தொகுப்புகள்

வெள்ளி, 15 மே, 2020

அந்தமானின் அழகு – பரத்பூர் கடற்கரை – மதிய உணவும் சொகுசுக் கப்பல் பயணமும்…


அந்தமானின் அழகு – பகுதி 31

 

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

வாழ்க்கை என்பது மிகவும் சுவையான உணவு… உங்கள் அறியாமையால் அதை கசப்பாக்கிவிடாதீர்கள்…

 


அந்தமான் நிகோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான ஷாகீத் த்வீப் தீவின் பரத்பூர் கடற்கரையில் ஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீ, Bபனானா ரைடு, ஸ்னார்க்ளிங் என அவரவர்களுக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடலிலும் உற்சாகக் குளியல் முடித்த பிறகு கடற்கரையில் இருந்த சிறு கடைகளில் கொஞ்சம் ஷாப்பிங்!  இங்கேயும் கடலிலிருந்து பெறப்படும் சங்கு, சிப்பிகள் மற்றும் பலவிதமான பொருட்களைக் கொண்டு விதம் விதமாக அணிகலன்களையும், வீட்டில் வைத்து அலங்கரிக்க ஷோ கேஸ் பொம்மைகள், நிழற்பட ஃப்ரேம்கள் என நிறைய விதங்களில் பொருட்கள் நம் கண்களைக் கவரும் விதமாக வைத்திருக்கிறார்கள்.  பொருட்களின் விலை சற்றே அதிகமாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால் அவர்களிடம் பேரம் பேசலாம்.  கட்டுப்படியானால் கொடுக்கிறார்கள் – இல்லையென்றால் கொடுக்கத் தயாராக அவர்கள் இருப்பதில்லை. இங்கே மேலே சொன்ன பொருட்களைத் தவிர அந்தமான் தீவுகளின் படங்கள் போட்ட உடைகளும் கிடைக்கின்றன.  100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. சில முறை போடலாம் – அவ்வளவு தான். தரமானது என்றெல்லாம் சொல்ல முடியாது.

 

இங்கே கிடைக்கும் சங்கு தரமானதா என்பதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. சங்கை பயன்படுத்துவதும் கொஞ்சம் கடினமானது. “தம்” கட்டி ஊத வேண்டும் – பழகிக் கொண்டால் மட்டுமே வரக்கூடிய விஷயம் – அங்கே இருந்தவர்கள் சிறப்பாக ஊதுகிறார்கள்! நாம் முயற்சி செய்தால் “வெறும் காத்து தாங்க வருது” என்று பரிதாபமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது! கூடவே இன்னுமொரு விஷயமும் – எந்தப் பொருளை வாங்கினாலும் அதற்குண்டான ரசீதை வாங்கிக் கொள்வது ரொம்பவே அவசியம். ஏற்கனவே ஒரு பகுதியில் சொன்னது போல போர்ட் Bப்ளேயர் விமான நிலையத்தில் அத்தனையும் பரிசோதனை செய்வார்கள் – ரசீது இல்லாத அத்தனை கடலிலிருந்து பெறப்படும் விஷயங்களும் பறிமுதல் செய்து விடுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஷாப்பிங் முடித்து எங்கள் மதிய உணவு நேரம் வந்திருந்ததால் கடற்கரையிலேயே இருக்கும் ஒரு உணவகத்தில் சாப்பிடலாம் என்று எங்கள் ஓட்டுனர்கள் சொல்லி வைத்திருந்தார்கள். அந்த உணவகம் ராகுல் ரெஸ்டாரெண்ட். 

 

எங்கள் ஓட்டுனர்களை அழைக்க அவர்கள் உடனடியாக வந்து எங்கள் குழுவினர் அனைவரையும் ராகுல் ரெஸ்டாரெண்ட் வாசலில் இறக்கி விட்டார்கள். சைவம் மட்டுமே தேவை என்பதை முன்னரே சொல்லி இருந்ததால் சைவ உணவகத்தில் தான் சொல்லி வைத்திருந்தார்கள்.  ஆனாலும், நாங்கள் சென்ற பிறகு தான் நம்மிடம் ஆர்டர் கேட்டு தான் சமையல் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள் – இங்கே உள்ள பல உணவகங்களிலும் இது தான் நிலை. பத்து நிமிடத்தில் சாப்பிட வேண்டும் என்றால் நிச்சயம் இங்கே முடியாது. நிச்சயம் ஒரு மணி நேரமாவது ஆகும்.  ராகுல் ரெஸ்டாரெண்டிலும் அப்படியே!  நாங்கள் சென்ற பிறகு எங்களிடம் ஆர்டர் கேட்டு, தயாராக குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும் என்று சொன்னார் அந்தச் சிப்பந்தி.  Basic Preparations செய்து வைத்திருந்தாலும், நாம் சொன்ன பிறகு சுடச் சுட தயார் செய்து தர வேண்டும் என்பதால் நேரம் எடுக்கிறது.  தவா ரொட்டி, தால், மிக்ஸ் வெஜ், தயிர், ராய்தா, சாதம், சலாட் என தேவையானவற்றை சொல்லி விரைவில் தயாரிக்கச் சொன்னோம். 

 

உணவு தயாரிக்கப் படும் நேரத்தில் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அன்றைய நாளின் அனுபவங்களை பேசிக் கொண்டிருந்தோம்.  இப்படிக் குழுவாக பயணிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும் – அதுவும் ஒத்த கருத்துடைய நண்பர்களும் அவர்களது குடும்பத்தினருடனும் பயணிக்கும்போது – அப்படியே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் நட்பு பாராட்டுவதுவதை மட்டுமே முக்கியமாகக் கருதும் எண்ணம் இருந்து விட்டால் பயணங்கள் என்றுமே சிறப்பு தானே! எங்கள் பயணமும் அப்படியே சிறப்பாகவே இருந்தது! காத்திருந்த வேளையில் உணவகத்தில் வைத்திருந்த பூஞ்செடிகளைப் பார்த்து ரசித்ததோடு, பூக்களையும் கொஞ்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டோம்.  காத்திருக்கும் வேளையில் இன்னும் ஒரு விஷயமும் சொல்லி விடுகிறேன். நம் ஊரில் இருக்கும் உணவகங்களில் இருக்கும் வாஷ் ரூம் வசதி – ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்! ராகுல் ரெஸ்டாரெண்டும் அப்படியே! சுற்றுலா செல்லும் பயணிகளுக்கான இந்த அத்தியாவச தேவையையும் மனதில் கொள்வது ரொம்பவும் அவசியம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

 

சில நிமிடங்கள் நம் பொறுமையைச் சோதித்து உணவு தயாராகி கொண்டு வந்தார்கள். நானும் நண்பர் மணியும் உணவகச் சிப்பந்தியிடம் இருந்து உணவை வாங்கி குழுவினர் அனைவருக்கும்  அளித்து, சமையலறையில் சென்று துரிதமாக வேலையைக் கவனிக்க அனுப்பி வைத்தோம்.  சப்பாத்தி, சாதம், தால், என ஒவ்வொன்றாக வர அனைவருக்கும் கொடுத்து நாங்களும் சைக்கிள் கேப்பில் சாப்பிட்டு முடித்தோம். வேகவேகமாகத் தயாரிக்கப்பட்டாலும் உணவு நன்றாகவே இருந்தது.  அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு உணவுக்கான தொகையை கேட்டு, கொடுத்தோம். எங்கள் குழுவினரில் இருந்த பதினெட்டு பேரும் சாப்பிட்ட உணவிற்கான தொகை அப்படி ஒன்றும் அதிகமில்லை – ஒரு ஆளுக்கு ரூபாய் 200/-க்கும் குறைவாகவே ஆனது.  உணவகச் சிப்பந்திக்கும், உரிமையாளருக்கும் நன்றி சொல்லி உணவகத்திலிருந்து புறப்பட்டோம்.  உணவை முடித்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டு நேராக படகுத் துறைக்கு தான் சென்று சேர்ந்தோம்.  எங்களுக்கான சொகுசுப் படகு மாலை நான்கு மணிக்கு – ஷாகீத் த்வீப் தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் நோக்கி ஒரு பயணம். 

 

ஏற்கனவே சொல்லி இருந்த மாதிரி, எங்கள் தங்குமிடமான டேங்கோ பீச் ரிசார்ட்டில் வைத்திருந்த எங்கள் உடமைகள் அனைத்தும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து விட்டது – வேறு ஒரு வாகனத்தில்! நாங்கள் அனைவரும் துறைமுகத்திற்கு சென்று சேர்ந்ததும், எங்கள் ஓட்டுனர் விஜய்க்கு கொஞ்சம் அன்பளிப்பினை வழங்கி அவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  துறைமுகத்திற்கு அருகே வாகனம் வருவதில்லை.  கொஞ்சம் நடக்க வேண்டியிருக்கும்.  என்னுடைய முதுகுச் சுமையை மாட்டிக் கொண்டு கையில் கேமரா சகிதம் நடந்தேன். மற்றவர்களும் அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஷாகீத் த்வீப் தீவிற்கு பை பை சொல்லி நடந்தோம்.  எங்களுக்காக முன்பதிவு செய்திருந்த சொகுசுக் கப்பல் பெயர்  Macphal – Macruzz நிறுவனத்தினரின் சொகுசுக் கப்பல்!   சொகுசுக் கப்பல் கட்டணங்கள் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். முன்பதிவு செய்யும் வசதிகள் அவர்களது இணைய தளத்தில் உண்டு.

 

சொகுசுக் கப்பல் ஹேவ்லாக் தீவிலிருந்து வந்து சில பயணிகளை இறக்கி விட்ட பிறகு, எங்களையும் ஏற்றிக் கொண்டது.  எங்கள் பயணம் நீல் தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் வரை! எங்களுக்கு சொகுசுக் கப்பலின் முன் பகுதியில் இருக்கும் கண்ணாடியை ஒட்டி இருந்த மூன்று வரிசைகள் – 6 * 3!  கடலில் கப்பல் பயணிக்கும் போது கண்ணாடி வழியே நன்கு பார்க்க முடியும்.  பயணமும் துவங்கியது.  பயணத்தில் என்ன செய்தோம், பார்த்த காட்சிகள் என்ன, போர்ட் Bப்ளேயர் சென்று சேர்ந்த பிறகு என்ன செய்தோம் போன்ற விவரங்களை வரும் பகுதியில் சொல்கிறேன்.  நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


36 கருத்துகள்:

  1. இன்றைய வாசகத்தை ரசித்தேன். கொஞ்சமாவது கசப்பாக்கிக் கொள்பவர்களே அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      கசப்பாக்கிக் கொள்பவர்களே அதிகம் - உண்மை.

      நீக்கு
  2. ரசீதுடன் பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைச் சொன்னது சிறப்பு. ராகுல்! என் பெரியவன் பெயர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசீது அவசியமே - விமான நிலையத்தில் சோதனை செய்து, ரசீது இல்லாதவை அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்!

      ராகுல் - ஆஹா! உங்கள் பெரிய மகன் பெயரா. மகிழ்ச்சி.

      நீக்கு
  3. அந்த புகைப்படத்திலிருப்பது நீங்கள்? நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல! நண்பரின் மகன்.

      நீக்கு
  4. வாசகம் நன்று பூவின் படங்கள் ஸூப்பர்.

    டைட்டானிக் படம் போஸில் இன்னொரு நபர் குறைகிறதே ஜி ?

    அடுத்த கப்பல் நிகழ்வுகளை அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பூக்களின் படங்களும் உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      டைட்டானிக் படம் போஸ் - நண்பரின் மகன். விரைவில் அவருக்கான இணை வரப் போகிறார் ஜி.

      கப்பல் நிகழ்வுகள் தொடரும்.

      நீக்கு
  5. // டைட்டானிக் படம் போஸில் இன்னொரு நபர் குறைகிறதே ஜி ? //

    ஹா... ஹா... ஹா.்்்்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... தனியாகவும் டைட்டானிக் போஸ் கொடுக்கலாம் ஸ்ரீராம்! :)

      மேலே சொன்னது போல அவருக்கான இணை விரைவில் வரப் போகிறார்! அந்தப் புகைப்படத்தில் இருப்பது நண்பரின் மகன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. வாழ்க்கையை இனிப்பான உணவாக்கியதை ரசித்தேன். ஆனால் சகோதரர் ஸ்ரீராம் சொல்வது போல் அதை கொஞ்சமாவது கசப்பாக்கி கொள்வது மனிதர்களின் இயல்பு.

    மலர்கள் படங்கள் நன்றாக உள்ளன. பயணங்கள் பற்றிய விபரங்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது. நான் சென்ற இரு பகுதிகளையும் இன்னமும் படிக்க வர என் நேரங்கள் என்னவோ எப்போதும் போல் தோதாக அமையவில்லை. விரைவில் அதையும் படித்து ரசித்து கருத்துரை இடுகிறேன். கால தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கசப்பாக்கிக் கொள்வது மனிதர்களின் இயல்பு - உண்மை தான்.

      மலர்கள் படங்கள், பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்க்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      கால தாமதத்திற்கு மன்னிக்கவும் - அடடா... வருந்த வேண்டாம் - பணிச்சுமைகள் இருக்கையில் இணையத்தில் உலவுவது கடினம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். முடிந்த போது படிக்கலாம். அவசரம் இல்லை.

      தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு
  7. எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் பயணங்கள் மட்டுமல்ல வாழ்வும் சிறப்பு தான் ஜி...

    அடுத்த படக்காட்சிக்காக காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் பயணமும் வாழ்வும் சிறப்பாகவே இருக்கும் - உண்மை தனபாலன்.

      தொடர்ந்து கூடவே பயணிப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. அந்தமானில் ராகுல் ரெஸ்ட்டாரண்ட்டா? ஒருவேளை நம்ம ராகுல் காந்தியுடையதா? ஆனாலும் கழிவறை சங்கதிகள் சரியில்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தலா 200 ரூபாய்க்கு சாப்பிட்டீர்கள், சரி, டிப்ஸ் எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கூறவேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகுல் என்றால் அவர் மட்டும் தானா! :)

      டிப்ஸ் கொடுத்தது எவ்வளவு என்பதை கூறவேண்டாமா? டாம்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  9. http://www.makruzz.com/site/ எனக்கு நிச்சயம் பயன்படும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் உங்களுக்குப் பயன்படும் என அறிந்து மகிழ்ச்சி ஜோதிஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. படங்களும் பகிர்வும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. முதல் படத்தில் இருக்கும் பூவை டிசம்பர் பூ என நினைத்து தலையில் வச்சிக்கிட்டிருக்கேன்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது ரசீதை கேட்டு வாங்கி சேமிச்சு வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இருக்கு, வீட்டுக்கு வந்து கணக்கு சரிபார்த்து நோட்டில் எழுதும் வரை பத்திரப்படுத்தி வச்சிருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசீது சேமிச்சு வைக்கும் பழக்கம் - நல்லது தான் ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஆஹா அந்தமானில் இருக்கும் பூக்கள் செடிகள் எங்கட ஊர் வீட்டிலும் இருந்தனவே.. முதல் படக் குரோட்டன் இருக்கு ஊரில்.. மூன்றாம் படம் சிவப்புப் பூக்கள் “காசித்தும்பை” என்போம்ம்.. பல கலர்களில் இருந்தன... அழகோ அழகு.

    படங்கள் வழமைபோல சூப்பர்.

    கையைத்தூக்கிக் கொண்டு நிற்பவருக்கு நீந்தத் தெரியுமாமோ?:)) விழுந்திடப்போறாரே என நெஞ்சு படபடக்குது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் உங்கள் ஊர் வீட்டிலும் இருந்தனவா. ஆஹா... பூக்கள் இருந்தாலே மனதில் உற்சாகம் தானாகவே பிறக்குமே!

      படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      நீச்சல் தெரியுமா? கரையருகே படகு நின்ற போது எடுத்த படம் தான். பயம் இல்லை!

      நீக்கு
  13. வாசகம் மிக அருமை.

    ரசீது இல்லாத அத்தனை கடலிலிருந்து பெறப்படும் விஷயங்களும் பறிமுதல் செய்து விடுவார்கள் //
    பயணம் செய்பவர்கள் பொருட்கள் வாங்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய பகிர்வு.

    //வாஷ் ரூம் வசதி – ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்!//

    உண்மை. சுற்றுலாதுறை இதை கவனித்தால் நல்லது.
    கடற்கரை படங்கள் அழகு.
    தொடர்கிறேன்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      ரசீது - நினைவில் வைத்துக் கொள்வது மிக அவசியம். சிலருக்காவது பயன்படும் என்பதாலேயே இங்கே குறிப்பிட்டேன்.

      வாஷ்ரூம் வசதி - பெரும்பாலான இடங்களில் வசதி குறைவு தான் கோமதிம்மா... அது ஒரு பெரும் சோகம்.

      நீக்கு
    2. அன்பு வெங்கட் வாசகமும் பதிவும் அருமை.
      இருப்பதிலேயே நல்ல பயணம் இதுதான்.
      இங்கே செல்ல எந்த சீசன் நல்லது என்றும் சொல்லுங்கள்.
      பயணத்தின் முக்கிய பகுதி வாஷ் ரூம் தான். அது சரியில்லாவிடால் நீர் தொற்று, முக்கியமாகப் பெண்களுக்கு வர சந்தர்ப்பம் ஏற்படும்.

      எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் மகிழ்ச்சிதான் இந்தப் பயணத்தின் ஹைலைட்.
      சீக்கிரம் மீண்டும் பயணம் ஆரம்பிக்க வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வாசகமும் பதிவும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா....

      பொதுவாக நவம்பர் டிசம்பர் இங்கே சீசன். ஏப்ரல்-மேயும் ஓகே. ஜூனில் மழை வந்து விடும் வல்லிம்மா...

      வாஷ்ரூம் மூலம் பரவும் தொற்று - உண்மை தான் - அதனை நிறுவனங்களும் உணர்வதில்லை. பயன்படுத்தும் பலரும் உணர்வதில்லை.

      மகிழ்ச்சி - ஹைலைட்! உண்மை தான் வல்லிம்மா...

      சீக்கிரம் மீண்டும் பயணம் ஆரம்பிக்க வேண்டும் - பார்க்கலாம் இந்தப் பேரிடர் காலம் முடிவடையும் வரை எந்தப் பயணமும் செய்ய முடியாது. பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது.

      நீக்கு
  14. படங்கள் அழகு.

    பொதுவா அந்த அந்த ஊர் பிரிண்ட் போட்ட டி.ஷர்ட்ஸ் சைனாவிலிருந்துதான் வருகிறது என்பது என் அனுபவம். அந்த அந்த ஊர் சாவனீரும் பெரும்பாலும் சைனா ப்ராடக்ட்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      சுற்றுலாத் தலங்களில் பல பொருட்கள் சீனாவிலிருந்து! உண்மை. அந்தமானில் இருப்பவை லோக்கல் ப்ராடக்ட் தான் நிறைய - குறிப்பாக கடலிலிருந்து எடுக்கப் படுபவை மூலம் செய்பவை.

      நீக்கு
  15. ஆகா! அழகான பயணக்கட்டுரை. பூக்கள் அழகு.
    அண்ணா, யூடியூபில் பகிரலாமே .. செம வரவேற்பு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      யூட்யூபில் பகிரலாமே - லாம்! முயற்சிக்க வேண்டும். அதற்கான உபகரணங்கள் சரியாக இருந்தால் செய்யலாம்.

      நீக்கு
  16. அந்தமான் தீவுகளில் அழகுடன் சொகுச்சிகளை கப்பல் பயணமும் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.
    அந்தமானில் உலகின் மிகப் பழைய காடுகள் இருப்பதாகவும்,1987 இல் 96 கானுயிர் சரணாலயங்கள் அமைக்கப்பட்டதாகவும், நிக்கோபர் பிக்மேலியன் என்று அழைக்கப்பட்ட முனை இந்திரா முனை என பெயரிடப்பட்டதாகவும் 'இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு' என்ற புத்தகத்திலிருந்து அறிந்தேன். பவளப்பாறைகள் அந்தமானை சுற்றியுள்ள நீல வண்ணக் கடல் பற்றியும் கூறியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தீவில் நிறைய வனப் பகுதிகள் உண்டு மாதேவி.

      மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. மன்னிக்கவும் சொகுசு கப்பல் என்று வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை - தட்டச்சு பிழைகள் வருவது தானே! சொகுசுக் கப்பல் என்றே வாசித்தேன் மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....