தொகுப்புகள்

வியாழன், 3 செப்டம்பர், 2026

சின்ன சின்ன ஆசை! - என் பார்வையில் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

********


சின்ன சின்ன ஆசை! - என் பார்வையில்!



வார இறுதியில் மகளோடு சேர்ந்து Hotstarல் பார்த்த படம் தான் ‘சின்ன சின்ன ஆசை’! அம்மா! நீ இந்தப் படத்தை பார்க்கணும்னு சொல்லிண்டு இருந்தியேன்னு தான் நானும் இன்னும் பார்க்காம இருக்கேன்! வா! இன்னிக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம்! எங்கிட்ட ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் தான் இருக்கே! என்றாள்! அப்படித்தான் இந்த படத்தை பார்த்தேன்!


மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் லீலாவாக மதுபாலாவும், மாதவன் மாஸ்டராக இந்தரன்ஸும் என இருவருமே வெகு இயல்பாக நடித்துள்ளனர்! ‘ஒருவர் வாழ்வில் ஒரு நாளில் அப்படி என்ன தான் நடந்து விட முடியும்? என்ற கேள்விக்கு பதிலாய் இந்தப் படம் உருவாகியிருக்கிறது என்று தான் சொல்லணும்! பார்த்ததிலிருந்து அதைப் பற்றிய எண்ணங்களை பலவாறு மனதில் அசைப் போட்டுக் கொண்டே இருக்கிறேன்!


லீலா கணவனை இழந்தவள்! அவளது வாழ்வில் அவளின் சின்ன சின்ன ஆசைகள் குறித்துக் கேட்கக் கூட ஆளின்றி, அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் வேறு ஒரு கோணத்தில் அவளை பயணிக்க வைத்திருக்கிறது அவளது வாழ்க்கை என்பது கதையின் ஊடாக வெளிப்படுகிறது! இரண்டாம் தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு அவரின் குழந்தைக்கு ஆயாவாகவும், கணவரின் இறுதிக்காலம் வரை அவருக்கு பணிவிடை செய்யும் ஜீவனாக மட்டுமே வாழ்ந்திருக்கிறாள்!


லீலாவின் சிநேகிதி அவளின் சிறுவயது ஆசைகளில் ஒன்றான வாரணாசிக்குச் செல்வது என்பதை அறிந்து, ஒரு பயணம் ஏற்பாடு செய்து தர, ஊருக்கு வந்த இடத்தில் அவளோடு வந்த க்ரூப்பை விட்டு பிரிந்து உடைமைகளையும், செல்ஃபோனையும் பறி கொடுத்து விட்டு அழுது கொண்டிருக்கும் தருணத்தில் தான் ‘மாதவன் மாஸ்டர்' அவளுக்கு அறிமுகமாகிறார்!


மகள் ஜானகி வாரணாசியில் ‘கதக்' கற்றுக் கொண்டிருக்க, அவளைக் காண அங்கே அடிக்கடி வரும் மாதவன் மாஸ்டரை அங்கே உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயம் உண்டு என்பதால் அவரிடம் தெரிவித்து லீலாவைப் பற்றி அறிய முற்படுகின்றனர்! புதியதோர் இடத்தில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு அழுது கொண்டிருக்கும் லீலாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை அவளின் க்ரூப்போடு இணைத்து விட முற்படும் நகர்வு தான் இந்தப் படத்தின் கதை!


இறுக்கமான மனநிலையில் கலங்கிக் கொண்டிருக்கும் லீலா பிறகு மெதுவாக மாஸ்டரிடம் பேசத் துவங்குகிறாள்!


நான் உங்கள நம்பலாமா? என்று கேட்டு மெல்ல மெல்ல அவரிடம் அவளது சூழலை பகிர்ந்து கொள்கிறாள்!


பின்பு நம்பிக்கை வந்ததும். .


சுப்பு சொன்னா வாரணாசியில லஸ்ஸி, கச்சோடி எல்லாம் நல்லாருக்கும்னு! என்று சொல்கிறாள்!


சுப்பு சுப்புன்னு சொல்றீங்களே! யார் அந்த சுப்பு? 


அதுவா! பக்கத்து வீட்டு மருமக! ஹைதராபாத்ல இருக்கா! ஆறு மாசத்துக்கு ஒருதடவ தான் வருவா! என்று சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறாள்!


நான் எங்கேயும் போனதில்ல! டெல்லிக்கு மட்டும் போயிருக்கேன்! அவரு ஆஸ்பத்திரில இருந்தப்போ…!


எனக்கு பேரன் கூட இருக்கான்! தெரியுமா!


எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்ங்க!! ஆனா அவருக்கு தான் என்ன பிடிக்கல! ஒவ்வொரு வார்த்தைக்கும் சண்ட போடுவார்! கடைசியா முடியாம ஆஸ்பத்திரில இருந்தப்போ கூட என்ன எங்கேயும் போக விடல! நீ தான் எல்லாமே பண்ணனும்னு சொன்னாரு!


நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க? எங்க உங்களுக்கு பிடிச்சிருந்தது?


ம்ம்ம்! நிறைய இடத்துக்கு போயிருக்கேன்! கொஞ்ச நாள் முன்னாடி lahaul spiti போயிருந்தேன்! ரொம்ப அழகா இருந்தது!


அப்படியாங்க! அது எங்க இருக்கு?


ஹிமாச்சல்ல இருக்கிற கிராமம்! வழில எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்!


மாதவன் மாஸ்டரோடு பேசிக் கொண்டே வரும் லீலாவுக்கு கிடைக்கும் அனுபவங்களில் வாரணாசியின் பரந்து விரிந்த அழகும் அங்குள்ள மனிதர்களும் என நம்மையும் அங்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கிறார் இயக்குநர்!


இருவருக்கும் இடையே ஏற்படும் நல்லதோர் புரிதல்! இவர்களின் நட்பை அழகான கோணத்தில் எடுத்துக் கொள்ளும் மகள் ஜானகி! அந்த ஒருநாளில் லீலாவுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு வயது லீலா மெல்ல மெல்ல வெளிப்படுவதும் அவளின் ஆசைகளும், திறமைகளும் அங்கு அங்கீகரிக்கப்படுவதும் வெகு அழகு! 


கண்ணியமான அதே சமயம் பக்குவப்பட்ட இவர்களின் இனிய நட்புடன் லீலா திரும்ப க்ரூப்போடு சேர்ந்தாளா! இல்லையா! என்பது தான் மீதிக்கதையாக சொல்லப்பட்டுள்ளது! சின்ன சின்ன ஆசை என்ற இந்தப் படம் நிச்சயம் ஒரு ஃபீல் குட் மூவி! 


சலசலப்பு இல்லாத ஒரு சிறு நீரோடையைப் போன்று கதையுடன் நம்மை பயணிக்க வைத்து, லீலா என்ற பெண்ணின் மனதை படம் பிடித்துக் காண்பித்தது போலிருந்தது! இவர்களைப் போன்றவர்களை நாம் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு! இதுவரை பார்க்கவில்லை என்றால் நிச்சயம் ஒருமுறையாவது பாருங்கள்!

*******

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

03-09-2026

2 கருத்துகள்:

  1. சில லாஜிக் கேள்விகளைத் தவிர்த்து விட்டு நானும் படத்தை ரசித்தேன்.  அதற்கு என் பார்வையில் ஒரு சில வரிகளும் எங்கள் தளத்தில் எழுதி இருந்தேன்.

    .https://engalblog.blogspot.com/2026/08/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    இந்தப்படம் அதிசயமாக எங்கள் குடும்பம் கலந்து கொள்ளாத ஒரு பொழுதில் நான் மட்டும் Hotstarல் பார்த்தேன். நன்றாக இருந்தது. இருவரின் மென்மையான நடிப்பும், பேச்சுக்களும் மனதை கவர்ந்தன. முடிவில் மனது பாரமாகி அடக்க முடியாமல் கொஞ்சம் அழுது விட்டேன். அந்தளவுக்கு மெல்லிய உணர்ச்சிகளை தந்த படம். உங்கள் விமர்சனமும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....