தொகுப்புகள்

வெள்ளி, 29 ஜூன், 2018

கதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா




சேமிப்பு!!!



சிறுவயதில் வீட்டுக்கு வரும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை எடுத்து சேர்த்து வைக்கத் துவங்கியதும் அப்பா மாம்பழ வடிவில் ஒரு மண் உண்டியலை வாங்கித் தந்தார். அதில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்தேன்.

உண்டியல் நிரம்பியதும் ஒருநாள் உடைத்து எடுத்தேன். அதில் இருந்த பணம் எவ்வளவு என்று நினைவில்லை. அதன் பின் பள்ளியில் "சஞ்சய்கா" சேமிப்புத் திட்டத்தில் சேர்த்து வைத்தேன்.

அப்போது ஹிந்தி பிரச்சார சபா மூலம் தேர்வுகள் எழுதி வந்ததால், புத்தகங்கள் வாங்கவும் தேர்வுக்கு பணம் கட்டவும் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வேன்.

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்ததும் ஸ்டேட் பாங்க்கில் அப்பா ஒரு கணக்கை துவக்கி கொடுத்தார். வங்கி பரிவர்த்தனைகள் எனக்குத் தெரிய வேண்டும் என்பதால் என்னையே வங்கியில் பணத்தை செலுத்தவும், எடுக்கவும் வைத்தார்.

இப்படியாக தொடர்ந்த கணக்கில் கல்லூரிப்பருவத்திலும், பின்பு வேலை பார்த்த போதும் சம்பளப் பணத்தில் சேர்த்து வந்தேன்..

திருமணம் நிச்சயம் ஆனவுடன், தனியே ஒரு கணக்கு கூடாது, இனி எல்லாமே அவர் தான்!! எனச் சொல்லி என் வங்கி கணக்கை முடித்து விட்டார் அப்பா!

என் சேமிப்பில் இருந்த பணத்தில் திருமணத்திற்காக ஒரு வெள்ளித்தட்டும், கொலுசு, மெட்டி ஆகியவையும் வாங்கிக் கொண்டேன். மிகவும் பெருமிதமாக இருந்தது. இடையில் எனக்காக நகைகள் வாங்கப் போன போதும் என்னுடைய சேமிப்பில் அரைப்பவுனில் ஒரு சலங்கை வைத்த மோதிரம் வாங்கிக் கொண்டேன்.

இப்படியாக இன்றளவும் எப்படியாவது அவ்வப்போது சேமிப்பதும் உண்டு. குடும்பத் தேவைகளுக்காகவும் எடுத்து குடுப்பதும் உண்டு. ஆனால் சேமிப்பு தொடர்கிறது.

இன்று பத்திரிக்கையில் சேமிப்பு பற்றி வாசித்ததும் என் நினைவு சேமிப்பில் இருந்தவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.

சோதனை முயற்சி!!!

முதல்முறையாக ரசகுல்லா!!


மாற்றம் மாணவர்களிடமிருந்து:



சென்ற வாரத்தில் மகள் பள்ளியிலிருந்து வந்து இந்த விவரத்தைச் சொன்னாள். திருச்சியைத் தூய்மையாக்கும் பணியில் மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நல்ல மாற்றம் நிகழும் என்று நினைக்கிறேன்.

தகவல் உதவி - ராக்போர்ட் டைம்ஸ்

ரசித்த பாடல் – செவ்வந்தி பூக்களில்:

மாலை டெய்லர் கடைக்குச் சென்ற போது அங்கு ஒலித்த இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அப்போது முதல் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/uC148N-CLmI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ரோஷ்ணி கார்னர்…



International yoga day!!

ஆக்ராவில் தாஜ்மஹாலின் பின்னே யமுனாவைப் பார்த்தபடி மகளின் தியானம்.

கதை மாந்தர்கள்:

நேற்று வாடிக்கையாக பூ கொண்டு வரும் அம்மா வந்தார். பூவெல்லாம் வாங்கிய பின் தொடர்ந்து சில வாரங்களாக என் முகத்தில் இருந்த பருக்களுக்காக நாட்டு வைத்திய குறிப்புகளை சொல்லிக் கொண்டே இருந்தார். போன வாரம் டாக்டரையாவது போய்ப் பாரும்மா. செவந்து போச்சு என்று வருத்தப்பட்டார். நேற்று டாக்டரை போய்ப் பார்த்த தகவல்களைச் சொன்னதும் நிம்மதியானார்...:)

குடிக்கத் தண்ணீர் கொடுத்ததும், அவரை கீழே இறங்க லிஃப்டில் பட்டனை அழுத்திக் கொடுக்க வேண்டும். இது வழக்கமாக செய்வது தான். வேலையா இருந்தியாம்மா?? என்றார். ஆமாம்மா! பாத்திரம் தேய்ச்சுகிட்டிருந்தேன் என்றேன்.

உடனே, வேலைக்கு ஆள் வெச்சுகலையாம்மா?? என்றார். "இதுவரை வேலைக்கு ஆளெல்லாம் வெச்சுகிட்டதேயில்லம்மா! எவ்வளவு முடியலைன்னாலும், கொஞ்சம் பொறுத்து செஞ்சுக்குவேன்" என்றேன்.

பாப்பா செய்யாதா!! என்றார். பழக்கியிருக்கேன். பாத்திரம் தேய்ப்பா, துணி கூட துவைப்பா. நேரம் இருந்தால் செய்வா!! என்றேன். ஆமாம்மா! பொட்டப் புள்ள! நாளைக்கு கல்யாணம் செய்து கொடுத்தா தெரியணும்ல, என்றார்.

இப்படிப்பட்ட வசனங்கள் இனி வரும் காலங்களில் சொல்லிக் கேட்கமுடியாது என்றே நினைக்கிறேன். இப்போதே அதுவும் திருவரங்கத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகளில், வேலைக்கு ஆள் வைத்திருப்பது என்பது ஒரு status. சொந்த வீடு, கார் போன்ற லிஸ்ட்டில் சேர்வது. பெரு நகரங்களில் கேட்கவே வேண்டாம்.

இளம்பெண்களும் திருமணத்திற்கு முன்பு வீட்டு வேலைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை..:)

வேலைக்கு ஆளெல்லாம் வெச்சுக்கல என்றதும், ஒருசிலர் "இரண்டு பேர்" தானே என்பார்கள். இரண்டு பேர் என்றாலும், "மூன்று வேளை" அல்லவா!!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

  1. உண்டியல் எனது நினைவுகளை மீட்டியது.

    ரசகுல்லா ஸூப்பர்.

    இன்று பகட்டுக்காக வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறார்கள்.

    இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் பிறகு மருத்துவரிடம் போகும்போது புரியும்.

    பதிலளிநீக்கு
  2. பெண்களுக்கு சேமிப்பு வழக்கம் ரத்தத்தில் ஊறிய ஒன்று சிறுவாட்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் பருக்கள் வந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப்போய் உப்பு வெல்லம் கரைத்தால் போகும் எனக்குத் தெரிந்த சரும நிபுணர் கூறியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி சாரின் பின்னூட்டத்தை ரசித்தேன். யாரையோ காவிக்கு கலர் மாறுகிறீர்களா என்று கேட்டீர்களே. ஹா ஹா ஹா

      நீக்கு
  3. சேமிப்பைப் பற்றி எழுதியிருக்கும் நினைவுகள் சுவாரஸ்யம். எங்கள் வீட்டிலும் இந்தப் பழக்கங்கள் உண்டு. குமுதத்தில் அஞ்சு பைசா அம்மு என்றொரு நகைச்சுவைக் கார்ட்டூன் தொடர் வந்தது, பார்த்திருக்கிறீர்களோ!

    பதிலளிநீக்கு
  4. ரசகுல்லா நன்றாக வந்திருக்கிறது என்று படத்தைப் பார்த்தால் தெரிகிறது. இருங்கள்... நினைவுபடுத்தி விட்டீர்கள். போய் நட்ஸ் அண்ட் ஸ்பைஸில் ஒரு டப்பா வாங்கி வந்து விடுகிறேன்!!!

    பதிலளிநீக்கு
  5. 'செவ்வந்திப் பூக்களில்' எனது வெள்ளி வீடியோ லிஸ்ட்டில் இருக்கும் பாடல்.

    ரோஷ்ணியின் தியானம் சிறப்பு. பூக்காரம்மாவின் கரிசனமும்!

    பதிலளிநீக்கு
  6. வெங்கட்ஜி அண்ட் ஆதி வணக்கம். 5.30க்கு வருவதில்லை போலும். செக் செய்வதுண்டு. இன்று செக் செய்யவில்லை நான் லேட்டு இன்று.

    சேமிப்பு எஸ் நானும் சஞ்சய்க்கா திட்டத்தில் இருந்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விஷயம். என் மகனுக்கும் அதைப் புகட்டிவிட்டேன்.

    ரொஸகுல்லா ஹா ஹா ஹா பெங்காலிகள் அப்படித்தான் சொல்லுவது வழக்கம் இல்லையா...நன்றாக இருக்கிறது பார்க்கவே...ஸோ சூப்பரா வந்திருக்கும். எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் குறிப்புகள் கொடுப்பீங்களா ஆதி. நான் வீட்டில் முன்பு செய்வதுண்டு இப்போதுதான் செய்வதில்லை.

    ஒரிஜினல் ரெசிப்பி நான் பெங்காலி பெண்மணி ஒருவரிடம் தெரிந்து கொண்டேன். 25 வருடங்களுக்கு முன். முதலில் திரியவிடும் பாலில் செய்வதில்லையாம். அதிலிருந்து கிடைக்கும் வே வாட்டரை 4, 5 நாட்கள் வெளியில் வைத்துப் புளித்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு அடுத்து பாலை இந்த வேவாட்டரை வைத்துத் திர்ய வைத்து அதில்தான் ரஸகுல்லா செய்வார்களாம். நானும் இதே மெத்தடைத்தான் கடைபிடிக்கிறேன். பசும்பால்தான் பயன்படுத்துவார்கள் அதாவது கொழுப்புச் சத்து இருக்கக் கூடாது என்பதும் தெரிந்து கொண்டேன். அடுத்து செய்யும் வாய்ப்பு கிடைத்தால் செய்து எபி யில் திங்க பதிவில் போடும் எண்ணம் உண்டு.வே வாட்டர் இருக்கிறது. பால் சமீபத்தில் திரிந்துவிட்டது அப்போது அதை மேலும் எலுமிச்சை பிழிந்து திர்ய வைத்து அந்த வே வாட்டரை எடுத்துப் புளிக்க வைத்து வைத்திருக்கிறேன்... பார்ப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசகுல்லா முதல் திரிஞ்ச பாலில் செய்வதில்லை. நானும் செய்திருக்கேன். "வே"வாட்டரை எடுத்து வைத்துத் தான். ஆனால் எனக்கென்னமோ ரசமலாய் அதிகம் பிடிக்கும். :)))) ரசகுல்லாத் தித்திப்பெல்லாம் எனக்குப் பத்தாது! :))))

      நீக்கு
    2. பால் திரிஞ்சால் இப்போல்லாம் வே வாட்டரைக்குடிச்சுட்டுத் திரிஞ்சதைப் பனீராகப் பயன்படுத்தி விடுகிறேன்.

      நீக்கு
  7. இந்தப் பாடல் பிடிக்கும்

    ரோஷ்னிக் குட்டி அப்போ குட்டியா இருந்தப்போ...ரொம்ப க்யூட்! ரசித்தோம்

    பூக்காரம்மா கைன்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ரசகுல்லா நன்றாக இருக்கும் போல் இருக்கிறதே. எனக்கு ரசகுல்லாவை விட குலாப்ஜாமூன் பிடிக்கும்.

    சேமிப்பு நல்ல விஷயம். உங்கள் அனுபவங்கள் அருமை.

    ரோஷிணி ரசித்தோம். சிறிய வயதில் எடுத்த ஃபோட்டோ இல்லையா.

    பூக்காரம்மாவைப் போன்று சில அம்மாக்கள் அக்கறையுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

    அனைத்தும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. ரஸகுல்லா அழகு..
    அழகிய படங்களுடன் அருமை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  10. கல்யாணம் ஆகி வர வரைக்கும் தனியா எல்லாம் பணம் வைச்சுக்கலை. வைச்சுக்கவும் முடியாது! யாரானும் வைச்சுக் கொடுக்கும் எட்டணா, ஒரு ரூபாயைக் கூட (அப்போல்லாம் ஒரு ரூபாய் கொடுத்தாலே பெரிசு! என் கல்யாணத்துக்கு அதிக பட்சமாக 25 ரூ யாரோ கொடுத்திருந்தாங்க! குழந்தை பிறந்தால் குழந்தை கையில் நாலணா, எட்டணா, ஒரு ரூபாய்க் காசு கொடுப்பாங்க!) குழந்தை வாயிலே போட்டுக்கறதுக்குள்ளே பார்த்து எடுத்து வைக்கணும்! :))) கல்யாணம் ஆகிப் போனப்போத் தான் அப்பா முதல் முதலாக என் கையில் 30 ரூ கொடுத்தார். புக்ககம் போனவுடனே செலவுக்கு அவங்களைக் கேட்கக் கூடாது என்று! 30 ரூபாயையும் ஒரு ரூபாய் நோட்டாக வேறே கொடுத்திருந்தார். எனக்கு மயக்கமே வரும் போலிருந்தது. புக்ககம் போனதும் லீவு முடிஞ்சு வேலையில் சேர ரங்க்ஸ் மட்டும் புனே கிளம்பறச்சே என் கிட்டேத் தனியா ஐம்பது ரூபாய் கொடுத்தாரா! அழுதுட்டேன். அப்புறமாச் சென்னையில் குடித்தனம் வைச்சதும் முதல் மாசம் அவரோட சம்பளப்பணத்தை என்னிடம் கொடுக்கவும் என்ன செய்யறதுனு தெரியாமல் திக்குமுக்காடினேன். அப்போத் தெரியாது இந்தப் பணமெல்லாம் ஒரு பெரிய குடும்பத்துக்கு ஜுஜுபினு! அதுக்கப்புறம் வந்த நாட்களில் சேமிக்க முடியலையேனு கஷ்டமா இருக்கும். எனக்கு வரும் பணத்தைக் கூடக் குடும்பச் செலவுக்குப் போட்டு ஈடு செய்யும்படி ஆகும்! ஆக சேமிப்புனு அதிகம் இல்லை! வரவும், செலவும் சரியா இருக்கும்! :)))) அதே பெரிய விஷயம்!

    பதிலளிநீக்கு
  11. //யாரானும் வைச்சுக் கொடுக்கும் எட்டணா, ஒரு ரூபாயைக் கூட// அப்பா கிட்டே கொடுத்துடணும்! :))) "இந்த வரிகள் அங்கே விட்டுப் போயிருக்கு. இத்தனைக்கும் நேரடியாத் தட்டச்சினேன். :)

    பதிலளிநீக்கு
  12. மற்றபடி எனக்கு வரும் தோல் பிரச்னைக்கெல்லாம் இயற்கை வைத்தியம் தான். வெயில் நாட்களில் வரும் ராஷஸ், அதிலும் சில நிறங்கள், சில வகைத் துணிகள் எனக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. அது எதுனு கண்டும் பிடிக்க முடியாது! கலர் நல்லா இருக்கேனு தைச்சுப் போட்டுக்கும் ப்ளவுஸ் போட்ட உடனே உடலில் சிவப்புச் சிவப்பாகத் தடிப்புகள் வரும். வந்தால் 2,3 நாட்கள் இருக்கும். எரிச்சல் வந்துடும். அரிப்புத் தாங்காது. அப்போல்லாம் குப்பைமேனி, துளசி, வேப்பிலையை நன்றாக அரைத்து மஞ்சளோடு கலந்து உடலில் தடவிக் குளிப்பேன். சோப்பே தொட முடியாது. கொஞ்சம் எரியத் தான் செய்யும். பொறுத்துக்கணும். கஸ்தூரி மஞ்சள் தான் அதிகம் பயன்படுத்துவது. அரிப்பு வரதில்லை!

    பதிலளிநீக்கு
  13. பருக்களுக்கு வசம்பு, கஸ்தூரி மஞ்சள் கிழங்கு, சந்தனம் மூன்றையும் சந்தனக் கல்லில் அரைத்துத் தடவிப்பேன். அப்போல்லாம் நல்ல சந்தனக் கட்டை கிடைத்தது! இப்போக் கடையில் கிடைப்பது நல்ல சந்தனக் கட்டையா என்று சந்தேகம் வருது. மேலும் முகம் பளிச் சென்று ஆக கசகசாவைப் பாலில் ஊற வைச்சுப்பின்னர் அதை அம்மியில் அல்லது சின்னக் கல் உரலில் போட்டு அரைத்து முகத்தில் கழுத்தில் தடவிக்கலாம். வெண்ணெய் எடுக்கும்போது வெண்ணெய்க் கைகளையும் முகத்தில் தடவிக்கலாம். உ.கி. வேக வைத்த நீரில் முகம் கழுவலாம். பீட்ரூட், காரட் வாங்கும்போது தூக்கி எறியும் அடிப்பாகம், மேல் பாகத்து வில்லைகளை அரைத்து முகத்தில் பூசலாம்.

    பதிலளிநீக்கு
  14. கதம்பம் நல்லா இருந்தது. ரசகுல்லாவும்தான்.

    பதிலளிநீக்கு
  15. கதம்பம் முகநூலில் படித்து விட்டேன் முன்பே.
    ரசகுல்லா அருமை.
    ரோஷ்ணியின் தியானம் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  16. அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  17. எங்க வீட்டிலும் பால்+கசகசா வைத்தியம் ஆரம்பிச்சாச்சுது...

    ரசகுல்லா சூப்பர்.

    உண்டி பழக்கம் இன்னமும் எங்க வீட்டில் இருக்கு. ஆளுக்கு ஒண்ணுன்னு வாங்கி கொடுத்திருக்கேன்..

    பதிலளிநீக்கு

  18. உண்டியல் சிறு வயதை நினைவிற்குள் கொண்டு வ்ந்தது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....