இரு மாநில பயணம் –
பகுதி – 12
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
வெண்பாலையிலிருந்து புறப்பட்ட
எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் எங்கள் தங்குமிடம் தான். காலையிலிருந்து
வாகனம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர் முகேஷுக்கும் ஓய்வு தேவை.
எங்களுக்கும் தான். தங்குமிடம் வந்து ஒரு குளியல் போட்டு இளைப்பாறினோம். குளியல் என்றதும் இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு
வருகிறது – அது சாலைகள் போலவே குஜராத் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வசதி
பற்றியது. கட்ச் பகுதி பாலைவனம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
பாலைவனத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்கத்தானே செய்யும். ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை
குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர்
கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது
தங்குமிட உரிமையாளர் வந்து இரவு உணவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை எப்போது
வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் என்று தகவல் சொல்லிச் சென்றார். இந்த மாதிரி
தங்குமிடங்களில் தங்குவதற்கான வாடகையோடு, மூன்று வேளை உணவுக்கும் சேர்த்தே காசு வாங்கிக்
கொள்கிறார்கள். பெரிதாக உணவகங்கள் ஏதும் கிராமங்களில் இருக்காது என்பதால் இந்த
ஏற்பாடு. இதுவும் ஒரு விதத்தில் நல்லதே.
பாரம்பரியமாக கட்ச் பகுதி கிராமங்களில் கிடைக்கும் உணவு வகைகளை அவர்கள்
புதிதாகவும் சுவையுள்ளதாகவும் சமைத்துக் கொடுக்க, நாம் ருசித்து ரசித்து சாப்பிட
முடிகிறது.