தொகுப்புகள்

வியாழன், 14 மே, 2020

வானமே எல்லை – வாசிப்பனுபவம் – இரா அரவிந்த்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும் – எமர்சன்.

 

இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் மற்றுமொரு வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  அவர் பற்றிய சிறு அறிமுகம் – அவர் வார்த்தைகளில் கீழே.. – ஓவர் டு அரவிந்த் – வெங்கட் நாகராஜ், புது தில்லி.

 

*****

அன்பின் நண்பர்களுக்கு,


என்னைப் பற்றிய சிறு அறிமுகம்.

 

நான் இரா. அரவிந்த், நண்பர் திருப்பதி மஹேஷ் போல விழித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. சென்னையில் வசித்து வருகிறேன், பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளர் கிரேடில் சொத்து அடமானக் கடன்கள் வழங்கும் சிறப்பு மைய்ய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். வாசிப்புப் பழக்கத்தின் மூலம் அனைத்துத் துறைகளிலும் நம் அறிவை விரிவு செய்துகொண்டே இருப்பதே என் எளிய குறிக்கோள்.  வாருங்கள் இன்றைய வாசிப்பனுபவத்திற்குச் செல்வோம்.

 

"வானமே எல்லை": பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தை உருவாக்கும் மானுடத்தின் எல்லையில்லா ஆற்றலின் சித்திரம்!

 

சராசரி வாழ்வில் ஒருவரால் ஒரு துறையில் அல்லது கூடுமானவரை இரண்டு துறைகளில் ஈடுபடக் கூடும். அவற்றுள் சிலர் உச்சநிலையையும் அடையக் கூடும். ஆனால், ஒருவரால் தன் வாழ்வில், இராணுவம், விவசாயம், பால் பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸி, உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை, பேக்கரி, அரசியல், ஹெலிகாஃப்டர் நிறுவனம் "ஏர் டெக்கான்", ஒரு ரூபாயில் விமான டிக்கெட், "டெக்கான் ஏவியேஷன்", பெயர்ச்சியியல் "logistics" என்ற அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டு இமாலய சாதனைகளைப் படைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?

 

கர்நாடகத்தில் கொரூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, இப்படிப்பட்ட சாமானியக் கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களை அநாயாசமாக நிகழ்த்திக் காட்டிய திரு கே. கோபினாத் அவர்களின் சுயசரிதமே, "Simply Fly: A Deccan Odyssey" என்று ஆங்கிலத்தில் வெளிவந்து திரு B.R. மகாதேவன் அவர்களால் தீந்தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "வானமே எல்லை" புத்தகம்.

 

புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களையே இத்தகைய அசாதாரணமான வாழ்வு வாழ்ந்துவிட்ட  உணர்வை அடையவைத்ததே இப்புத்தகத்தின் பலம் எனலாம். அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல், தளராத ஊக்கம், விடா முயற்சி, இயற்கையோடு இயைந்த வெற்றிகரமான விவசாயம், சிறந்த தொடர்புகளை உருவாக்கி வாழ்வு முழுவதும் அவற்றைப் பேணி பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளுதல் என கேப்டன் கோபினாத் அவர்களின் வெற்றிச்சூத்திரம் பக்கத்திற்குப் பக்கம் நம்மையும் உணர்வு ரீதியாகப் பறக்க வைக்கிறது. "இவ்வுலகமே கெட்டுவிட்டது", "அதிகார வர்க்கம் முழுவதும் ஊழல் மலிந்துவிட்டது" போன்ற சாக்குகளைச் சொல்லி அலுத்துக்கொள்ளும் சாமானியர்களான நமக்கு இவ்வனைத்து சவால்களும் வெல்லப்படக்கூடியவையே என எதார்த்தமாக எடுத்துக்காட்டிய  இந்நூலை திரு அப்துல்கலாம் அவர்கள் கல்லூரிப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டிப் பரிந்துரைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?

 

விவசாயம் முதல் விமான நிறுவனம் நடத்துவது வரை ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு வெற்றியின் வாசலை அடைந்து காட்டிய கேப்டன் கோபினாத் அவர்களின் சாதனை வாழ்வு, "சூரரைப் போற்று" என்ற திரைப்படமாக உருவாகி வரும் இச்சூழலில் இப்புத்தகத்தைப் படித்து இதிலுள்ள சுவாரசியமான

சம்பவங்களையும், அத்தியாயங்களைத் துவக்கிவைக்கும் சிறந்த மேற்கோள்களையும் வீட்டிலுள்ள குழந்தைகளிடம் பகிர்வது மூலம் அவர்கள் மனதிலும் தன்னம்பிக்கை விளக்கை ஏற்றி வைக்கலாமே?

 

இந்நூல் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

 

நவீன மின்நூல் வாசிப்பாளர்களுக்காக கிண்டிலிலும் பின்வரும் சுட்டியில் இப்புத்தகம் கிடைக்கிறது.

 

வானமே எல்லை

 

புத்தகத்தைப் படியுங்கள், உலகையே வெல்லும் உள ஆற்றலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

இவண்,

 

இரா. அரவிந்த்.


20 கருத்துகள்:

  1. வாசகம் சிறப்பு.

    நல்லதொரு அறிமுகம்.... நண்பர் இரா. அரவிந்த்தும் சரி, அவர் அறிமுகப் படுத்தி இருக்கும் புத்தகமும் சரி..்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நூலின் அறிமுகமே ஆவலைத் தூண்டுகிறது. திரு.அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. திரு. இரா.அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அவருக்கு தம்பி மஹேஷ் அவர்களை தெரியுமா...?

    வானமே எல்லை - தலைப்பும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹேஶ் என் பள்ளி நன்பன் ஐய்யா. என்னை சும்மா தூங்கவிடாமல் ரிவ்வியூ எழுதத் தூண்டிக்கொண்டிருப்பவன் அவன்தான்.

      நீக்கு
  4. 'வெறும்கை என்பது மூடத்தனம் - விரல்கள் பத்தும் மூலதனம்' என்று மாயவரத்திலிருந்து கிளம்பிவந்த ட்டி.ராஜேந்தர், ஏவிஎம் போன்ற ஜாம்பவாங்களுக்கே தண்ணி காட்டும்வகையில் விச்வரூபம் எடுத்தார். அவரைப் போலவே, கர்னாடகத்தின் சிற்றூர் ஒன்றில் உணவுக்கடை உள்படப் பல தொழில்கலைச் செய்துவந்த கோபினாத், இந்திய விமானத் துறையில் ஆட்சி செலுத்தினார். டாட்டா போன்ற மாமனிதர்களாலேயே இயலாத பாணியில் நாடு முழுவதும் சின்னஞ்சிறு
    ஊர்களிலும் விமானங்களைத் தரையிறங்கவைத்தார். அரசியல் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தாலும், உலகெங்கிலும் உண்டான விமனத்துறைக்கு எதிரான பொருளாதாரச் சூழ்னிலைகலாலும் கோபினாத்தின் பயணம் நின்றுபோனது துரதிர்ஷ்டமே. இளைஞர்கள் அனைவரும் படித்தே தீரவேண்டிய நூல், கோபினாத்தின் வாழ்க்கை வரலாறாகும்.

    பதிலளிநீக்கு
  5. அணைவருக்கும் மிக்க நன்றி. புத்தகத்தின் உயர் தரமே என்னை நூலை அரிமுகம் செய்துவைக்கத் தூண்டுகிறது. நூலை படித்து அணைவரும் பயன்பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. என் முதல் பிரமிப்பு திரு. இரா. அரவிந்த் தான். அவரது வானமே எல்லை நூல் அறிமுகம் அடுத்த பிரமிப்பு. நம் சுயத்தை பட்டைத் தீட்ட வைக்கும் அந்த நூலை வாசித்துத் தெளிய வேண்டும். இத்துணைக்கும் வழிகாட்டும் உங்களின் இந்தப் பதிவின் நோக்கத்தையும் மனதார உணர்ந்து வாழ்த்துகிறேன். நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜீவி அவர்களே. நூலைத் தவறாமல் வாசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல வாசகர்
    ஒருவரையும்
    நல்ல நூல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளீர்

    இந்த நூல் "சூரரைப் போற்று// எனும் திரைப்படமாக வர இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  9. நூல் அறிமுகம் அருமை
    அவசியம் வாங்கிப் படிக்கிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. //திரு அப்துல்கலாம் அவர்கள் கல்லூரிப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டிப் பரிந்துரைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?//

    கல்லூரிப் பாடப்புத்தகத்தில் வந்தால் மாணவர்கள் சின்ன விஷ்யத்திற்கு சோர்ந்து போக மாட்டார்கள். விடாமுயற்சி வெற்றித்தரும் என்ற பாடம் கற்றுக் கொள்வார்கள்.
    சிறந்த நூலை அறிமுகம் செய்த அரவிந்த் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. நூல் அறிமுகம் உண்மையில் அசத்தலாக இருந்தது. வெங்கட் நாகராஜ் பதிவில் எப்போதும் நல்ல விஷயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோவிந்தராஜூ அருணா.

      நீக்கு
  12. நல்லதோர் நூல் அறிமுகம்.
    அரவிந்த் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....