தொகுப்புகள்

செவ்வாய், 19 மே, 2020

கதம்பம் – பட்டாம்பூச்சி – மாம்பழம் – ஸ்வீட் கார்ன் – மசாலா கடலை - சமையல்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை – இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும் – முகம்மது நபி.

 

ஊரடங்கு-1 - 5 மே 2020:

 

காலை எழுந்ததும் வழக்கம் போல் வாசலைத் திறந்து பையில் போட்டிருக்கும் பாலை எடுத்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒரு இடத்தில் என் பார்வை நிலை கொண்டது!! என்ன இது??? பட்டாம்பூச்சி போலவே இருந்தது. ஆனால் பெரிது!!

 

பால் கவர்களை குழாய்த் தண்ணீரில் கழுவி ( இந்த பழக்கம் எப்போதுமே பின்பற்றுவது தான்) ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, உடனே என் அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓடி படம்பிடித்தேன்...:) லைட் போட்டிருக்கலாம்! இருட்டாகத் தெரிகிறது. பாருங்கள்.

 

நம்ம Amutha Krishna சில நாட்களுக்கு முன்னர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது பற்றி பகிர்ந்திருந்தார். என்னிடம் ஃப்ரெஷ்ஷான நெல்லிக்காய் இல்லை. முன்பு நெல்லிக்காய் சீசனில் வாங்கி உப்பும், மஞ்சளும் சேர்த்து பிசறி ஊறுகாய்க்காக வைத்திருந்தது தான் இருந்தது. அதில் சிறிது எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்தோம். எதற்காக? நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுமாம்!

 

மதியம் வாசலில் வெள்ளரிப்பழம் வந்தது. கல்லணை அருகேயிருந்து ஒருவர் கொண்டு வந்திருந்தார். 50 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன். எங்களைப் போலவே ஒரு பங்கு தனியாக வாங்கி குடியிருப்பு வாட்ச்மேனுக்கும் சாப்பிடக் கொடுத்தேன்.

 

காவல்துறை போலவே இங்கு நம்மை காப்பவர்கள் ஆயிற்றே! எங்கள் குடியிருப்பில் உள்ள நான்கைந்து குடும்பங்கள் தினசரி வாட்ச்மேனுக்கு காஃபி, டீ, உணவு என்று மாற்றி மாற்றி தந்து கொண்டிருக்கிறோம். எல்லா இடத்திலுமே இதை பின்பற்றலாமே!

 

சிலர் உணவு மீதியிருந்தால் கொடுப்பாங்க. சிலர் கேட்டாத் தான் கொடுப்பாங்க. நாமே அவர்களிடம் கேட்டு, நமக்காக சமைக்கும் போது கூடுதலாக செய்து ஒரு பங்கை கொடுத்து விட்டு உண்பது தான் சிறப்பு. இதைத் தான் நான் எப்போதும் பின்பற்றுகிறேன்.

 

மாம்பழ சீசன் – முதல் வருகை - 6 மே 2020:

 

இந்த வருட சீசனில் வாங்கிய முதல் மாம்பழங்கள்! அருகில் உள்ள கிராமத்திலிருந்து தோப்புப் பழங்களை அக்கா ஒருவர் எப்போதும் கொண்டு வருவார்.

 

எத்தனை வகையான பழங்களை சுவைத்தாலும் மாம்பழத்துக்கு ஈடாகுமா:) இரண்டு நாட்களுக்கு முன்பே அக்கா சொல்லி விட்டார். "யாரிடமும் வாங்கக் கூடாது. பழுத்தா நா கொண்டு வாரேன்":)

 

அக்கா! (நான் தான்) பலாப்பழம் வேணுமின்னா எங்க வூட்டுல இருக்கு! வந்து நல்லதா பாத்து எடுத்துக்கிடுங்க :)

 

உங்க வீடு எங்க இருக்கு? எங்கேர்ந்து நா வருவேன்!

 

அப்படியே நேரா வந்தா (அது இருக்கும் 5 கிமீ!!!!) ஆறுமுகம் கடை இருக்கு பாருங்க. அதுக்கு பக்கத்துல இரண்டாவது வீடு. திண்ணைல மெஷின் போட்டுருப்பேன்! மாம்பழ ஆட்டோ வீடுன்னு கேட்டா சொல்லுவாங்க :)

 

மாம்பழ ஆட்டோ உங்களோடது தானா?

 

ஆமா!! ஏன் வூட்டுக்காரரோடது தான் :)

 

எங்க பாப்பா சிலநேரம் அவங்க ஆட்டோ ரிப்பேரானா அதுல போவா :)

 

ஏன் வூட்டுக்காரரு எல்லாருக்கும் உதவி செய்வாருக்கா. ஃப்ரெண்டுங்க எது கேட்டாலும் செய்வாரு. அப்படித்தான் ஒருநாளு அவரு............................:)

 

சரிக்கா!! நா கிளம்பறேன். நேரமாச்சு :)

 

என்னைப் போல், இந்த அக்காவை போல் கணவனின் புகழ் பாடும் மனைவிகள் இருக்கும் வரை உங்களை யாராலும் அசைத்துக் கொள்ள முடியாது :)


ஊரடங்கு – 2:  ஆதியின் அடுக்களையிலிருந்து – 7 மே 2020

 

இந்த ஊரடங்கு நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி தான் செல்கிறது. கத்திரி வெயிலில் வியர்வை ஆறாக ஓட வேலை செய்வது சலிப்பையும், அசதியையும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளை ஒதுக்கிக் கொண்டே வந்தால், ஒருநாள் அதுவே பெரிய பளுவாகி விடும். Homework incomplete ஆக வைத்திருக்கும் மாணவி போலவே இருப்பேன் :)

 

மாதம் ஒருமுறையாவது கிச்சனை முழுதும் சுத்தம் செய்து விடுவேன். இம்முறை கொஞ்சம் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது எனக்கே பிடிக்கவில்லை. காலையில் முழுமூச்சாக ஆரம்பித்து செய்யத் துவங்கியதும், சிறிது நேரத்தில் மகளும் உதவ சமையல் மேடை, டைல்ஸ், சிம்னி, தண்ணீர் குழாய்கள், ஜன்னல் கம்பிகள் என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்த பின்பு தான் நிம்மதி ஆச்சு :) எண்ணெய் பிசுக்குகளை போக்க லைசால் கிச்சன் கிளீனர் மிகவும் உதவிகரமாக இருந்தது.

 

மதியம் zee தொலைக்காட்சியில் "வறுமையின் நிறம் சிவப்பு" போட அதில் நேரம் கடந்தது. கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது என்று சொல்லலாம். பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் 1980ல் வெளிவந்த திரைப்படம். துடிப்புள்ள இளைஞனாக வேலை தேடி தலைநகருக்குச் சென்று அல்லல் படுவது தான் கதை.

 

மாலை தேநீர் நேரத்தில் இன்று Baked masala peanuts செய்து பார்த்தேன். YouTube உபயம் தான். எனக்கு இப்ப அம்மா மாதிரி :) ஸ்டெப் 1 விட்டுவிட்டு ஸ்டெப் 2 க்கு போனதால் கடலையோடு மசாலா கொஞ்சம் சேரலை. ஆனால் 3 ஸ்பூன் எண்ணெயில் மசாலா கடலை பிரமாதம்!

 

மசாலா கடலை

 

இன்றைய நாள் இப்படித்தான் சென்றது..

 

நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது :( அவரவரின் பாதுகாப்பு அவரவரின் கையில் தான் இருக்கிறது. முடிந்த வரை வீட்டிலேயே இருப்போம். வைரஸை விரட்டுவோம்!

 

இதுவும் கடந்து போகும்!


ஆதியின் அடுக்களையிலிருந்து – ஸ்வீட் கார்ன் பகோடா – 8 மே 2020:

 

Sweet Corn pakoda & balls!

 

Sweet corn நான் வாங்குவதே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் பழங்கள் வாங்கிய போது சோளமும் இருந்தது. முயற்சித்து பார்க்கலாமென இரண்டு வாங்கினேன். தோழிகளிடம் கேட்ட போது உப்பு போட்டு குக்கர்ல ஒரு விசில் விடுங்க. அப்படியே சாப்பிடுங்க. வேணும்னா மிளகாய் தூள் தூவி விடுங்க என்றனர்.

 

ஒன்றை அப்படி உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டோம். மற்றொன்றை இன்று உதிர்த்து உப்பு, மிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, கொஞ்சம் போல அரிசிமாவு சேர்த்து கலந்து பக்கோடா போலவும், உருட்டி போட்டும் எடுத்தேன்.

 

பேல்பூரி செய்த போது தயாரித்த katti meetti chutney உடன் சுவைத்தோம். யம்மி. யம்மி.


அம்மா – 10 மே 2020


என் அம்மா ஒரு தைரியமான மனுஷி. எந்தவொரு சூழ்நிலையும் கடந்து வரக்கூடிய தெம்பு அவளிடம் இருந்ததுஇந்த சிரிப்பும், சந்தோஷமும் எப்போதும் அவளிடம் இருந்ததா என்பது கேள்விக்குறி தான்! பள்ளிப்படிப்பை முடிக்கா விட்டாலும் வாய்க்கணக்கில் கில்லாடி! சிக்கனமும், சேமிப்பும், கைமணமும் அம்மாவின் சிறப்புகள்.

 

என் அம்மாவைப் போல தன் குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக தன்னையே உருக்கி வழிநடத்திச் செல்லும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர்கள் தின வாழ்த்துகள்.


ஊரடங்கு-3 – பால் கொழுக்கட்டை - 11 மே 2020



இங்கு கத்திரி வெயில் ரொம்பவே தகிக்கிறது :( வியர்வையில் உடைகள் தொப்பலாய் நனைந்து விடுகின்றன :( ஒரு மழை பெய்தால் தான் என்ன!! நீங்க இப்படி பண்ணக்கூடாது! இந்த புழுக்கத்தை குறைத்தால் தான் என்ன! என்று வரிசையாக பிள்ளையாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறேன் :) அவரிடம் தான் என் ஆதங்கத்தை சொல்ல முடியும் இல்லையா?

 

ஊரடங்கு இன்னும் இருந்தாலும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கடுமையாக இருந்த போதே அனாவசியமாக வெளியில் சுற்றி போலீசில் சிக்கியவர்களிடம் எதுவும் சொல்ல முடியாது :( மற்றவர்கள், வெளியில் சென்றாலும் மிகவும் கவனமாகத் தான் இருக்கணும். இனி பழையபடி வாழ்வது என்பது சற்றே சிரமம் தான். தயக்கங்களும், குழப்பங்களும் இருக்கும்.

 

என்ன தான் ஊரடங்கு என்று உலகமே ஸ்தம்பித்தாலும் வீட்டில் ஒரு இடம் மட்டும் எப்போதும் உயிர்ப்புடன் இருந்தது. அடுக்களை! அங்கே ஒரு குடும்பத்தலைவி எதையாவது வதக்கிக் கொண்டும், அரைத்துக் கொண்டும், பொரித்துக் கொண்டும் இருந்திருப்பாள்.

 

குடும்பத்தில் உள்ளவர்கள் அவளுக்கு உதவியிருந்தால் சற்றே மகிழ்ந்திருப்பாள். இல்லையென்றால் வெறுப்பும், சலிப்பும் ஏற்பட்டிருக்கும். அதுவே மன அழுத்தமாகவும் மாறவும் வாய்ப்புண்டு. நம் அம்மாக்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும் :(

 

அம்மா என்றவுடன் அம்மாவின் கைமணத்தில் ருசித்த உணவுகள் நமக்கு நினைவிருக்கும். வீட்டில் இருப்பதை வைத்து வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு கெடுதல் செய்யாத பண்டமாகவும் செய்து தந்திருப்பார் இல்லையா?


நானும் என் அம்மாவின் கைமணத்தில் ருசித்த வெண்புட்டும், பால் கொழுக்கட்டையும் செய்து சுவைத்தேன். எப்போதும் எதை செய்தாலும் நிறைய தான் பண்ணுவார் அம்மா. இப்போது மட்டும் இருந்திருந்தால் "என்னடி! சொப்பு சாமான் வெச்சு விளையாடற மாதிரி கொஞ்சமா பண்ணியிருக்க?" என்று சொல்லியிருப்பாள் :)

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

 

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்.

38 கருத்துகள்:

  1. சுவையான கதம்பம்.

    மிஞ்சியதைக் கொடுக்காமல் காவலர்களிக்குத் தனியாக சமைத்துத் தருவது சிறப்பு. கீதா அக்கா அபார்ட்மெண்ட்டிலும் இதைச் செய்கிறார்கள் என்று போட்டிருந்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவருக்கும் சேர்த்து தான் செய்து கொடுக்கிறேன் சார்..மற்றவர்கள் எப்படியோ! தங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இந்த முறை நாங்கள் முதலில் வாங்கிய மாம்பழம் சஹிக்கவில்லை. சூடு பட்ட பூனையாய் அதற்குப்பிறகு வாங்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் முதலில் வாங்கியதை விட இரண்டாம் முறை வாங்கியது மிகுந்த சுவை..

      நீக்கு
  3. நேற்றிரவு இங்கே மழை பெய்ததாக மகன்கள் தகவல். நான் நேரத்துக்குப் படுக்கப்போய் விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே முந்தைய நாள் மழை..புழுக்கம் குறைந்துள்ளது..

      நீக்கு
  4. காவலர்களுக்கு மிஞ்சியதை கொடுப்பது தர்மமாகாது அது மிஞ்சியதால் கொடுக்கப்படுகிறது.

    அனைத்தும் சிறப்பான செய்திகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்..எனக்கு மிஞ்சியதை கொடுப்பதில் ஒப்புதல் இல்லை..கொடுத்து விட்டு தான் நான் சாப்பிடுவேன்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

      நீக்கு
  5. எல்லாவற்றையும் முகநூலிலும் சுவைத்தேன். அருமை! நாங்களும் முந்தாநாள் எங்கள் குடியிருப்புக் காவலர்களுக்கு உணவு கொடுத்தோம். நேற்றிலிருந்து இனி கடைகள் திறந்துவிட்டதால் வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள். மாம்பழங்கள் இப்போதெல்லாம் வாங்குவதே இல்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு கடைகளும் இல்லை, போக்குவரத்தும் இல்லையே மாமி..அதனால் தந்து கொண்டிருக்கோம்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கீதா மாமி.

      நீக்கு
  6. // ஒரு பங்கை கொடுத்து விட்டு உண்பது // மிகவும் சிறப்பு...

    மற்ற அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  7. குறள்

    காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.

    பொழிப்பு (மு வரதராசன்): காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறளுக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. பாவம் வெங்கட். டெல்லியில் காய்ந்த ரொட்டியும்,ஊறுகாயையும் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கிறார். நீங்கள் ஆனால் பால் கொழுக்கட்டை, மசாலா கடலை, கார்ன் பகோடா, வெள்ளரிப்பழம், மாம்பழம், நெல்லிக்காய் ஜூஸ் என்று விதம் விதமாக எழுதி வெறியேற்றுகிறீர்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாஸ்தவம் தான் ஐயா..நாங்களும் நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்..அவரிடமும் சொல்வோம்..ஆனால் என்னுடன் மகள் இருக்கிறாள்..அவளுக்கு விடுமுறை என்பதால் ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே...:) அது போக மனதுக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் அவருக்கு அங்குள்ள நட்புகள் சாப்பிட அழைத்து விதவிதமாக செய்து தருகிறார்கள்..தங்களின் அக்கறையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //என் அம்மாவின் கைமணத்தில் ருசித்த வெண்புட்டும், பால் கொழுக்கட்டையும் செய்து சுவைத்தேன். எப்போதும் எதை செய்தாலும் நிறைய தான் பண்ணுவார் அம்மா. இப்போது மட்டும் இருந்திருந்தால் "என்னடி! சொப்பு சாமான் வெச்சு விளையாடற மாதிரி கொஞ்சமா பண்ணியிருக்க?" என்று சொல்லியிருப்பாள் :)//

    பதிவில் மிகவும் பிடித்தது ஆதி . என் அம்மாவுக்கும் பெரிய கை. அம்மா சிறிய குடும்பம், ஆனால் அப்பா குடும்பம் பெரிது நிறைய நிறைய செய்து பழகி விட்டது, அப்புறம் எது செய்தாலும் அக்கம் பக்கம் கொடுக்காமல் சாப்பிட்டதே இல்லை.

    இங்கு நிறைய வாட்ஸ்மேன் இருக்கிறார்கள், நிறைய துப்புறவு தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு எல்லா வீடுகளும் அதிகபடியாக பணம் கொடுத்து விடுகிறோம். காலை, மதியம் ,மாலை, இரவு என்று வாட்ஸ்மேன் மாறுவார்கள்.

    பதிவும் படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  11. சுவாரஸ்யமான கதம்பம்...செகூரிடிகளை கவனிப்பது நல்ல அம்சம்...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  12. பட்டாம்பூச்சி போலவே இருந்த அந்த பூச்சியிடம் கவனம் தேவை. மிக வேகமாக பறக்கும் தன்மையுடையது ... கண்களில் வந்து வேகமாக மோதும் ... ஆபத்தானது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சியைப் பற்றிய மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி..கவனமாக இருக்கிறேன்..

      நீக்கு
  13. வளாக காவல்காரருக்கு உணவு அளிப்பது நல்ல விஷயம். பாராட்டுகள் வாழ்த்துகள் சகோதரி. அதுவும் அவருக்கும் செய்து கொடுப்பது.

    வாசகம் அருமை.

    அம்மாவின் அன்பும் கை மணமும் தனிதான்.

    நல்ல கதம்பம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லா பகுதிகளையும் வாசித்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  14. ஆதி, வாசகம் செம

    நானும் சில சமயம் க்ளீனிங்க் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு அப்புறம் திண்டாடுவேன் எனவே உடனுக்குடன் செய்வது தான் நல்லது.

    அம்மா தனிதான் ஆதி! என் அம்மாவின் கை மிக ம்கப் பெரியது. ரொம்ப தாராள மனம்

    அபார்ட்மென்ட் வாச்மேன் அவருக்கு சாப்பாடு கொடுப்பது, செய்து ஃப்ரெஷ்ஷாகக் கொடுப்பது மிக மிக அருமையான விஷயம். பாராட்டுகள் வாழ்த்துகள்

    நெல்லி ஜூஸ் ஆஹா!! பால் கொழுக்கட்டை சூப்பராக வந்திருக்கு. மிகவும் பிடிக்கும்.

    எல்லாமே அருமை ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் தேர்வு என்னருடையது!

      பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  15. இது பட்டாம் பூச்சி போல இருந்தாலும் அந்த வகை இல்லை என்றே தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..இது பட்டாம்பூச்சி இல்லை..பெரியது..வேகமாக பறக்கிறது.. இங்கு தோப்பு இருப்பதால் விதவிதமான பூச்சிகள்!!

      நீக்கு
  16. அன்பு ஆதி சிலவற்றை முக நூலில் படித்தேன்.
    தாங்கள் நேரத்தைச் செலவு செய்யும் விதம் அருமை.
    குழந்தைக்குப் பிடித்ததை செய்து கொடுத்துப் படமும் எடுத்துப் போடுவது நல்ல உற்சாகம் கொடுக்கிறது.
    அந்தப் பூச்சி பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. கதவை சார்த்தியே வைத்திருங்கள்.

    அனைத்துப் பலகாரங்களும் மாம்பழம் கொடுத்த அக்காவும்
    பலே ஜோர்.
    கணவன் புகழ் பாடாதவர்கள் யார் இருக்க முடியும்:)
    வெங்கட்டுக்கு நண்பர்கள் உப்சாரம் செய்வது மிக மகிழ்ச்சிமா.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பேச்சில் என்னவரைப் பற்றி பேசாமல் முடிந்ததில்லை..:)) அந்த அக்காவைப் பார்த்த போது என்னையே பார்த்தது போலிருந்தது..:) தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  17. அத்தனை ஜீவனுக்கும் அம்மான்னா அம்மா தான்! அது என்னவோ தெரிலே, அம்மா இருக்கும் போது அம்மாவின் அருமை தெரியாமல் தான் போய்விடுகிறது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்..அம்மாவின் அருமை இல்லாத போது தான் தெரிகிறது.. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா..

      நீக்கு
  18. உணவுகள் அனைத்தும் நன்று. காவலாளிக்கு உணவு கொடுப்பது சிறந்தது இங்கும் உணவு கொடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  19. மசாலா வேர்க்கடலை செய்யனும்ன்னு முடிவு செஞ்சு ஒரு மாசமாச்சுது. இன்னும் செய்யலை :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசாலா வேர்க்கடலை - செய்து பாருங்கள் ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....