தொகுப்புகள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

நள்ளிரவில் ஒரு திக் திக் பயணம் – நிர்மலா ரங்கராஜன்


எனது முதல் பதிவான உப்பு நார்த்தங்காயில் ஒரு ரெசிப்பி பதிவிற்கு வரவேற்பும் ஊக்கமும் கொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துகொண்டு மேலும் ஒரு சுவாரஸ்யமான பதிவினை தங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த ஒரு திக் திக் நிகழ்ச்சி பற்றி தான் இன்றைக்குச் சொல்லப் போகிறேன். எனது மகனுக்கு ஒரு வயதுதான் நிரம்பி இருந்தது, அவ்வமயம் எனக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செமினார் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

அந்த செமினார் ஒருவார காலம் என்பதால் குழந்தையை எனது பெற்றோர்களிடம் விட்டுச் சென்று பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து செமினார் வகுப்புகளுக்கு சென்று வந்தேன். ஒருவார காலம் குழந்தையை பிரிந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ ஒருவழியாக செமினார் முடிந்தது, இறுதி நாளன்று இரண்டு மணிக்கே வகுப்பு முடிந்துவிட்டதால், எனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு அன்றே ஊருக்குப் புறப்பட்டு விட்டேன். எங்கள் ஊர் பூம்புகார் அருகிலுள்ள திருவெண்காடு, காரைக்குடியிலிருந்து அதிக தொலைவு, இருப்பினும் எப்படியாவது இன்றே சென்று குழந்தையைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் கிளம்பி விட்டேன்.

மயிலாடுதுறை வந்துசேர மணி பத்தாகி விட்டது. மீண்டும் அங்கிருந்து எங்கள் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸிலும் இடம் பிடித்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். கடைசி பஸ் என்பதால் எல்லா நிறுத்தத்திலும் நின்று நிதானமாக சென்றது எங்கள் ஊரை நெருங்கும்போது பதினோறு மணியை தாண்டிவிட்டது. நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது ஆனால் பஸ் நிறுத்தவில்லை, வெளியில் பார்த்தேன் - எனக்காக அப்பா காத்திருப்பது தெரிகிறது. பஸ்ஸை நிறுத்த நானும் சக பயனிகளும் குரல் கொடுத்தும் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு கேட்கவே இல்லை, இருவரும் சில பெண்களுடன் பேசி சிரித்துக் கொண்டு வந்ததால் நாங்கள் குரல் கொடுத்தது அவர்களுக்கு கேட்கவில்லை. சுமார் ஒரு கி.மீ தூரம் தாண்டியே வண்டி நின்றது.

இரவு 11.15 மணி, கும்மிருட்டு, கிராமம் என்பதால் மின் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொன்டிருக்க, ஆங்காங்கே நாய்கள் குரைப்பதும் இரவுப் பூச்சிகள் சத்தமிடுவதும் எனக்கு பயத்தை அதிகப்படுத்தியது. இருப்பினும் குழந்தையின் முகம் கண்முன் சிரிப்பதாகத் தோன்றவே, தைரியத்தை இழக்காமல் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தவாறு சாலையைக் கடந்து பஸ் நிறுத்தம் வந்து சேர்ந்தேன். பேருந்து கடக்கும்போது அங்கே நின்று கொண்டிருந்த அப்பாவை இப்போது காணவில்லை.  பஸ் நிற்காமல் சென்றதால் நான் வரவில்லையோ என்று எண்ணி அப்பா வீட்டிற்கு சென்று விட்டார்கள் போலும். பஸ் நிறுத்தத்திலிருந்து எங்கள் வீட்டிற்குச் செல்லும் சாலை இருபுறமும் நீரோடையும் மரங்களும், புதர்ச் செடிகளுமாய் இருக்கும்.

பகலில் என்னவோ அழகாக, ரம்மியமாக இருக்கும் அந்தப் பாதை! ஆனால் இரவில் அந்த சாலையில் செல்வது, அதுவும் தனியாகச் செல்வது கொஞ்சம் கடினமானதே. ஓடையில் ஒரு இலை விழுந்தால் கூட மிகத் துல்லியமாக சப்தம் கேட்கும் அளவு நிசப்தம்! திடீர் திடீரென கேட்கும் பூச்சிகளின் ரீங்கார ஒலி கூட அமானுஷ்ய பயம் தரும் என்பதால், அப்பாதையில் நடக்கும் எனக்கு பயம் இரட்டிப்பானது. அவ்வளவு தான் நடையில் வேகத்தை கூட்டினேன். கண்களை மூடி கொண்டு தெய்வ நாமங்களை மட்டுமே துணையாக்கிக் கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். என்னைப் பார்த்ததும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி, நேரங்கெட்ட நேரத்தில் நான் தனியாக வந்தது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டில் ஒரே கலவரம். இப்படி ஒரு பொண்ணு, அர்த்த இராத்திரில, ஊர் கெட்டுக்கிடக்கறப்போ தனியா வந்து இருக்கியே என்று பதறுகிறார்கள். அப்போது ஊரில் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை என்று நிகழ்ந்து கொண்டிருந்தது இன்னும் கலக்கத்தினை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

எனக்கு ஊரில் நடக்கும் இந்தப் பிரச்சனைகள் எதுவும் தெரியாது. ஏதோ ஒரு குருட்டு தைர்யத்தில், ஒரு வாரம் பிரிந்து இருந்த பிள்ளையைப் பார்க்க வேண்டுமே என்ற ஆவலில் வந்து விட்டேன். ஊர் விஷயங்கள் தெரிந்த பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதே சமயம் பயமும் இருந்தது – எனக்கு ஏதாவது ஆகியிருந்தால்! நினைக்கும்போதே பயம்… பிள்ளை பாசம் நமக்கு எவ்வளவு தைரியத்தை கொடுத்தது என்று சமாதானம் செய்து கொண்டேன். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அமைதியாக வெகுநேரம் ஆனது.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் குழந்தை அமைதியாக தூங்கிக்கொண்டு இருந்தான். தூங்கும் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்ட போது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை உண்டா என்ன? நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன். கடமையை மறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அவர்கள் கவனத்தைச் சிதறடித்த அந்தப் பெண்கள் ஏனோ மனதில் கசந்தனர். இந்த சம்பவம் என் வாழ்க்கையில் என்றென்றும் மறக்கவே முடியாத விஷயமாக இந்த நிகழ்வு அமைந்து விட்டது.

வேறு சில நினைவுகளோடு உங்களை மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

நிர்மலா ரங்கராஜன்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    உப்பு நார்த்தாங்காய் ரெசிப்பி என்றதும் நினைவுக்கு வந்து விட்டது யார் என்று ஹா ஹா ஹா ஹா..இனி பெயர் நினைவில் நிற்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்மார்னிங் கீதா.. இது போல ஒரு அனுபவம் நீங்கள் சொல்லி இருந்தீர்களோ... திருப்பதிசாரம் சாலையில்?

      நீக்கு
    2. காலை வணக்கம் கீதாஜி!

      முதல் பதிவுக்குப் பிறகு இடைவெளி! அதனால் மறக்ககூடும்! ஹாஹா... தொடர்ந்து எழுதுவார் என நம்பிக்கை. பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
    3. திருப்பதி சாரம் சாலையில் கிடைத்த அனுபவம் படித்ததாக நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. குட்மார்னிங்,

    ஒரு சுவாரஸ்யமான அனுபவம் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பயமான அனுபவம்தான். பஸ்ஸை பின்னால் ஓட்டிப்போய் இறக்கச் சொல்லி இருக்கலாமே... நள்ளிரவு நேரம், பெண் தனியாய் இறங்குவதால் உதவி இருப்பார்களே... அவர்களை திட்டக்கூடவா இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதட்டமான சுழலில் இப்படியெல்லாம் கேட்டு இருக்க முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பகலில் என்னவோ அழகாக, ரம்மியமாக இருக்கும் அந்தப் பாதை! ஆனால் இரவில் அந்த சாலையில் செல்வது, அதுவும் தனியாகச் செல்வது கொஞ்சம் கடினமானதே. ஓடையில் ஒரு இலை விழுந்தால் கூட மிகத் துல்லியமாக சப்தம் கேட்கும் அளவு நிசப்தம்! //

    அட எங்க ஊர் முக்காமைல் மாதிரி இருக்கே!! மெயின் ரோட்டில் ஹைவேயில் இறங்கி ஊருக்கு நடக்கும் ரோடு...திகில்தான்...எங்கள் ஊர் ரோட்டில் அப்போதே தண்ணி அடித்து நடப்பவர்கள் பலர் உண்டு என்பதால் கொஞ்சம் பயம் தான்...வாசித்து வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர் முக்காமைல்.... ஆஹா... பெயரே நல்லா இருக்கே!

      தண்ணி அடித்து நடப்பவர்கள் - ஹாஹா மிதப்பவர்கள் அவர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  5. ஊர் கெட்டிருக்கு///

    அப்போவே பல கிராமங்களும் அப்படித்தானா இதே டயலாக் இப்பவும்..

    கண்டக்டரும் ட்ரைவரின் அருகில் போய் சொல்லிருக்கலாமே ஸ்டாப் வருவதற்கு முந்தைய ஸ்டாப்பிலேயே...அது கஷ்டமாக இருந்ததோ கூட்டத்தில்?

    எப்படியோ சேஃபா வீடு போய் சேர்ந்திருக்கீங்க. பதற்றம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் கெட்டிருக்கு! ஹாஹா. எப்போதும் கேட்கக்கூடிய வார்த்தைகள்.

      பதற்றம் - பதற்றத்தில் யோசிக்கவே தோன்றியிருக்காது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  6. என்னுடைய களப்பணியின்போது இவ்வாறான பல அனுபவங்களைக் கண்டுள்ளேன். நினைத்தால் இன்னும் திகிலாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் எழுதுங்களேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....

      நீக்கு
  7. ஆஹா! திருவெண்காடா உங்கள் ஊர் 1973லிருந்து 1980 வரை அங்கு இருந்தேன்.
    இரவு 7.30க்கே ஊர் அடங்கி விடும்.

    மாயவரம் போய் விட்டு கணவர் வரும் வரை பயந்து கொண்டு இருப்பேன்.
    மாடி வீட்டில் இருந்தோம், வாசல் விளக்கை போட்டு இருப்பேன் , விளக்கை சுற்றி பூச்சிகள் பறக்கும் அதை சாப்பிட ஆந்தை வரும். அது சில நேரம் குரல் கொடுக்கும் அது அலருவது நல்லதா, கெட்டதா என்று தெரியாமல் கலங்கி போய் எல்லா தெய்வங்களை வேண்டிக் கொள்வேன்.

    படியில் அது ஏறி வரும் சத்தம் கேட்கும் அவ்வளவு அமைதியாக இருக்கும் . காலை 4.30க்கு முதல் பஸ்ஸில் வந்தால் கூட விடியும் முன் வீட்டுக்கு வர பயமாய் இருக்கும். நாய்களின் குரைப்பு பயமுறுத்தும்.

    இப்போது தொலைக்காட்சிகள் புண்ணியத்தில் ஊர் விழித்து இருக்கிறது. அந்த காலத்தில் மின் மினி பூச்சிகளின் வெளிச்சத்தில் ஊருக்கு திரும்பும் காட்சியை ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் நான்.

    உங்கள் தாய் பாசம் பயத்தை வென்று வரவழைத்து விட்டது. அலைபேசி இல்லா காலமா?
    அலைபேசி இருந்தால் அழைத்து இருக்கலாம்.

    //பஸ்ஸை நிறுத்த நானும் சக பயனிகளும் குரல் கொடுத்தும் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு கேட்கவே இல்லை, இருவரும் சில பெண்களுடன் பேசி சிரித்துக் கொண்டு வந்ததால் நாங்கள் குரல் கொடுத்தது அவர்களுக்கு கேட்கவில்லை. சுமார் ஒரு கி.மீ தூரம் தாண்டியே வண்டி நின்றது.//

    வழக்கமாய் வரும் பயணிகளுடன் இப்படி உரையாடி வருவார்கள், பார்த்து இருக்கிறேன்.
    பஸ் பயணம் எப்போதும் பயத்தை உண்டு செய்யும், வரும் பஸ் எல்லாம் கூட்டம் தான். குழந்தைகளுக்கு மாயவரம் வந்து தடுப்பு ஊசிகள் போட்டு விட்டு வரும் அன்று கூட்டத்தில் இடிபட்டு குழந்தைகள் அழுதநினைவுகள் மனதை விட்டு அகலவில்லை.

    அதற்காகவே மாயவரம் வந்தோம்.

    உங்கள் திக் திக் பயணத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன்.
    மேலையூர் முக்கட்டு என்ற இடத்தில் ஏதாவது தகராறு வந்தால் பஸ் அந்த இடத்தில் நின்று விடும் அப்புறம் நடந்தே வர வேண்டும் திருவெண்காட்டுக்கு. நினைத்து பார்க்கவே இப்போதும் பயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் சில வருடங்கள் திருவெண்காடில் இருந்தீர்களா?

      உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. பயங்கிரமான அனுபவம் தான். மறக்க முடியாத அனுபவமும் கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. ஆச்சர்யமாக இருக்கிறது.... உங்கள் தைரியத்தை நினைத்து.... எதிலாவது பிடிப்பு இருந்தால், இடையூறுகளை மனது ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து செல்லும்...அதுபோன்ற நிகழ்ச்சி இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பதைபதைப்பான மறக்க முடியாத அனுபவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. தங்களது பெற்றோர்களின் மனநிலையை நினைத்துப் பார்த்தேன்.

    நீங்கள் மறுதினம் வந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரின் பெற்றோர்களுக்கு ரொம்பவே பயமாக இருந்திருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. இரவு கடைசி பஸ்ஸில் வருவதே பயங்கரமான விஷயம்.இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியாமல் போனது இன்னும் கொடுமையான சம்பவம். ஆசிரியரின் மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  13. திக் திக் பயணம் தான்! எங்க புக்ககம் ஆன கருவிலிக்குப் போகும்போதும் ஒரு நாள் இப்படித் தான் இரவு ஆகிவிட்டது! நல்லவேளையாக மாமாவும் கூட இருந்தார். காவிரிக்கரையில் ஏதோ எரிந்து கொண்டிருக்க அதிலிருந்து வெளிச்சம் தெரிய நான் அந்த வெளிச்சத்தை நல்லது என நினைத்துக் கொண்டு நடந்தேன். மூங்கில் பாலம் தாண்டியதும் ஒரே இருட்டு! நான் வெளிச்சம் தெரிந்ததைச் சொல்லி இங்கே அதே போல் வெளிச்சம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அவர் சிரித்தார். பின்னால் வீட்டுக்கு வந்ததும் கரையில் எரிந்து கொண்டிருந்தது ஏதோ பிணம் என்று சொல்லவும் எனக்குத்தூக்கிவாரிப் போட்டது! நிஜம்மாவா என்று கேட்டேன். அன்று வரை அங்கே எரியூட்டும் இடம் இருப்பதைக் கவனித்ததில்லை. பின்னர் மறுநாள் பகல் நேரமாய் அந்தப் பக்கம் செல்கையில் காட்டினார். அதிலிருந்து அங்கே கடக்கும்வரையிலும் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இப்போ இடத்தை மாற்றி விட்டார்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரிக் கரை ஓரமாக உள்ள பல கிராமங்களில் இப்படிக் கரையோரமாகத் தான் சுடுகாடு. பலமுறை எரிந்து கொண்டிருக்கும் பிணங்களைப் பார்த்ததுண்டு! பலருக்கும் இந்தக் காட்சி திகில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. இப்படித் தனியாக மாட்டிக் கொண்டால் போயிருப்பேனா சந்தேகமே! எப்படியோ கடவுள் துணை இருந்து நல்லபடியாய்க் கொண்டு சேர்த்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாகப் பயணிப்பது பலருக்கும் கடினமான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. நல்ல திகில். பாவம் தாய்மை துணையிருக்க,
    தெய்வம் கை கொடுக்க வந்து சேர்ந்த இந்த அன்னைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....