தொகுப்புகள்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சாப்பிட வாங்க: ஜலேபா



குளிர் காலம் வந்துவிட்டாலே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். எங்கள்என்று சொன்ன உடனேயே “திங்கக் கிழமையில் உணவு பதார்த்தங்களை ருசிக்கத் தரும் “எங்கள் பிளாக்நண்பர்களுக்கோ என நினைத்து விடவேண்டாம்.  இந்த எங்கள்குழு வேறு – எங்களில் இருப்பது ஒரு பல மாநில கூட்டணி – நட்பு மட்டுமே அதன் அஸ்திவாரம் – நட்பு என்று வந்தபிறகு மொழியோ, மதமோ, ஜாதியோ அதில் குறுக்கிடக்கூடாதே. 

எங்களில் நான், முரளி, வர்கீஸ், உஸ்மான் அலி, சத்பால், அனில் குமார் என ஆறு நண்பர்கள்.  தில்லியின் குளிர்காலங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது மதிய உணவு வெளியே தான். அதற்காகவே தில்லியின் சாந்த்னி சௌக், பாஹட்கஞ்ச், என்று தேடித்தேடி செல்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது. தமிழகத்திலிருந்து வந்த எனக்கு பல உணவுகள் புதிது.  அனைத்தையும் ரசித்து ருசித்து உண்போம். 

அப்படி ருசித்த பல உணவுகளில் ஒன்று தான் இன்று சாப்பிட வாங்க என்று அழைக்கும் ஜலேபா! ஜிலேபி தெரியும், அது என்ன ஜலேபா....என்று யோசிக்கும் உங்களுக்கு ஒரு பதில் – ஜலேபா ஜிலேபிக்கு அப்பா! ஆஹா பேர் சொல்லும் போதே அப்பா என்ன ஒரு சுவை அதற்கு எனத் தோன்றுகிறது!”  மதிய உணவு முடித்த பிறகு எப்படியும் ஒரு இனிப்பு உண்டு – காரட் ஹல்வாவோ, பாசிப்பருப்பு ஹல்வாவோ, ஜலேபாவோ எதேனும் ஒன்று சாப்பிடுவது சர்வ நிச்சயம்.

அப்படி சாப்பிட்ட ஜலேபா – இந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு மேளாவிற்குச் சென்ற போது விற்றுக் கொண்டிருந்தார்கள் – சாந்த்னி சௌக் அளவிற்கு சுவையாக இருக்குமோ, மேளாவில் இருக்கும் மண் புழுதி அனைத்தும் அதன் மேல் இருக்குமோ என்ற எண்ணங்கள் மனதில் அலைமோத அதனைப் புகைப்படம் மட்டும் பிடித்து வந்தேன்!



சரி ஜலேபா எப்படிச் செய்வது என்று நம்ம புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் உங்களுக்காக சொல்லவா! சுவையான, மொறுமொறுவென, ரசம் சொட்டும் ஜலேபா – பெரிய அளவு ஜிலேபி செய்யலாம் வாங்க!

தயாரிக்க ஆகும் நேரம்: 7 முதல் 8 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30 நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்: 4 [அந்த நாலு பேரும் “நாலு பேருக்கு நன்றின்னு பாட மாட்டாங்க, செய்து கொடுத்த உங்களுக்கு மட்டும் தான் நன்றி சொல்வாங்க!]

தேவையான பொருட்கள்:

மைதா – 1.5 கப், சோடா உப்பு – 1 தேக்கரண்டி, சர்க்கரை – 2.5 கப், பச்சை ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி, குங்குமப்பூ – நான்கு அல்லது ஐந்து இதழ்கள், நெய் – பொரிக்க.....

எப்படிச் செய்யணும் மாமு?

மைதா மாவு மற்றும் சோடா உப்பு இரண்டையும் நல்ல கலந்துக்கோங்க. அது தலைல, இரண்டு கப் தண்ணீர் விட்டு நல்ல கலந்துக்கோங்க.....  கலக்கும் போது கவனம் தேவை – நடுவுல கட்டி வரவே கூடாது – கட்டி வந்தா மாவு பூரா போகும் குப்பைத் தொட்டிக்கு! இதைச் செய்ய வேண்டியது ஜலேபா செய்யறதுக்கு 7 – 8 எட்டு மணி நேரம் முன்னாடியே! எல்லாத்துக்கும் தயாரா இருக்க வேணாவா!

ஜலேபா செய்ய ஆரம்பிக்கும்போது முதல்ல சர்க்கரைப் பாகு செய்யணும் – சர்க்கரைய இரண்டரை கப் தண்ணீர் விட்டு நல்ல கரைச்சுக்கணும் – அதை அடுப்பில் வைத்து பாகு செய்த பிறகு அதில் ஏலக்காய் பொடியும், குங்குமப் பூவையும் போட்டு ஒரு கலக்கு!



உங்க வீட்டுல ராம்ராஜ் காட்டன் வேட்டி புதுசா வாங்கி வைச்சுருந்தா அதிலிருந்து ஒரு பீஸ் சர்ருன்னு கிழிச்சுக்கலாம்.  இல்லே போனா போறார் – அவர் கிட்ட இருக்கறதே ஒரே ஒரு நல்ல வேட்டின்னு கரிசனம் இருந்தா, ஒரு வெள்ளைத் துணில நடுவில் கட்டை விரல் போகற அளவு ஓட்டை போட்டுக்கலாம். இல்லைன்னா, பிளாஸ்டிக்-ல Sqeezer கிடைக்குது. அதுல ஆள்காட்டி விரல் அளவு ஓட்டை இருக்கற ஒண்ணு வாங்கி அதுல ஊறி இருக்க மைதா மாவு கலவையை நிரப்பி வச்சுக்கோங்க!  

ஒரு தட்டையான Pan-ல் நெய் விட்டு அதைச் சூடாக்கிக்கணும். சூடா இருக்கும் நெய்ல – Squeezer-ஐ அழுத்தி ஐந்து அல்லது ஏழு வட்டம் போடணும் – பென்சில்ல போட்டாலே வட்டம் வராது இப்படி காத்துல வட்டம் போடச் சொன்னா எப்படின்னு கேள்வி கேட்கக் கூடாது! இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நல்ல பொன்னிறமா வெந்த உடனே வெளியே எடுத்து நெய் எல்லாம் சொட்டிய பிறகு கரைச்சு வைச்சு இருக்க சர்க்கரைப் பாகுல ஒரு முக்கு! பத்து பனினைஞ்சு நிமிஷத்துல ஜலேபா தயார்......
யாருக்குங்க இந்த அளவு பொறுமையும் நேரமும் இருக்கு! நம்மால ஆகாது அப்படின்னு நினைக்கறவங்க எல்லாம் கையத் தூக்கிட்டு வரிசையா நில்லுங்க பார்ப்போம்..... தில்லி சாந்த்னி சௌக்-ல இருந்து ஆர்டர் கொடுத்துடலாம்!

என்ன நண்பர்களே....  ஜலேபாவை ருசித்தீர்களா?

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  வரும் வாரங்களில் இப்படி வாரத்திற்கு ஒன்றாக சில வித்தியாசமான உணவு வகைகளை உங்களுக்குச் சொல்ல நினைத்திருக்கிறேன்! ஆணி பிடுங்குவதிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் பட்சத்தில்!

46 கருத்துகள்:

  1. வேட்டி அளவு இனி குறைய வாய்ப்புள்ளது...! ஹா.... ஹா....

    ஜலேபா பலேபா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. அப்பாவுக்கு நல்ல சுவை! சண்டிகரில் தின்னுருக்கேன்:-)

    வாரம் ஒன்னா? கலக்குங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.....

      நீக்கு
  3. எங்கல் ஊர் திருவிழாக் கடைகளில் கிடைக்கும் ஜிலேபி போல இருக்கிறது பார்க்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன அளவில் இருந்தால் ஜிலேபி. இது பெரியது - ஜலேபா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  4. சக்கரை வியாதிக்காரன்! நான் ,இப்பதிவு என்னை சங்கடப் படுத்தியது வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. oh, vorry! It means One's food could be other's poison. On behalf of Venkat.

      நீக்கு
    2. அடடா உங்களை சங்கடப் படுத்திவிட்டேனே..... :(

      இந்த வாரம் ச்சீலா என்று ஒரு உணவுப் பொருள் பற்றி எழுதி இருக்கிறேன்... அதை நீங்கள் சாப்பிடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

      நீக்கு
  5. இங்கே - குவைத்தில் - வட இந்திய உணவகத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்.
    ஆனால் - அப்போது இது தான் ஜலேபா என்று தெரியாது..

    ஜலேபா - போலவே, தங்கள் பதிவும் இனிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  6. ஆஹா...அருமை.
    வாரத்திற்கு ஒரு பதிவா? வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  7. சூர் சூர் ரெஸ்டாரெண்ட்டில் தானே??

    ஜிலேபி GARAM GARAM! அடுத்தது சமோசாவா????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர் சூர் ரெஸ்டாரெண்ட் அல்ல.. அது இருப்பது பாஹட்கஞ்ச்.... நாங்கள் ஜலேபா சாப்பிடுவது சாந்த்னி சௌக் பகுதி!

      சமோசா - அது கூட எழுதலாம் - பிறிதொரு சமயத்தில்!

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.

      நீக்கு
  8. //”எங்கள்” என்று சொன்ன உடனேயே “திங்க”க் கிழமையில் உணவு பதார்த்தங்களை ருசிக்கத் தரும் “எங்கள் பிளாக்” நண்பர்களுக்கோ என நினைத்து விடவேண்டாம்.//

    அப்படி நினைச்சா தப்பா பாஸ்? :)))))))))

    எங்கள் வீட்டுக்கருகில் ஜலேபா விற்கும் கடை ஒன்று இருக்கிறது. நாங்கள் இத்தனை நாள் அதை டெல்லிவாலா ஜிலேபி என்றுதான் சொல்லி வந்தோம். இனி பெயரை மாற்றி விடுவோம்! ஜலேபாவும், சமோசாவும் மதியம் 3 மணி முதல் சூடாகக் கிடைக்கும் இங்கு! அங்கேயே வாங்கிக்கறோம் விடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பே இல்லை பாஸ்!

      ஜலேபா அங்கே கிடைக்கிறதா! தொடர்ந்து ருசிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. சூப்பரா இருக்கு நீங்க சொல்லுகிறதை பார்க்கும் போதே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  10. மீண்டும் ஒரு நல பாகம் தருவதற்கு, நளன் இன்று கிடைத்துவிட்டார் போலும்!
    அசத்துங்கள்!
    அடுப்படி ராஜ்ஜியத்தை நாமும் கைபற்றுவோம்
    பெண்டீருக்கு இணையிங்கு
    ஆடவருண்டு அதை நினை இன்று!

    நட்புடன்,
    புதுவை வேலு
    (எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்கள் நண்பரே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

      நீக்கு
  11. நம்ம ஊரிலெ இதை ஜிலேபி என்பார்களா ஜாங்கிரி என்பார்களா. எனக்கு அடிக்கடி வரும் சந்தேகம் இது. நம்மூரில் உளௌத்தம் மாவில் அல்லவா செய்வார்கள். ? நாம் நம் சௌகரியப்படி செய்முறைகளை மாற்றிக் கொண்டாலும் A sweet is a sweet is a sweet by whatever name you call that,,,,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உளுந்தில் ஜாங்கிரி.... இது மைதா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  12. படிக்கும்போதே நாவில் நீர்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. ஜிலேபி ஜாங்கிரி என்ன வித்தியாசம்? அதை உளுத்தம் மாவில் செய்வதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை இது வேற ரெசிபியா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி சார், ஜாங்கிரியை ஹிந்தியில் "இமர்த்தி" எனச் சொல்வார்கள். அது உளுந்தை அரைச்சுச் செய்வது. ஜிலேபி அல்லது ஜலேபா என்றால் மைதா மாவில் செய்வது. சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் பொரித்து எடுத்த உடனே சர்க்கரைப் பாகில் போட்ட ஜலேபாவை அந்தச் சூட்டோடு சாப்பிட்டால் ஆஹா!

      இதைத் தவிரச் சுண்டக் காய்ச்சிய பாலில் இந்த ஜலேபாக்களையோ அல்லது இமர்த்திகளையோ ஊறப்போட்டும் கொடுப்பது உண்டு. இது ரொம்ப அபூர்வமாகவே கிடைக்கும். :))))

      நீக்கு
    2. விரிவான விளக்கம் கீதாம்மா கொடுத்து இருக்காங்க!

      பாலில் போட்டு சாப்பிடுவதும் ஒரு அனுபவம் தான்! உத்திரப் பிரதேசத்தில் காலையில் இப்படி சாப்பிடுவார்கள்... நானும் சாப்பிட்டதுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
    3. GMB சாருக்கு விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. ஜிலேபிக்கு அப்பா ஜலேபா....

    ஹா... ஹா... சாப்பிடணும் போல இருக்கு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய உணவகங்களில் கேட்டுப் பாருங்க குமார். நிச்சயம் கிடைக்கும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  15. பார்க்க அழகா இருக்கு யாராவது செய்து கொடுத்தா சாப்பிடலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  16. ஜலேபா பேரே ஈர்க்கிறது. செய்முறை வெகு நன்று. இருந்தாலும் சாந்தினி சௌக் தான் வரணும்னு மருமகளும் சொல்கிறாள் .கோல் கப்பா ,மசாலா பால் எல்லாம் எழுதுங்கோ வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசாலா பால் - இப்போதெல்லாம் தில்லியில் வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  17. ஜலேபா, ராஜஸ்தானில் நசிராபாதில் சாப்பிடணும். நசிராபாத் கசோடாவுக்குப் பெயர் போனது. கசோடிக்குக் கொள்ளுத் தாத்தா கசோடா. அதுவும் நசிராபாத் கசோடா ரொம்பப் பிரபலம். :))) அந்தக் கசோடாவோட இந்த இனிப்பான ஜலேபா தான் சரியான துணை. தால் பாட்டிக்குச் சூர்மா மாதிரி! ஆனால் மைதாமாவில் நான் கொஞ்சம் தயிர் சேர்ப்பேன். ஒரு சிலர் மாவு பொங்கி வரணும்னும் சொல்றாங்க. தயிர் சேர்த்துப் பிசைந்து இரண்டு மணி நேரம் வைத்துவிட்டுப் பின் பிழிவது உண்டு. இதுக்குனு மெஹந்தி இடும் கோன் கிடைக்குதே, அதைக் காலியாக மெஹந்தி இல்லாததாக வாங்கி வைச்சுக்கலாம். கடைகளில் சொல்லி வைச்சால் மெஹந்தி அடைக்காத கோனாகத் தருவாங்க. ஆனால் மொத்தமாக வாங்கறாப்போல் இருக்கும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச்சோடா/கச்சோடி - ஆஹா இதுவும் ரொம்பப் பிடிக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  18. Jilebi with Rabdi is a very good combination Venkatji. Write about Raj Kachori and variety of Paranthas available in Paranthavali gali, Chandini Chowk

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ் கச்சோடி... வாவ் அதன் சுவையே தனிதான்...... எழுதுவோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன் ஜி!

      நீக்கு
  19. பதிவர் சந்திப்பு நடக்கும்போது, சாப்பாட்டுப் புராணம் எழுதும் பதிவர்கள், ஓரிரண்டு அய்ட்டங்கள் செய்துகொண்டுவரவேண்டும் என்று சொன்னால், நிறைய வாசகர்களும் கலந்துகொள்வார்கள். வட இந்திய இமெர்த்தி, தென் இந்தியாவின் ஜிலேபி பக்கத்திலே வராது. 'நம் பக்கத்தில் ஜிலேபி ரொம்ப ஸாஃப்ட். வட இந்திய ஜலேபா, ஜிலேபிக்கு ரொம்ப வித்தியாசம் இருப்பதுபோல் தெரியவில்லை. ஸ்வீட் எப்போதும் ஸ்வீட்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  20. ஜலேபா ரொம்ப க்ரிஸ்பியாக இருக்கும்...இது கேரளத்திலும் செய்கின்றார்கள்.

    செய்முறை தந்தமைக்கு மிக்க நன்றி....துளசி, கீதா

    வீட்டில் செய்வதுண்டு...ஜிலேபி செய்வதை விட இது சற்று எளிது என்பதால்...ஒரு சிறு புளிப்புச் சுவையும் இருக்கும்....சூடாகச் சாப்பிட அருமை! - கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சுவையோ சுவை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  21. ஆஹா! கச்சோடி/கச்சோடா....மிகவும் பிடிக்கும்.......எல்லா வட இந்திய உணவுகளும் சுவைத்தும் இருக்கிறேன்... வீட்டிலும் செய்வதுண்டு...நீங்கள் டெல்லியில் இருப்பதால் இது போன்று போடுங்கள்....வெங்கட் ஜி! புதிய வெர்ஷனைக் கற்றுக் கொள்ளலாமே அதான்.... --கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச்சோடி/கச்சோடா - பகிர்ந்து கொள்கிறேன் விரைவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....