ராதாகிருஷ்ணா ரிசார்ட் - ஸ்வராஜ் த்வீப்...
அந்தமானின் அழகு – பகுதி 18
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3
பகுதி 4
பகுதி 5 பகுதி 6 பகுதி 7
பகுதி 8
பகுதி 9 பகுதி 10
பகுதி 11
பகுதி 12
பகுதி 13
பகுதி 14
பகுதி 15
பகுதி 16 பகுதி 17
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவு கடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது…
சென்ற பகுதியில் சொன்னது போல, போர்ட் Bப்ளேயரிலிருந்து
சொகுசுக் கப்பலில் புறப்பட்ட எங்கள் குழு சுமார் ஒன்றரை மணி நேர கடல் பயணத்திற்குப்
பிறகு ஸ்வராஜ் த்வீப் என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஹேவ்லாக் தீவிற்கு
வந்தடைந்தோம். எங்களுக்காக மூன்று கார்களுடன் எங்கள் வழிகாட்டி/ஓட்டுனர் காத்திருந்தார். அவர்களுடன்
புறப்பட்டுச் சென்ற நாங்கள் சென்றடைந்தது அத்தீவின் தங்குமிடங்களில் ஒன்றான ராதாகிருஷ்ணா
ரிசார்ட். பாக்கு, தென்னை மரங்களுக்கு நடுவே அழகான தங்குமிடம் இந்த ராதாகிருஷ்ணா ரிசார்ட்.
எங்கெங்கும் பசுமை… பூக்கள், பாக்கு தென்னை மரங்கள், அழகிய பாதை, வண்டுகளின் ரீங்காரம்
என அந்தச் சூழலே மிகவும் ரம்மியமாக இருந்தது.
முன்பதிவு செய்து வைத்திருந்தாலும், அடையாள அட்டையின் நகல்கள் கொடுப்பது, அங்கே
பதிவுப் பட்டியலில் பதிவு செய்வது என அனைத்தும் செய்து முடித்து எங்களுக்காக முன்பதிவு
செய்திருந்த 7 அறைகளின் சாவிகளை வாங்கிக் கொண்டோம். ரிசார்ட் ஊழியர்கள் எங்கள் உடைமைகளை
அவரவர் அறைகளில் கொண்டு வைத்தார்கள்.
Standard Cottage மற்றும் Deluxe Cottage என இரண்டு வித
தங்குமிடங்கள் இங்கே உண்டு. இங்கே மொத்தம் 38 அறைகள். ஒவ்வொரு அறைக்கும் வாசலில் தோட்டத்தினை
பார்த்தபடி அமர்ந்து கொள்ள ஒரு Sit Out! அங்கே மூங்கில் நாற்காலிகள். எல்லா அறைகளுமே முடிந்த அளவு மூங்கில் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள்.
தரையிலிருந்து சற்றே உயர்த்தி, அமைத்த இந்த மூங்கில் அறைகள் ரொம்பவே அழகு. சுடுநீர் வசதி, குளிர்சாதனங்கள், இணைய இணைப்பு,
உணவகம் என அனைத்தும் இங்கே உண்டு. ரொம்பவே
அழகான சூழலில் பறவைகள் எழுப்பும் குரலும், அமைதியான சூழலும் தில்லி போன்ற பெருநகரங்களில்
இருந்து அவதிப்படும் எங்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது. Standard Cottage மற்றும்
Deluxe Cottage அறைகளுக்கான நாள் வாடகை முறையே 2999 மற்றும் 3999/- - Bபாடா செருப்புக்
கடை போல ஒரு ரூபாய் குறைத்து எழுதுவது என்ன வகை தருக்கமோ தெரியவில்லை. இந்தத் தங்குமிடமும் எங்கள் பயணத் திட்டத்திலேயே
உள்ளடக்கம் என்பதால் தனியாக இங்கே நாள் வாடகை தர வேண்டிய அவசியம் இல்லை.
அறைகளுக்குள் உடமைகளை வைத்து விட்டு தோட்டத்திலும் அந்த
அமைதியான சூழலிலும் சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம். ரொம்பவே ரம்மியமான சூழல் என்பதால் வெளியே புறப்பட்டுப்
போக வேண்டும் என்ற எண்ணம் கூட எங்களுக்கு வரவில்லை. ஆனால் இப்படியே அறைகளில் இருந்து விட ஆசை இருந்தாலும்,
மிகவும் அழகான பல இடங்கள் இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் உண்டு. அந்தமான் நிகோபார் தீவுகளின் மிகவும் அழகான கடற்கரை
எனச் சொல்லப்படும் ராதாநகர் கடற்கரை இந்த ஸ்வராஜ் த்வீப் தீவில் தான் இருக்கிறது. அதைத்
தவிர இன்னும் சில கடற்கரைகள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. கடலில் பயணம் செய்த அலுப்பு தீர சில நிமிடங்கள்
ஓய்வெடுத்து, அங்கே இருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி மூன்று வாகனங்கள் வந்து சேர அவற்றில்
நாங்கள் முதலாவதாகச் சென்ற இடம் ஒரு கடற்கரை.
இந்த ஸ்வராஜ் த்வீப் திவில் இருக்கும் கடற்கரைகள் இருக்கும் பகுதியை வைத்தே
அந்த கடற்கரையின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
கடற்கரைக்கு உங்களை அழைத்துச் செல்லும் முன் இத்தீவில் இருக்கும் வசதிகள் பற்றியும்,
தீவு பற்றியும் சொல்லி விடுகிறேன்.
ஸ்வராஜ் த்வீப் தீவு மொத்தம் 113 சதுர கிலோமீட்டர் பரப்பளவு
கொண்டது. அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்த
மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 3.81 லட்சம் மட்டுமே. அதில் இந்த
ஸ்வராஜ் த்வீப் மக்கள் தொகை பத்தாயிரத்திற்குள் தான்! ஆனாலும் இங்கே நிறைய தங்குமிடங்கள்
உண்டு – சுற்றுலா பயணிகள் நிறையவே வந்து செல்கிறார்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் குழுமத்தில் மொத்தம்
572 தீவுகள் உண்டு – அவற்றில் மக்கள் வசிப்பது 37 தீவுகள் மட்டுமே – மற்ற அனைத்துமே
மக்கள் நடமாட்டமே இல்லை – முழுவதும் வனாந்திரம் தான் – சுற்றிலும் கடல், நடுவே வனம்
மட்டுமே. சில தீவுகளில் பழங்குடியினர் வசித்தாலும்
அங்கே நம்மைப் போன்றவர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை – மீறிச் சென்றால் உங்களுக்கு ஆபத்து
ஏற்படும் என்பதோடு, அரசு உங்களைச் சிறையிலும் அடைக்க வழிவகைகள் உண்டு. அரசு அலுவலர்கள் அவர்களிடம் பேசுவதற்கென சிலரை நியமித்து
இருக்கிறார்கள் – அவர்களும் சர்வ சாதாரணமாக அங்கே சென்று வர முடியாது. நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. சில மாதங்களுக்கு முன்னர்
அப்படியான தீவு ஒன்றிற்குச் சென்று இறந்து போனது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
சரி, இன்னும் சில விஷயங்களையும் பார்க்கலாம் – இந்த ஸ்வராஜ்
த்வீப் தீவில் நிறைய தங்குமிடங்கள் உண்டு என்று சொன்னேன் – பெரும்பாலானவை ரிசார்ட்கள்
தான். வாடகையும் நிறையவே வசூலிக்கிறார்கள்
– சுற்றுலா மட்டுமே இங்கே அதிக வருவாய் தருவது.
பாக்கு, தென்னை போன்ற மரங்களும் சில காய்கறித் தோட்டங்களும் உண்டு என்றாலும்
பெரும்பாலான இடங்களில் வனம், வனம் வனம் மட்டுமே! அப்படி ஒரு ரம்மியமான சூழல் இங்கே. கடற்கரைகளில் இருக்கும் தென்னை மரங்கள் பார்க்கும்போதே
அப்படி ஒரு மகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. அந்தமான் தீவுகளுக்குச் சென்றால் நிச்சயம்
பார்க்க வேண்டிய தீவுகள் பட்டியலில் இந்த ஸ்வராஜ் த்வீப் தீவினை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டு நாட்கள் இங்கே இருக்கலாம்! தீவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பார்த்து ரசித்து,
எந்த வித அழுத்தங்களும் இன்றி உலா வந்து lethargic – ஆக நாட்களை செலவிடலாம்! இங்கே பொது போக்குவரத்து என ஒன்றும் கிடையாது. வாடகைக்கு கார்கள் கிடைக்கின்றன. அது போலவே இங்கே இரு சக்கர வாகனங்களும் நாள் வாடகைக்குக்
கிடைக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு நிம்மதியாக
தீவினைச் சுற்றி வரலாம்.
இங்கேயும் நிறைய Water Activities உண்டு – குறிப்பாக எலிஃபன்டா
பீச் பகுதியில் நிறைய வசதிகள் உண்டு. இந்தத்
திவிற்குச் சென்றால் இரு சக்கர வாகனத்தினை எடுத்துக் கொண்டு சுற்றி வரலாம் – அதற்குத்
தேவை உங்களிடம் இருக்கும் வாகன ஓட்டுனர் உரிமம், 2000 ரூபாய் முன் தொகை (திரும்பி அளிக்கப்படும்),
நாள் வாடகையாக 500 ரூபாய் (24 மணி நேரத்திற்கு)! இணைய வழி முன்பதிவு செய்து கொள்வது
நல்லது. நீங்கள் தங்கி இருக்கும் இடத்தினைச் சொன்னால் அங்கேயே கொண்டு வந்து கொடுத்து
விடுவார்கள். பெட்ரோல் செலவு உங்களுடையது!
பெட்ரோல் பங்க் வசதிகள் குறைவே. அதனால் மாலை 7 மணிக்குள் பெட்ரோல் நிரப்பிக் கொள்வது
நல்லது! முன்பதிவு செய்யும்போதே உங்கள் தேவை என்ன என்பதை – With/Without gear என்ற
தகவலைச் சொல்லி விடுவது நல்லது. வாகனம் இருந்தால்
தீவின் அனைத்து பகுதிகளுக்கும் நிம்மதியாக சென்று வரலாம்! ஒரு வண்டியில் கண்டிப்பாக
இருவர் மட்டுமே அனுமதிப்பார்கள் – குழந்தையாக இருந்தால் ஒருவரைச் சேர்த்துக் கொள்ளலாம்!
இங்கே உள்ள காவலர்கள் கண்டிப்பானவர்கள் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்!
ஸ்வராஜ் த்வீப் தீவில் உள்ள வசதிகள் – தங்குமிடம், போக்குவரத்து
போன்றவற்றை உங்களிடம் சொல்லி விட்டேன்! அடுத்த பகுதியிலிருந்து இங்கே நாங்கள் பார்த்து
ரசித்த கடற்கரைகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
பின்குறிப்பு: இப்பதிவில் இணைத்திருக்கும் படங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணா ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட படங்களே!
வாசகம் நன்று. போராடிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் தற்போதைய நிலைமை.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தற்போதைய சூழலுக்கும் பொருத்தமானதே!
நீக்குஉபயோகமான நிறைய தகவல்கள். ரிஸார்ட்டும் அழகு, காட்டேஜும் அழகு, ரம்மியம்.
பதிலளிநீக்குதகவல்கள் சிலருக்காவது பயன் தருமே. ரிசார்ட்டும் காட்டேஜும் ரொம்பவே பிடித்தது எங்களுக்கும் ஸ்ரீராம்.
நீக்குபயண விபரங்கள் நன்று
பதிலளிநீக்குஇப்படி 299 விலை போட்டு இருப்பவர்களை கண்டாலே எனக்கு எரிச்சலாக வரும் செருப்புக்கடையில் தொடங்கியது இது மக்களை கேனயனாக்குவது போல் எனக்கு தோன்றும்.
ஆமாம் - அது என்ன ஒரு ரூபாய் குறைத்து எழுதுவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறாது! ஏமாற்றுவித்தை தான் கில்லர்ஜி. எனக்கும் பிடிப்பதில்லை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. உண்மை.. வெல்வதற்கு ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த சந்தோஷ நம்பிக்கையில்தான் கடினமான நிமிடங்கள் கரைகின்றன.
அழகிய படங்கள். தீவு குறித்த பயனுள்ள தகவல்கள் விபரமாக தந்துள்ளீர்கள். ஒவ்வொரு தங்குமிட இடங்களையும் தாங்கள் விவரிக்கும் அழகிலேயே நாங்களும் உடன் பயணிக்கிற சந்தோஷத்தை தருகிறீர்கள். அங்குள்ள ஒவ்வொரு கடற்கரையின் பெயர்களும் நன்றாக உள்ளன.
வாடகையாக ஒரு ரூபாயை குறைத்துச் சொல்வதில் அப்படி என்ன சந்தோஷமோ? தீவைப்பற்றிய அனைத்து விஷயங்களும் நன்றாகவே உள்ளது. மரங்களின் இயற்கை சூழ்ந்த இடங்கள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நம்பிக்கை தானே வாழ்க்கை.
பதிவு உங்களுக்கும் சந்தோஷம் தந்ததை அறிந்து எனக்கும் மகிழ்ச்சி.
ஒரு ரூபாய் குறைத்துச் சொல்லி என்னத்த கண்டார்கள் இவர்கள் என்பது புரியாத புதிர் தான்.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குமிக அழகான தீவு. தென்னை மரங்கள், காட்டேஜ்,
உங்கள் விபரங்கள் எல்லாமே சுவை. என்ன விலை அழகே என்பது
போல அவர்கள் கேட்கும் பணம் கொடுக்க வேண்டியதுதான்.
எவ்வளவு உயரமான தென்னை.
நீங்கள் சென்று வந்ததே மகிழ்ச்சி. குடும்பத்துடனும் நீங்கள் சென்று வரவேண்டும். ஆதி,ரோஷ்ணி நன்றாக அனுபவிப்பார்கள்.
வணக்கம் வல்லிம்மா...
நீக்குதென்னை தவிர பாக்கு மரங்களும் உண்டு. அழகான இடம் தான். அதனால் இந்த கட்டணம் அதிகம் இல்லை என்றே சொல்கிறார்கள்.
குடும்பத்துடன் செல்லும் நாள் அமைய வேண்டும் - பார்க்கலாம்!
அது எப்படி ஒரே சமயத்தில் 2 பேர் உங்களை போட்டோ எடுக்கிறார்கள். கொஞ்சம் சிரித்தால் என்ன? ரொம்ப கடு கடும்னு மூஞ்சை வைத்துக்கொண்டு.
பதிலளிநீக்குஆமாம் - ஒருவர் க்ளோஸ் அப் எடுக்கும் சமயத்தில் மற்றொருவர் தூரப் பார்வையில்!
நீக்குகடுகடுன்னு - :) நான் எப்பவுமே அப்படிதானே! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
என்னவொரு அழகிய இடம்... இரண்டு நாட்கள் என்ன, ஒரு வாரம் கூட பத்தாது போல...
பதிலளிநீக்குஅழகான இடம் தான் - சிறிய தீவு என்பதால் அதிக பட்சம் இரண்டு நாட்கள் போதும். எங்கும் செல்லாமல் ஓய்வு எடுக்கலாம் என்றால் ஒரு வாரம் கூட இருக்கலாம் தனபாலன்.
நீக்குஇணைய வழி முன்பதிவு - அங்கு சென்ற பின்பு தானோ...?
பதிலளிநீக்குதங்குமிடம், வாகனம் இரண்டிற்குமே அங்கே செல்வதற்கு முன்னரே இணைய வழி முன்பதிவு செய்து கொள்ளலாம் தனபாலன்.
நீக்குதங்குமிடம் அழகோ அழகு
பதிலளிநீக்குமிகவும் அழகான இடம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅட்டகாசமான ரிஸார்ட் !
பதிலளிநீக்குஆமாம் துளசி டீச்சர். இன்னும் நிறைய ரிசார்ட்டுகள் இங்கே உண்டு.
நீக்குவாசகம் அருமை. பொருந்திப் போகும் வாசகம்.
பதிலளிநீக்குஹையோ ரெஸார்ட் என்ன அழகு! உங்கள் வர்ணனை பார்த்ததும் இப்படியான ஓர் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அட்டகாசமாக இருக்கு. உங்களுக்கும் அந்த இடத்தை விட்டு வர மனசே இருந்திருக்காதே!.
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஆமாம் அழகான இடம் தான் கீதாஜி. ரொம்பவே ரம்மியமாக இருந்தது.
அருமையான பயணக்குறிப்புகள். அழகிய இடம்....
பதிலளிநீக்குபயணக்குறிப்புகளும் இந்த இடமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குஸ்வராஜ் தீவு வர்ணனை ஹையோ செம இடம்னு சொல்லுதே. பசுமையா இருக்கு ரெசார்ட் சுற்றி என்ன அழகு. நீங்கள் எடுத்திருக்கும் படங்களும் அருமை. சிலந்திவலை உட்பட...
பதிலளிநீக்குநாம் வண்டி வாடகை எடுத்துக் கூடச் சுற்றலாம் என்பதும் நல்லாருக்கு. தீவு முழுவதும் சுற்றி வரலாமே. தீவே அழகுதான் கரைகள் எல்லாம் அலை மோத என்ன அழகா இருக்கும்...ஒவ்வொரு நாளும் பயணப் பதிவு வாசிக்க வாசிக்க ஆவல் கோடிக் கொண்டே போகிறது.
லக்ஷதீவும் நன்றாக இருக்கும் என்று கொச்சினிலிருந்து செல்லும் கப்பலில் செல்லலாம் என்றும் கூட சில வருடங்களுக்கு முன் குடும்பத்தில் பெரிய லிஸ்ட் ஒன்று போடப்பட்டு பேசப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.
அடுத்து என்ன பார்த்தீர்கள் என்பதை அறிய தொடர்கிறோம்.
கீதா
சிலந்திவலை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. இன்னும் நிறைய படங்கள் குழுவினரோடு எடுத்தோம்.
நீக்குவாடகைக்கு வண்டி - குறிப்பாக இருசக்கர வாகனம் கிடைப்பது நல்ல விஷயம். அந்தமானின் தீவுகளில் இப்படியான வசதிகள் இருப்பது நல்லது. பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
லக்ஷத் தீவு - அந்தமான் சென்று வந்த பிறகு இங்கே செல்லலாம் என பேசினோம். ஆனால் இன்னும் முழுமையாக திட்டமிடவில்லை. நடுவே இந்த பிரச்சனைகள் வேறு வந்துவிட்டதால் எல்லா பயணத் திட்டங்களும் இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறோம்.
அடுத்தது என்ன - வரும் திங்கள் அன்று தொடரும் கீதாஜி.
படங்கள் அருமை பயணச்சித்தரே...
பதிலளிநீக்குநல்லவேளை க்ரோனவிற்கு முன்னரே பயணித்து விட்டீர்.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குகரோனோவிற்கு முன்னரே - :) எல்லாம் சரியாக இருந்திருந்தால் இன்று மஹாராஷ்ட்ராவில் இருந்திருப்பேன்! :) விரைவில் நிலைமை சரியாக வேண்டும்.
வாசகம் உண்மை நிலைஅயை கூறுகிறது.
பதிலளிநீக்குரிசார்ட்டும் காட்டேஜும் பார்க்க அழகு.
பாக்கு மரமும், தென்னை மரமும் அழகு. பறவைகளின் சத்தமும் கேட்டு இருந்தால் இன்னும் ரம்யமாக இருக்கும்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குபறவைகளின் சப்தமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது கோமதிம்மா... ரொம்பவே ரம்மியமான சூழல்.
தொடக்க வாசகம் அருமை. அந்தமானின் இயற்கை அழகை ரசித்து கொண்டே இருக்கலாம்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குஆமாம் - அந்தமானின் இயற்கை எப்போதும் ரசிக்க முடியும்.
பாக்கும்,தென்னையும் சேர்ந்த சோலை மிகவும் அழகு.
பதிலளிநீக்குஇந்த இடம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்கும் இடத்தை பார்த்தவுடன், நாமளும் இங்கே தங்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅழகான இடம் சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஉங்களுக்கும் அந்தமான் தீவுகளுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் அமைந்திடட்டும்.