தொகுப்புகள்

திங்கள், 9 ஜனவரி, 2017

திரிபுரா – கமலா சாஹர் – வங்க எல்லையில் மதிய உணவு


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 88

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

கருமமே கண்ணாயினார்....
இளநீர் வியாபாரி - நீர்மஹல், திரிபுரா

நீர்மஹல் பார்த்த பிறகு மீண்டும் கரை நோக்கிய படகுப் பயணம். கரையில் படகுக்கான கட்டணம் வசூலிக்கும் இடத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி – அதில் அன்றைய தினம் நடந்த ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்க, அதைப் பார்க்க நிறைய பேர்! எங்கள் குழுவிலும் சிலர் போட்டியின் போக்கு பற்றித் தெரிந்து கொள்ள சில நிமிடங்கள் நின்றார்கள்.  நாங்கள் அதற்குள் வாசலில் அமர்ந்திருந்த பெரியவரிடம் இளநீர் தரச் சொன்னோம். எப்போதும் போல பேச்சுக்கொடுக்க, அவர் கருமமே கண்ணாயினாராய் இளநீர் வெட்டுவதில் மும்மரமாயிருந்தார்! சரி இவர் குறைவாகத் தான் பேசுவார் போலும் என இளநீர் குடித்து ருத்ரசாகர் ஏரியின் கரையில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  அந்தப் பெரியவரிடமே கொஞ்சம் நிலக்கடலை வாங்கிக் கொண்டு புறப்பட்டோம் – மதிய உணவு உண்ணும் முன்பு கொஞ்சம் கொறிக்க!

பச்சைப் பசேலென வயல்கள்....

ருத்ரசாகரிலிருந்து கமலாசாகருக்குச் செல்லப் போகிறோம்.  கமலா சாகர் இருக்கும் இடமும் வங்க தேச எல்லை தான். அகர்தலாவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கமலா சாகர்.  சாகர் என்ற வடமொழிச்சொல்லுக்கு கடல் என்று அர்த்தம் என்றாலும் இங்கே சாகர் என்பது ஏரிதான்.  செல்லும் வழியெங்கும் அழகிய கிராமங்கள் – பச்சைப் பசேலென இருக்கும் நிலங்கள், கிராமங்கள், எளிய கிராமிய மக்கள், என பயணம் செய்யும் போதே பார்த்துக் கொண்டு பயணிக்கிறோம். நம் ஊர் நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாற்றப்பட்டு வருவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.  

கமலா சாகர்....

கமலா சாகர் – இதோ வந்து விட்டோம். அகர்தலாவில் முதலில் பார்த்த வங்க எல்லை போல கொடி இறக்கமோ, சாலையோ கிடையாது.  நிலம் தான் – நிலங்களுக்கு நடுவே ஒரு பெரிய கம்பி வலை வேலி – இந்தப் பக்கம் இந்தியா அந்தப் பக்கம் வங்க தேசம். இங்கே இந்திய விவசாயி பயிரிட அப்பக்கம் வங்க விவசாயி பயிரிடுகிறார்.  அவர்களைப் பிரிப்பது ஒரு கம்பி வலை வேலி மட்டும்! இந்தியப் பகுதியில் இரண்டு எல்லையோரக் காவல் படை வீரர்கள் இருக்க, அப்பக்கத்தில் விவசாயி மட்டுமே!

அந்தப் பக்கம் வங்க தேசம்....

கமலா சாகர் ஏரிக்கரையில் சில நிமிடங்கள் நின்று சுத்தமான காற்றைச் சுவாசித்து முடிக்கையில் வயிறு ஏதாவது சாப்பிடக் கொடு எனக் கதற ஆரம்பித்தது.  திரிபுர சுந்தரி கோவில் அருகே காலையில் சில பூரி சாப்பிட்டது. நடுவில் இளநீர், நிலக்கடலை என்று உள்ளே சில விஷயங்கள் உள்ளுக்குள் தள்ளியிருந்தாலும் சாப்பாடு எனச் சாப்பிடவில்லை.  கமலா சாகரிலிருந்து அடுத்ததாய் பார்க்கப்போகும் இடத்திற்குச் செல்லும் வழியில் சாப்பிடலாம் என்றால் தாங்காது. சரி கமலா சாகர் அருகே என்ன கிடைக்கும் எனப் பார்க்க, ஒரு சிறிய உணவகம் இருந்தது. அங்கே சென்று கேட்க, கடை வைத்திருந்த பெண்மணி வங்க மொழியில் மட்டுமே பேசுகிறார்!


மரத்தில் தகவல் - Do not go ahead!....
அந்தப் பக்கம் இருப்பது வங்க தேசம்....

தட்டுத் தடுமாறி கொஞ்சம் புரியவைக்க, சாதமும் பொரித்த மீனும் இருப்பதைச் சொன்னார். நண்பர்கள் நான்கு பேரையும் சாப்பிடச் சொல்லி, நான் கொஞ்சம் உலாத்தினேன்.  இங்கே இன்னுமொரு விஷயத்தினையும் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் 15-ஆம் நூற்றாண்டில் மஹாராஜா தன்ய மாணிக்ய பகதூர் அவர்களால் இந்த கமலா சாகர் தோற்றுவிக்கப்பட்டாலும், இந்த ஏரிக்கரையில் ஒரு கோவில் கட்டப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். ஆமாம் இந்த ஏரிக்கரையில் ஒரு அழகிய கோவிலும் உண்டு! கமலா சாகர் காளி கோவில்….


கமலா சாகர் காளி கோவில்...
வெளிப்புறத் தோற்றம்

கஸ்bபா காளி கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் பத்து கைகளோடு காளி உருவச் சிலை இருக்கிறது. காளியின் காலடியில் ஒரு சிவலிங்கமும் உண்டு.  நாங்கள் சென்ற நேரம் மதிய நேரம் என்பதால் கோயில் மூடியிருக்க வெளியிலிருந்து பார்க்க முடிந்தது.  நண்பர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் மட்டும் உலாத்திய போது இக்கோவிலை வெளியிலிருந்து பார்த்தேன்.  கோவில் பக்கத்திலும் சில உணவகங்கள் இருக்க, அங்கேயும் என்ன கிடைக்கும் என விசாரித்தால் மீன் மட்டுமே எங்கும் நிறைந்திருந்தது.  சைவ உணவு என ஒன்றும் கிடைக்கவில்லை!

திரிபுரா சுற்றுலாத் துறையினரின் ஒரு தங்குமிடமும் உணவகமும் இருக்க, அங்கே சென்று பார்த்தால், அங்கேயும் சைவ உணவு ஒன்றும் இல்லை. சரி சாதமும் தயிரும் மட்டுமாவது கிடைத்தால் நல்லது எனக் கேட்க, தயிர் இல்லை என்று சொல்லிவிட்டார் அந்த உணவகத்தின் நிர்வாகி.  சரி இன்றைக்கு சமாளிக்க வேண்டியது தான் என அங்கே கிடைத்த Flavoured Milk- ஐ இரண்டாக வாங்கி உள்ளே தள்ளினேன்! சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது கிடைத்தால் நல்லது. திரிபுரா மற்றும் வங்க தேசத்தவர்கள் மட்டுமே இங்கே வருவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்…. 

இப்படியாக தனியாகச் சுற்றி நான் திரும்பி வரும்போது நண்பர்கள் நால்வரும் மீன்கறியும், இறைச்சியும் சாப்பிட்டு முடித்து பல்குச்சிகளால் பல்லை நோண்டியபடி வந்தார்கள்! சரி அவர்களாவது நல்லபடியாகச் சாப்பிட்டார்களா என்று விசாரிக்க, சாப்பாடு அத்தனை ருசியாக இல்லை என்று சொல்ல, உங்களுக்குப் பரவாயில்லை – ருசியாக இருந்ததோ, இல்லையோ, சாப்பாடு கிடைத்ததே என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!

ஓட்டுனர் ஷாந்தனுவும் தயாராக அந்த வங்க தேச எல்லைக் கிராமத்திலிருந்து அடுத்த இடம் நோக்கிப் பயணித்தோம்.  நாங்கள் அப்படிச் சென்ற இடம் எது, அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

20 கருத்துகள்:

  1. சாப்பிட முடியாமல் போவது கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் இப்படித்தான். தனியாக இருப்பதால் சமாளிக்க முடிந்தது. குடும்பத்துடன் இருந்தால், குறிப்பாக குழந்தைகளுடன் இருந்தால் சமாளிப்பது கடினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எங்களுக்காக பட்டினி கிடந்த உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  3. இதைத் தான் உலகம் முழுதும் சாப்பிடுகின்றார்கள்!..
    என்ற எண்ணமே மேலோங்கியிருக்கின்றது சில இடங்களில்...

    இங்கே கூட எதிரில் பார்க்கும் யாரையும் -
    ஆப் தேஷி?.. (நீங்க.. பங்களாதேஷா?..) என்றுதான் கேட்கின்றான் - வங்கதேசத்தவன்..

    எல்லா இடங்களிலும் இவனுங்களே இருக்கின்ற மாதிரி!..

    காளி கோயிலின் படம் அழகு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களிலும் அசைவ உணவுக்குத் தான் முதலிடம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. என்ன வெங்கட்ஜி.. ஏதாகிலும் பொடியோ அல்லது 777 (அல்லது பிரியா) புளிக்காச்சல் போன்ற எதுவோ கொண்டுபோயிருக்கலாமே... சாதம் இந்தியாவில் எங்கும் கிடைக்குமே... இதயம் பேசுகிறது மணியன், அவரது பயணக்கட்டுரையில் (70 கள்ல) ஜப்பானில், சாதமும், அதில் கோகோ கோலா விட்டுக்கொண்டு சாப்பிட்டேன் என்று எழுதியதைப் படித்திருக்கிறேன். நான் எங்கு போனாலும், ஒரு கார எலுமிச்சை ஊறுகாய் பாக்கெட் (100 கிராமாவது) கொண்டுபோவேன். குறைந்த பட்சம், காரத்துக்கு, பிரெட்டுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மற்றபடி பழம் எங்கும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் தேவையான உணவு கிடைத்து விடுகிறது. இப்படிச் சில சமயங்கள் நடந்து விடுகிறது. நண்பர்களோடு பயணிப்பதால், பயணம் எனும்போது எவ்வளவு குறைவாக உடைமைகளை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாகத் தான் எடுத்துச் செல்வது வழக்கம். இப்படி சில பிரச்சனைகளை சமாளிப்பது வழக்கமாகிவிட்டது!

      சாதத்துடன் கோகோ கோலா! What a combination! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. இளமையில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லா இடங்களையும் பார்த்ட்க்ஹு விடுவது நல்லதுதான் என்னைப்போல் ஆகிவிட்டால் பயணிப்பதே சிரமம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு....

      நீக்கு
  8. பசிநேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் கடினம்.
    முந்தையப் பதிவுகளையும் பார்க்கவேண்டும். நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமாளித்து விடுவது தான் வழக்கம்! :) முடிந்த போது பழைய பதிவுகளையும் படிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  9. வெங்கட்ஜி! இப்போதுதான் நிறைய ரெடிமேட் பொடிகள், தொக்குகள் கிடைக்கிறதே.இனிமேல் அதில் கொஞ்சம் எடுத்துச் சென்றுவிடுங்கள். கூடவே இருக்கிறது ஏதேனும் சிப்ஸ். சாதம் மட்டும் கிடைக்குமே...இல்லை சப்பாத்தி மட்டும் கிடைத்தாலும் இவற்றை வைத்துச் சமாளித்துவிடலாம் இல்லையா ஜி! நாங்கள் இப்படி ஏதேனும் எடுத்துச் செல்வதுண்டு. நான் தனியாகச் செல்வதென்றாலும் இப்படி பாட்டில் டப்பாவாக இல்லாமல் சாஷே பாக்கெட்டுகள்-சின்னதோ, பெரிதோ எடுத்துச் சென்று விடுவதுண்டு. வெயிட் குறைக்க, இடம் அடையாமல் இருக்க..செல்லும் இடங்களில் கிடைத்துவிடும்....எப்போதேனும் இப்படி ஏற்படலாம் என்பதால் கொஞ்சமே கொஞ்சமாக...உங்களுக்குத் தெரியாதது அல்லதான்.....நீங்களும் இனி அடுத்த முறை இப்படி எடுத்துச் சென்று விடுங்கள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை இம்மாதிரி இடங்களுக்குப் பயணித்தால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பெரும்பாலும் உணவு பிரச்சனையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கிடைப்பதை உண்டு சுற்றுலா நாட்களை கழித்து விடுவது வழக்கமாகி விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. கமலா சாகர் காளி கோவில்...அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....