தொகுப்புகள்

வியாழன், 11 அக்டோபர், 2012

ஊடல் [பெ. தூரன்]



ஊடல் கொள்ளாத காதலன்/காதலி அல்லது கணவன்/மனைவி உண்டோ.... அது பற்றி கவி பாடாத கவிஞர்கள் உண்டோ.... வள்ளுவன் கூட ஊடல் பற்றிச் சொல்லாமல் விடவில்லையே. அது பற்றி பழம் பெரும் எழுத்தாளர் ஒருவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா? 

அதற்கு முன்: சில நாட்களுக்கு முன் “கல்யாணம்... ஆஹாஹா கல்யாணம் என்ற பதிவில் “பொக்கிஷம் என்ற வரிசையில் அவ்வப்போது இது போன்ற பதிவுகள், இப்பதிவிற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து வரும்!என்று சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நினைவில்லையெனில் பரவாயில்லை – நினைவு “படுத்ததான் நான் இருக்கிறேனே!

முதல் பாராவில் சொன்ன ஊடல் பற்றி மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பெ. தூரன் என்கிற ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள், 1949-ஆம் வருடம் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில விஷயங்களை, இதோ பொக்கிஷம் வரிசையில் அடுத்த பகிர்வாக உங்கள் வாசிப்புக்குத் தருவதில் எனக்கு மகிழ்ச்சி.



ஒரு வேடிக்கையான கதை கேட்டிருக்கிறீர்களா? பசுவொன்று வாங்கப் போவதாக ஒருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.  ‘அந்தப் பசு கன்று போட்டுப் பால் கறக்கும்போது என் பிறந்தகத்திற்கும் பால் அனுப்புவேன்என்றாளாம் மனைவி. ‘அது கூடாது!என்று முரண்டினானாம் கணவன். ‘அனுப்பத்தான் அனுப்புவேன்என்றாள் மாதரசி. ‘ஒரு நாளும் அனுப்பக்கூடாதுஎன்றான் பிராணபதி. வார்த்தை முற்றிப் பெரிய சண்டையில் முடிந்த்து. சண்டை ஏற்பட்டால் அது வீட்டிற்குள்ளேயே நின்று விடுகிற வழக்கமில்லை. தெருவுக்கு வந்துவிடும்.



இவர்கள் இருவரும் சொல்லம்பு தொடுத்துக்கொண்டு வீதிக்கு வந்துவிட்டார்கள். கூட்டம் கூடிவிட்ட்து. ஆனால் யாருக்கும் இந்தச் சச்சரவின் மூலகாரணம் விளங்கவேயில்லை. பக்கத்து வீட்டிலே ஒரு கிழவர் இருந்தார். அவர் நல்ல விவேகி; ஹாஸ்யச் சுவை மிகுந்தவர். அவர் வெகு சிரமப்பட்டுக் கூர்ந்து கவனித்துச் சண்டையின் துவக்கத்தை அறிந்து கொண்டார்.  அறிந்ததும் நேராக அந்தக் கதாநாயகனை அணுகி அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அவனுக்கோ பொல்லாத கோபம் வந்துவிட்ட்து. ‘எதற்காக என்னை அடித்தாய்?என்று சீறினான். கிழவர் நிதானமாக, ‘நீங்கள் புருஷனும் பெண்ஜாதியும் இங்கே சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் பசு என் வீட்டுக் கொல்லையிலே புகுந்து செடிகளையெல்லாம் தின்கிறதே?என்று கேட்டார்.

‘நான் இன்னும் பசு வாங்கவேயில்லையே?என்றான் அந்தக் காளை.

‘வாங்கவே இல்லையா? பிறகு எதற்காகப் பால் அனுப்புவதைப் பற்றிச் சண்டையிடுகிறீர்கள்?என்று கூறிக் கிழவர் சிரிப்புக் காட்டினார்.  கூடியிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க தம்பதிகள் வெட்கிப் போனார்கள்.

வேடிக்கையான கதை தான். இருந்தாலும் இதிலே ஒரு பெரிய உண்மை பொதிந்து கிடக்கிறது. காரணமில்லாமல் இப்படிச் சண்டை போடுகிறவர்கள் ரொம்பப்பேர் உண்டு. வாய்ச்சண்டை, கைச்சண்டை பிரமாதமாக வந்து விடும். ஆனால் அவற்றின் ஆதி காரணத்தை ஆராய்ந்தால் உருப்படியாக ஒன்றுமே இராது. இந்தக் கதையிலே உள்ளது போலச் சில சமயங்களிலே காரணம் வெறும் கற்பனையாகவே இருக்கும். தம்பதிகளுக்கிடையே தோன்றும் பூசல்களும் அப்படித்தான்.



தம்பதிகளிடையே ஊடல் உண்டாவது சகஜமென்றும், அது வாழ்க்கைக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாய் ரசம் ஊட்டுகிறது என்றும் கவிஞர்கள் பாடுகிறார்கள். “ஊடுதல் காமத்திற்கின்பம்என்கிறார் வள்ளுவர்.  ஆனால் அந்த ஊடுதல் வெகு விரைவிலேயே கூடுதலாக முடிந்துவிட வேண்டும் என்ற எச்சரிக்கையும் தொடர்ந்தே இருக்கிறது. ஊடல் வேகத்திலே அதை மறந்துவிடக்கூடாது.

நகைச்சுவையை நாம் நன்கு அனுபவிக்க்க் கற்றுக் கொண்டால் வாழ்க்கையிலே தோன்றுகிற எத்தனையோ சங்கடங்கள் சங்கடங்களாகத் தோன்றாமற் போகும்.  குடும்ப விவகாரத்திலும் அவ்வாறுதான். ‘துன்பம் வருங்கால் நகுகஎன்பது ஒரு பழைய வாக்கு. நாம் துன்பத்தை எதிர்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தம்பதிகளிடையே பூசலுண்டாவதாலேயே அவர்களுக்குள் ஆரம்பத்திலிருந்த அன்பு குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அன்புப் பெருக்கால் கூட பல சமயங்களில் மனத்தாங்கல் ஏற்படும். அன்பின் மிகுதியால் அவனோ அல்லது அவளோ எதையாவது எதிர்பார்த்து ஏமாறுவதுண்டு. அந்த ஏமாற்றம் ஊடலுக்கு வித்தாகிவிடும். மேலும் குடும்ப நிர்வாகத்திலேயே, வாழ்க்கையின் போக்கிலே சில சில்லறை விஷயங்கள் ஒருவருக்கோ அன்றி இருவருக்குமோ திருப்தி அளிக்காமலிருக்கலாம். இப்படிப் பிடித்தமில்லாத காரியங்கள் அவ்வப்போது நடக்கும். தனித்தனியே பார்த்தால் அவை ஒவ்வொன்றும் அற்பந்தான். ஆனால் அவையெல்லாம் சிறிது சிறிதாக உள்ளத்திலே அவர்களுக்கும் தெரியாமல் கசப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டே இருக்கும். அது ஏதாவது ஒரு நாளில் திடீரென்று பொங்கிக் கோபத்தையும் பூசலையும் கிளப்பிவிடும்.

உடனடியாக அதற்குக் காரணமாக இருந்த சம்பவம் ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. இருந்தாலும் பல நாட்களாக மனத்திலே மறைந்து சேர்ந்திருந்த வெறுப்புத் துளிகள் இப்படி விஸ்வரூபம் எடுத்து விடும். இது மனதிற்கு அமைந்துள்ள ஒரு தன்மை. அதையும் நாம் உணர்ந்து கொள்வது நல்லது. மனது நம்முடையது தான்; ஆனாலும் அது நம்மை இப்படி ஏமாற்றி விடுகிறது.

உள்ளத்திலே மறைந்து சிறிது சிறிதாகக் கூடும் வெறுப்புணர்ச்சியைப் பூசலில் முடியாமல் தடை செய்ய சில உபாயங்கள் உண்டு. இடையிடையே கணவனும் மனைவியும் சில நாட்கள் பிரிந்திருக்க வேண்டும். பிறந்தகத்திற்கோ, மற்ற உறவினர் வீட்டிற்கோ மனைவி சென்று தங்கி வருதலென்பது முன்பிருந்தே பழக்கத்திலுள்ள ஒரு நல்ல ஏற்பாடு. பிரிந்திருக்கும்போது இந்தச் சில்லறை விஷயங்கள் தாமாகவே மறைந்து போகின்றன. அது மட்டுமில்லாமல் பிரிவிலே அன்பு வளர்கிறது. அவ்வாறு பிரிந்திருக்கும் காலத்தில் அன்பு ததும்பக் கடிதங்கள் எழுதிக்கொள்வதும் பெரிதும் பயனுடையது. மணமாகிச் சில வருடங்கள் ஆகிவிட்டாலும், குழந்தைகள் பிறந்துவிட்டாலும் அதன் பின் இந்த அன்பு வார்த்தைகள் தேவையில்லை என்று சிலர் கருதுகிறார்கள். புதுத் தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும் தான் அவை உரியவை என்பது அவர்கள் கருத்து. அது தவறாகும். அன்புமொழி என்றும் அவசியம்.

ஊடல் தம்பதிகளின் இன்ப வாழ்க்கைக்கு உப்புப் போன்றது. சிறிய அளவில் சுவையைப் பெருக்கும். அதிகப்பட்டால் எல்லாம் கசந்து போகும்.   

என்ன நண்பர்களே, ஊடல் பற்றிய கட்டுரையைப் படித்தீர்களா? இக்கட்டுரை 1949-ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்தது. இது போன்ற பொக்கிஷப் பகிர்வுகள் அவ்வப்போது தொடரும்....

மீண்டும் வேறொரு பொக்கிஷத்துடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  நேற்று வெளியிட்டு, என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியாத எனது பகிர்வு – திருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்.  படிக்காதவங்க படிச்சுடுங்க ப்ளீஸ்... இல்லைன்னா அளுதுடுவேன்! :)


40 கருத்துகள்:

  1. நகைச்சுவையை நாம் நன்கு அனுபவிக்க்க் கற்றுக் கொண்டால் வாழ்க்கையிலே தோன்றுகிற எத்தனையோ சங்கடங்கள் சங்கடங்களாகத் தோன்றாமற் போகும்.

    பொக்கிஷக்கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. நான் பிறப்பதற்கு முன்பே பெ.தூரன் அவர்கள் எழுதியுள்ள இந்த நகைச்சுவைச் சிறுக்தையும், அதற்குப் பொருத்தமான படங்களும் அழகோ அழகு.

    கேள்விப்பட்ட கதையேயாயினும் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் மேலும் அழகு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  4. அவர் சொன்ன பசு கதை அருமை. சண்டை. ஊடல் என்பது உப்பை போன்றது. வாழ்வில் அளவாக இருக்க வேண்டும் என்று சொன்ன கருத்தும் அருமை. நல்ல பொக்கிஷத்தைத் தேடி எடுத்துத் தந்த உங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு

  5. ஆஹா....அருமை வெங்கட் ....1943 to 1949 ஆனந்த விகடன் இதழ்களை

    வாசிப்பது சுகம் தான் ! பகிர்விற்கு நன்றி ! ஒரு சின்ன விஞ்ஞாபனம் !

    (அந்த காலத்து ஆனந்த விகடன் வார்த்தை விஞ்ஞாபனம்!) அந்த பழைய இதழ்களை அப்படியே SCAN பண்ணி தங்கள் பிளாக்கில்

    போட முடியுமா? அனைவரும் ரசிப்போமே !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த பழைய இதழ்களை அப்படியே SCAN பண்ணி தங்கள் பிளாக்கில் //

      ரொம்ப கஷ்டம். ஏன்னா, எனக்குக் கிடைத்தது ஒரு தீபாவளி மலர். அதனை முழுவதும் ஸ்கேன் செய்து போடுவதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

      மேலும் சிலவற்றை பகிர இருக்கிறேன் - வாரம் ஒன்றாய்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  6. பெரியசாமித்தூரன் கதையா !!
    பஹுத் அச்சா ஹை ...

    அது சரி...
    ஆரம்பம் ஆவது ஊடலிலே
    ஆறி முடிவதோ கூடலிலே
    என்று
    ஏதோ ஒரு
    கஜுராஹோ கவி
    சொன்னாற்போல இருக்குதே !!

    இன்னொரு அது சரி.
    இந்தக் கதையை நான் வேறு விதமாக நான் கேட்டேன்.

    பசு மாடு வாங்கப்போறேன் என்றான் கணவன்.
    எதுக்கு வாங்கப்போகணும் என்றாள் மனைவி.
    தொடர்ந்தாள். ... பசு கன்று போடறப்போ பிறந்தாத்துக்கு அனுப்புவீங்கள்லே என்றாள் மனைவி.
    ஒரு தரம் மாட்டை நான் புறந்த வீட்டுக்கு அனுப்பிச்சு நான் பட்ட பாட்டை மறந்துடுவேனா..
    என்றான் கணவன்.

    சுப்பு தாத்தா.
    ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுப்பு தாத்தா.
      ஹி...ஹி...//


      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நகைச்சுவை உணர்வே கோபங்களை கொன்று போடும் ஆற்றல் பெற்றது.
    ஊடல் பற்றிய பதிவிற்கு தூரனை துணைக்கு அழைத்து வந்தது சிறப்பு..தொடர்ந்து பொக்கிஷத்தை பகிருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.

      நீக்கு
  8. பொக்கிஷம்தான். பின்னூட்டத்தில் நாம் சொல்ல எதுவுமே இல்லாமல் அவரே எல்லாவற்றுக்கும் சேர்த்து சொல்லியிருக்கார் பாருங்க!! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பசு கதை சிறப்பு நான் நீ என்பது மறந்து நாம் என்ற உணர்வு கணவன் மனைவிக்குள் இருந்தால் பிரச்சனைக்கு வழியே இல்லை சிறந்த பகிர்வு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் நீ என்பது மறந்து நாம் என்ற உணர்வு கணவன் மனைவிக்குள் இருந்தால் பிரச்சனைக்கு வழியே இல்லை//

      உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. நல்ல தொகுப்பு...

    //வாய்ச்சண்டை, கைச்சண்டை பிரமாதமாக வந்து விடும். ஆனால் அவற்றின் ”ஆதி காரண”த்தை ஆராய்ந்தால்//

    எதனால் பெ.தூரன் எழுதியதைப் போட்டிருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது...
    [ஏதோ என்னால் ஆனது... நாராயண நாராயண]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏண்டாப்பா.... நல்லா இருக்கறது புடிக்கலையா சீனு!

      நல்லத்தான் போட்டுக்கொடுக்கற!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  11. அருமை.நிஜமாகவே பொக்கிஷயம்தான். ரசித்துப்படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராம்வி.

      நீக்கு
  12. சிரி பொக்கிஷம்.

    மிகவும் ரசனையாக இருந்தது. பலஇடங்களில் சிரித்து முடியவில்லை.ஹா..ஹா..
    தொடருங்கள். சிரிக்கக் காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி...

      நீக்கு
  13. கதை நன்று!அத்துடன் ஊடலுக்கு தாங்கள் கொடுத்திருந்த அறுபவ விள்கம் மிகமிக நன்று வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  14. //நகைச்சுவையை நாம் நன்கு அனுபவிக்க்க் கற்றுக் கொண்டால் வாழ்க்கையிலே தோன்றுகிற எத்தனையோ சங்கடங்கள் சங்கடங்களாகத் தோன்றாமற் போகும்.//

    அம்புட்டுத்தேன்! வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களையும் விரட்டுகிற ஒரே குச்சி நகைச்சுவை தான்!

    பெ.தூரன் கருத்துக்களும் அபாரம். அத்துடன் கோபுலுவின் உயிரோட்டமுள்ள ஓவியங்களும் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறது. சூப்பர் இடுகை வெங்கட்ஜீ! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களையும் விரட்டுகிற ஒரே குச்சி நகைச்சுவை தான்!/

      சரியாச் சொன்னீங்க சேட்டை ஜி!

      //அத்துடன் கோபுலுவின் உயிரோட்டமுள்ள ஓவியங்களும் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறது.//

      அதற்காகவே புகைப்படமெடுத்து பகிர்ந்தேன்...


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

      நீக்கு
  15. நல்ல பொக்கிஷம்...

    பகிர்ந்த விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  16. அடிக்கடி பொக்கிஷங்களை அவிழ்த்து விடுங்கள்! அள்ளிக் கொள்கிறோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமன் ஐயா.

      நீக்கு
  17. எதனால் பெ.தூரன் எழுதியதைப் போட்டிருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது...
    [ஏதோ என்னால் ஆனது... நாராயண நாராயண]//

    jing chakka, jing chakka, jing chakka jing. hihihihi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல தான் ஜால்ரா போடறீங்க! :))

      தங்களது வருகைக்கும் நல்ல இசைக்கும்! மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  18. //உடனடியாக அதற்குக் காரணமாக இருந்த சம்பவம் ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. இருந்தாலும் பல நாட்களாக மனத்திலே மறைந்து சேர்ந்திருந்த வெறுப்புத் துளிகள் இப்படி விஸ்வரூபம் எடுத்து விடும். இது மனதிற்கு அமைந்துள்ள ஒரு தன்மை. அதையும் நாம் உணர்ந்து கொள்வது நல்லது. மனது நம்முடையது தான்; ஆனாலும் அது நம்மை இப்படி ஏமாற்றி விடுகிறது//

    எனக்கும் என்னவற்கும் சண்டை வருதல் ரொம்ப குறைவு. என்னிடம் ஒரு பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை, வருடத்தில் ஒரு தடவை ஒரு கடிதம் எழுதி விடுவேன், நான் என்ன எங்கு எதை எதிர்பார்தேன் எப்படி ஏமாற்றம் அடைஅடைந்தேன் என்று, அவரும் அதை புரிந்து கொண்டு அதை எல்லாம் நிறைவேற்றுவார். நேரில் சொல்லும் பொழுது அழுகை வந்து விடும் அவருக்கும் நானா அழுவதை பார்த்து கோபம் வரும் கடைசியில் சொல்ல முடியாது, அதனாலதான் இப்படி எழுதி விடுவேன், எனக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்த நிம்மதி ஏற்படும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பழக்கம். இன்னுமொரு விஷயம் - கடிதம் எழுதுவது குறைந்து விட்ட இந்நாளில் இதற்காகவாகவது ஒரு கடிதம் எழுதுவதும் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....