தொகுப்புகள்

செவ்வாய், 3 மார்ச், 2015

சாப்பிட வாங்க: சுக்டி



சென்ற வருடத்தில் குஜராத் பயணம் சென்றது பற்றி வலைச்சரத்தில் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிச் சென்றபோது அஹமதாபாத் நகரில் ஒரு இடத்தில் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். முற்றிலும் கிராமியச் சூழலில் உணவு பரிமாறுவார்கள். அங்கே சாப்பிடும்போது ஒரு வித இனிப்பு வழங்கினார்கள்.  முதலில் வைத்ததை சாப்பிட்டுப் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. அடுத்த முறை கொண்டு வந்தால் வாங்கிச் சாப்பிட வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டே மற்ற உணவு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

இரண்டு முறை கேட்டபோது, “தோ கொண்டு வரேன்!என்று சொல்லி நகர்ந்தார்களே தவிர வரவில்லை.  மூன்றாம் முறையாக, அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வெள்ளை உடை ஆசாமியிடம் கொஞ்சம் முறைப்பாகச் சொல்ல, அவர் பணியாள் ஒருவரிடம் கொண்டுவரச் சொல்லி விட்டார்.  ஒரு சில நிமிடங்களில் அந்தப் பணியாள் வந்து எனது இலையில் இரண்டு துண்டு வைத்தார்.  நானும் பாய்ந்து அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன்! மறைந்திருந்த சனிபகவான் அங்கே தான் எனைப் பார்த்து கெக்கே பிக்கே எனச் சிரித்தார்! அவர் சிரித்த சத்தம் அமைதியான சூழலில் பலமாகக் கேட்டது!

இரண்டு முறை கேட்டும் கொண்டு வராததன் காரணமும் எனக்குத் தெரிந்தது! அப்போது தான் செய்து கொண்டிருந்தார்கள் போலும்.  சுடச்சுட கொண்டு வந்து வைத்த இனிப்பை அவசரமாய் வாயில் போட்டுக் கொள்ள நாக்கு பழுத்துவிட்டது! மேலாக சூடில்லாமல் இருந்தாலும் உள்ளே நல்ல சூடு!  சூடு பொறுக்காது கத்தலாம் என்றால், உள்ளிலிருந்து ஒரு குரல் “Public Public!” என்று சத்தமிட, கஷ்டப்பட்டு கத்தாமல் விட்டேன்! என்னதான் அந்த உணவு பிடித்ததென்றாலும், ரொம்ப அவசரப் படக்கூடாது என சூடு வாங்கிக் கொண்டு ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்!



அந்த இனிப்பு தான் சுக்டி! நன்றாகவே இருந்தது – சூடு போட்டுக்கொண்டாலும் அதன் சுவை பிடித்துப் போக, இன்னும் ஒரு முறை கேட்டு ஒரு துண்டு வாங்கி சாப்பிட்டேன் என்றால் பாருங்களேன்! இந்த சுக்டி எப்படிச் செய்வது என்று சொல்கிறேன் கேளுங்கள்!

தயாரிக்க ஆகும் நேரம்: 5 நிமிடங்கள்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 10 நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்?  சுமார் நான்கு பேர்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 250 கிராம்.  நெய் – 250 கிராம.  பொடித்து வைத்த வெல்லம் – 200 கிராம்.

எப்படிச் செய்யணும் மாமு?

இதைச் செய்வது ரொம்பவும் சுலபம் தான். ஒரு தாம்பாளம் அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சமாக நெய்விட்டு தட்டு முழுவதும் தடவி வையுங்கள்.

அடுத்ததாக ஒரு வாணலி அல்லது NON-STICK தவா வில் நெய்யை விட்டு சூடாக்குங்கள். கொஞ்சம் சூடானதும் அதில் கோதுமை போட்டு நன்றாக கலக்கிக் கொண்டே இருங்கள். பொன்னிறமாக ஆனதும் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் வெல்லப்பொடியைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கலந்து வைத்ததை நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாகப் பரப்பி விடுங்கள்.  சற்றே ஆறியதும் வில்லைகள் போட்டு எடுத்து விடுங்கள். 

வேண்டுமெனில் இக்கலவையில் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளலாம்!

சுடச்சுட சுக்டி தயார்.  அதுக்குன்னு என்னை மாதிரி அவசரப்பட்டு சூடான சுக்டியை வாயில் போட்டுக்கொண்டு அம்மா அப்பா என்று அலறினால் கம்பெனி பொறுப்பு ஏற்காது என்பதைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள்!!

என்ன நண்பர்களே....  சுக்டி செய்து ருசிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. ஆக்கப் பொறுத்தவருக்கு ஆற பொறுக்கவில்லை.....

    சுக்டியைச் செய்து பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  2. சூடு சுக்டி செய்து, பொறுமையாக ருசித்துப் பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. உங்க வர்ணனையைப் பார்த்தால் சுக்டி செமையாத்தான் இருக்கும்போலிருக்கு. ஒருநாள் செய்யணும். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  4. சுலபமா இருக்கு போல! இன்னிக்கு நம் வீட்டுலே சுக்டிதான்:-)

    ஆரம்பகால வாழ்க்கையில் தினமும் பிற்பகல் ஆனால் மீனாட்சி அம்மா சமையல் புத்தகத்துலே இருக்கும் இனிப்பு வகைகளை எல்லாம் படிச்சுப் பார்த்துட்டு, கைவசம் உள்ள பொருட்களை ஆராய்ஞ்சு(!) எதாவது ஒரு இனிப்பைக் கொஞ்சமா செஞ்சு பார்ப்பேன். ஒரு ஸ்பூன் மாவு, ரெண்டு ஸ்பூன் சக்கரை, கொஞ்சூண்டு நெய் இப்படித்தான் அளவு.

    இன்னிக்கும் இதே போல் ரெண்டு ஸ்பூன் கோதுமை மாவு என்ற கணக்கில் செஞ்சுறலாம்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெண்டு ஸ்பூன் கோதுமை மாவில்.... செய்து பார்த்தாச்சா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
    2. பார்த்தாச்! கொஞ்சம் வெல்லம் கூடுதலாப்போச்சு. அதனால் என்ன?சாமி கோச்சுக்கலை:-)

      நெய் காய்ச்ச முருங்கை இலைக்கு எங்கே போவேன்? கறிவேப்பிலை போடுவேன். க்ரஞ்சியா இருக்கும் அதை எடுத்து லபக்:-)

      நீக்கு
    3. crunchy ஆ கறிவேப்பிலை - செய்து பார்த்துடுவோம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. எளிதான சுக்டி . மிதமான சூட்டில் தானே செய்ய வேண்டும்?
    செய்துப் பார்க்க தோன்றும் செய்முறை விளக்கத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  7. சுட்ட பழமான சுக்டி!..
    சுக்டி..க்கு நல்வரவு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  8. சுக்டியின் கனம் எவ்வளவு இருக்கவேண்டும் என்றி சொல்லவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. எளிய செய்முறை. கொண்டு வைத்தவர் ’சூடாய் இருக்கு’ என எச்சரித்து விட்டுப் போயிருக்கக் கூடாதோ..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  11. நாங்கள் ஒவ்வொரு முறை வெண்ணெய் காய்ச்சும்போதும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றியதும் பாக்கி ஒட்டிக் கொண்டிருக்கும் நெய்யில் கோதுமை மாவு போட்டு பொன்னிறமாகப் புரட்டி, தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கம்மா நீங்கள் செய்தது போலவே கோதுமை மாவிற்கு பதிலாக அரிசி மாவு போட்டு தருவார்கள்

      நீக்கு
    2. வெண்ணை காச்சும்போது துளிரான முருங்கை இலை போட்டு சாப்பிடுவோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. அரிசி மாவு போட்டு சாப்பிடதில்லை... செய்து பார்க்க வேண்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    4. //துளிரான முருங்கை இலை போட்டு //

      அதுவும் செய்வோம்!!

      :)))))))))-

      நீக்கு
    5. அதன் ருசியே தனி தான் இல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. நம்ம ஊர் கம்மர் கட்டின் மாற்றுப்பதிப்புதான் சுக்டியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. உடனே செய்து சாப்பிட வேண்டும் என்று ஆவல் பிறக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  14. அண்ணா! ஒரு உண்மையா சொல்லட்டா, பார்க்க நம்ம சிக்கி மிட்டாய்(கடலை மிட்டாய்) போல இருக்கேன்னு நினைத்துக்கொண்டுதான் இங்கே ஓடிவந்தேன்:)))) இதுவும் அதுபோல இருக்கும்போலவே>>>>ஸ்ஸ்ஸ்ஸ்> சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. டீச்சரம்மாவிற்கு கண்ணாடி போடும் வயசாகிவிட்டதா??

      நீக்கு
    2. சிக்கி மாதிரி இருக்கா? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி..

      நீக்கு
  15. எனக்கு சுக்டி இறுகிவிட்டது. இன்னொரு முறை முயற்சி செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்து பாருங்கள்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி!

      நீக்கு
  17. சுக்டி நாங்கள் எப்ப வெண்ணைய் காய்ச்சினாலும் கடைசியில் விடுபடும் கசண்டு + நெய்யில் கோதுமை மாவு போட்டு வறுத்து, அதில் வெல்லமோ, சர்க்கரையோ போட்டு தட்டுவது உண்டு. சிலசமயம் ஏலக்காய், குங்குமபூ, இல்லை முந்திரிப்பருப்பு, பாதாம், திராட்சை கூட போட்டுச் செய்வதுண்டு.....ப்ளெயினாகவும் செய்வதுண்டு....

    ம்ம்ம் சூப்பரா சூடா??!! எஞ்சாய் பண்ணினீங்கனு சொல்லுங்க....ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஞ்சாயோ எஞ்சாய் - அதுவும் சுடச் சுட! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  18. சுக்டி.. யாராவது செய்து தந்தால் சாப்பிடலாம்...
    ஊருக்கு வரும் போது சுக்டி சாப்பிட ஸ்ரீரங்கம் வந்துடறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து விடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  19. ஆஹா....உடனேயே செய்யனும்னு தோணுது...செய்து பார்க்கிறேன் சகோ. கைவசம் உள்ள பொருட்கள் தான் கவலையில்லை.
    தம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  20. // தயாரிக்க ஆகும் நேரம்: 5 நிமிடங்கள்.
    சமைக்க ஆகும் நேரம்: சுமார் 10 நிமிடங்கள்.
    எத்தனை பேர் சாப்பிடலாம்? சுமார் நான்கு பேர்.//

    உங்களைப் போல உள்ளவர்கள் என்றால் நான்கு பேரும் என்னைப் போல உள்ளவர்கள் என்றால் ஒருத்தர் என்றும் வந்து இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி... மதுரைத் தமிழனுக்கு மட்டும் அனைத்தும் தந்துவிடலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  21. வீட்டில் செய்து பார்க்க சொல்லிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே!

    குஜராத்தின் சுக்டி செய்முறை நன்றாக இருக்கிறது. எளிதாக இருப்பதால், உடனேயே செய்ய தூண்டும் இனிப்பு வகையை சார்ந்தாக இருக்கிறது. செய்து விடுகிறேன்.கோதுமை மாவுடன் வெல்லம் கலந்து தோசையாக சாப்பிட்டிருக்கிறோம். இது வித்தியாசமானது. பகிர்ந்தமைக்கு நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....