தொகுப்புகள்

திங்கள், 18 அக்டோபர், 2010

மழலை மொழி



குழந்தையின் மழலை மொழியை கேட்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை என்பதை எங்கும் எவரிடமும் எவ்வித தயக்கமுமின்றி கூறலாம். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ராகம். அவர்களாகவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை வைத்துவிடுவார்கள்.

என்னுடைய பெண் பிறந்து இரண்டு வயது வரை சில சொற்களே பேசுவாள். மனைவிக்கு அது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. ”எப்பதாங்க நம்ம பொண்ணு அழகா மழலையா பேசுவா?” என்று என்னை அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

ஆனால் எனக்கென்னவோ அவள் மழலையில் அழகழகாக சில வார்த்தைகள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். அவளின் சில மழலை வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் இங்கே:

நிக்கி – பாப்கார்ன்; லாலா ஐஸ்க்ரீம் – Kwality Walls Ice Cream; மம்மி 2 – ஜாம்; பூஸ்டிகா – பூஸ்ட்; மம்மாச்சி – ஸ்வாமி; ஒயிட் – வாழைப்பழம்; முன்பே வா அன்பே வா பிஸ்கெட் - Little Hearts Biscuit; பட்டாசு – விளக்கு/ மெழுகுவர்த்தி; நெய்மோஸ் – நெயில் பாலிஷ்; நவல் சோப் – Vivel Soap; இஞ்சி ஐஸ்க்ரீம் – Mother Diary Ice Cream; கோண்டிட்டா – Bournvitta; இங்கேர் – இங்க பாரு.

அவள் சொன்ன வார்த்தைகளில் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது இவ்வளவு. அர்த்தம் தெரியாத வார்த்தைகள் எண்ணிலடங்கா. இன்று வரை புரியாத ஒரு சொற்றொடர் – “இசீசா…. அக்கூக்கா…. குய்…..” இதை சொல்லிவிட்டு “ஹாஹா…..ஹாஹா” என்று வேறு சிரிப்பாள். இன்னொரு சொல் – “இட்டி பண்டு”. தெலுங்கில் “பண்டு” என்றால் பழம். ஆனால் “இட்டி பண்டு” என்று ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இப்போது ஐந்து வயதில் மகளின் மழலை கொஞ்சம் மாறி இருந்தாலும், நிறைய பேசுகிறாள். சென்ற வருடம் பள்ளியில் சேர்த்த பிறகு தமிழிலும் ஹிந்தியிலும் மாற்றி மாற்றி எதையாவது பேசிக்கொண்டே இருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளாள்.

பேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே!” என்று சொல்லுவது வேறு விஷயம்!

டிஸ்கி: ஆங்கிலம் கற்கணுமா? ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவேண்டுமா? பிரெஞ்சு, ஜப்பான், சீன மொழி கற்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் (உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு) அயல் நாட்டு மொழிகளை முழுமையாக (அரை குறையாக) சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஊருக்கு ஊர் திறந்து வைத்திருக்கும் சென்டர்கள் நடத்துபவர்கள், உங்கள் குழந்தையின் மழலை மொழிக்கு நாங்கள் அர்த்தம் சொல்லுகிறோம். கட்டணம் ஒவ்வொரு மழலை வார்த்தைக்கும் நூறு ரூபாய் என்று இன்னும் விளம்பரம் செய்யாததுதான் பாக்கி.

29 கருத்துகள்:

  1. குழந்தையின் மழலை அழகுதான் .. நாங்கள் அதை பரிபூர்ணமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. குழல் இனிது யாழ் இனிது என்பார் ...மழலை மொழி கேளாதவர். உண்மை தான் மழலை உலகமே ..ஒரு பேருவகை .( பெரும்பேறு)

    பதிலளிநீக்கு
  3. //பேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே!” என்று சொல்லுவது வேறு விஷயம்!//

    why blood?
    same blood!!

    hi hi hi...same dialog at every house brother, nice post. Thanks for sharing a post on such a great language. Regards to your Daughter.

    :))

    பதிலளிநீக்கு
  4. இன்று வரை புரியாத ஒரு சொற்றொடர் – “இசீசா…. அக்கூக்கா…. குய்…..” இதை சொல்லிவிட்டு “ஹாஹா…..ஹாஹா” என்று வேறு சிரிப்பாள்..
    tops!

    பதிலளிநீக்கு
  5. அழகான மழலை. இதுங்க பேச ஆரம்பிச்சப்புறம் கேக்கிறதுக்கு ரெண்டு காது பத்தாது :-))))))))

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா... மழலை மொழி அழகுக்கு இணை வேறென்ன..

    பதிலளிநீக்கு
  7. சூப்ப்பரா இக்கு. வெங்க்க்கு நாகஜாஜ் .... மழலை மொழியில் சொல்லிப் பார்த்தேன்.. ;-) ;-)

    பதிலளிநீக்கு
  8. வள்ளுவர் சும்மாவா சொன்னாரு. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. சில சமயம் குழந்தைங்க பேச ஆரம்பிச்சதும் அந்த மொழிக்கான டிக்‌ஷனரியையும் ஆண்டவன் கொடுத்தா நல்லா இருந்திருக்கும்னு யோசிச்சிருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  9. பேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே!”/////

    ஹா ஹா ஹா எதார்த்தம். நல்ல அனுபவம்

    பதிலளிநீக்கு
  10. இட்டி பண்டுன்னா என்னன்னு இப்ப உங்க பொண்ணைக் கேட்டுப் பார்க்கலாமே, சார்!!

    பதிலளிநீக்கு
  11. எல்லா மொழியும் அமிர்தமாய் நம் மேல் பொழிவது மழலை வழிதானே...! ஒலிநாடாவில் பதிந்தீர்களா...? பிற்காலத்தில் படிக்கவோ, வேலை நிமித்தமோ , திருமணமாகியோ அவள் நம்மை பிரிய நேர்ந்தால் நம் மனசை ஆற்றும் மாபெரும் வேலைக்காகுமே ...

    பதிலளிநீக்கு
  12. @ LK: நன்றி நண்பரே. மழலை மொழி சுகமான அனுபவம்தான்.

    @ நிலாமதி: நன்றி சகோ. வள்ளுவர் அழகாய் சொல்லி இருக்கிறார் அல்லவா?

    @ அன்னு: நன்றி சகோ. உங்கள் விசாரிப்புகளை மகளிடம் சொல்லி விடுகிறேன்.

    @ நன்றி K.B.J. சார்.

    @ அமைதிச்சாரல்: நாலு காது [என்னுடையதும், மனைவியின் காதும்] இருந்தும் பற்றவில்லை :)

    @ கலாநேசன்: நன்றி நண்பரே.

    @ விக்னேஷ்வரி: உண்மைதான். நன்றி.

    @ RVS: வளர்ந்த குழந்தையின் மழலை…. உங்களுடையதைச் சொன்னேன். :-))))))

    @ புதுகைத் தென்றல்: சரியாச் சொன்னீங்க. குழந்தையின் பேச்சுக்கு அகராதி கிடைத்தால் வசதியாகத் தான் இருக்கும்…

    @ சௌந்தர்: நன்றி நண்பரே…

    @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: கேட்டுப் பார்த்தேன் சார், அழகிய புன்னகையே பதிலாய் கிடைத்தது. :-)))))))

    @ நிலா மகள்: பதிந்து வைக்காதது தான் இப்போது குறையாய் இருக்கிறது சகோ…. எழுத்திலாவது இருக்கட்டுமே என்றுதான் இப்பதிவு! நன்றி… :-)))))))

    பதிலளிநீக்கு
  13. நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. @ DrPKandaswamyPhD: ஆமாம் ஐயா. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நண்டு படம் ரிலீசான டைம். என் சிஸ்டர், மாப்பிள்ளை, அவங்களோட ரெண்டு வயசுப் பையன், நான் படம் பார்க்கப் போனோம். நான் மகேந்திரன் சார் ரசிகன். விளம்பரம் ஓடறவரை அமைதியா இருந்த பொடியன் படம் போட்ட உடனே கத்த ஆரம்பிச்சான் பாருங்க.. “நீ அப்புறம் படம் பார்க்கலாம்.. குழந்தய தூக்கிட்டு போ’ன்னுட்டாங்க. வெளிய வந்தா பஸ்ஸுக்கு நிக்கிறப்ப அவன் சொல்றான்.. பஸ்சு நானாம். நண்டே போலாம்.. ஹை.. படம் போலாமான்னு கேட்டா.. ஊஹூம்.. நண்டே (நடந்தே) போலாம்.. அதட்டி பஸ்ஸில் ஏற்றி வெறுப்போடு போய்ச் சேர்ந்தேன்..
    மழலை மிக அழகு.. உங்கள் பதிவும்.

    பதிலளிநீக்கு
  16. @ ரிஷபன்: தங்கள் வருகைக்கும், தங்களின் அனுபவம் பகிர்ந்ததற்கும் நன்றி சார். நண்டு போகலாம்னு சொன்னது புன்னகையை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  17. குழந்தையின் மழலை மிக அழகானது. .. நாங்களும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அழகுக்கு இணை வேறெதுவும் இல்லை.நானும் என்னோட குழந்தையின் மழலை பற்றி எழுத நினைத்துக்கொண்டிருந்தேன்.
    நல்லா அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. @ ஜிஜி: வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க குழந்தையின் மழலை பற்றியும் எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. என்ன ஒரு சுவாரஸ்யம்? இட்டி பண்டுவுக்கு இப்போது ரோஷ்னி கிட்ட இப்போ அர்த்தம் கேட்டு பார்ப்பதுதானே?!!! இதை எல்லாம் ரெகார்ட் செய்து கொண்டு பின்னாட்களில் கேட்டு அனுபவிப்பது இன்னும் சுவாரஸ்யம்.

    டிஸ்கி சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் புரியாத விஷயம் “இட்டி பண்டு”... இப்போதெல்லாம் ரோஷ்ணியிடம் இதைச் சொல்லி அர்த்தம் கேட்டால், ஒரு புன்சிரிப்பால் எங்களை அசத்திவிட்டு தனது வேலையை தொடர்கிறார்! :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  20. உங்கள் மறுபாதி கொடுத்த லின்க் எனக்கு ஒரு குட்டிஸ்வர்க்கத்தையே அறிமுகப் படுத்திவிட்டது.
    குக்கூ அவள்தான். அவள் பாடும் குயில் பாட்டுதான் அவள் மழலை.
    மனமினிக்க மழலை வெள்ளம் படித்தேன். மிகமிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளின் மொழி என்றுமே இனிமைதானே வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  21. எனது மகள் மழலை பாஷை பேசுவதால் பள்ளியில் நடைபெறும் போ‌ட்டிக‌ளி‌ல் புறக்கணிக்க படுகிறார். வயது 5 யுக்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... பள்ளியில் சென்று பேசிப் பாருங்களேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமா...

      நீக்கு
  22. மீண்டும் ரசித்தேன் அன்பு வெங்கட்.
    குழந்தை அழகு. மழலையும் அழகு. அருமை. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை மீண்டும் ரசித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. பதில்கள்
    1. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....