ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம்
– பகுதி 8
என்ன நண்பர்களே, லோக்டக்
ஏரிக்கரையிலிருந்து புறப்பட உங்களுக்கும் மனமில்லையா? இருந்தாலும், புறப்படத்தானே வேண்டும். நாங்களும் அந்த அமைதியான, இயற்கை அன்னையின் தாலாட்டுப்
பாடலைக் கேட்டபடியே இருந்துவிட நினைத்தாலும், புறப்பட்டோம். வந்த வழியே திரும்ப வரவேண்டும் என்றாலும், வழியில்
மேலும் சில இடங்களையும் பார்த்தபடியே வர வேண்டும் என்பது எங்கள் திட்டம். வழியில் கண்ட காட்சிகளையும், இடங்களையும் பற்றி
இப்பதிவில் பார்க்கலாமா?
கடைவீதி கலகலக்கும்......
நாங்கள்
சென்றபோது காலை நேரம் என்பதால் வழியில் உள்ள ஊர்களில் அத்தனை ஆள் நடமாட்டம் இல்லை. திரும்பி வரும் போது முன் பகல் என்பதால் ஊரில் உள்ள
அனைவருக்கும் துயிலெழுந்து நடமாட ஆரம்பித்திருந்தார்கள். கடைத்தெருக்கள் மக்களாலும், வண்டிகளாலும் நிரம்பி
இருந்தது. வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான
காய்கறிகள், ராஜபவனி போல அமர்ந்து வர வசதியான உயர ரிக்ஷாகள் என அனைத்தையும் கவனித்தபடி
வந்தோம்.
ராஜபவனி!
வழியிலே
ஒரு கடைத்தெரு – நிறைய மக்கள் நடமாட்டம், ரிக்ஷாக்கள், காய்கறிகள் வாங்க வந்திருக்கும்
மணிப்பூரி பெண்மணிகள் என இருந்தது. ஒரு காய்
வித்தியாசமாக இருந்தது. எல்லாக் கடைகளிலும்
கொத்துக் கொத்தாக அந்த காய் விற்பனை செய்யப்பட அனைவருமே அவற்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என ஓட்டுனர்
ஷரத் இடம் கேட்க, அவர் அந்த காயின் பெயர் யோங்க்சா என்றும் அதைச் சட்னியாக செய்து கருப்பு
அரிசி சாதத்துடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா என சப்புக் கொட்டினார்.
அது
என்ன யோங்க்சா சட்னி, கருப்பரிசி சாதம் என உங்களில் சிலர் கேட்கக்கூடும் என்பதால் எனது
முந்தைய பதிவொன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்காக இங்கே தருகிறேன்.
யோங்க்சா
இந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்று. இது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது! இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும் – எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது! இந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூ! என்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க! கவலையும் படாதீங்க – சாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும்! இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா? கூட Main dish வேணும்ல! அதுதான் குரங்கு அரிசி! குரங்கு அரிசியா? குரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது!
யோங்க்சா விற்பனைக்கு....
மணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க! Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே! இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும் – எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – ”வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனே” என்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன்! – “இல்லைப் பரவாயில்ல! செய்முறை மட்டும் சொல்லுங்க!”. அவர் பாவம் – சமையல் கலைல கொஞ்சம் Weak போல! இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு!
மணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு. இந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம்! போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்! நல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல! பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில்! அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது!
சாலைக்
காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் பிஷ்ணுபூர் மாவட்டத்திற்குப்
பெயர் வரக் காரணமாயிருந்த ஒரு கோவிலுக்கு.
பதினைந்தாம் நூற்றாண்டுக் கோவில் – கோவில் என்றதும் மிகப் பெரிய கோவில் என நினைத்து
விட வேண்டாம். மிகச் சிறிய கோவில் தான். கோவிலும்,
கோவிலைச் சுற்றி ஒரு சிறிய பூங்காவும் பராமரித்து வருகிறார்கள். மணிப்பூர் நகரில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல்
கோவில் இது என்றும் நம்பப்படுகிறது. புராதனமான
கோவில் என்பதால், இந்திய அரசின் தொல்பொருளியல் துறையின் கீழ் பராமரிக்கப் படுகிறது. கோவில் எப்படி வந்தது எனும் கதையையும் பார்க்கலாம்…
பிஷ்ணுபூர் - விஷ்ணு கோவில்...
மணிப்பூர்
ராஜாவான க்யாம்பாவும் போங் நகர ராஜாவான சாவ்பா கெ கோம்பா என்பவரும் இணைந்து தற்போதைய
மியான்மார் பகுதியில் இருக்கும் க்யாங் எனும் நாட்டை கைப்பற்றினார்கள். வெற்றியில் மகிழ்ச்சி கொண்ட போங் ராஜா, தன்னுடன்
சேர்ந்து போரிட்ட க்யாம்பாவுக்கு ஒரு சிறிய விஷ்ணு சிலையைப் பரிசளித்தாராம். அந்தச் சிலை கிடைத்த பிறகு க்யாம்பா விஷ்ணுவின்
மீது பக்தி செலுத்த ஆரம்பித்ததோடு, ஒரு கோவில் கட்டச் செய்து அதில் விஷ்ணுவின் சிலையை
பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்.
விஷ்ணுவின்
சிலை இங்கே வந்த பிறகு இந்த இடத்தின் பெயரும் விஷ்ணுவின் பெயராலேயே பிஷ்ணுபூர் என அமைந்துவிட்டது!
என்ன
நண்பர்களே, இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட விஷயங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.