தொகுப்புகள்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

நூராநங்க் – காட்டுக்குள் அருவி….




ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 64

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நூராநங்க் அருவி...


இயற்கை எழிலை படம் பிடிக்கும் நண்பர்கள் குழு...

கேரளாவிலிருந்து தவாங்க் வந்து அங்கேயே ஒரு அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்ட நபரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினருடன் சிறிது நேரம் அளவளாவி, தேநீரும் குடித்து அங்கிருந்து புறப்பட்டோம்.  கூடவே அந்த அருணாச்சலப் பெண்மணி அளித்த நான்கு பாட்டில் [இரண்டு பாட்டில் லவ் பானி, இரண்டு பாட்டில் ரெக்ஸி/பிட்ஸி] நாட்டுச் சரக்கும் எங்களுடன் பயணித்தது.  எங்களுடன் வந்த கேரள நண்பர்களில் நான்கு பேர் சரக்கு அடிப்பவர்கள் என்றாலும் பயணத்தின் போது அருந்துவதில்லை. தங்குமிடம் சென்றபிறகே மது அருந்துவார்கள் என்பதால் பிரச்சனை இல்லை.


நூராநங்க் அருவி மற்றும் தவாங்க் நதி...


தவாங்க் நதியும் கூழாங்கற்களும்....

தவாங்க் நகரிலிருந்து போம்டிலா வழியாக சிங்சூ செல்லும் போது வழியில் ஜங் எனும் இடம் வருகிறது. அந்த இடத்தில் தான் இந்த நூராநங்க் அருவி இருக்கிறது. கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் அருவியைப் பார்க்கும்போது அத்தனை பரவசம் நமக்குள். நாங்கள் சென்றிருந்த மார்ச் மாதத்தில் அத்தனை தண்ணீர் இல்லை.  இங்கே செல்ல சரியான காலம் அக்டோபர் மாதம் என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் சென்றால் சோவென்று கொட்டும் அருவியைப் பார்க்க முடியும்.  அக்டோபர் மாதத்தில் இப்படித்தான் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க இதோ ஒரு காணொளி [இணையத்திலிருந்து....]



நூராநங்க் அருவி...


நதியில் என்னத்த தேடுறேன்.... :)

இந்த அருவிக்கு பாங்க் பாங்க் அருவி எனும் பெயரும் உண்டு. சில பதிவுகளுக்கு முன்னர் சொன்னது போல மாதுரி ஏரியில் படம்பிடிக்கப்பட்ட தன்ஹாயி பாடலின் சில காட்சிகள் இந்த அருவிக்கு அருகிலும் படம்பிடிக்கப்பட்டது.  அந்த படப் பிடிப்பிற்குப் பிறகு தான் இந்த அருவி பற்றி நிறைய பேருக்குத் தெரியவந்தது என்றும் சொல்பவர்கள் உண்டு. மிகவும் அழகான அருவி. நாங்கள் சென்ற சமயத்தில் அத்தனை நீர் வரத்து இல்லை என்றாலும் சாலையிலிருந்து கீழே ஓடும் தவாங்க் நதி வரை கரடு முரடான பாதைகளிலும், படிக்கட்டுகளிலும் இறங்கி அந்த அருவியின் அருகே சென்று வருவதே ஒரு அசத்தலான அனுபவம் தான். 




நூராநங்க் அருவியின் அடிவாரத்தில் ஓடும் தவாங்க் நதி...

அருவிக்கு அருகே ஒரு சிறிய Hydro Electricity Plant உம் இருக்கிறது என்றாலும் யாரையும் வெளியே பார்க்க முடியவில்லை.  நாங்கள் சென்றபோது அந்த மலைப்பகுதியில், ஏரிக்கு அருகேயும் அருவிக்கு அருகேயும் எங்களைத் தவிர ஒரு ஈ-காக்காய் கூட இல்லை. அத்தனை அமைதி அங்கே சூழ்ந்திருந்தது.  எந்தவித தொந்தரவும் இல்லாது இயற்கையோடு ஒட்டி உறவாட ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கேயே இருந்திருப்போம். தலைநகரத்தின் இரைச்சலில் மாட்டிக் கொண்டு முழிக்கும் என்போன்றவர்களுக்கு அந்த ஒரு மணி நேரமும் சொர்க்கம் என்று தான் சொல்ல வேண்டும்.




தவாங்க் நதியும் இயற்கை எழிலும் – வேறு கோணங்களில் ...

அமைதியான அந்தச் சூழலை விட்டு வெளியே வர எங்கள் குழுவினர் யாருக்குமே மனதில்லை. என்றாலும் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். அன்றைய பகல் முழுவதும் பயணித்து வரும் வழியில் தங்கிய அதே சிங்சூ தங்குமிடத்தில் இரவு நேரம் தங்கி விட்டு அடுத்த நாள் காலை மீண்டும் பயணித்து தேஸ்பூர் சென்றடைய வேண்டும். அதனால் நூராநங்க் அருவிப் பகுதியிலிருந்து மனதே இல்லாமல் புறப்பட்டு, ஓட்டுனர் ஷம்பு வண்டியை நிறுத்தி வைத்திருந்த சாலை ஓரத்திற்கு வந்து சேர்ந்தோம்.  நூராநங்க் அருவிப் பகுதியிலிருந்து எங்கள் பயணம் மீண்டும் கடமுடா சாலையில் துவங்கிற்று.




நூராநங்க் அருவி முன்னர் நண்பர்களோடு...

நூராநங்க் அருவிக்கு பெயர் வரக் காரணமான நூரா மற்றும் அவரது சகோதரி சேலா பற்றியும் முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன். 1962 சீனப் போரின் போது இந்திய வீரர்களுக்கு உதவி செய்த சகோதரிகள் இவர்கள் என்பதை முன்பே எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தச் சகோதரிகளை மீண்டும் மனதார வாழ்த்தி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். அருவிக்கரையிலிருந்து பயணித்து சில மணித் துளிகளில் ஜஸ்வந்த்கட் வந்து சேர்ந்தோம். 


நூராநங்க் அருவி...


அருவிப் பகுதியில் இருந்த சவுக்கு இன மரத்தின் ஒரு பகுதி....

இந்திய ராணுவ வீரர் ஜஸ்வந்த் சிங் அவர்கள் 1962-ஆம் ஆண்டு நடந்த போரில் புரிந்த பராக்கிரமச் செயல்கள் பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன். திரும்பும் போதும் அங்கே நின்று ராணுவ வீரர்கள் அவ்வழியே பயணிக்கும் அனைவருக்கும் தரும் இலவச தேநீரைப் பருகினோம். அந்த குளிருக்கு இதமாய் இருந்தது அந்தத் தேநீர். கூடவே ஐந்து ரூபாய்க்கு ஒரு சமோசாவும் விற்கிறார்கள். அதையும் அனைவரும் காசு கொடுத்து வாங்கி உண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  

பயணத்தில் கிடைத்த அடுத்த அனுபவம் என்ன என்பதை வருகின்ற பதிவில் சொல்கிறேன்.....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

18 கருத்துகள்:

  1. நதியின் காலடியில் அழகைக் காண வந்தேன் என்று பாடினீர்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு... பாடினா, அங்கிருந்து தப்பி ஓட இருந்தது ஐந்து பேர் மட்டுமே.... அவர்களும் ஓடி விட்டால் தனியாக இருந்திருப்பேன்!

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ரொம்பவே அழகான இடம் தான் தனபாலன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. நூராநங்க் அருவி...பிரமாண்டமான அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  4. அவ்வளவு தூரம் போய், அருவில குளிக்கணும் என்ற ஆவலை எப்படிக் கட்டுப்படுத்திக்கொண்டீர்கள்?

    சமயத்துல இந்த மாதிரி இடங்களுக்குச்(தனியாக அமைதியாக இருக்கும்) செல்லும்போது, படங்களில் பார்ப்பதுபோல், பூர்வ ஜென்ம ஞாபகம், அங்கு இளவரசியுடன் குதிரையில் பயணித்தது, அங்கு நடந்த சண்டை போன்றெல்லாம் யாருக்கும் நினைவில் வராமல் இருந்தால் சரிதான் (ஏதேனும் தொடர்பு இல்லாமல் நாம் ஒருவரையோ ஒரு இடத்தையோ இந்த ஜன்மாவில் காணுவது இயலாது என்ற தியரியை நம்புபவன் நான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிக்க ஆசையாகத்தான் இருந்தது..... ஆனால் தகுந்த ஏற்பாடுகள் இல்லை என்பதால் குளிக்க முடியவில்லை.

      பூர்வ ஜென்ம நினைவுகள் - இளவரசியுடன் இருப்பது போல நிச்சயம் வரவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. அங்கேயே அனைத்து அழகும் கொட்டிக்கிடக்கின்றதே!அப்படியே சுவிஸ் நாட்டின் இயற்கைச்சூழல் போலவே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலேயே பல இடங்களில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது... பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  6. படங்களுடன் பகிர்வும் அருமை...
    அருவி வீடியோ ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  7. /கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கேயே இருந்திருப்போம். தலைநகரத்தின் இரைச்சலில் மாட்டிக் கொண்டு முழிக்கும் என்போன்றவர்களுக்கு அந்த ஒரு மணி நேரமும் சொர்க்கம் என்று தான் சொல்ல வேண்டும்./ சில மணிநேரம் கழிந்தால் பழக்கப்பட்ட சூழ்நிலைக்கு மனம் ஏங்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. படங்கள் அருமை
    சவுக்கு இப்படியும் இருக்குமா என்ன ?
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவுக்கு இன மரத்தின் ஒரு பகுதி இது. இதை சில நாடுகளில் Feng shui பொருளாகவும் வீட்டில் வைத்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  9. அழகான இடங்கள். அருவி! உங்கள் புகைப்படங்கள் வழிக் காணக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி ஜி!

    கீதா: சவுக்கு மரத்தின் இந்தப் பூ பைன் கோன் போன்று உள்ளது. நான் ஊட்டியிலிருந்து இந்தப் பைன் கோன் சேகரித்து வீட்டில் அழகுபடுத்தி வைத்துள்ளேன் ஜி. அழ்கான அருவி. கிட்ட வரை செல்ல முடியும் போல இருக்கே. அருமை. வட இந்திய நதிகள் அதுவும் மலைகளில் உள்ள நதிகள் எல்லாமே கூழாங்கற்கள் நிறைந்தவைதான். பாறைகள் மலைமுகடுகளின் வழி வரும் போது உடைந்து சிதறுபவை உருண்டு உருண்டு தேய்ந்து வித விதமான வடிவத்தில் கூழாங்கற்க்கள் ஆகின்றன. தென்னிந்தியாவிலும் மலைகளில் உள்ள நதிகளில் இவ்வளவு அதிகம் காண முடியவில்லை என்றாலும் கற்களைக் காணலாம்.

    அருமையான இடம். குறித்துக் கொண்டுவிட்டேன் ஜி. அதுவும் அருவி ஆயிற்றே

    பகிர்விற்கு மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!.

      வட இந்திய நதிகள் கூழாங்கற்கள் நிறைந்தவை. சில சமயங்களில் அவை ஆபத்தானவையும் கூட....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....