தொகுப்புகள்

வியாழன், 28 மே, 2020

ரூஹ் – லக்ஷ்மி சரவணகுமார் – வாசிப்பனுபவம் – இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்


”அவனுடைய (மனிதன்) பிடரி நரம்பை விடவும் நாம் (இறைவன்) அவனுக்கு நெருக்கமாய் இருக்கிறோம்.” - இறைவசனம். 

 


இந்த வியாழனில் இன்னுமொரு வாசிப்பனுபவம். நண்பர் இரா. அரவிந்த் அவர்களது வாசிப்பனுபவம் தான் இந்த வாரத்திலும். திரு லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய இந்தப் புதினத்தினை பற்றி அமேசான் தளத்தில் சொல்லும்போது – ”அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான்என்று சொல்கிறார்.  மின்னூலின் விலை ரூபாய் 145/- மட்டும். Kindle Unlimited கணக்கு இருப்பவர்கள் இலவசமாகப் படிக்கலாம். நானும் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து வாசித்தேன். நன்றாக இருக்கிறது. நல்லதொரு அறிமுகம்.  அப்படி புதினத்தின் ஆசிரியர் திரு லக்ஷ்மி சரவணகுமார் சொன்ன கதையை நண்பர் இரா. அரவிந்த் படித்து தனது வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறார். இனி அவர் பார்வையில் ரூஹ்! ஓவர் டு அரவிந்த்! – வெங்கட் நாகராஜ், புது தில்லி.

****


ரூஹ்: நம் ஆன்மாவுடன் ஓர் ஆழ்ந்த ரையாடல்.

 

நாம் பிறந்த கணம் தொட்டு நமக்கு விடை தெரியாத பல கேள்விகள் நம்முள் நொடிக்கு நொடி எழுந்துகொண்டே இருக்கின்றன.

 

அவற்றுள் முக்கியமானவற்றிற்கு நம் ஆன்மாவுடன் நம்மை ரையாடவைத்து நாமே விடை காண உதவும் அற்புத புதினமே, ”ரூஹ்”. "கானகன்" எனும் புதினத்திற்காக சாஹித்திய அகடமியின் யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், திரைத்துறையின் முக்கிய வசனகர்த்தாக்களில் ஒருவருமான திரு லஷ்மி சரவணகுமார் அவர்களின் எழுத்தில் வெளிவந்ததே "ரூஹ்".

 

ஒரு சுயசரிதையில் கூட திறந்து வைக்கச் சாத்தியமற்ற வாழ்வின் ஆழ்ந்த சிக்கலான கண்டடைதல்களை ஒரு புனைந்துரைத்தலில் சாத்தியமாவதை உணரும்போது புதினம் வாசிப்பதின் அவசியம் நமக்குப் பளிச்சென்று புரிகிறது.

 

வாழ்வின் எண்ணற்ற உளச்சிதைவுகளையும் அலைக்கழிப்புகளையும் அனுபவித்த நூலாசிரியர், கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில் அங்குள்ள மனிதர்களிடமும் சூஃபி பாடல்களிலிருந்தும்,  தான் கண்டடைந்த ஞானத்தை கரும்புச் சாறாகப் பிழிந்து இப்புதினப் பாத்திரங்கள் மூலம் மனதில் வேரூன்றக்கூடிய எண்ணற்ற மேற்கோள்களாகவும் சுவாரசியமான கதையாகவும் வெளிப்படுத்தியிருப்பது வாசகர்களுக்கு விருந்தாகவும் அவர்கள் மனதிற்கு மருந்தாகவும் அமைகிறது.

 

மராத்திய வீரன் ஆன்றேவிற்கு அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போது இல்லாத நிறைவு, அம்மரகதக் கல்லைத் துறக்க நினைக்கையிலேயே வருவது, சமூகத்தின் உறவு நியதிகளை மீறி ஜோதிக்கு ஏற்படும் விடலை எண்ணங்களால் தன் அழுக்குகளை எதனாலும் கழுவ முடியவில்லையே என்ற ஏக்கம் பிற்காலத்தில் பிணியுற்றோரின் நிணநீரைச் சுத்தப்படுத்துவதன் மூலம்  தீர்ந்து போதல் போன்றவை இந்நூலின் துவக்க வரிகளைப் போல ஆச்சர்யத்துடன் தொடங்கிய அழியா ஞானத்தை வழங்குகிறது.

 

வாழ்வில் துரோகங்களை சந்திக்கும் போதெல்லாம் "ஏன் மனிதர்கள் இப்படியெல்லாம் பச்சோந்திகளாக மாறுகிறார்கள்" என்று நாம் விரக்தி கொள்கையில் "எண்ணங்களும் தேவைகளும்தான் மனிதர்கள். தேவைகள் மனிதர்களின் எண்ணங்களை மாற்றும் போது மனிதனும் மாறவே கூடும்" என்பதை அன்வர் வாழ்விலிருந்து தத்ரூபமாய் உணர்கிறோம்.

 

இப்புதினத்தில் காணப்படும் பச்சை ஒளியை நோக்கி அனைவரும் ஈர்க்கப்படுவதையும் நம் குடும்ப மற்றும் பணிச் சூழல்களையும் ஒப்பிடுகையில், துயரையும் பழிகளையும் பாவங்களையும் பொறாமைகளையும் சாபங்களையும் தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிகக் களிப்பை மட்டுந்தான் என்ற தெளிவையும், தன் பலங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து அனைவரையும் ராபியைப் போல நிபந்தனையின்றி நேசிப்பதே நிரந்தரமான, நிம்மதியான வாழ்வுக்கு அடிப்படை என்ற தெளிவும் பிறக்கும்.

 

எல்லாம் வல்ல இறைவன் ஏன் இவ்வுலகைத் துன்பமயமானதாக வைத்திருக்கிறார்  என்ற நம் புதிருக்கான விடை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அழுத்தத்தைத் தாங்கும் நிலக்கரி வைரமாவதைப் போல, தாளவொண்ணா மன அழுத்தங்களுக்கும் அலைச்சல்களுக்கும் வெறுப்புக்கும் ஆளான ஜோதி, அனைவரும் மதிக்கும் ராபியாவே வணங்கத்தக்க எதிர்ப்பார்ப்பில்லா அன்பை வழங்கும் மக்களின் வழிகாட்டும் ஒளியாக மாறும் போது நமக்குக் கிடைத்துவிடுகிறது.

 

கடவுளை நம்புபவர்கள் வெறுப்பவர்கள் என்பதற்கு  அப்பால்  வழிபாடு என்பது சமாதானத்தையும் நேசத்தையும் வளர்ப்பதை, ஜோதி தீச்சட்டி சுமந்துகொண்டே பிறர் துயர் துடைக்க சாமியாடிய புதுமாரியம்மன் கோவில் திருவிழாவிலும், புதினத்தின் உன்னதமான இறுதிப் பகுதிகளிலும் ஆத்மார்த்தமாக உணர்கிறோம்.

 

"முன்னோர்கள் செய்த பாவங்களின் பலன்களை நாம் ஏன் அனுபவிக்க வேண்டும்" என்று அவர்களின் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டே எண்ணும் நமக்கான விடை, பாக்தாத் கடலோடி அஹமது அடையத் தவறிய வாழ்வின் தெளிவை முன்னூறு வருடங்களுக்குப் பின் பேரையூரின் ஜோதி அடையும் போது பிரபஞ்சம் என்னும் மாபெரும் கடலின் துளியே நம் வாழ்வு என்பதும், ஒவ்வொரு துளிக்கும் நாம் அறியவியலா உயரிய நோக்கம் உண்டு என்பதும் தெளிவாகிறது.

 

"நாடோடிகள் விதைப்பதோடு சரி. அறுப்பதில்லை. விளைச்சல் குறித்து அக்கறை கொள்வதில்லை" என்ற இந்நூலின் மேற்கோளுக்கிணங்க மேற் கூறப்பட்டவை போன்ற எண்ணற்ற வாழ்வியல் உண்மைகளை நம்முள் விதைக்கும் இப்புதினத்தை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிப்போம். தெளிவான எண்ணங்களோடும், புரிதல்களோடும் அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை அறுவடை செய்வோம்.

 

ரூஹ்

 

நட்புடன்,

இரா. அரவிந்த்


28 கருத்துகள்:

  1. வெளிவட்டத்தில் ஊடாடி புத்தகத்தினைப் பற்றிய தனது எண்ணங்களை பகிர்ந்து விட்டார் நண்பர் அரவிந்த்.   வாசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் அதே சமயம் சிக்கலான வார்த்தைப் பிரயோகங்கள் புத்தகத்தில் இருக்குமோ என்றும் எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      சிக்கலான வார்த்தைப் பிரயோகங்கள் - அப்படி ஒன்றும் அதிகம் இல்லை. படிக்கலாம்.

      நீக்கு
  2. விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. சுருக்கமான விமர்சனமாக இருந்தாலும், முக்கியமானவற்றை சொன்னது அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. மதிப்புரையை ரசித்தேன். நீங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. அணைவருக்கும் மிக்க நன்றி. என் அரிமுகம் படித்து நூலையும் படித்த வெங்கட் ஐய்யாவுக்கு மிக்க நன்றி. நூல் எளிமையானது தான். இருப்பினும் அது உணர்த்தவரும் வாழ்வியல் உண்ணைகளை புரிந்துகொள்ள சற்று முதிர்ச்சியும் நம் உள ஓட்டத்தை கூர்ந்து நோக்கும் பொருமையும் தேவை.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு அறிமுகம். வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் வாசித்துப் பாருங்கள் பாண்டியன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. மிக அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் லெக்ஷ்மி சரவணகுமாருக்கு. பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  8. முதல் தத்துவம் உண்மைதான், வாழ்வில் பிரச்சனைகள் அதிகமாக அதிகமாக, இறைவைப் பற்றுவதும் கூடுகிறது மக்களிடையே:)...

    ஆன்மாவுடனான உரையாடல்...நல்ல ஒரு கட்டுரை....

    பதிலளிநீக்கு
  9. ஒரு சுயசரிதையில் கூட திறந்து வைக்கச் சாத்தியமற்ற வாழ்வின் ஆழ்ந்த சிக்கலான கண்டடைதல்களை ஒரு புனைந்துரைத்தலில் சாத்தியமாவதை உணரும்போது புதினம் வாசிப்பதின் அவசியம் நமக்குப் பளிச்சென்று புரிகிறது............ இது என்ன மொழி வெங்கட். தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் அல்லது கல்லூரி செல்பவனிடம் கொடுத்தால் கூட புரியாது. எழுதிய உங்கள் நண்பருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வருத்தமாக உள்ளது. வாசிப்பு என்பவருக்கு மற்றவர்களுக்கு புரிய வேண்டும். தன் மேதாவித்தனத்தைக் காட்டும் வண்ணம் இருக்காது. நீங்க சொன்ன நாவல் ஏற்கனேவே படித்தேன். பத்து பக்கம் படிப்பதற்கு நாக்கு தள்ளிவிட்டது. டேய் என்னை விட்டுடுப்பா என்று ஓடி வந்து விட்டேன். அவருக்கு அவரே எழுதிக் கொண்ட புத்தகம் இது. (வார்த்தைகள் கடினமாக வந்து விட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி ஐய்யா. அடுத்த நூல் அரிமுகங்களில் நிச்சயம் உங்கள் மேலான ஆலோசனைகளைக் கடைபிடித்து எளிமையாக எழுதுகிறேன்.

      நீக்கு
  10. நல்லதொரு அறிமுகப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  11. அரவிந்த் அவர்களின் விமர்சனம் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. நூல்களை முழுமையாக படிகத்தூண்டும் விமர்சனம் ... அவ்வப்போது இதுபோல் பலநூல்களை அறிமுகம் செய்கிறீர்கள் ... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான விமர்சனம்.
    ஆழமான கருத்துக்கள் அடங்கிய நூல்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....