தொகுப்புகள்

வியாழன், 9 ஜனவரி, 2014

குரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1




திருச்சிகுளித்தலைமணப்பாறை செல்லும் வழியில் இருப்பது அய்யர் மலை என்னும் சிற்றூர். அங்கே இருக்கும் ஒரு சிறிய மலையின் பெயர் தான் அய்யர் மலை - அதே பெயர் ஊருக்கும். மலையின் மேலே ஒரு பழங்காலக் கோவில். அங்கே குடிகொண்டிருப்பவர் இரத்தினபுரீஸ்வரர். சுயம்புவாய் உருவான லிங்க உருவம் கொண்டவர். இறைவி சுரும்பார் குழலி. வைராக்கியப் பெருமாள் தனிச்சன்னிதியும் உண்டு.





உங்களை அழைத்துச் செல்ல நான் காத்திருக்கிறேன்சொல்லாமல் சொல்லும் படிகள்!



ஒரு சிறிய மலை மேல் குடிகொண்டிருக்கும் இந்த ஈஸ்வரன் பற்றி திருப்பராய்த்துறையில் இருக்கும் பெரியம்மா அடிக்கடி சொல்வதுண்டு. சொல்லும் போதெல்லாம் இக்கோவிலுக்குச் செல்லும் ஆசை பிறக்கும் மனதினுள் – கிட்டத்தட்ட 1400 படிகள் ஏறிச்செல்லவேண்டும் எனக் கேட்டவுடன் காற்று போன பலூன் மாதிரி ஆசை அடங்கிவிடும். சென்ற மே மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று எப்படியும் இக்கோவிலுக்குச் சென்று விடுவது என்ற முடிவுடன் விடிகாலையில் எழுந்து காவிரி நீராடி கோவில் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தேன். 





பாறை – வாய் மூடியிருக்கும் ஒரு அரக்கன் போல அல்லவா இருக்கிறது!



நீயும் வருகிறாயா? என்று என் மனைவியிடம் கேட்டதற்கு 1400 படி ஏறுவது என்னால் ஆகாத காரியம்! இங்கிருந்தே அந்த மலையை நோக்கி வேண்டிக்கொள்கிறேன். நீங்க தாராளமாக போயிட்டு வாங்க!என ஒதுங்கிக் கொள்ள, நான் மட்டுமே காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பயணித்தேன். திருப்பராய்த்துறையிலிருந்து குளித்தலை வரை சென்று அங்கிருந்து அய்யர் மலை வழியாக மணப்பாறை செல்லும் காலியாக இருந்த பேருந்து ஒன்றில் அமர்ந்து அய்யர் மலை அடிவாரத்தில் இறங்கிக் கொண்டேன்.  அங்கே இறங்கியபோது மணி 07.15.   மலையடிவாரத்தில் இருந்த கோவில் ஒன்றின் வாயிலில் காலணிகளைக் கழட்டி விட்டு, மலையேறத் துவங்கினேன். 





நிழல் தரும் மண்டபங்கள் – நினைவுச் சின்னமாய்....



என்னைத் தவிர அந்த நேரத்தில் மனித நடமாட்டமே இல்லை. சரி எல்லாம் மெதுவா வருவாங்களா இருக்கும் என நினைத்து தொடர்ந்து மலை மீது படிக்கட்டுகளில் மூச்சு வாங்கியபடியே நடந்தேன். வழியெங்கிலும் 50/100 அடிக்கு ஒரு நிழல் தரும் மண்டபம் – இன்னார் நினைவாக கட்டியது என்ற தகவல் பலகையுடன். கூடவே மண்டபத்தினுள் அமர ஏதுவாய் கற்பலகைகள்.





எங்கள் இடையில் இருப்பது யார்!



அந்த மண்டபங்களில் சற்றே இளைப்பாறி மேலே பயணித்தேன்.  அவ்வப்போது யாரும் வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்ததில் ஏமாற்றம் மட்டுமே. மலையேறிய படியே சில நூறு படிகளைக் கடந்தபோது வழியில் கண்ட பாறைகள், மரங்கள் என படம் பிடித்தபடிதான் நடந்து கொண்டிருந்தேன்.  சில நூறு படிகள் ஏறிய பின்னர் வழியில் இரு பெரிய பாறைகள் செங்குத்தாய் நிற்க, அவற்றின் இடையே சற்றே இடைவெளி.  அதன் வெளிப்புறம் சப்தகன்னியர்கள்என்ற தகவல் பலகை இருந்தது. சரி முதலில் சப்தகன்னியர்களையும் தரிசிப்போம் என உள்ளே நுழைந்தேன்.





இடையே இருப்பது நாங்கள் தான் – சப்தகன்னியர்கள்....



பாறைகளுக்கு நடுவில் சப்தகன்னியர்களின் சிலைகள் வரிசையாக இருக்க, பல வண்ணங்களில் வஸ்திரங்கள் சார்த்தியிருக்க, மனதுக்குகந்த வழியில் மக்கள் அவர்களை அலங்கரித்திருத்தார்கள்.  சப்தகன்னியர்கள் மட்டுமல்லாது, பிள்ளையார், ஹனுமன் ஆகியோர் சிலைகளும் அங்கே இருந்தன.  மனதிற்குள் நடப்பன எல்லாம் நல்லதாக நடக்கட்டும்என வேண்டிக்கொண்டு மேலே படிகளில் முன்னேறினேன்.





எங்க குடும்பம் ரொம்ப பெருசு... பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு!



தலைப்பில் குரங்குகளுடன் ஒரு காலை எனச் சொல்லிவிட்டு இதுவரை குரங்குகளைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என யாரும் கேட்டுவிடுவதற்குள் நானே சொல்லிவிடுகிறேன்.  வழியெங்கிலும் நமது முன்னோர்கள் நிறைய பேர்கள் இருந்தனர். தோள்களில் மாட்டியிருந்த காமெரா பை தவிர வேறெதுவும் இல்லை. எனினும் அவ்வப்போது முன்பிருந்தும் பின்பிருந்தும் அவை திடீரென குதிக்க, கொஞ்சம் அச்சத்துடன் தான் படிகளில் நடக்க முடிந்தது.





பாசப் பறவைகள்?



சில குரங்குகள் மிகப் பெரிய அளவில் உடம்புடனும், கோரைப் பற்களை காட்டியபடியும் பார்க்க, “சரி திரும்பி வர வரைக்கும் கடி வாங்காது இருக்க இந்த மலைக்கோயில் உறை  இரத்தினபுரீஸ்வரர் தான் அருள் புரியவேண்டும்என்ற எண்ணத்துடன் நடந்து கொண்டிருந்தேன். 700 படிகளுக்கு மேல் ஏறியாகிவிட்டது. அங்கே ஒரு மண்டபத்தில் அமர்ந்து என்னைத் தொடர்ந்து யாராவது வருகிறார்கள் என கவனித்தால் ஒரு “ஈ காக்காய்இல்லை! கோவிலில் உறையும் ஈசனைத் தவிர்த்து, குரங்குகளும் நானும் மட்டுமே அந்த மலையில் அப்போது வாசம்!





தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து......



பாதி தூரம் வந்தாயிற்று இனி பாதி 700 படிகள் தானே என்ற நினைப்புடன் படிகளில் முன்னேறினேன்.  கிட்டத்தட்ட 800 படிகள் ஏறியதும் அங்கே ஒரு மண்டபத்தில் ஆனைமுகத்தான் குடியிருக்க, அவனைச் சுற்றிலும் மண்டபத்திலும் மலையிலும் பல குரங்குகள்.  இதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை ஒரு 90 டிகிரி திருப்பம் எடுக்க, மேலே இருபது, இருபத்தி ஐந்து படிகள் ஏறினால் அங்கே ஒரு பெரிய இரும்பு கேட்!  சங்கிலி போட்டு கட்டிய கேட்டில் ஒரு நவ்தால் பூட்டு என்னைப் பார், சிரிஎன்றது!





யாருப்பா அது? “Don’t Disturb”னு Board இருக்கே பார்க்கலையா?



இதென்னடா வம்பாயிற்று! கோவில் எப்போது திறப்பார்கள் எனத் தெரியவில்லை, யாரும் வந்தால் கேட்கலாம் என்றால் யாரையும் காணவில்லை! பிள்ளையார் பக்கத்தில் மண்டபத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்றால் குடும்பத்துடன் நாங்கள் உல்லாசமாய் இருக்கும் இடத்தில் நீ எதற்கு வந்தாய்என ஆக்ரோஷத்துடன் கேட்கும் குரங்குகள் தலைவன் என ரொம்பவே குழப்பம்.





வழியில் இருந்த ஒரு சிலை! என் தலையைக் கொய்தவன் எவனோ?என பரிதாபமான குரல் ஒன்று கேட்கவில்லையா உங்களுக்கு!



சரி ஆனது ஆகட்டும், யாரும் வரும் வரை காத்திருப்போம் என தைரியமாக, மரத்திலிருந்து விழுந்த ஒரு சிறிய குச்சியை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்தேன்.  அங்கே குரங்குகள் செய்யும் சேஷ்டைகள் அழகாக இருக்க, அவற்றைப் படம் பிடிக்க காமிரா பையத் திறக்க முயன்றால், குரங்குகள் அதில் ஏதோ தின்பண்டம் இருக்கிறதோ எனப் பார்க்க, அப்படியே அமர்ந்து விட்டேன். 



காலை 08.15 மணிக்கு அங்கே அமர்ந்த நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் குரங்குகளை மட்டுமே துணையாக பெற்றிருந்தேன். ஆங்காங்கே குரல் கொடுக்கும் சில பறவைகளைக் காண முடியவில்லை. என்னைப் போலவே அவற்றிற்கும் குரங்குகளைக் கண்டு பயமோ? 



பிறகு என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை வந்திருக்கும். ஆனால் பதிவு ரொம்பவே நீண்டு விட்டது! அதனால் தொலைக்காட்சி தொடர்களில் வருவது போல சற்றே இடைவெளி. அடுத்த பகுதியில் சொல்லிவிடுகிறேன்!



மீண்டும் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.

66 கருத்துகள்:

  1. காமிராவை பிடுங்காமல் விட்டாங்களே !! 'அடுத்த பகுதி' அதைப் பிடுங்கியதாக இருக்குமோ !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடுங்கியிருந்தால் இந்த புகைப்படங்கள் கிடைத்திருக்காதே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பயணத்தின் போது சென்று பார்த்த இடத்தைப்பற்றிய தகவலை மிக நன்றாக பதிவாக செதுக்கியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா. அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளேன்... நான்
    த.ம2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. படங்களும் விளக்கங்களும் அருமை. காலை வேளையில் யாரும் இல்லாதபோது தன்னந்தனியனாக அய்யர் மலைக்கு சென்றதே ஒரு சாதனைதான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  4. அனுபவப் பகிர்வும் படங்களும் மிக அருமை.தொடரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. கங்காருக்கள் மட்டுமல்ல..
    குரங்குகளும் தாய்மையில் சிறந்தவை தான்!!

    என்பதை உங்க புகைப்படங்கள் கவிதையாய் சொல்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  6. இதுவரை அதிகம் கேள்விப்படாத கோவில்
    படங்களுடன் சொல்லிச் சென்ற விதம் வெகு சுவாரஸ்யம்
    அடுத்த பதிவை
    ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி....

      நீக்கு
  7. பதில்கள்
    1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. நம்ம ஊர்ப்பக்கம் போயிருக்கீங்க......கல் உடைக்கிற குவாரி ஒன்னு இருக்குமே....ரொம்ப அழகா தெரியும் மேலிருந்து பார்த்தால்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர் பக்கம்... உங்க ஊர் கோவை இல்லையா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவா.

      நீக்கு
  9. எங்க ஊர்ப்பக்கம் போயிருக்கீங்க....மலையிலிருந்து பார்த்தால் ஒரு கல் குவாரி அழகா தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவா.

      நீக்கு


  10. உங்கள் அனுபவ பகிர்வு அருமை.
    10 வருடங்களுக்கு முன் என் தங்கை பேரனுக்கு அங்குதான் பிறந்தநாள் விழாநடத்தினார்கள். அவர்களுடன் கூட்டமாய் மலை ஏறினோம். சிலர் முடியாது இனிமேல் என பின் தங்கி விட சிலர் வெற்றிகரமாய் மேலே போய் இறைவனை தரிசனம் செய்தோம். வெயிலுக்கு முன் போக வேண்டும் மலைக்கு .

    அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள் அந்த அபிஷேக சாமான் கொண்டு செல்பவர்கள் எப்படி ஏற வேண்டும் கஷ்டம் இல்லாமல் என்று சொல்லிக் கொடுத்தார்கள், படிகளை வளைந்து வளைந்து போனால் கஷ்டம் இருக்காது என்றார். அவர் சொன்ன மாதிரி போனோம். கடைசியாக படிகள் முடியும் இடத்தில் கால் சூடு தெரிகிறது அதற்கு காலுறை அணிந்து வரவேண்டும் என்றார்கள்.
    தினம் குருக்கள், பணியாளர்கள் எல்லாம் ஏறி பூஜை செய்கிறார்களே! அவர்களுக்கு, மனௌறுதி, உடல் உறுதி எல்லாம் அந்த இறைவன் தான் அருள்கிறார்.

    உங்கள் அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. எங்க குடும்பம் ரொம்ப பெருசு... பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு! - பாசப்பறவைகளாய் முன்னோர்களின் குடும்பம் ரசிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  12. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் குரங்குகளை மட்டுமே துணையாக பெற்றிருந்தேன். //

    நமது முன்னோர்களின் அரவணைப்பில் இருந்தேன்னு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். முன்னோர்களுடன் இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை!

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  13. குடும்பத்துடன் நாங்கள் உல்லாசமாய் இருக்கும் இடத்தில் நீ எதற்கு வந்தாய்??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  14. உங்கள் பதிவின் மூலம் நாங்களும் பயணப்பட்டோம்... அடுத்து என்ன நடந்தது எனும் ஆவலுடன் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. நீங்கள் இந்த மலையில் உள்ள தெய்வத்தை வழிபடுவதற்கே அந்த ஈசன் அருள் கிட்டினால் மட்டுமே வழிபட முடியும்.வாழ்

      நீக்கு
  15. அழகாக அனுபவங்களை கொடுத்துள்ளீர்கள். பகுதி 2 - க்கு வெய்ட்டிங்.

    (என்ன பாஸ்! குரங்குகளைப் பற்றி பயந்த மாதிரி எழுதியிருக்கீங்க. நமக்கெல்லாம் அலுவலக வளாகத்திலேயே அவைகளுடன் கொஞ்சி குலாவுவது சகஜம்தானே பாஸ்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      அலுவலக வளாக அனுபவங்கள் கொஞ்சம் கைகொடுத்தது உண்மை...

      நீக்கு
  16. தங்களின் முதல் பகுதியே மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. என்னை மாதிரி ஒவ்வொரு பகுதிக்குமிடையே அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரம் அடுத்த பகுதிக்கு வாருங்கள் (அறிவுரைகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு தான், எனக்கில்லை ஹி.. ஹி.. ). பாதி கிணற்றை தாண்டிவிட்டு, முழு கிணற்றையும் தாண்டிவிட்டேனா என்று தெரிந்துக்கொள்ள சற்று பொறுத்திருங்கள் என்று சொல்லி முடித்து விட்டீர்கள். அதனால் தங்களின் அடுத்த பகுதியை படிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். விரைவில் அடுத்த பகுதி.... :)

      நீக்கு
  17. நீங்கள் மலையேறிய அனுபவம் சுவை குறையாமல் சொல்வது பிடித்திருக்கிறது. ஆட்கள் அதிகமாய் நடமாடும் பழனி மலை போன்ற இடங்களிலேயே குரங்குகள் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தனியாக மலையில் குரங்குகளுடன்..... நல்ல அனுபவம்தான். !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார். பல இடங்களில் இவற்றின் தொல்லைகள் நிறைய உண்டு....

      நீக்கு
  18. சுவாரசியம்.. அந்த ஒரு மணிநேரமும் நடத்து தான் குரங்குகளுடன் ஒரு காலையா.. காத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  19. சுதா த்வாரகாநாதன் புது தில்லி9 ஜனவரி, 2014 அன்று 12:06 PM

    சுவராசியமான தொகுப்பு. படங்களில் முன்னோர்கள் தங்கள் வாரிசுகளுடன் கொடுத்த போஸ் பலே ஜோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுதா த்வாராகாநாதன் ஜி!

      நீக்கு
  20. மிக திறில் ஆகஇருக்கிறது, ஆவலுடன் அடுத்த பகுதிக்கு.
    மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  21. அன்புடையீர்.. இந்த ஐயர் மலையில் தரிசனம் செய்ய வேண்டும் என ஆசைதான்!..
    உங்கள் பதிவின் மூலம் நிறைவேறுகின்றது.. அடுத்த பதிவு எப்போது?!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      தனியாகத் தான் சென்றேன்.

      நீக்கு
  23. மூதாதையர்கள் பற்றிய நல்ல பகிர்வு. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  24. அழகான படங்கள் அருமையான அனுபவம்.
    இந்த ஐயர் மலை, திருச்சி மலைக்கோட்டையை விட உயரமா?
    சென்ற யூலை மலைக்கோட்டை விநாயகரைத் தரிசித்தேன்.பல இடங்களை நேரம் போதாமையால் பார்க்க
    முடியவில்லை.
    இத் தலையற்ற சிலை புத்தர் சிலைபோலுள்ளதே, சமணத் துறவியின் சிலையா? நிச்சயம் இந்தத் தலை
    எங்காவது மேற்குலகில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

      நீக்கு
  25. 1500 படிக்கட்டுகளா!? என்னால ஆகாது! நான் இங்கிருந்தே வேண்டிக்குறேன். படங்கள் அனைத்தும் அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  26. என் மனைவியின் ஊர் கரூர்! அய்யர் மலை பற்றி அடிக்கடி கூறுவார்! 1400 படிகள் என்று சொன்னதால் அடியேனும் இதுவரை செல்லவில்லை! அவளும் கூடத்தான்! பார்ப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  27. அருமையான படங்கள் , காலையில் நல்ல உடற்பயிற்சி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்.

      நீக்கு
  28. அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  29. இந்த தலைப்பின் இறுதியில் அடைப்புகுறிக்குள் “ அய்யர்மலை” என்பதனைச் சேர்த்த்து “ குரங்குகளுடன் ஒரு காலை – (அய்யர்மலை - பகுதி 1) என்று இருந்தால், பின்னாளில் கூகிளில், அய்யர்மலை என்று தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

    ஒருமுறை தோகமலைக்கும் குளித்தலைக்கும் இடையில் உள்ள ஒரு ஊருக்கு செல்வதற்கு இந்த அய்யர்மலையில் இறங்கினேன். அங்குள்ளவர்கள், சிறப்பு நாட்களில் மட்டும் மலைக்குச் செல்பவர்கள் அதிகம் இருப்பார்கள் என்றும், மற்ற நாட்களில் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது என்றும் சொன்னார்கள். மேலும் நான் இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததால் செல்ல இயலவில்லை. தங்கள் பதிவும் படங்களும் போகாத அந்த குறையைத் தீர்த்தன. இருந்தாலும் நேரில் சென்று அந்த ஈசனை பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  30. தலைப்பைப் படித்தும் என்னடா இது யாரைப் பத்தி இப்படிச் சொல்றாருனு தயங்கிக்கிட்டே வந்தேன்..
    அழகான படங்கள். ஒரு மணி நேரம் குர்ங்குகள் சும்மா பார்த்துக் கொண்டிருந்தது ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....

      நீக்கு
  31. இன்னும் பார்க்காத இடம்.. எப்ப முடியுமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  32. நீங்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்ய அவன் அருள் கிடைத்தால் மட்டுமே முடியும்.கொடுத்துவைத்திருக்க வேண்டும் --சிவ.மா.சுரேஷ்குமார்

    பதிலளிநீக்கு
  33. நீங்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்ய அவன் அருள் கிடைத்தால் மட்டுமே முடியும்.கொடுத்துவைத்திருக்க வேண்டும் --சிவ.மா.சுரேஷ்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி சிவ. மா. சுரேஷ்குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....