தொகுப்புகள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது – இளையராஜா




புத்தகக் கண்காட்சிகளுக்குப் போகும்பொதெல்லாம் நிறைய புத்தகங்களை வாங்கி வருவது வழக்கம். சில சமயங்களில் புத்தகங்களைப் பார்த்த உடன், அதன் தலைப்போ, அல்லது அப்புத்தகத்தின் ஆசிரியரோ நம்மை ஈர்த்து விட்டால், உடனே வாங்கி விடுவோம். அப்படி வாங்கிய புத்தகம் தான் இளையராஜா அவர்கள் எழுதிய “வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குதுஎனும் புத்தகம். பார்த்த உடனே வாங்கத் தூண்டியது தலைப்பு மட்டுமா இல்லை அதனை எழுதியவர்  இளையராஜா என்பதுமா என்பதை அறியேன். ஆனாலும் வாங்கிவிட்டேன். 

சில புத்தகங்களை மட்டும் ஒரு முறை படித்து வைத்து விட முடிவதில்லை. மீண்டும் மீண்டும் எடுத்து சில பக்கங்களையாவது வாசிக்கத் தோன்றும். நான் அப்படி பல முறை எடுத்துப் படிக்கும் புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று.  புத்தகத்திலிருந்து சில எண்ணங்கள்.....

விதி

வியாதி – சரீர தர்மம்
சாக்கடை – சுகாதார தர்மம்
வசைபாடுதல் - கட்சிகளின் தர்மம்
லஞ்சம் – உத்தியோக தர்மம்
ஒழுக்கக்கேடுகள் – சமூக தர்மம்

இவைகளை எல்லாம்
பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பது
நமது தர்மம்!

தடை

பார்க்கின்ற பொருட்களில் தன்னை உணர்வது அல்லது தன்னில் அனைத்தையும் உணர்வதே இறைவனை உணர்வது....  இதை உணரவிடாமல் இருக்கத் தடைகளை இறைவன் தனியாக உண்டு பண்ணவில்லை. நம் உடம்பையே தடையாக, அதிலுள்ள உறுப்புகளையே தடையாக உண்டுபண்ணி இருக்கிறான்.

வேண்டுதல்

துணியை அடிப்பது அழுக்கைப் போக்குவதற்காக. இறைவன் மனிதனுக்குத் துன்பம் தருவது அவன் மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்காக, இறைவா....  இந்தத் துணியை அளவுக்கு அதிகமாக அடித்து அழுக்குப் போக்குவதற்குப் பதிலாக கிழிந்து நைந்து போக வைத்துவிடாதே!

மயக்கம்

இந்த உலகம் சுற்றுவது நம் கையில் இல்லை! இருந்தாலும் அது சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது நம் கையில் இருந்தாலும் சும்மா இருப்பது நம் கையில் இல்லை. நமது உடலுறுப்புகள் நமக்கு அடங்காமல் வேலை செய்துகொண்டே இருக்கின்றன. அவை வேலை செய்வதும் செய்யாமலிருப்பதும் நம் கையில் இல்லை. உண்ட உணவு ஜீரணமாவது கூட நம் கையில் இல்லை. உண்மை இப்படி இருப்பினும் எல்லா வேலைகளையுமே நாமே செய்து முடிப்பது போல் ஓர் தோற்றம்; ஓர் எண்ணம். என்னே நமது பேதைமை?

தொடர்பு

வண்டிச்சக்கரத்தின் விளிம்பில் ஓர் பகுதி ஓடிக்கொண்டிருக்கும்போது இடைவிடாது பூமியைத் தொட்டுக்கொண்டே இருக்கும். அந்த சிறிய பகுதியின் தொடர்புதான் வண்டியின் ஓட்டத்திற்கு ஆதாரம். அது போல் நம்முள் நாமாக இருக்கும் ஆன்மா தன்னை உணராத நேரமில்லை. அது அந்த ஆன்மாவையும் தொட்டுக்கொண்டே இருப்பதால் தான், இந்த வண்டியும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வண்டியின் ஓட்டத்தில் பூமியைத் தொடுதல் இடைவிடாது நிகழும் நிகழ்ச்சி. மனித வண்டியின் ஓட்டத்தில் இயக்கம் என்பது இடைவிடாது நிகழும் நிகழ்ச்சி. ஆன்மா என்பது எப்போதும் நிகழும் – நிகழ்ந்து கொண்டே இருக்கும் நிகழ்காலமே!

வியாபாரம்

அருள்வாக்கு என்பது அருளை அள்ளி வழங்குவதாக இருக்க வெண்டும். பொருளுக்காகவும் பொருளைப் பற்றியதாகவும் பொருள் உள்ளதாகவும் சொல்லக்கூடிய வாக்குகள் அருள்வாக்கு ஆகாது; அவை பொருள் வாக்காகும்! அருள் வாக்கு என்பது மௌனமே!

சாட்சி

நான் என்னைப் பார்க்க முடியாது! அறிய முடியும். நீ என்னைப் பார்க்கலாம்! அறிய முடியாது. நான் உனக்குக் காட்சி! நீ எனக்குக் காட்சி! இரண்டு காட்சிகளும் போய் விட்டால் நீயும் நானும் அறிவது ஒன்றாகவே இருக்கும்.

சலனம்

நாமெல்லோரும் சலனத்தின் குழந்தைகள். சலனமே நமது தாயும், தந்தையும். புத்தனும், சித்தனும் யோகியும், ஞானியும் யாராக இருந்தாலும் அவர்கள் சலனத்தின் குழந்தைகளே! சலனத்தோடு போராடி, சலனத்தோடு வாழ்ந்து சலனத்தோடு மாள்வதே நமது வாழ்க்கை. சலனமின்றி நமக்கொரு வாழ்க்கையில்லை.

உரிமை

‘சுதந்திரம்என்பது உலகில் தோன்றிய எந்த உயிருக்கும், அணுவுக்கும் விதிக்கப்படவே இல்லை. சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையே! ‘பிறப்புரிமை பிறப்பே உனது உரிமையில்லை எனும்போது அதில் இன்னும் ஓர் உரிமை உனக்கேது?

நம்மிலிருந்து....

‘இறைவா!என்று அழைக்கும்போதே இறைவனை நம்மிலிருந்து வேறுபடுத்தி விடுகிறோம். பின் எப்படி எல்லாமே இறைவன் என்பதை உணரமுடியும்? போதாதற்குப் பெயர் சூட்டி உருவங்கள் கொண்டு வேறு அவனை அழைத்தால், இன்னும் அதிக தூரமாக்குவதாகத்தான் அர்த்தம்.

வடிவம்

உலகில் எந்த ஊர் நாயாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத் தான் குரைக்கிறது. எந்த ஊர் கிளியாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் கத்துகிறது. எந்த ஊர் குயிலாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் கூவுகிறது. உயிரினங்கள் எல்லாம் ஒரே மொழியில் பேசுகின்றன. மனிதனுக்கு மட்டும் ஒரே மொழியில் பேசத் தெரியவில்லை. அவனுக்குத் தாய் மொழி என்றும், தந்தை மொழி என்றும், சகோதர மொழி என்றும், அந்நிய மொழி என்றும் பல மொழிகள் தேவைப்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இதய சுத்தமில்லாதவன் மனிதனே. வேற்றுமையின் மொத்த வடிவம் மனிதனே என்பது நன்றாகத் தெரிகிறது.

கண்ணாடி

இறைவன் இருக்கிறான்
இருந்துவிட்டுப் போகட்டும்
இறைவன் இல்லை
அவன் இல்லாமலே போகட்டும்
அதைப்பற்றி எனக்கென்ன?

அவன் இருக்கிறானோ இல்லையோ நான் இருக்கிறேன். என் காரியத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்; அவன் காரியத்தை அவன் பார்த்துக் கொள்வான். நீங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் உங்கள் காரியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ! இது உங்கள் காரியம்தானோ? அதைப்பற்றி எனக்கென்ன?

படித்ததில் எனக்குப் பிடித்த சில எண்ணங்கள் உங்களுக்கும் பிடிக்கலாம்! பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

புத்தகம் வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017.  மூன்றாவது பதிப்பு – 1998. விலை – ரூபாய் 25/- மட்டும்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. அடிப்படை நாதம்!..

    நூலறிமுகம் அருமை.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. பிறர் சொல்லாதது எதுவும் இல்லை. இருந்தாலும் எழுதியது இளய ராஜா என்பதனால் ஈர்க்கப் படுகிறோமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  4. நல்ல அறிமுகம் வெங்கட். கச்சிதமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  5. குறைந்த விலை வெளியீடு. அவரின் சிந்தனைத் துளிகள் போல. ரசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1998-ல் வெளிவந்த பதிப்பு. அதன் பிறகு வந்ததா எனத் தெரியவில்லை. அப்படி வந்திருந்தால் விலை அதிகமாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. //இறைவன் இருக்கிறான்
    இருந்துவிட்டுப் போகட்டும்
    இறைவன் இல்லை
    அவன் இல்லாமலே போகட்டும்
    அதைப்பற்றி எனக்கென்ன ? //
    மிகவும் அருமையான வரிகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    2. நேற்றும் த.ம. தளத்தில் ஏதோ பிரச்சனை. வாக்கு அளிக்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது.

      வாக்களித்தமைக்கு நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும்
    என்கிற ஆவலைத் தூண்டிப் போகுது
    தங்கள் பகிர்வு

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. இளையராஜா ஒரு அபூர்வப் பிறவி. அவர் சட் சட் என்று உணர்ச்சிவசப்படலாம். சமயத்தில் நிதானமிழந்து கோபப்படலாம். ஆனாலும் அவர் ஒரு அபூர்வப் பிறவி. A blessed soul. அவருடைய சிந்தனைகள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. எப்படி இருந்தவர். எங்கு இருந்தவர். இப்படி மாறியிருக்கிறாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. அருமையான புத்தகமா இருக்கும் போலவே...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  10. எண்ணங்கள் எல்லாமே சிறப்பு! நல்ல பகிர்வு வெங்கட்ஜி. ரசித்தோம் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....