முகப்புத்தகத்தில்
நான் – 13
ஸ்வச்ச் பாரத்
- எங்கும் குப்பை போடுவேன்….
21 ஃபிப்ரவரி
2017
இரண்டு
நாட்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்கள் – ஐந்து வேளை உணவு
– எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள் – அதையும் அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும்
பைகளில் போடாமல் ஆங்காங்கே போட்டு வைத்தார்கள் மக்கள்! கொஞ்சம் ஏமாந்தால், அசையாமல்
நின்று கொண்டிருந்தால் உங்கள் மேலும் குப்பைகளைப் போட்டு விடும் அபாயம் உண்டு. நிகழ்வு
நடக்கும் இடத்திலேயே சிலர் செய்த விஷயம் பார்த்த போது – “வாழைப்பழ சோம்பேறி” என்பதற்கு
புதியதோர் அர்த்தம் கிடைத்தது!
தூண்
பக்கத்தில் அமர்ந்து நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தவர் கிடைத்த வாழைப்பழத்தினைச்
சாப்பிட்டு, அதன் தோலைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடாமல், தூண் பக்கத்திலேயே
போட்டு வைத்திருந்தார்! சரி, எழுந்து செல்லும்போதாவது அதைக் கொண்டு போய் போட்டிருக்கலாம்
என்றால் அதுவும் இல்லை. எங்கே போட்டாரோ, அங்கேயே இருந்தது – நாங்கள் சுத்தம் செய்யும்
வரை…. என்ன மனிதர்களோ….
இந்தியா
கேட் பகுதியில் பார்த்த/கேட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – இதை ராஜா காது பகுதியில்
எழுத நினைத்தாலும், இங்கேயே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயே!
“இரண்டு
இளம் ஜோடிகள்… புல்வெளியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள்
அமர்ந்திருந்த இடத்தில் பிளாஸ்டிக் பெப்சி பாட்டில்கள், சாப்பிட்ட குர்குரே பாக்கெட்டுகள்
என நிறைய குப்பை. ஜோடிகளிலிருந்த ஒரு பெண், ஆணிடம் “குப்பையை எல்லாம் எடுத்து குப்பைக்
கூடையில் போடு!” அதற்கு அந்த ஆண்சிங்கம் சொன்னது – “நான் ஸ்வச்ச் பாரத் செஸ் கட்டுகிறேன்.
அதனால் எங்கு வேண்டுமானாலும் குப்பை போடுவேன்!”
- இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை குடுக்கிறார் என்பதால், வீட்டு ஹாலில்
குப்பையைப் போட்டுக் கொள்வாரா? குப்பைகளை சுத்தம் செய்யும் மனிதரும் தான் செஸ் கட்டுகிறார்
– அதனால் அவரும் நான் செஸ் கட்டுகிறேன், குப்பைகளை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டால்
நாடு நாறிவிடாதா…..
இன்னுமொரு
மனிதர் பூட்டியிருக்கும் சாலையோரக் கடை அருகே உள்ள நடைபாதையில் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கிறார். சில மணித்துளிகளில் அந்தக்
கடை திறக்கும்போது கடைக்காரருக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் சில அடி தூரத்திலேயே
இலவசக் கழிப்பிடம், அதுவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இலவசக் கழிப்பிடம் இருக்க,
இப்படி செய்வது கொஞ்சம் கூட நல்லதல்லவே. நடைபாதை
வழியே வந்தவர் அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது,
உன் மேலா சிறுநீர் கழித்தேன்!” என எகத்தாளமாகக் கேட்கிறார்.
சுத்தமாக
வைத்திருப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் அதற்கு உதவியாக இருக்க
வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வரை குப்பைக் கூடமாகத்தான் இருக்கப்போகிறது
நம் தேசம்…..
மீண்டும்
சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.