சாலைக்காட்சிகள் – பகுதி 7
தலைநோக்குப் பார்வை –
சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள் – பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்–பகுதி 4 - இங்கே
அலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு
கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம்
யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே
தில்லி என்றதும் நினைவுக்கு
வருவது கன்னாட் ப்ளேஸ் அல்லது கன்னாட் சர்கிள் [Inner and Outer Circle] என அழைக்கப்படும் இடம். அரசியல்
காரணமாக இந்த இடங்களில் Inner Circle ”ராஜீவ் சௌக்” எனவும் Outer
Circle ”இந்திரா சௌக்” எனவும்
பெயர் மாற்றப்பட்டாலும் பலரது பேச்சில் இந்த இடம் பற்றி சொல்லும்போது கன்னாட்
ப்ளேஸ் எனும் பெயர் தான் வரும்!
1929 ஆம் வருடம் ஆரம்பித்து
1933-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இடம் தில்லியில் மிகவும் பிரபலம்.
உலகில் இருக்கும் அதிக விலைமதிக்கக் கூடிய இடங்களில் ஐந்தாவது இடத்தினைப் பெற்ற
இடம். மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் இங்கெ நிறைய மக்களை கூட்டமாக காண
முடியும். இந்தியர்கள் மட்டுமல்லாது
பெரும்பாலான வெளிநாட்டவர்களும் இங்கே வந்து போவதால், பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க
முடியும் இடம்!
பாராளுமன்ற
சாலை வழியே வந்து சிவாஜி ஸ்டேடியம் பகுதிக்கு வருவதற்கு சென்ற வாரத்தில் ஒரு நாள்
இரவு 09.30 மணிக்கு மேல் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த மூலையில் ஒரு உணவு
விடுதி உண்டு. பெயர் “[P]பிண்ட்
[B]பலூச்சி!” பஞ்சாபி மொழியில் பிண்ட் என்றால்
கிராமம். உணவு மட்டுமல்லாது மதுபானமும் அங்கே கிடைக்கும்.... சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை இங்கே
சென்றிருக்கிறேன்.
வாசலிலே ஒரு காவல்காரர்!
பஞ்சாபி உடையணிந்து, கையில் ஒரு பெரிய குச்சியும் முகம் கொள்ளா மீசையும் உடைய இவரைப்
பார்த்தாலே உள்ளே போகவா வேண்டாமா என ஒரு பயம் தோன்றும்!
அவரைத் தாண்டி நடக்கும்போது
உங்கள் மீது மற்றவர்களோ, அல்லது நீங்கள் மற்றவர்கள் மீதோ இடித்துக் கொள்ளாமல் போக
பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். இருக்கும் அந்த நடைபாதையில் பலவித
நடைபாதைக் கடைகள் வேறு. அவர்கள் குரல்
கொடுத்து விற்கும் பொருட்கள் பலவகையனவை – வெறும் குரல் மட்டும் வரும் – “சோ கா [CH]சார்!” [நூறு ரூபாய்க்கு நாலு!] என்ன விற்கிறார் என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும்!
விதவிதமான
உடைகளில் மங்கைகளைக் காண முடியும். கூடவே அவர்களை அழைத்து வரும் ஆண்
சிங்கங்களையும் தான்.... பல பெண்கள் அவர்களது தோழிகளோடு வருவதும் உண்டு. அப்படியே ஆண்களும். வழியில் விற்கும் பொருட்களை
வாங்குவதும் நடைபாதை வியாபாரிகளுடன் பேரம் பேசுவதும், ஐந்து ரூபாய்க்கு விற்கும் “Softy” ஐஸ்க்ரீமை ஒன்று
வாங்கி ஜோடியாக இரண்டு பேர் சாப்பிடுவதையும் காணலாம்!
சென்ற
வாரம் வந்து கொண்டிருந்த அந்த இரவிலும் இந்தக் காட்சிகளை ரசித்தபடியே வந்து
கொண்டிருந்தேன். என்னை இடித்துக் கொண்டே முன்னேற யாரோ முயற்சி செய்ய,
திரும்பினேன். அவர்களது பேச்சு ஸ்வாரசியத்தில் இடிக்கிறோம் என்பது கூட தெரியாது
அல்லது கண்டுகொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசியது!
முதலாமவர்:
“ரொம்ப பசிக்குது. முதல்ல சாப்பிடணும்.”
இரண்டாமவர்: சாப்பிடறதுக்கு
முன்னாடி ஒரு தம் அடிக்கணும்! அப்புறம் தான் சாப்பாடு!”
முதலாமவர்: சரி வா, முதல்ல
சிகரெட், அப்புறம் சாப்பாடு!”
கையைப் பிடித்து அழைத்துச் சென்ற
பக்கத்தில் இருந்த கடையில் ஒரு கிங்ஸ் வாங்கி பற்ற வைத்து “சார்மினார்” சிகரெட்டுக்கு வரும் விளம்பரத்தில்
சொல்வது போல “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்பதாக ஒரு நீண்ட இழுப்பு! பிறகு
ஒரு மந்தகாச புன்னகை.... ஆஹா ஆனந்தம்!” அதற்குள் முதலாமவர் கை நீட்ட
அவரும் ஒரு முறை ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றார்!
அட சொல்ல
மறந்துட்டேனே! அந்த இரண்டு பேரும் பெண்கள் – மிஞ்சிப் போனால் 18 வயது இருக்கலாம்!
தில்லியில் பல ஆண்களும், வயதான கிராமத்துப் பெண்கள் பலர் பீடி புகைக்கும் போது, இவர்கள்
சிகரெட் குடிக்கக்கூடாதா என்ன! இன்னும் இரண்டு இழு இழுத்தப்படியே அவர்கள் அருகில்
உள்ள உணவகத்துக்குள் செல்ல, நான் அவர்களைத் தாண்டி சிந்தனையொடு நகர்ந்தேன்!
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.