தொகுப்புகள்

புதன், 1 டிசம்பர், 2010

அலறும் அலைபேசி



அலைபேசி – அதனால் நமக்கு இருக்கும் வசதிகள் அதிகமா?, இல்லை தொந்தரவுகள் அதிகமா? அடுத்து வரும் ஏதாவது ஒரு பண்டிகை அன்று ஏதாவது ஒரு ஊடகத்தில் சாலமன் பாப்பையாவையோ, திண்டுக்கல் லியோனியையோ அல்லது பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களையோ தலைவராக வைத்துக்கொண்டு பட்டிமன்றம் வைக்கலாம். அத்தனை விஷயங்கள் இருக்கிறது இந்த அலைபேசி பற்றி விவாதம் செய்ய.

நேற்று பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நவ நாகரீக மங்கை காதிலே அலைபேசியை வைத்துக்கொண்டு “மம்மீ, ப்ளீஸ், அவங்க கொண்டு வந்ததை வாங்கி வச்சிடுங்க, திருப்பி அனுப்பாதீங்க, நான் வந்து பேசறேன்” என்று பேருந்திலுள்ள அனைவருக்கும் கேட்கும் படி அலறிக் கொண்டு இருந்தார். மம்மீ என்ன சொன்னார்களோ தெரியவில்லை, மேலும் விவாதங்கள் தொடர்ந்தன, சக பயணிகள் கேட்கிறார்களே, பார்க்கிறார்களே என்ற எண்ணம் சுத்தமாக இல்லை அந்தப் பெண்ணிடம்.

ஒரு மணி நேர பேருந்து பயணம் முழுவதுமாக சத்தமாய் பேச்சு, பின் "ஓ"வென்று அழுகை என்றபடி ஏதோ ரேடியோவில் நாடகம் கேட்பது போல இருந்தது, இரண்டு வரிசை பின்னாலிருந்த எனக்கு. பேருந்திலிருந்த 50 ஜோடி காதுகளும் அந்தப் பெண்ணின் பேச்சையே கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பக்கத்து இருக்கைகளில் இருந்த சிலர் “எட்டி எட்டிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே” என்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உங்கள் வீட்டு விஷயம்தானே! எதற்காக எல்லோருக்கும் கேட்கும்படி அலைபேசி மூலம் விவாதம் செய்ய வேண்டும்? எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும், வீடு சென்று, வெளி உலகத்திற்குத் தெரியாமல் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே? எதற்கு பேருந்திலும், வெளியே வைத்தும் எல்லோரும் அதைப்பற்றிப் பேச [எனக்கு ஒரு பதிவு எழுத] வாய்ப்பைத் தரவேண்டும்?

நம்மை இழந்துவிடாத வரையில் அலைபேசி நமக்கு நல்லதொரு வரம்தான். பொது இடத்தில் இருக்கும்போது நம் சொந்த விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம் அல்லவா?

25 கருத்துகள்:

  1. ஹ்ம்ம் அலைபேசி சில சமயங்களில் வரம் ,பல நேரங்களில் சாபம் . எப்படியோ ஒரு பதிவு கிடைச்சது

    பதிலளிநீக்கு
  2. //பொது இடத்தில் இருக்கும்போது நம் சொந்த விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம் அல்லவா?//

    தவிர்க்க முடியாவிட்டாலும் அடுத்தவரை பாதிக்காதபடி பேசலாமே...

    பதிலளிநீக்கு
  3. இது பரவாயில்லை. தெருவில் காதில் ஹாண்ட்ஸ் ஃப்ரீ போட்டுக்கொண்டு "போடா லூசு... " என்று சத்தமாக / செல்லமாக திட்டினாள் ஒருத்தி. ரோடில் போன அவ்வளவு பேரும் திரும்பி பார்த்தார்கள். என்ன ஸ்பெஷல் என்றால் பார்த்த அவ்வளவு பேரும் ஆண்கள். நான் உடனே திரும்பி பார்க்கவில்லை என்பது சிறப்பு செய்தி. ;-)

    பதிலளிநீக்கு
  4. எதுவுமே நம் பயன்பாட்டில்தான் இருக்கிறது.. சாலையில் போகும்போது பேசிக் கொண்டே சூழ்நிலை கவனிக்காமல் போகும் அபாயம் கூட..

    பதிலளிநீக்கு
  5. அண்ணே! இப்போல்லாம் பாதிப்பேர் அலைபேசியில்தான் குடும்பமே நடத்துகிறார்கள். அலைபேசி வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!

    பதிலளிநீக்கு
  6. எதற்காக எல்லோருக்கும் கேட்கும்படி அலைபேசி மூலம் விவாதம் செய்ய வேண்டும்//
    உண்மைதான்..நானும் இது போல நிறைய பெரை பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. நம்மை இழந்துவிடாத வரையில் அலைபேசி நமக்கு நல்லதொரு வரம்தான். பொது இடத்தில் இருக்கும்போது நம் சொந்த விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம் அல்லவா?


    ......பர்சனல் விஷயங்களை, பப்ளிக் மேட்டர் ஆக்குகிறோம் என்பதை பலர் உணர்வதே இல்லை. சரியான கருத்துடன் உள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  8. :( கஷ்டம் தான்.. மெட்ரோல ஒரு பொண் எனக்கு நேர்க்கு நேர் முகம் இருக்கும்போது காதில் மாட்டியதோட பேசிட்டே இருக்கா..எனக்கு செம கடுப்பு.. என்னை பேசவே விடலைன்னு:))

    பதிலளிநீக்கு
  9. @@ LK: நன்றி…

    @@ கலாநேசன்: உண்மைதான். நன்றி.

    @@ RVS: கருத்துரைக்கு நன்றி.

    // பார்த்த அவ்வளவு பேரும் ஆண்கள். நான் உடனே திரும்பி பார்க்கவில்லை என்பது சிறப்பு செய்தி. ;-)//

    நம்பிட்டேன்…. : )))))

    @@ ரிஷபன்: நன்றி சார்.

    @@ ஈஸ்வரன் [பத்மநாபன்]: என்ன அண்ணாச்சி, சொந்த கதை, சோகக்கதையை சொல்லற மாதிரி இருக்கு!

    @@ ஆர்.கே. சதீஷ்குமார்: மிக்க நன்றி. முதல் வருகை என நினைக்கிறேன்.. :)

    @@ சித்ரா: மிக்க நன்றி. உங்களது முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    @@ முத்துலெட்சுமி: நன்றி. இந்த நீலப்பல் தொல்லை ரொம்ப தாங்கலைங்க, அதுவும் மெட்ரோவில்… :)))))

    பதிலளிநீக்கு
  10. அட இதை ஏன் கேக்குறிங்க. ஒரு தடவை சிங்கையில் எம் ஆர் டியில் (மின் இரயிலில்) நான் சத்தமாக ஊருக்கு என் வீட்டுடன் பேசிவிட்டு போனை வைத்தால், என்னை சுத்தி ஒரு பத்து பேரு முறைக்கறானுங்க. அன்னியில இருந்து வீட்டுக்குள்ள கூட நான் சத்தமா பேசுவது இல்லை.

    பதிலளிநீக்கு
  11. அடுத்தவங்க பேசுறதை ஏன் கேக்கணும்? அப்புறம் எதுக்கு புலம்பணும்? நமக்குத் தொல்லையா இருந்தா சொல்லிப் பாக்கலாம் இல்லை நகர்ந்து போகலாமே?

    பதிலளிநீக்கு
  12. @ஆர் வி எஸ்,
    கடைசி லைன் ரொம்ப முக்கியம். எங்கப்பன் குதருக்குள்ள இல்லேன்ற மாதிரி. நம்பிட்டேன்…. :=) சத்தியமா? வேணா தலையில அடிச்சு சத்தியம் பண்ணட்டா?

    பதிலளிநீக்கு
  13. அதுவும் எங்க ஆளுங்க இருக்காங்களே. நக்கமுக்க பாட்டெல்லாம் ரிங்டோனா போட்டுட்டு அதுவும் ஹை வொல்யூம் வச்சுண்டு இருப்பாங்க.

    சாப்பாட்டு கடையில் (இந்திய கடைகளில தான் இந்த கொடுமை) திடீரென Phone ஹை டெசிபெல்ல அலறும் போது போய் அந்தாள் மூஞ்சிலேயே குத்தணும் மாதிரி இருக்கும். அதை விட, ஃபோனை எடுக்க பத்து நிமிசம் ஆகுற மாதிரி டைட்டான ஜீன்ஸ் போட்டுட்டு அதை எடுக்க அவங்க படற பாடு. அது வரைக்கும் அந்த போன் அலறும் சத்தம். சகிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  14. சாப்பாடு கடையில் கூட மணிக்கணக்கில பேசுவாங்க. அதுவும் மத்த ‍பக்கம் இருக்கறவங்களுக்கு போனுக்குள்ளால் கேட்க வேண்டாம் நேரே பேசறதே கேட்கணும் என்கிற மாதிரி கத்தி கத்தி பேசுவாங்க.

    ஒரு முறை ஃபோனை புடுங்கி சுவிஜ் ஆப் பண்ணிட்டு கொடுத்தேன். அந்த பயில்வான் முறைச்சுட்டே இருந்தார். ஆனால், கடை ஓனர் வந்து அவர்கிட்ட வெளியே போய் பேசுங்க, அந்த பொண்ணு செஞ்சது சரி நானே பண்ணி இருக்க வேண்டியதுன்னு சொல்லி காப்பாத்திட்டார். அவர் ஃபோனை புடுங்கற அளவு டென்ஷன் படுத்தி இருக்காங்கன்னா பாருங்களேன்.

    ட்ரெயில் எங்க ஆளுங்க தான் கத்தி கத்தி பேசுவாங்க. போய், மனுஷன் மாதிரி நடந்துக்கோ மடையான்னு கூட திட்டி இருக்கேன். முறைச்சுட்டு பேசுவதை நிப்பாட்டுவாங்க.

    பதிலளிநீக்கு
  15. சிலபேர், ஹெட்போனை மாட்டிக்கிட்டு பக்கத்துல நிக்கிறவங்களுக்குகூட கேக்காதமாதிரி பேசிப்பாங்க. அவங்களைப்பத்தி பிரச்சினை இல்லை. ஆனா,பப்ளிக்குல இந்தமாதிரி போன்ல கத்துறவங்களை பாத்தாலே எரிச்சல் வரும்.

    @முத்துலெட்சுமி-- பாவங்க நீங்க :-)))))

    பதிலளிநீக்கு
  16. @@ பித்தனின் வாக்கு: நன்றி நண்பரே. பெரும்பாலானோர் பயணம் செய்யும் போது அலைபேசியில் பேசுவதை பொழுது போக்காகவே ஆக்கிக் கொண்டுவிட்டனர்.

    @@ அப்பாதுரை: உங்களுடைய கருத்திற்கு நன்றி நண்பரே.

    @@ அனாமிகா துவாரகன்: மிக்க நன்றி [மூன்று முறை :)))]

    @@ அமைதிச்சாரல்: தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. பிசியா? பதிவு ஒன்றும் வரவில்லையே சில நாட்களாய்?

    பதிலளிநீக்கு
  17. தகவல் தொடர்பை எளிமையாக்கிய ஒரு அறிவியல் சாதனத்தை என்னமாக் கேவலப்படுத்திட்டு இருக்காங்க...! இதுக்கு யாராவது வகுப்பெடுத்தா அதுக்கும் முண்டியடிச்சு சேருவாங்களாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. @@ நிலாமகள்: நன்றி சகோ. நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  19. //அனாமிகா துவாரகன் said...

    @ஆர் வி எஸ்,
    கடைசி லைன் ரொம்ப முக்கியம். எங்கப்பன் குதருக்குள்ள இல்லேன்ற மாதிரி. நம்பிட்டேன்…. :=) சத்தியமா? வேணா தலையில அடிச்சு சத்தியம் பண்ணட்டா?
    //
    என்னங்க பண்றது.. ரொம்ப நாளா எல்லோரும் நம்மளை அப்படித்தான் கூப்பிட்டாங்க... ரோட்ல ஒருத்தங்க அந்த மாதிரி கூப்பிட்டவுடனே உடுக்கை இழந்தவன் கை போல... உடனே தலை திரும்பிடிச்சு... டக்குன்னு உங்களளுக்கு புரிஞ்சிடிச்சு...

    தலையில அடிச்சா மாதிரி ஏற்கனவே லூசு பட்டம் வாங்கியாச்சு... நீங்க நிஜமாவே அடிச்சு வேற சத்தியம் பண்ணனுமா? ஐயோ.. போதுமடா சாமி!!! ;-) ;-) ;-)

    பதிலளிநீக்கு
  20. @அனாமிகா துவாரகன்
    //ஒரு முறை ஃபோனை புடுங்கி சுவிஜ் ஆப் பண்ணிட்டு கொடுத்தேன். அந்த பயில்வான் முறைச்சுட்டே இருந்தார். //

    அங்க நீங்க லோகல் விஜயசாந்தியா? என்னோட பொது அறிவிற்காக கேட்கிறேன். ;-) ;-)

    பதிலளிநீக்கு
  21. அலைபேசியின் பலன்கள் ஆயிரம் இருந்தாலும் ...அலப்பறையும் கூடவே இருக்கிறது ...

    பதிலளிநீக்கு
  22. வெளியே வந்தப்பின் தான் பலருக்கு வீட்டில் சொல்ல மறந்தவை ஞாபகத்திற்கு வருகிறது. மேலும் அப்பாதுரை சொன்னதை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. @@ பத்மநாபன்: மிக்க நன்றி சார். அலப்பறை தாங்க முடியாமல் தான் இதை எழுதினேன்.

    @@ தமிழ் உதயம்: உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....