நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக
முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு. 6650
கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா,
உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு
சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின்
வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது.
கொலம்பியா நகரில் இருக்கும் Cano Cristales எனும் ஆறு மிகவும் புகழ் பெற்றது. அப்படி என்ன இதில் சிறப்பு என்று
கேட்பவர்களுக்கு, இந்த ஆறு ஒரு வண்ணமயமான ஆறு - ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து அழகிய
வண்ணங்களைக் கொண்டது. திரவ வானவில் என்றும், உலகிலேயே மிகவும் அழகிய ஆறு எனவும்
சொர்க்கத்திலிருந்து வந்த ஆறு எனவும் இதை அழைக்கிறார்களாம்! நீங்களே படத்தில்
பாருங்களேன். “என்ன அழகு!”
சூர்யா, த்ரிஷா நடித்த “ஆறு” திரைப்படம் –
இந்தப் பட்த்தின் உரிமை வைத்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் அலுக்காது
சலுக்காது, மக்கள் ரசிப்பார்களா என்ற யோசனை கூட இல்லாது, 60 முறைக்கு மேல்
ஒளிபரப்பி இருப்பார்கள்! சமீபத்தில் கூட இப்படம் ஓடிக்கொண்டிருந்தது! நானும்
ஓடினேன்.... அந்த சேனலை விட்டு அடுத்த
சேனலுக்கு!
”ஆறு பெருகி வரின்
அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே”
வஞ்சிக்கோட்டை
வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா ஆகிய இருவருக்கும் நடனத்தில்
நடக்கும் போட்டி! – பாடல் – “கண்ணும் கண்ணும் கலந்து” அப்பாடலின் நடுவே வரும் வரிகள்.....
”என்னா பாட்டு டே! என்ன நடனம் டே!” என்று
சொல்லுபவர்கள் மீண்டும் இங்கே
ரசிக்கலாம்!
தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவரான முருகப்
பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் - திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய், திருவாவினன்குடி (எ)
பழனி, திருவேரகம் (எ) சுவாமிமலை, திருத்தணி அல்லது குன்றுதோறாடல், பழமுதிர்சோலை.
கவிஞர் கண்ணதாசன் எத்தனை தத்துவார்த்தமான பாடல்களை
எழுதி இருக்கிறார் என வியந்து அவரைப் பாராட்டுபவர்கள் இருந்து கொண்டே தான்
இருக்கிறார்கள் – அவர் மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் றையாது. அப்படி ஒரு பாடல் - “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு!”
என்ன தான் சொல்ல வர!.... ஒண்ணுமே புரியலப்பா!
”இந்தப் பதிவில் சம்பந்தமே இல்லாமல் ஆறு
விஷயங்களைச் சொல்லி இருப்பது ஏன்” என குழப்பம் அடைந்து இருப்பீர்களே! விம் போட்டு விளக்கி விடுவது நல்லது!
“சந்தித்ததும், சிந்தித்ததும்” என்று நான்
பதிவுலகில் எழுத ஆரம்பித்தது இதே நாளில். ஐந்து
வருடங்கள் முடிந்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன்.
அவ்வப்போது சில தடங்கல்கள் வந்தாலும் இன்னமும் எழுத
உற்சாகப்படுத்துவது தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் கருத்துகளும், ஊக்கமும்
தான்....
இந்த வலைப்பயணத்தில் என்னுடன் தொடர்ந்து பயணித்து என்னை
ஊக்கப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
மீண்டும் சந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.