயணம் முழுவதும் அந்த வாசகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன்.  அலுவலகம் சென்றபிறகும் கூட இந்த வாசகம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும், இந்த வாசகம் சொல்லும் விதத்தில் நடந்து கொள்வது கடினம் தான்.  வறுமை வந்தும் வாடாமல் இருப்பது - அதிலும் வசதியுடன் இருந்தவர்கள் வறுமை வந்தால் அதிகம் வாடுவது இயல்பு.  அதே போல வசதி திடீரென்று ஒருவருக்கு வந்துவிட்டால், என்ன ஒரு ஆட்டம் போடுகிறார்கள்! பலரையும் நாம் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோமே…  இந்த வாசகம் குறித்த உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  


******


பழைய நினைப்புடா பேராண்டி : காட்டுக்குள் ஹரி-ஹரன்


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - காட்டுக்குள் ஹரி-ஹரன் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  



இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!


அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்க்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று.  நேற்று சென்றதை விடஇன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும். 


வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான்.  இங்கே தான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.


மத்தியப் பிரதேசம் அழைக்கிறது என்ற பெயரில் நான் எழுதிய ஒரு பயணத்தொடரின் ஒரு பகுதியிலிருந்து சில வரிகள் மேலே… முழு பதிவும் படிக்க விரும்பினால் மேலே இருக்கும் சுட்டியைச் சொடுக்கி படிக்கலாம்! படித்துப் பாருங்களேன் - இது வரை படித்திருக்காவிட்டால்!


******


படித்ததில் பிடித்தது  : மழைக்காலச் சிறுமி


மாலதி மைத்ரி எனும் கவிஞரின் கவிதை ஒன்று முகநூலில் படிக்கக் கிடைத்தது. கவிதை கீழே…


மழையை விட, கடலை விட

நதியை விட, குளத்தை விட

அதிமர்மமானதும்,

அதிரகசியமானதுமான நீர்

கண்ணீர்!!


எனக்கு இந்தக் கவிதை பிடித்திருக்க, அவரது வேறு சில கவிதைகளை படிக்கலாம் என்று இணையத்தில் தேடியபோது கிடைத்த இன்னுமொரு கவிதையும் பிடித்திருந்தது - அந்தக் கவிதையும் கீழே!


மழைக்காலச் சிறுமி



வரிசை தப்பிய எறும்பு ஒன்று

வருகிறது தலையணை மேல்

அச்சுவார்த்த உடல்

சிறு அசைவுடன் நகர்கிறது


தலை தூக்கிப் பார்த்து

என்னைப் போலவே சிரிக்கிறது

வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு


மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது


மடியில் கட்டிவரும் என் அம்மாவின்

மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்


- மாலதி மைத்ரி


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - வேகம் :


நேற்று மாலை கீதா சாம்பசிவம் அவர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அம்மா மண்டபம் சாலையில் வந்து கொண்டிருக்க எதிரே ஒரு பெரியவர் கீழே விழுந்து கிடக்க, அவர் மீது அவர் ஓட்டி வந்த வாகனம் கிடைக்கிறது. பக்கத்தில் இன்னுமொரு பைக் கீழே கிடக்கிறது.  பைக் அசுர வேகத்தில் வந்து ஓரமாகச் சென்ற பெரியவர் மீது இடிக்க கீழே விழுந்து இருக்கிறார்.  எதற்காக இத்தனை வேகம் - அதுவும் இருட்டு சமயத்தில், ஒரு பரபரப்பான சாலையில்? நெடுஞ்சாலை, அகலமான சாலை என்றால் கூட பரவாயில்லை, சிறு சந்துகளில் கூட 60-70 களில் பறக்கும் எண்ணம் ஏன் வருகிறது இவர்களுக்கு? விழுந்தவரைத் தூக்கக் கூட ஆள் இருப்பதில்லை. தூக்கி விட்டு, ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்து, எதிர் கடையிலிருந்து தண்ணீர் வாங்கிக் கொடுத்து, கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு போங்க என்று சொன்னேன். இடித்தவர் பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டார்.  ஏன் இந்த வேகம்? வேகம் என்னதான் தந்து விடப் போகிறது? தன் வாகனம் தன் கட்டுப்பாடில் மட்டுமே இருக்கிறது என்கிற எண்ணம் பல சமயங்களில் தப்பி விடுகிறது. எந்த ஒரு விபத்தும் சில நொடிகளில் நடந்து விடக்கூடும்! விபத்து நடப்பது நொடிகளில் என்றாலும் அதன் தாக்கமும் விளைவுகளும் பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட நீடிக்கக்கூடும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் இவர்கள்…  என்னவோ போடா மாதவா! ஒண்ணும் சொல்வதற்கில்லை! 


******


இந்த வாரத்தின் குறும்படம் :  மனிதர்கள்


Covai Express என்று ஒரு ஒரு Facebook பக்கமும் Youtube சானலும் இருக்கிறது. எப்போதாவது அதிலிருந்து சில காணொளிகள் ஸ்க்ரோல் செய்யும் போது வருவதுண்டு. சமீபத்தில் அப்படி வந்ததில் பார்த்த ஒரு காணொளி - மனிதர்கள் என்ற தலைப்புடன் (கீழே எளிமை என்றும் இருந்தது…) எனும் காணொளி. மனதைத் தொட்டது.  முடிந்தால் பாருங்களேன்! பார்க்க சுட்டி கீழே தந்திருக்கிறேன். 


மனிதர்கள் #story #emotionalstory #scene #shortfilm #kadhai #covaiexpress - YouTube


******


இந்த வாரத்தின் சுற்றுலா தகவல் - Charak முனிவரும் Charekh Danda வும் :









நண்பர் அனுப்பிய படங்கள்...

ஆயுர்வேதத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ரிஷி முனிவர் சரக். அவரது ஆஷ்ரம் உத்திராகண்ட் மாநிலத்தின் கோட்த்வார் அருகே அமைந்திருக்கிறது. அந்த இடத்தின் பெயர் Charekh Danda. Garhwali மொழியில் Danda என்றால் மலை! (நன்றி: நண்பர் பிஷ்ட்) அவரது காலத்தில் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியாக இருக்கும் அங்கே இருக்கும் மூலிகைகள், வேர், செடி, இலை என அனைத்தையும் வைத்து வைத்தியம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. தற்போது மலைகளில் சூழல் மாறியிருக்கலாம் என்றாலும் இன்னமும் பசுமை அங்கே இருக்கிறது. நண்பர் இந்த வாரம் (மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் அடுத்த பயணத்தினை தொடங்கி இருக்கிறார்.  நேற்றைய தினம் இந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார். சில படங்களை அனுப்பி இருந்தார். பயணம் முடிந்ததும் அவரது Youtube Channel-இல் தகவல்களும் காட்சிகளும் வெளியிடுவார். அப்போது பார்த்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.  இப்போதைக்கு இந்தத் தகவல் மட்டும்!  உங்களில் எத்தனை பேருக்கு அந்த முனிரிஷி பெயரில் ஒரு இடம் இருப்பது தெரியும்? தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தகவல் சொல்லுங்களேன்! கோட்த்வார் ஹரித்வார் அருகே இருக்கிறது. அந்த வழியாக நான் பயணித்து Lansdowne என்கிற இடத்திற்குச் சென்றிருக்கிறேன். அது குறித்து எனது பக்கத்திலும் எழுதி இருக்கிறேன் என்பது உங்களில் சிலருக்கு நினைவில் இருக்கலாம்! 


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

27 ஜூன் 2026


46 கருத்துகள்:

  1. வாசகம் எச்சரிக்கிறது.

    விளம்பரம் நன்று. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் விளம்பரம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாகனத்தின் பின் வாசகம் ரசிக்க வைத்தது.

    "வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே" பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. கூடவே இன்னொரு பாடல் வரிகளும்.. "பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாகன வாசகம் - மகிழ்ச்சி. எனக்கும் இந்தப் பாடல்கள் நினைவுக்கு வந்தன ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பழைய நினைப்புடா பேராண்டி பார்த்தேன்  "பன்னி கூட்டமாத்தான் வரும்னு தலைவர் சொன்னாரு..... இங்க தனியா இருக்கு! ஓ... காட்டுப் பன்றி தனியாத்தான் வருமோ....!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுப் பன்றி தனியாத்தான் வருமோ? ஹாஹா... இருக்கலாம்! பொதுவாக பன்றிகள் பார்த்தவரைக்கும் கூட்டமாகவே இருக்கும். காட்டுப்பன்றி வழி தவறி வந்திருக்கலாமாக இருக்கும் என்று தோன்றுகிறது ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மைத்திரியின் கவிதைகளை ரசித்தேன். முதல் கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைத்ரியின் கவிதைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வேகம் பற்றிய உங்கள் சிந்தனை எனக்கும் ஏற்புடையதுதான்.  எனினும் நாம் கண்ணால் பார்க்காத அந்தக் காட்சியில் யார் மீது தவறு என்று சொல்வது கடினம். 

    மதுரையில் ஒருமுறை டூ வீலரில் அலுவலகம் விட்டு வீடு சென்று கொண்டிருந்தபோது சற்றே முன்னால் ஒரு பெண் என் இடது பக்கம் சென்று கொண்டிருந்தவர் சட்டென ஏதோ அவர் மட்டும்தான் அந்தச் சாலையில் வந்து கொண்டிருப்பவர் போல வலது பக்கம் ஒடித்து சாலை மாற முயன்றார்.  பக்கத்தில் இருந்ததால் பிரேக் பிடித்தும் சற்றே இடித்து விட்டது.  என்னை விளக்கம் சொல்லக்கூட விடவில்லை கூட்டம்.  அவர் பெண் என்பதாலும் நான் ஆண் என்பதாலும் யார் குற்றவாளி என்று முடிவு செய்து விட்டார்கள்.  அந்தப் பெண் மட்டும் மெல்லிய குரலில் 'ஸாரி' சொன்னது ஆறுதல்!

    நான் போலீஸ்காரர் வருவதற்கு முன் அழுவினேன்.  என்னிடம் அப்போது(ம்) லைசன்ஸ் கிடையாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகம் பற்றிய தங்களது எண்ணங்களும் சரி தான். யார் மீது தப்பு இருந்தாலும், வேகமாக ஓட்டவேண்டும் என்ற அவசியம் இல்லையே. வேகமாக ஓட்டும்போது சட்டென்று நிலையை சமாளிக்க வேண்டி வரும்போது தடுமாறிவிடுவோம். அதனால் தான் வேகம் விவேகமல்ல! மற்றபடி உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பல ஆண்களுக்கும் உண்டு. எதுவும் சொல்ல விடமாட்டார்கள் - டிசைன் அப்படி. லைசன்ஸ் இல்லாமலே தான் நானும் பல வருடங்கள் இருந்தேன். ஒரு வருடத்திற்கு முன்னர் தான் லைசன்ஸ் வாங்கினேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அந்தக் குருடர் விற்பனை நானும் முன்னரே பார்த்தேன்.

    ரிஷி முனிவர் சரக்.பற்றிய தகவல்களும் படங்களும் பார்த்தேன், படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் - நிறைய சுற்றுகிறது போலும். ரிஷி முனிவர் குறித்த தகவல்களையும் படித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் மிக உண்மை. நேற்று வல்லிம்மா ஒரு shorts அனுப்பிருந்தாங்க நம்ம பாரதி பாஸ்கர் அவங்க ஒரு புத்தகம் பற்றிச் சொல்வது Quit எனும் ஆங்கிலப் புத்தகம். அருமையான கருத்து ஒரு சின்ன நிகழ்வுடன் ஆசிரியர் சொல்லிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

    அது நினைவுக்கு வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. வல்லிம்மா அனுப்பிய ஷார்ட்ஸ்... எனக்கும் பாரதி பாஸ்கர் காணொளிகள் சில அவ்வப்போது வருகின்றன.

      நீக்கு
  8. மிகவும் ரசித்தேன் விளம்பரத்தை. நல்ல அப்பாக்கள் என்றதும் நம் வீடு, இங்கு நட்புகள் நினைவுக்கு வந்தனர், நீங்கள் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா குறித்த விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அப்பா என்றதும் என் நினைவும் வந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. வறுமையும் வசதியும் - வாகனத்தின் பின்புற வாசகம் கவர்ந்தது.

    காட்டுக்குள் ஹரிஹரன் வாசித்த நினைவில்லை போய்ப்பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வறுமையும் வசதியும் - எனக்கும் மனதில் நின்றது. அதனால் பகிர்ந்து விட்டேன்.

      காட்டுக்குள் ஹரிஹரன் - நான் எழுதிய முதல் பயணத் தொடர்... முடிந்தால் வாசித்துப் பாருங்கள். புத்தகமாக www.freetamilebooks.com தளத்தில் இருக்கிறது. இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் கீதா ஜி.

      நீக்கு
  10. “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று.//

    இது பல இடங்களில் இருந்தாலும், மக்கள் என்னவோ பிரிச்சுப் பார்த்து பேதம் ..

    இந்தப் புத்தகம் மின்னூல் வரப்ப நாங்க உரை ஏதாச்சும் எழுதிக் கொடுத்தோமோ ஏதோ நினைவாடுது..இல்லை அது வேறோ?

    எல்லாப்பகுதியின் வாசிக்கக் குறித்துக் கொண்டுவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பேதங்கள் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பல இடங்களில் பிரச்சனைகள் தான். என்றைக்கு தீருமோ...

      இது நான் முதல் முதலில் எழுதிய பயணத் தொடர் கீதா ஜி. நீங்கள் முன்னுரை எழுதியது எந்தப் புத்தகத்திற்கு என்பது எனக்கும் நினைவில் இல்லை. தரவிறக்கம் செய்ய சுட்டி மேலே தந்திருக்கிறேன்.

      நீக்கு
  11. கண்ணீர் கவிதை சூப்பர்

    உணர்வுகள்
    கதைகள்
    கண்ணீர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணீர் கவிதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  12. மாலதி மைத்ரி அவர்களின் அடுத்த கவிதையும் உணர்வுபூர்வமான ஒன்று ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கவிதைகளும் நன்றாகவே இருந்தன. இன்னும் சில கவிதைகள் இருக்கின்றன. முடிந்தால் சுட்டி அனுப்புகிறேன் கீதா ஜி.

      நீக்கு
  13. வேகம் - அதே சிந்தனை, எண்ணம், கருத்தும் இங்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகம் - ஆனால் பலருக்கும் வேகம் தான் பிடித்திருக்கிறது கீதா ஜி - குறிப்பாக இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும்.

      நீக்கு
  14. முகநூல் குறும்படம் கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது. அருமையான படம்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் - இப்படியும் சில மனிதர்கள். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  15. Charak முனிவரும் Charekh Danda வும் ://

    ஜி இப்படிப் படங்கள் தகவல் போட்டு கொதிய கிளப்பறீங்களே ஹாஹாஹா...

    (நன்றி: நண்பர் பிஷ்ட்) அவரது காலத்தில் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியாக இருக்கும் அங்கே இருக்கும் மூலிகைகள், வேர், செடி, இலை என அனைத்தையும் வைத்து வைத்தியம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.//

    பொதுவாகவே சொல்வதுண்டு வடக்கில் ஆயுர்வேதம் தெற்கில் சித்தர்களின் சித்த மருத்துவம் இரண்டுமே மூலிகைகள் சார்ந்த மருத்துவம் இல்லையா...ஒரு சில வித்தியாசங்கள் உண்டுதான் ஆனால் அடிப்படை மூலிகைகள்.

    நண்பர் பிஷ்ட் கலக்குகிறார் பாருங்க....உங்களுக்கும் ஆசை வந்திருக்குமே இங்கு போக!!!!

    ரொம்ப ரசித்தேன் ஜி படங்களும் இந்த இடம் பற்றியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜி இப்படிப் படங்கள் தகவல் போட்டு கொதிய கிளப்பறீங்களே ஹாஹாஹா...// ஹாஹா... நேற்று அவரது WhatsApp Status பார்த்ததும் அவருடன் உரையாடி படங்களை வாங்கி இங்கே சேர்த்து விட்டேன் - தகவல்களையும் படங்களையும். மூன்று நாட்களும் பயணம். நான் தில்லியில் இருந்திருந்தால் பயணத்தில் நானும் இணைந்திருக்க வாய்ப்பிருந்தது!

      இங்கேயும் இரண்டு நாட்களாக சில பழமையான ஆலயங்களுக்குச் சென்று வந்தேன் கீதா ஜி. விரைவில் பதிவாக எழுதுகிறேன்.

      நீக்கு
  16. முனிரிஷி தகவல் புதிது ஜி

    ஓ நீங்கள் முன்ன அஸ்தினாபுரம் எல்லாம் போனீங்களே அப்பவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. லான்ஸ்டௌன் சென்று திரும்பும்போது அஸ்தினாபுரம் வழியாகவே திரும்பினோம் கீதா ஜி.

      நீக்கு
  17. கோட்த்வார் ஹரித்வார் //

    இதை வைத்துச் சொல்கிறேன்...அந்தச் சுட்டிக்குப் போய்ப் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த வழி தான். சுட்டியில் பாருங்கள் கீதா ஜி.

      நீக்கு
  18. வசதி வந்தவர்கள் பெரும்பாலும் ஆடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அளவுக்கு மீறி வசதி வந்தால் இன்னமுமே ஜாக்கிரதையாக இருக்கணும், எப்போது இறைவன் கீழே இறக்கிவிடுவார் என்று தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது இறைவன் கீழே இறக்கிவிடுவார் என்று தெரியாது - உண்மை நெல்லைத் தமிழன். என்ன கொடுப்பான் என்பதை அவனைத் தவிர வேறு யாரறிவார்...

      நீக்கு
  19. // ஏன் இந்த வேகம்? // இந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலும் எந்த டிராபிக் ரூல்ஸையும் ஃபாலோ பண்ணுவதில்லை. அதிலும் சிக்னலில் வேகவேகமாக முந்துவார்கள். வேகமாகப் போகிறவர்கள் உலக மகா சோம்பேறிகள் என்று அர்த்தம். அரை மணி நேரம் முன்னால் கிளம்பினால் என்னவாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகச் சொன்னாலும் சிலர் - இரு சக்கர வாகன ஓட்டிகளும் - ட்ராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ செய்யத்தான் செய்கிறார்கள். வேகமாகப் போகிறவர்கள் உலக மகா சோம்பேறிகள் - ஹாஹா.. வித்தியாசமான சிந்தனை நெல்லைத் தமிழன். அவர்களிடம் கேட்டால் இதில் இருக்கும் சுகம் உங்களுக்கு என்ன தெரியும் என்றும், கேட்கும் நம்மை Boomer Uncle என்றும் சொல்லக்கூடும்.

      நீக்கு
  20. /அதிமர்மமானதும்,

    அதிரகசியமானதுமான நீர்

    கண்ணீர்!!//

    ஆமாம்.. அது மனிதனின் உணர்ச்சியை அவன் அறியாமலேயே வெளிப்படுத்திவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனின் உணர்ச்சியை அவன் அறியாமலேயே வெளிப்படுத்திவிடும் - உண்மை தான். சிலருக்கு எந்த நேரத்திலும் கண்ணீர் வருவதில்லை நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. ரொம்ப நாள் அழாமல் இருந்தால், ஏதோ ஒரு பாடல், நிகழ்வு என்னை அழ வைத்துவிடும். அல்லது ஒரு நல்ல கர்னாடிக் பாட்டு. கண்ணீர் வராத மனிதர்களா? ஆச்சர்யம்தான். (ஒருவேளை அவங்க, அடுத்தவங்க கண்களில் நீரை வரவழைக்கும் டைப்போ)

      நீக்கு
    3. அடுத்தவங்க கண்களில் நீரை வரவழைக்கும் டைப்போ? ஹாஹா.. இருக்கலாம் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  21. அனைத்தும் அருமை .
    வாசகம் அருமை. தந்தையர் தின காணொளி அருமை.கவிதைகள் அருமை.
    சென்ற இடம் பழசு காட்டுக்குள் இருக்கும் ஹரி படிக்கிறேன்.
    மழைக்கால சிறுமி படம் அருமை.

    கீதா சாம்பசிவம் நலமா? ஒரு வருடம் ஓடி விட்டதா சார் மறைந்து? அவர்நினைவு தினத்திற்கு வந்து இருக்கிறார்களா?

    கீழே விழுந்தவரை தூக்கி அமர வைத்து த்ண்னீர் கொடுத்து ஆசுவாசுபடுத்தி சிறிது நேரம் அமர்ந்து போக சொன்னது நல்ல செயல்.
    வேகம் விவேகம் இல்லை என்பதை எப்போது தெரிந்து கொள்வார்களோ!

    ரோஜாமலர் கண்ணைகவர்ந்ததுஇயற்கை படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      ஆமாம் சாம்பசிவம் சார் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நினைவு தினம் சமீபத்தில் தான் முடிந்தது.

      நீக்கு
  22. வேக ஓட்டம் என்பது ஆபத்தில் முடிவதை ஏன்தான் புலியாட்டம் என்கிறார்களோ?

    கவிதை, காணொளிகள் பிடித்திருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....